இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0531 குறள் திறன்-0532 குறள் திறன்-0533 குறள் திறன்-0534 குறள் திறன்-0535
குறள் திறன்-0536 குறள் திறன்-0537 குறள் திறன்-0538 குறள் திறன்-0539 குறள் திறன்-0540

பொச்சாப்பு சோர்வாய் வெளிப்பட்டுக் காலத்தோடு செய்யவேண்டிய செயலையும் இது என்னாற்றற்குத் தாழ்ந்தது; இலேசானது; என்று எண்ணச் செய்யும் ஆலசியம் ஆகும். இப்போதென்ன அவசரம்? என்ற அலட்சியறிவு தான் இது. இதுவே பொச்சாப்பு. மறதியன்று.
- ச தண்டபாணி தேசிகர்

பொச்சாப்பு என்பது கடமைகளைச் செய்வதில் ஆர்வமற்றும் ஈடுபாடற்றும் இருந்து அவற்றைப் பொருட்டாக மதியாமல் இருப்பதைக் குறிப்பது. அச்சொல் மறதி அதாவது நினைவாற்றல் இல்லாமையைக் குறிப்பது அல்ல. பெருகிவரும் செல்வம், தொடர்ந்துவரும் வெற்றி போன்றவற்றால் எழுகின்ற மகிழ்ச்சியால் பலருக்குக் கடமைகளை நிறைவேற்றுவதில் அலட்சிய மனப்பான்மை உண்டாகிறது. அதன் விளைவாக தாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைக்கூட எண்ணிக்கொள்ளாமல் ஒதுக்கிவைப்பர். இதுவே பொச்சாப்பு எனப்படுவது. எதிர்மறையில், பொச்சாவாமை என்பது மகிழ்ச்சிச் செருக்கால் சோர்வடையாமல் இருப்பதைச் சொல்வது. இன்றைய வழக்குநடையில் பொச்சாவாமையை மிதப்பின்மை எனச் சொல்லலாம்.

பொச்சாவாமை

உவகை பொங்கும்போது கடமையைப் புறக்கணிக்கும் உளப்பாங்கு மேலோங்குகிறது. அவ்வாறான எண்ணம் தோன்றாவண்ணம் காத்துக்கொள்ள வேண்டும். இதுவே பொச்சாவாமை. வள்ளுவர் இதைச் சோர்வின்மை, இகழாமை, வழுக்காமை என்ற மூன்று சொற்களால் இவ்வதிகாரத்துப் பாடல்களில் குறிக்கிறார். தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் பொச்சாப்பு என்பதற்கு 'கடைப்பிடியின்றி நெகிழ்ந்திருத்தல்' என வரையறை கூறி 'அதாவது பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும், ஓர் இகழ்ச்சியான் இடையுறவு படுதல்' என்றும் விளக்கம் செய்தார். இங்கு சொல்லப்படும் இகழ்ச்சி என்பது புகழ்ச்சிக்கு மறுதலையாகிய இகழ்ச்சியன்று; இது புறக்கணித்தலாகிய அலட்சிய மனப்பான்மை ஆகும்.
தொல்லாசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோரும் இன்றைய ஆசிரியர்களில் பெரும்பான்மையினரும் பொச்சாப்பு என்பதை மறதி என்ற பொருளிலே ஆள்கின்றனர். இது அவ்வளவு பொருத்தமன்று. தண்டபாணி தேசிகர் சொல்வதுபோல் மறதி என்பது நினைப்பிற்கெதிரான உள்ளப்பண்பு. மறதி அறிவு தேவையான நேரத்தில் வெளிப்படாமையைக் குறிப்பது. பொச்சாவாமை கடமையில் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை வலியுத்துவது. மேலே பேராசிரியர் கூறியதுபோல் நெகிழ்ச்சியின்றி செயலைக் கடைப்பிடிக்கவேண்டும் அதாவது அலட்சியத்தைத் தவிர்க்கவேண்டும் என்பதே பொச்சாவாமை.
காலிங்கர் இவ்வதிகாரம் முழுவதும் பொச்சாப்பு என்பதற்கு இகழ்ச்சி என்ற பொருளே கொள்கிறார்.
ஆங்கிலத்தில் Complacent attitude (அலட்சிய/தன்னிறைவான மனோபாவம்) என்ற சொல்லின் பொருளும் பொச்சாப்புக்குப் பொருந்திவரும்.
பொச்சாப்பு என்ற சொல் இகழ்ச்சி என்ற பொருளில் இன்றும் பேச்சு வழக்கில் உள்ளது.
கடமைகளை ஊக்கத்துடன் தளர்வின்றி செய்யவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தம் கடமை/பணி மீது ஒரு கண் இருந்து கொண்டே இருக்கவேண்டும். செய்யவேண்டிய செயல்கள் அந்தந்த நேரத்தில் நடக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். விழிப்புடன் கடமையாற்றவேண்டும். செயல்படவேண்டியவர்கள் தவிர்க்கக்கூடாத ஒன்று, சோர்வில்லாமை. சிறு சிறு செயற்கூறுகளையும் நினைவுடன் செய்தால்தான் முயற்சிகள் கைகூடும். தன்உருவம், கல்வி, அழகு, அதிகாரம், பதவிச் செருக்கு முதலிய காரணங்களால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறுமாப்பு வந்து விடுகிறது. துன்பத்திலே மனிதன் தன் நிலை இழப்பது போலவே மிகையான இன்பத்திலும் தன்நிலை மறந்து போகிறான். வெற்றி, தோல்வி, இரண்டிலும் மனத்தில் சம நிலையோடு இருப்பவர்களே எதிலும் கவனமாக இருக்க முடியும். எக்காரணங்களாலும் கடமைமறதி உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும். கவனிக்க வேண்டியவற்றைப் புறக்கணிப்பதால், தம் ஆட்சியையே இழந்த அரசுகள் வரலாற்றில் நிறைய உள. அலட்சிய மனப்பான்மை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த அதிகாரம்.
நீடித்த புறக்கணிப்பு புகழை அழிக்கும்; மகிழ்ச்சிச் சோர்வின்றி செயல் புரிந்தால் எந்தச் செயலையும் நிறைவேற்றமுடியும்; முன்னாளில் கடமையைத் தவறவிட்டுக் கெட்டவர்களை நினைத்துக்கொண்டு பொச்சாப்பைக் கைவிடுக. எந்தச் செயலிலும் தொடர்ந்து சிந்தனை செலுத்தி நினைவுடன் செயல்பட்டால் தாம் அடையநினைத்ததை எளிதில் பெறலாம் என்பன இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

பொச்சாவாமை அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 531ஆம் குறள் அளவு கடந்த சினம் தீயது; பொங்கும் உவகையில் கடமைகளில் தளர்தல் அதனினும் கேடானது என்கிறது.
  • 532ஆம் குறள் நீங்காத வறுமை அறிவை அழிக்கும்; நீடித்த மறதி நற்பெயரை அழிக்கும் எனச் சொல்கிறது.
  • 533ஆம் குறள் மகிழ்ச்சிச் சோர்வுடையார்க்குப் புகழ்ப்பேறு இல்லை என்பது உலகத்தின் எத்துறையிலிருப்போரும் ஒப்ப முடிந்ததாகும் எனச் சொல்வது.
  • 534ஆம் குறள் அஞ்சிக் கிடப்பார்க்கு காவலால் பயனில்லை; கடமைகளைச் செய்வதில் சோர்வுடையார்க்கு நன்மை இல்லை என்கிறது.
  • 535ஆம் குறள் முன்னரே காத்துக் கொள்வதைப் புறக்கணித்தவன், கேடு வந்தபின்னே தன் குற்றத்திற்குப் பன்மடங்கு வருந்துமாறு ஆகிவிடும் என்பதைக் கூறுவது.
  • 536ஆம் குறள் பொச்சாவாமை எவரிடத்தும் எக்காலத்தும் தவறாமல் வாய்க்குமானால், அதனை ஒத்த நன்மை வேறு ஒன்றும் இல்லை என்கிறது.
  • 537ஆம் குறள் சோர்வு இல்லாமை என்னும் கருவியைக் கொண்டு கருத்துடன் செயலாற்றினால், 'இது செய்தற்கு அரிய செயல்' என்று முடிக்க முடியாத செயல் எதுவும் இல்லை என்கிறது.
  • 538ஆம் குறள் புகழப்பட்ட நற்செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; அங்ஙனம் செய்யாது வழுக்கியவர்க்கு எப்போதும் நன்மையில்லை எனச் சொல்கிறது.
  • 539ஆம் குறள் தமது மகிழ்ச்சியால் செருக்கடைந்திருக்கும்போது, கடமையில் நெகிழ்ந்து கெட்டுப் போனவர்களை நினைவாராக எனக் கூறுவது.
  • 540ஆவது குறள் தான் அடைய நினைத்ததை ஒருவன் சோர்வுறாமல் எண்ணிக் கொண்டே இருக்கக் கூடுமாயின், அதனை எய்துதல் எளிதுதான் என்கிறது.

பொச்சாவாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

கடமையில் சோர்வுறுகின்றவர்கள் புகழ்பெற முடியாது; இது எல்லாத் துறையினர்க்கும் பொருந்தும் என்று கூறும் பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு(குறள் எண்:533) என்ற பாடல் பொச்சாவாமை யாவர்க்கும் தேவையானது என வலியுறுத்துகிறது. ‘எப்பால் நூலோர்க்கும்’ என்பது எல்லாத் துறைகளையும் அடக்கிச் சொல்லியது எனத் தெளியலாம்.

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின் (குறள் எண்: 537) என்றும் உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் (குறள் எண்: 540) என்றும் சொல்லப்பட்டதால் கடமைமறவாமை செயல் புரிதலை எளிதாக்குகின்றது என்பது பெறப்படும்.




குறள் திறன்-0531 குறள் திறன்-0532 குறள் திறன்-0533 குறள் திறன்-0534 குறள் திறன்-0535
குறள் திறன்-0536 குறள் திறன்-0537 குறள் திறன்-0538 குறள் திறன்-0539 குறள் திறன்-0540