இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0748



முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்

(அதிகாரம்:அரண் குறள் எண்:748)

பொழிப்பு (மு வரதராசன்): முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும் (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.

மணக்குடவர் உரை: சூழவல்லாரைச் சூழ்ந்து நலிந்தவரையும் தன்னகத்து நின்று காக்கவல்லவராய்க் காப்பவர் வெல்வது அரணாவது.
பற்றாற்றுதல் -தாம் பற்றின இடம் விடாது வெல்லுதல்.

பரிமேலழகர் உரை: முற்று ஆற்றி முற்றியவரையும் - தானைப் பெருமையால் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும்; பற்றி யார் பற்று ஆற்றி வெல்வது அரண் - தன்னைப்பற்றிய அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணாவது.
(உம்மை, சிறப்பும்மை. பற்றின் கண்ணே ஆற்றி என விரியும். பற்று - ஆகுபெயர். 'வெல்வது' என, உடையார் தொழில் அரண்மேல் நின்றது. பெரும்படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இவை ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: முழுதும் வலிமை யுடையவராய்ப், புறத்துச் சூழ்ந்தோரையும் நின்ற இடத்தை விட்டுப் பெயராது தன்னகத்துள்ளோர் வெல்லும்படி அமைந்திருப்பதே கோட்டையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பற்றாற்றிப் பற்றியார் முற்றாற்றி முற்றியவரையும் வெல்வது அரண்.

பதவுரை: முற்று-(பகைவர்) முற்றுகையை; ஆற்றி-ஏற்றுப் பொரும் வல்லமையை அடைந்து; முற்றியவரையும்-சூழ்ந்த புறத்தோரையும்; பற்றுஆற்றி-தப்பிச் செல்லவிடாது அகப்படுத்தி; பற்றியார்-தன்னைத் துணையாகப் பற்றியள்ள அகத்தோர்(உள்ளிருப்போர்); வெல்வது அரண்-வெல்ல வல்லது கோட்டை.


முற்றாற்றி முற்றி யவரையும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சூழவல்லாரைச் சூழ்ந்து நலிந்தவரையும்;
பரிப்பெருமாள்: சூழ விடுதலைச் செய்து மதிலைச் சூழ்ந்து பொருவாரையும்;
பரிதி: அரண் அழிப்போம் என்பார்க்கு அரிதாகி;
காலிங்கர்: 'அவ்வரண் யாம் வெல்வோம்' என்று அதன் புறத்து வந்து சூழ்ந்துகொண்ட பற்றலரை; [பற்றலர் - பகைவர்]
பரிமேலழகர்: தானைப் பெருமையால் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும்;

'சூழவல்லாரைச் சூழ்ந்து நலிந்தவரையும்' என்ற பொருளில் மணக்குடவ்ரும் 'மதிலைச் சூழ்ந்து பொருவாரையும்' என்று பரிப்பெருமாளும் 'புறத்து வந்து சூழ்ந்துகொண்ட பகைவரை' என்று காலிங்கரும் 'தானைப் பெருமையால் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வலுவாகச் சூழ்ந்து வளைத்தவரையும்', 'முற்றிய புறத்துள்ளவர்களையும்', 'முற்றுகையைத் திறமையுடன் நடத்தி, கோட்டைக்குள் புகுந்துவிட முடிந்தவர்களையும்', 'முற்றுகை இட்டு வந்து சூழ்ந்துள்ள பகைவரையும் வென்று பிடித்தலைச் செய்து' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வலுவாக வளைத்துள்ள முற்றுகையிட்டோரையும் என்பது இப்பகுதியின் பொருள்.

பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னகத்து நின்று காக்கவல்லவராய்க் காப்பவர் வெல்வது அரணாவது.
மணக்குடவர் குறிப்புரை: பற்றாற்றுதல் -தாம் பற்றின இடம் விடாது வெல்லுதல்.
பரிப்பெருமாள்: அரணையும் பற்றுதலைச் செய்து மதில் தலையைப் பற்றியார் வெல்வது வெல்வது அரணாவது என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அரண் இல்லாமையே அன்றி வெல்லவும் வேண்டும் என்றது.
பரிதி: அரண் இருப்போம் என்பார்க்கு வெற்றி கொடுப்பது அரண் என்றவாறு.
காலிங்கர்: முற்றும் வெற்றியரசர் முன் கடாவியர் வேய்வர, வரத்து ஆற்றி எவ்வாற்றானும் தன்னைப் பதி4யாகப் பற்றி வாவோர் வெல்லுமாறு இருப்பது யாது; மற்று அதுவே அரணாவது என்றவாறு. [கடாவி-செலுத்தி; வேய்வர, வரத்து ஆற்றி-தூது வர வழிசெய்து; பதி-இடம்]
பரிமேலழகர்: தன்னைப்பற்றிய அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணாவது.
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை, சிறப்பும்மை. பற்றின் கண்ணே ஆற்றி என விரியும். பற்று - ஆகுபெயர். 'வெல்வது' என, உடையார் தொழில் அரண்மேல் நின்றது. பெரும்படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இவை ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.

'தன்னைப்பற்றிய அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலைதளராது நின்று வெல்வதே அரண்', 'தன்னை விடாமல் பற்றிய அரணுக்குள்ளே இருப்பவர் விடாமல் வெல்வதற்குரிய சிறப்பு வாய்ந்தது அரண்', 'உள்ளிருக்கும் வீரர்கள் பிடித்து அடக்கிவிடத் தகுந்த இரகசிய அமைப்புகள் உள்ளதாக இருப்பது கோட்டை', 'நாட்டைத் தமக்குரியதாகக் கொண்டுள்ளோர் வெற்றியடைவதே அரணாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நிலைதளராது நின்று, தன்னைத் துணையாகப் பற்றியுள்ள அகத்தோர்(உள்ளிருப்போர்) வெல்வதற்குரிய வல்லமை யுடையது அரண் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வலுவாக வளைத்துள்ள முற்றுகையிட்டோரையும், பற்றாற்றிப் பற்றியார் வெல்வதற்குரிய வல்லமை யுடையது அரண் என்பது பாடலின் பொருள்.
'பற்றாற்றிப் பற்றியார்' யார்?

விடாப்பிடியாக நின்று, பகைவரைத் தாக்கி விரட்டி அடிக்கத் துணைசெய்வது அரண்.

தன்னைத் துணையாகப் பற்றியுள்ள அகத்தோர்(உள்ளிருப்போர்), பகைவர் முற்றுகையை ஏற்றுப் பொரும் வல்லமையை அடைந்தும், முற்றுகையிட்டோரையும் தப்பிச் செல்லவிடாது அகப்படுத்தியும், வெல்வதற்குரிய வல்லமை யுடையதே அரணாகும்.
தாம் இருக்கும் இடம்விட்டுப் பெயராமல் நிலைத்து நின்றபடியே சூழ்ந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் வெல்லும் அமைப்பை உடையதே அரண்.
முற்றியவர் என்றது முற்றுகை இட்டவரைக் குறிப்பது. முற்று ஆற்றலாவது என்பது முற்றுகை இட வல்லவராதலாம்; 'சூழ்தல் வல்லவராய்' என்பது பரிமேலழகரது உரை; சி இலக்குவனார் 'பகைவர் முற்றுகையை ஏற்றுப் பொரும் வல்லமையை அடைந்து' எனப் பொருள் எழுதுகிறார். முற்றியவரையும் முற்றாற்றுதலாம் என்பது முற்றுகை இட்டவரையே போய்ச் சூழ்ந்து முற்றுகை இடுவது.
பற்றாற்றுதல் என்றது 'பற்றின்கண் ஆற்றுதல்- பற்றிய இடம் விடாதே நிற்றலை'க் குறிப்பது. அதாவது கோட்டைக்குள் தாம் இருந்த இடத்தில் இருந்தே வெல்வர் என்பது. பற்றியார் என்பது அரணாகிய தன்னைப் பற்றியவர் அதாவது அகத்தார் ஆவர்.

அரண் அமைப்பு வாய்ப்பாக இருக்கும்போது, அகத்தோர் பகைவரது முற்றுகையினால் தளர்ந்துவிடாது முற்றுகையிட்டோரைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்வர். உள்ளிருப்போர் பொருது நிற்பதற்கு துணையாவது மட்டுமன்றி பகைவரைத் தாக்கி வெற்றிபெற்றுத் தருவதும் கோட்டை என்று அரணது பெருமை போற்றப் பெறுகிறது. ஆற்றல் வாய்ந்த கோட்டை உயிருடைய பொருள்போல் செயலாற்றிப் போரில் பகைவரை வெல்ல உதவுகிறது என்று வள்ளுவர் இங்கு பாடுகிறார்.

சூழ்ச்சியுள் வன்மையும் முற்றுகைப் போரின் முருடும் இந்தப் பாட்டில் வல்லெழுத்துகளாகக் கருத்தும் செவிடுபட உருள்கின்றன என்கிறார் தெ பொ மீனாட்சிசுந்தரம்.

'பற்றாற்றிப் பற்றியார்' யார்?

'பற்றாற்றிப் பற்றியார்' என்பவர் அரணாகிய தமதிடத்தினை விடாது பற்றியிருக்கும் கடமையாற்றி அரணுக்குள் வசிக்கும் வீரர்கள். இவர்கள் அகத்தார் எனவும் அழைக்கப்படுவர். கோட்டைக்குள் இருந்து மதிலை விடாது நின்று காப்பவர்கள் இவர்கள். 'பற்றாற்றிப் பற்றியார்' என்றதற்கு சி இலக்குவனார் 'தன்னைத் துணையாகக் கொண்டுள்ள அகத்தோர் தப்பிச் செல்லவிடாது அகப்படுத்தி' எனப் பொருள் கொள்கிறார். அரணுக்குள் பாய்ந்த பகைவரை எதிர்கொள்தலே பற்றியார் பற்றாற்றுதல் ஆகும். கோட்டைக்குள் இருக்கும் பற்றாற்றிப் பற்றியார் தாம் இருக்கும் இடத்தை விட்டுவிடாமல், தாக்குதலுக்கு ஈடு கொடாது அரணைப் பற்றிநின்று அழிவோரைக் காத்துக்கொண்டு, மதிலைப் பற்றிய புறத்தாரை ஓட்டுதலும் செய்வர்.

கோட்டைக்குள் இருக்கும் வீரர்களே 'பற்றாற்றிப் பற்றியார்'.

வலுவாக வளைத்து வந்துள்ள பகைவரையும் தன்னை விடாமல் பற்றிய அகத்தார் வெல்வதற்குரிய சிறப்பு வாய்ந்தது அரண் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சூழ்ந்த பகைவரை வெல்ல விடாதது வல்அரண்.

பொழிப்பு

சூழ்ந்து வளைத்தவரையும், தன்னை விடாமல் பற்றிய அகத்தார் வெல்வதற்குரிய சிறப்பு வாய்ந்தது அரண்.