இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0534



அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு

(அதிகாரம்:பொச்சாவாமை குறள் எண்:534)

பொழிப்பு (மு வரதராசன்): உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்தும் பயன் இல்லை; அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.



மணக்குடவர் உரை: அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை: அதுபோலப் பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை.
இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.

பரிமேலழகர் உரை: அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை.
(நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: பயம் உள்ளவர்களுக்கு (அவர்கள் எவ்வளவு பாதுகாப்பான இடத்திலிருந்தாலும் அவர்களுடைய பயமே அவர்களைக் குலைத்துவிடுமாகையால்) அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை; அதுபோல களிப்பினால் கடமைகளை மறந்திருப்பவர்களுக்கு (அந்தக் களிப்பே அவர்களைக் கெடுத்துவிடுமாகையால்) நல்வாழ்வே இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அரண் அச்சம் உடையார்க்கு இல்லை; ஆங்கு பொச்சாப்பு உடையார்க்கு நன்கு இல்லை.

பதவுரை: அச்சம்-பயம்; உடையார்க்கு-உடையவர்க்கு, உள்ளவர்க்கு; அரண்-பாதுகாப்பு; இல்லை-இல்லை; ஆங்கு-அது போல; இல்லை-இல்லை; பொச்சாப்பு-கடமைமறத்தல்; உடையார்க்கு-உடையார்க்கு; நன்கு-நன்மை, பயன், செல்வம்.


அச்சம் உடையார்க்கு அரண்இல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை;
பரிப்பெருமாள்: அச்சமுடையார்க்கு அவ்வச்சம் தீர்க்கவல்லது ஓர் அரண் இல்லை;
பரிப்பெருமாள் குறிப்புரை: அச்சம் புகுந்துழி எல்லாம் புகுதும் ஆதலின் அதனைக் காப்பது ஓர் அரண் இல்லை என்றார்.
பரிதி: பேடியான பேர்க்கு அரண் இல்லை;
காலிங்கர்: அச்சம் உடைய அரசர்க்குப் புறத்து எல்லாம் அரண் உடையரே ஆயினும், ஒன்றும் இல்லையானவாறு எவ்வண்ணம்;
பரிமேலழகர்: காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை; [முதலிய என்றமையின் மதிலும் கடலும் கொள்க; அவற்றால்-அவ்வரண்களால்]

'அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அஞ்சிக் கிடப்பார்க்கு அரண் உண்டோ?', 'மனத்தில் அச்சமுடையவர்களுக்குப் புறத்தே உள்ளத்திற் காவலால் பயனில்லை', 'காடு, மலை முதலிய அரண்கள் அச்சம் உடையவர்களுக்குப் பயன்படுவது இல்லை', 'அச்சம் உடையார்க்கு எவ்வகைப்பட்ட அரணாலும் பயனில்லை' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உள்ளத்தில் அச்சமுடையார் எத்துணை பாதுகாப்பு கொண்டாலும் அவை அரண் ஆகா என்பது இப்பகுதியின் பொருள்.

ஆங்கில்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோலப் பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.
பரிப்பெருமாள்: அதுபோலப் பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லையாம் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மறந்தார் செய்வதோர் பொருளில்லை. ஆதலின் நன்மை இல்லை என்றார். இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.
பரிதி: அதுபோலப் பொய்யாகிய மதம் பெற்றார்க்கு ஆக்கமில்லை என்றவாறு. [பொய்யாகிய மதம் - உண்மையல்லாத முனைப்பு]
காலிங்கர்: மற்று அவ்வண்ணமே இல்லை; யாது எனின், பிறரை எளியர் என்று அவமதிப்பினை அகத்துடையார்க்கு நன்மைகள் ஒன்றும் இல்லை; தீமைகளே என்றவாறு.
பரிமேலழகர்: அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.

'அதுபோலப் பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறதிவாய்ப் பட்டார்க்கு எந்நலமும் இல்லை', 'அதுபோலச் செல்வமெல்லாம் உடையவராயினும், மனத்தில் மறதியுடையார்க்கு அவற்றால் நன்மை இல்லை', 'அதுபோலச் செல்வமும் சோர்வுடையார்க்குப் பயன்படுவது இல்லை', 'அதுபோல மறதியுடையார்க்கு எதனாலும் நன்மையில்லை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அதுபோல பெருமகிழ்ச்சியிலும் செருக்கிலும் கடமை மறந்தவர்க்கு நல்ல நிலைமைகள் வாய்த்திருந்தாலும் அவற்றால் பயன் உண்டாகா என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
உள்ளத்தில் அச்சமுடையார் எத்துணை பாதுகாப்பு கொண்டாலும் அவை அரண் ஆகா; அதுபோல பெருமகிழ்ச்சியிலும் செருக்கிலும் கடமை மறந்தவர்க்கு நல்ல நிலைமைகள் வாய்த்திருந்தாலும் அவற்றால் நன்கு இல்லை என்பது பாடலின் பொருள்.
'நன்கு' குறிப்பது என்ன?

மெத்தனப்போக்குடையார்க்கு எல்லா அரணும் நீங்கிப் போகும்.

எவ்விதம் எந்தவகையான அரண்களுக்கு நடுவே இருந்தாலும் மனத்தில் அச்சத்தை யுடையவர்களுக்கு அக்காவல்களால் பயன் ஒன்றும் இல்லையோ அவ்விதம் உவகை மிகுதியால் ஒருவர் தன் கடமைகளைச் செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் இல்லாமல் இகழ்ச்சியும் சோர்வும் கொண்டவராக இருந்தால் காவல் என்னும் நன்மை இல்லாமல் போய்விடும்.
அச்சம் உடையார்க்கு அரண்இல்லை என்பதிலுள்ள 'அரணில்லை' என்ற தொடர் 'அரணால் பயனில்லை' என்ற பொருள் தருவதாக உள்ளது. புறத்து எல்லா அரணும் உடையனே ஆயினும், அச்சம் உடையவனுக்கு அவை யாவையும் இல்லையாம். மனதில் அச்சம் புகுந்துவிட்டால் அவன் அரணற்ற சூழலில் இருப்பதாகவே உணர்வான். படைகள் பல சூழக் கோட்டைக்குள் இருந்து காப்புச் செய்துகொண்டாலும் அவனுக்குத் துணிவுவராது; எதிர்ப்பு ஆற்றல் இல்லாத மெலிந்த உடலில் எந்தப் பிணியும் எந்த நேரத்திலும் தாக்கிவிடுவதுபோல பயம்கொண்டவனுக்கு எத்துணைக் காவல் இருந்தும் இல்லாததுபோல்தான். புறப்பாதுகாப்புகள் எல்லாம் மனம் வலிமையில்லாதபோது பயனற்றவை என்பது செய்தி.

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை என்ற நீதியை உவமாகக் காட்டிப் பொச்சாப்பு உடையார்க்கு நன்கு இல்லை என்ற மற்றொரு நீதியை உணர்த்தும் பாடல் இது. பொச்சாப்பு உடையார் என்ற தொடர் தன்னிடம் எல்லாம் நிறைவாக இருப்பதாக எண்ணி அதனால் வரும் இன்பக் களிப்பினால் உண்டாகும் மயக்கத்தினால் ஆர்வம் குன்றிக் கடமை மறப்பவரைக் குறிப்பது. இகழ்ச்சி மனப்பான்மை கொண்டவர் எனவும் கூறலாம்; காலிங்கர் இங்கு 'பிறரை எளியர் என்று அவமதிப்பினை அகத்துடையார்' எனப் பொருளுரைக்கிறார். இதுவும் ஏற்புடையதே. எனவே பொச்சாப்பு உடையார் என்பது கடமை மறதிகொண்டவர், சோர்வுடையவர், இகழ்வோர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சொல். இம்மறதியால் பொச்சாப்பு உடையார் தற்காத்தலில் சோர்வடைவர்; தன்வலிமை குன்றி ஆற்றல் இழப்பர்; பொருள் ஏதும் செய்ய இயலாதவராகிவிடுவர்; செல்வச் செழிப்பிருந்தும் அனைத்தும் அழிந்துபோகும். காவல் என்னும் நன்மை இருக்காது. 'நன்கு இல்லை' என்ற தொடர் இதைக் குறிக்கிறது.
அச்சம் உடையார்க்கும் பொச்சாப்பு உடையார்க்கும் காவல் இல்லை என்பது இப்பாடல் சொல்லவரும் கருத்து.

ஆங்கு என்ற சொல்லுக்கு 'அதுபோல' என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, பரிமேலழகர் ஆகியோர் பொருள் உரைத்தனர். காலிங்கர் 'அவ்வண்னமே' என்று சொன்னார். ஆங்கு உவம உருபாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட இருநீதிக்கருத்துக்களையும் இணைத்து 'ஆங்கு' உவம உருபினைப் பெய்து பாடல் படைக்கப்பெற்றுள்ளது.
அரண் இல்லை ஆங்கு இல்லை எனவரும் தொடர்கள் நடைநயம் சிறந்து நிற்கத் துணை செய்கின்றன.

'நன்கு' குறிப்பது என்ன?

'நன்கு' என்ற சொல்லுக்கு நன்மை, ஆக்கம், பயன், நலம், நல்வாழ்வு, செல்வங்கள், நல்ல நிலை என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர்/பரிப்பெருமாள் தமது உரையில் இச்சொல்லுக்கு நன்மை என்று கூறி விளக்கவுரையில் காவல் என்று குறித்தனர். உவமையையும் பொருளையும் தொடர்புபடுத்தும் சொல்லாகக் 'காவல்' உள்ளது. காவல் என்னும் நன்மை எனக் கொள்ளலாம்.
நன்மைக்கேது வானது நன்கு. நல் - நன் - நன்கு என சொற்பொருள் விளக்கம் தருவர் பரிமேலழகரும் தேவநேயப்பாவாணரும். இவர்கள் நன்கு என்பது காரியவாகு பெயராக எல்லா நன்மைக்கும் ஏதுவாகிய செல்வத்தின்மேல் நின்றது என்கின்றனர்.

எத்துணை ஆக்கம் பெற்றிருந்தாலும் மனத்தின் கண் சோர்வுடையவர்க்கு ஊக்கம் கொள்ள இயலாது போவதால் அவர் செய்வதோர் பொருளில்லை. ஆதலின் நன்மை இல்லை. மேலும் தனக்குப் பாதுகாப்பு என்று கருதும் செல்வங்களும், பிற வளங்களும் கூட, அவரது மறதி, புறக்கணிப்பு காரணமாக, பாதுகாக்க உதவாமல் போய் அவரை அழித்துவிடும். அதுபோல் அளவற்ற மகிழ்ச்சியின் விளைவால் உண்டான ஆர்வம் குறைந்த மனத்தூக்கத்தில், எத்துணை நலம் இருந்தும் நன்மையுண்டாகாது; இருக்கும் நலங்களும் தேயும்.

‘நன்கு’ நன்மை என்னும் பொருளது.

உள்ளத்தில் அச்சமுடையார் எத்துணை பாதுகாப்பு கொண்டாலும் அவை அரண் ஆகா; அதுபோல பெருமகிழ்ச்சியிலும் செருக்கிலும் கடமை மறந்தவர்க்கு நல்ல நிலைமைகள் வாய்த்திருந்தாலும் அவற்றால் நன்மை இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொச்சாவாமை நன்மையை அரண் செய்யும்.

பொழிப்பு

அஞ்சிக் கிடப்பார்க்கு பாதுகாப்பு இல்லை. அதுபோல ஆர்வம் குறைந்து கடமை மறந்து இருப்பவர் நன்மைகளை இழப்பர்.