இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0531இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு

(அதிகாரம்:பொச்சாவாமை குறள் எண்:531)

பொழிப்பு: பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

மணக்குடவர் உரை: மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு.
தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.

பரிமேலழகர் உரை: சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.
(மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று)

தமிழண்ணல் உரை: மிகக் கூடுதலான உவகைக் களிப்பினால் ஏற்படும் கடமைமறதி, அளவுகடந்த வெகுளியைவிடத் தீதாகும்.
அளவு மீறிய கோபம் தன்னையே கொல்லவல்லது. அளவுகடந்த மகிழ்ச்சியில் மிதந்து, கடமைகளை அலட்சியப்படுத்தி மறப்பதும் தனக்கே தீதாய் முடியும். இன்று தேர்தலில் வெற்றிபெற்ற அக்கணமே, அளவு கடந்த மகிழ்ச்சியடைந்து, அனைத்துக் கடமையையும் மறப்போரை நினைவு கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு இறந்த வெகுளியின் தீதே.


இறந்த வெகுளியின் தீதே:
பதவுரை: இறந்த-அளவு மீறிய; வெகுளியின்-சினம் கொள்வதினும்; தீதே-கொடிதே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்;
பரிப்பெருமாள்: மிக்க வெகுளியுடையனாதலினும் தீது;
பரிதி: அறிவு போன கோபத்திலும் பொல்லாது;
காலிங்கர்: அரசராய் உள்ளார் தமக்கு அடாதவழிச் சினக்கின்ற மிகுசினம் போல மிகவும் தீது என்பது யாதோ எனின்; [அடாதவழி-பொருந்தாவிடத்து]
பரிமேலழகர்: அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.

'அளவிறந்த வெகுளியினும் தீது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகுந்த சினத்தைக் காட்டிலும் தீது', 'ஒருவனுக்கு அளவு கடந்த சினத்தைக் காட்டிலும் தீமை தரும்', 'அளவிறந்த சினத்தினும் தீயதே', 'அளவிறந்த சினத்தினும் தீதாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அளவுமீறிய சினம் கொள்வதினும் கேடானதே என்பது இப்பகுதியின் பொருள்.

சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு:
பதவுரை: சிறந்த-மிகுந்த; உவகை-மகிழ்ச்சி; மகிழ்ச்சியின்-மகிழ்ச்சியினது; சோர்வு-மறவி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு.
மணக்குடவர் குறிப்புரை: தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.
பரிப்பெருமாள்: மிக்க உவகையால் உண்டான மகிழ்ச்சியால் தன்னை மறந்திருத்தல் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காமத்தின் கண்ணும் வெருட்சியின் கண்ணும் கடைப்பிடித்தல் கூறிற்று.
பரிதி: செல்வம் பெற்றோம் என்னும் பிரியத்தினால் உள்ளம் மறப்பது என்றவாறு.
காலிங்கர்: தமது மனச்செருக்கினாலே யாவர்மாட்டும் இன்புற்றிராது மிக்க உவகையைச் சோர விடுக்கின்ற சோர்வு என்றவாறு.
பரிமேலழகர்: மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி.
பரிமேலழகர் குறிப்புரை: மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று.

மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் தமது மனச்செருக்கினாலே யாவர்மாட்டும் இன்புற்றிராது மிக்க உவகையைச் சோர விடுக்கின்ற சோர்வு என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரிய மகிழ்ச்சிக்கிடையே காரியத்தை மறத்தல்', 'மிகுந்த மகிழ்ச்சியின்பத்தால் வரும் மறதி', 'செல்வமிகுதி முதலியவற்றால் ஏற்படும் பெருமிதக்களிப்பால் வரும் மறதி', 'மிகுந்த மகிழ்ச்சிப்பெருக்கால் வரும் மறதி' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மிகுந்த மகிழ்ச்சிக் களிப்பால் உண்டாகும் அலட்சிய மனப்பான்மை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அளவு கடந்த சினம் தீயது; பொங்கும் உவகையில் கடமைகளில் தளர்தல் அதனினும் கேடானது.

சிறந்த உவகை மகிழ்ச்சியால் வரும் அலட்சிய மனப்பான்மை, அளவுமீறிய சினம் கொள்வதினும் கேடானதே என்பது பாடலின் பொருள்.
'சிறந்த உவகை மகிழ்ச்சி' என்றால் என்ன?

இறந்த வெகுளியின் என்ற தொடர்க்கு அளவுமீறிய சினத்தைவிட என்பது பொருள்.
தீதே என்ற சொல் கெடுதியே என்ற பொருள் தரும்.
சோர்வு என்ற சொல் கடமையைப் புறக்கணித்தல் எனப் பொருள்படும்.

மிகுந்த உவகை மகிழ்ச்சியால் உண்டாகும் அலட்சியப் போக்கானது அளவிறந்த வெகுளியைக் காட்டிலும் கேடு பயக்கும்.

பொச்சாப்பு இங்கு 'சோர்வு' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. பொங்கும் மகிழ்ச்சிக்கிடையே கடமையைப் புறக்கணித்தல், மிகுந்த சினத்தைக் காட்டிலும் தீயது.
சினம் தன்னையே கொல்லும் என்றும், சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியென்றும், சினத்தின் கொடுமையை வள்ளுவர் 'வெகுளாமை' அதிகாரத்தில் சொல்லியுள்ளார். மகிழ்ச்சியான் வரும் பொச்சாப்பு இவற்றைவிட என்ன தீது செய்துவிடும்? என இங்கு கேட்கிறார் அவர்.
பொச்சாப்பால் தற்காப்பு குன்றும். பகைவர் வளர்வர். தன்னையும் சுற்றத்தையும் மட்டுமல்லாமல் பொது நலனையும் அழிக்கவல்லதாகும். ஆதலால் தன்னையே கொல்லும் சினத்தினும் கேடானது எனப்பட்டது. 'வெகுளியால் வரும் பகையிலும் மறதியால் வரும் பகைமை பெரிதும் துன்பம் செய்யும். எப்படியெனில் மறதி என்று ஏற்றுக்கொள்ளாது இகழப்பட்டதாகவும் அலட்சியயப்படுத்தப்பட்டதாகவும் நன்றி மறந்ததாகவும் கருதப்பெற்று மிகவும் பழிக்கு ஆளாக நேரிடும். வெகுளி ஓரோவழி தோன்றுவது. மறதி வாழ்நாள் முழுதும் அனைத்துத் துறையிலும் ஊடுருவி இடர்ப்பாட்டினைச் செய்யும்' என விளக்குவார் குன்றக்குடி அடிகளார்.

பரிப்பெருமாள் உரை 'மிக்க வெகுளியுடையனாதலினும் தீது, மிக்க உவகையால் உண்டான மகிழ்ச்சியால் தன்னை மறந்திருத்தல் என்றவாறு. இது காமத்தின் கண்ணும் வெருட்சியின் கண்ணும் கடைப்பிடித்தல் கூறிற்று' எனச் செல்கிறது. 'எந்தச் சமயத்திலும்-காமத்தின் கண் உண்டாகும் பேருவகையின்போதும் அல்லது வெகுளியால் உண்டாகும் வெருட்சியின் போதும்- கடமையைக் கடைப்பிடித்தலை விடக்கூடாது; செல்வம்,செருக்கு முதலியவற்றான் சோர்வு வரும் என்றாலும், காமத்தான் வருவது மிகை; அளவிறந்த வெகுளியும் பொச்சாப்புண்டாக்கும்; அதனால் விளையும் தீதைவிட உவகை மகிழ்ச்சியால் விளையும் பொச்சாப்பு உண்டாக்கும் தீமை பெரிது; காமத்தாலும் வெருட்சியாலும் பொச்சாப்பு வராமல் காத்துக்கொள்ளவேண்டும்' என்பது இவர் உரைதரும் பொருள்.
'வெகுளியாலும் மகிழ்ச்சியாலும் பொச்சாப்பு உண்டாவதால் இரண்டினையும் குறித்தார் வள்ளுவர்' என்று ஓர் உரை கூறுகிறது.

'சிறந்த உவகை மகிழ்ச்சி' என்றால் என்ன?

'சிறந்த உவகை மகிழ்ச்சி' என்றதற்கு மிக்க உவகைக்களிப்பு, மிக்க உவகையால் உண்டான மகிழ்ச்சி, மிக்க உவகை, மிகக் கூடுதலான உவகைக் களிப்பு, பெரிய மகிழ்ச்சி, மிகுந்த மகிழ்ச்சி, மிக நல்ல இன்பங்களின் களிப்பு, அளவுகடந்த இன்பத்தால் உண்டாகும் மகிழ்ச்சி, பெருமிதக்களிப்பு, மிகுந்த மகிழ்ச்சிப்பெருக்கு, பொங்கும் உவகை, மிகுந்த உவகைக் களிப்பு என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர். மேலும் 'சிறந்தவுவகை பெருஞ்செல்வம் , இடைவிடா இன்ப நுகர்ச்சி, பெரும்புகழ் முதலியவற்றால் நேர்வது' என்றும் 'சிறந்த உவகை மகிழ்ச்சி என்பது 'சிறப்பான வெகு நியாயமான வழியில் அனுபவிக்கிற இன்பங்களால் வரும் மகிழ்ச்சி' (குற்றமற்ற இன்ப மகிழ்ச்சியிலும் தர்மங்களை மறந்துவிடக் கூடாது என்பது கருத்து)' என்றும் 'மிக்க உவகை என்பது பெருஞ்செல்வம். பேரின்பம் முதலியவற்றால் வருவது' என்றும் உரை வரைந்தனர்.
பரிமேலழகர் மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது என்று விளக்கம் தந்தார். அவரே மகிழ்ச்சி என்பதற்கு உணர்வு அழிந்த மயக்கம் (களிப்பு-உணர்வு அழியாதது) என்று குறள் 1281-க்கான உரையில் கூறியுள்ளார்.

'சிறந்த உவகை மகிழ்ச்சி' என்பது மிக்க உவகை மகிழ்ச்சியைக் குறித்து 'அளவு கடந்த மகிழ்வாலாய மதி மயக்கம்' என்ற பொருள் தரும்.

மிகுந்த மகிழ்ச்சிக் களிப்பால் வரும் அலட்சிய மனப்பான்மை, அளவுமீறிய சினம் கொள்வதினும் கேடானதே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெருமகிழ்ச்சியால் பொச்சாவாமை நீங்காமல் காக்கப்படவேண்டும்.

பொழிப்பு

மிகுந்த மகிழ்ச்சிக்கிடையே வரும் கடமைத் தளர்வு ஒருவனுக்கு அளவு கடந்த சினத்தைக் காட்டிலும் கேடு உண்டாக்கும்.