இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0535



முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்

(அதிகாரம்:பொச்சாவாமை குறள் எண்:535)

பொழிப்பு: வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைந்து இரங்குவான்.

மணக்குடவர் உரை: ......................................

பரிமேலழகர் உரை: முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும்.
(காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நினைவோடு முன்னே தடுக்காது மறந்தவன் தன்பிழைக்குப் பின்னே வருந்தி இரங்குவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முன்னுறக் காவாது இழுக்கியான் பின்னூறு தன்பிழை இரங்கி விடும்.


முன்உறக் காவாது இழுக்கியான்:
பதவுரை: முன்-முன்பு; உற-பொருந்த; காவாது-காக்காமல்; இழுக்கியான்-மறந்திருந்தவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: எதிரது ஆகவே பழிவரும் வழியைக் காவாதே அதனை இகழ்ந்து தப்பச் செய்தவன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: தன்பழி முன்னுறக் காவாதான் என்று கூட்டுக.
பரிதி: தனக்கொரு விதனம் வருமுன்னே காவாதான்; [விதனம் - விசனம் அதாவது துன்பம்]
காலிங்கர்: யாம் பிறரை அவமதிப்பின், பின்பு எமக்கே பலரானும் கேடுவந்து எய்தும் என்று முன்கோலித் தேர்ந்து பரிகரியாது பிறரை அவமதி பண்ணினான் யாவன்; [முன்கோலி - முன்னே எண்ணி; பரிகரியாது - நீக்காது]
பரிமேலழகர்: தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்;
பரிமேலழகர் குறிப்புரை: காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன.

'தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் பொச்சாப்பு என்ற சொல்லுக்கு இகழ்ச்சி என்று பொருள் கொள்வதால் அதற்கேற்றாற் போல் உரை கூறியுள்ளளர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பங்களை வருமுன் அறிந்து காக்காமல் மறந்தவன்', 'இன்ப காலத்தில் தன் கடமைகளை மறக்கிறவன்', 'முற்பட்டு வரக்கூடிய இடர்களை வராமற்காவாது மறந்திருப்பவன்', 'தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துன்பங்கள்வரும் வழியைக் காவாதே அதனைப் புறக்கணித்தவன் என்பது இப்பகுதியின் பொருள்.

தன்பிழை பின்னூறு இரங்கி விடும்:
பதவுரை: தன்-தனது; பிழை-குற்றம்; பின்-பிறகு; ஊறு-உற்றகாலம் (2-ஆம் பதவுரை: நூறு-நூறு அல்லது பலமுறை); இரங்கிவிடும்- திண்ணமாக ஏங்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: அத்தப்பினால் வரும் குற்றத்துக்கு இரங்கிவிடும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறியவாறு செய்யாதார் முன்பே செய்யப்பெற்றிலேம் என்று இரங்குவர் என்றபடி.
பரிதி: விதனம் வந்தால் ஒருவிதனம் நூறு விதனமாக இரங்கிவிடும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவன், தன்பழி பின் எண்ணிறந்த பலவாவதும் செய்து மற்றும் துயர் ஆற்றாது பெரிதும் சோகித்துக் கெட்டுவிடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: பின்னூறு என்பது நூறு வகையால் இரக்கத்தைத் தரும் என்றவாறு.
பரிமேலழகர்: பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.

பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியும் காலிங்கரும் பின்+ஊறு என்று பிரிக்காமல் பின்+நூறு என்று கொண்டதால் நூறுவகையால் இரக்கத்தைத் தரும் என உரைப்பர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பின்னர் அத்துன்பம் வந்தபோது தன் குற்றத்தை நூறுமடங்காக எண்ணி இரக்கங் கொள்வான் (பின் நூறு இரங்கிவிடும் எனப்பிரித்துக் கொள்ளப்பட்டது. பின் ஊறு எனப் பிரித்துப் பிழை உறுவதனால் இரங்குவான் என்றும் பொருள் கொள்ளலாம்)', 'பின்னால் வரக்கூடிய துன்பங்களை உணர்ந்து முன்னெச்சரிக்கை செய்ய முடியாத குற்றமுடையவன். அக்குற்றத்தால் பின்னால் துன்பங்கள் வந்தே தீரும். அதனால் அவன் நொந்தே போவான்', 'இடையூறு வந்தபின் தன் குற்றத்தை நினைத்து மனம் வருந்துவான்', 'பின் வந்தபோது தடுத்துக்கொள்ள முடியாமல் அத்தவற்றை நினைந்து இரங்கிவிடுவான் (வருந்துவான்)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அத்தப்பினால் வரும் குற்றத்துக்கு இரங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முன்னரே காத்துக் கொள்வதைப் புறக்கணித்தவன், தீமை வந்தபின்னே தன் குற்றத்திற்குப் பன்மடங்கு வருந்துமாறு ஆகிவிடும்.

துன்பங்கள்வரும் வழியைக் காவாதே அதனை ஒதுக்கிப் புறக்கணித்தவன் அத்தப்பினால் வரும் குற்றத்துக்கு பின்னூறு இரங்கி விடும் என்பது பாடலின் பொருள்.
'பின்னூறு' என்பதன் பொருள் என்ன?

முன்னுற என்ற சொல்லுக்கு முன்னே உணர்ந்து என்பது பொருள்.
காவாது இழுக்கியான் என்ற தொடர் காத்துக்கொள்ளாது தவறியவன் என்ற பொருள் தரும்.
தன்பிழை என்ற தொடர்க்கு தனது தவறு(தலுக்கு) என்று பொருள்.
இரங்கிவிடும் என்ற தொடர் வருந்தும் எனப் பொருள்படும்.

செல்வச் செருக்காலோ, இன்பத்தில் திளைத்த மயக்கத்தாலோ தான் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்துப் பின்வரும் ஊறுபாடுகளைத் தடுக்கத் தவறியவன், நூறுமடங்கு வருந்தவேண்டி இருக்கும்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறுப் போலக் கெடும் (குற்றம்கடிதல் குறள் எண்:435) என்ற பாடலின் நடையில் அமைந்த குறள் இது. அது குற்றம் நிகழாமல் தடுப்பதற்கான வழியாகச் சொல்லப்பட்டது. இங்கு தான் செய்யவேண்டிய கடமையை அலட்சியப்படுத்தினால் உண்டாகும் துன்பங்கள் பற்றி எச்சரிப்பதாகிறது. தன்னால் தடுக்கப்படவேண்டிய கேட்டினை அது வந்து எய்தும் என்று முன்பே எண்ணித் தேர்ந்து நீக்காது பின் இரங்குவதாற் பயனில்லை; அவற்றினிடையே காலத்தாழ்ச்சி மிகை ஆகிவிடும்; துயர் காக்க இயலாமல் போய்விடும்.
இழுக்கியான் என்பதற்குப் பரிப்பெருமாள் கூறிய இகழ்ந்து தப்புச் செய்தவன் என்ற பொருள் சிறந்தது. இங்கு இகழ்ந்து என்பது அலட்சியம் செய்து என்ற பொருளில் வந்தது.

நிகழ்காலப் பெருமையில் மனம் ஊன்றி, வருங்காலத்தை எண்ணிப்பாராமல் அலட்சியப் போக்காய் இருந்தால் பெருங்கேடு விளையும் என்பது கருத்து.

'பின்னூறு' என்பதன் பொருள் என்ன?

பின்னூறு என்பதை பின்+நூறு எனப் பிரித்து நூறு வகையால் இரக்கத்தைத் தரும் என்று பரிதியும் காளிங்கரும் கூறுவர். மற்றவர்கள் பின் ஊறு எனப் பிரித்துப் 'பின்துன்பம் உறுவதனால்' எனக் கொள்வர்; ஊறு என்பது உறுதல் என்னும் பொருளை உணர்த்தும்; ஊறு நேர்ந்தவிடத்து எனக்கொண்டு 'பின்வரும் துன்பங்கள்' என்று பொருள் உரைப்பர். இரண்டுமே ஏற்கத்தக்கவையே.

'பின்னூறு' என்பதற்கு பின்வரும் துன்பங்கள் என்று பொருள்.

துன்பங்கள்வரும் வழியைக் காவாதே அதனை ஒதுக்கிப் புறக்கணித்தவன் அத்தப்பினால் வரும் குற்றத்துக்கு இரங்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொச்சாவாமை பின் ஏற்படக்கூடிய பெரிய இழப்பைத் தடுக்கும்.

பொழிப்பு

முன்னமே தடுக்காது புறக்கணித்தவன் அதன்காரணமாகப் பின்னர் வரும் துன்பங்களுக்கு வருந்தி இரங்குவான்.