இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0691 குறள் திறன்-0692 குறள் திறன்-0693 குறள் திறன்-0694 குறள் திறன்-0695
குறள் திறன்-0696 குறள் திறன்-0697 குறள் திறன்-0698 குறள் திறன்-0699 குறள் திறன்-0700

தலைவனுடைய பண்புகளாகக் கூறவேண்டியவற்றை முன்னே கூறியவர், அவனைச் சார்ந்து பழகுகின்றவர்களுக்கே சில கடமைகளை இங்கு வற்புறுத்துகின்றார்.
- மு வரதராசன்

மன்னரைச் சேர்ந்தொழுவோர்க்கான பழகும் முறைகள் பற்றிக் கூறும் அதிகாரம் இது. அமைச்சர்கள், படைத்தலைவர், தூதர், ஒற்றர்கள் மற்றும் தலைவருடன் நாளும் நேரிடையாகத் தொடர்புடைய மற்றவர்களும் மன்னரைச் சேர்ந்தொழுகுவார் ஆவர். மன்னர் எனச் சொல்லப்பட்டாலும் அதிகாரக் கருத்துக்கள் இன்றைய ஆட்சித்தலைவர்க்கும் நன்கு பொருந்துவதாக உள்ளன. அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், பொது, தனியார் பெருநிறுவன நிர்வாகத் தலைவர்களைச் சார்ந்தார்க்கும் அவை உடன்படுவனவாக உள.

மன்னரைச் சேர்ந்தொழுகல்

'மன்னரைச் சேர்ந்தொழுகல்' அதிகாரம் தலைவரைச் சேர்ந்து வாழ்பவர்களின் பழக்கங்கள் பற்றியது.
தலைமை தாங்குவரோடு பழகத் தனித்திறம் வேண்டும். உயர் நிலையிலிருப்பவர்களிடம் ஒழுகும் முறைமை தெரிந்துகொள்வதால் பல நன்மைகள் உண்டு. இக்கலையில் கைவந்தவர்கள் ஆட்சிச் செயல்பாடுகளைத் திறம்பட ஆள்வர். இதில் ஆற்றல் பெற்றோரே அதிகார மையத்தோடு சேர்ந்துபழகுவதில் வெற்றி காண்பர். இவ்வதிகாரத்தில் தரப்பட்டுள்ள அறிவுரைகள் தலைவரின் உள்வட்டத்தில் இருப்போர்க்கு நல்ல துணையாய் நிற்கும்.

ஆட்சித்தலைவரைக் குறிக்க வள்ளுவர் இகல்வேந்தர் என்ற தொடரைப் பயன்படுத்துகிறார். இதற்கு மாறுபடும் மனமுடைய மன்னர் எனப் பொருள் கூறுவர். அன்பும் சினமும் மாறிவரும் குணம் கொண்டவர் இவர். தலைமைப் பொறுப்பிலுள்ள அனைவருக்கும் இக்குணம் இயல்பாகிவிடும். இப்பண்பு கொண்டவரிடம் எவ்விதம் சேர்ந்துஒழுகுதல் வேண்டும் என்று இவ்வதிகாரத்தில் கற்றுக் கொடுக்கின்றார் வள்ளுவர். ஆட்சியைத் திறம்பட எடுத்துச் செல்வதற்கு உயர்நிலையிலிருப்பவர்களுக்கு நல்ல பழகுமுறை தேவை. நல்ல நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். இல்லாவிட்டால் அது ஆட்சியின் மாண்புக்கு கேடு உண்டாக்கும்.

சேர்ந்தொழுகுவோர்க்கு வழங்கப்படும் அறிவுரைகள்:
உறவின் நெருக்கம்:
தலைவரோடு தீக்காய்வார் போல அணுக்க உறவு வைத்துக்கொள்ளவேண்டும்.
செய்யத்தகுவன, செய்யக் கூடாதன:
தம்மீது ஐயம் கொள்ளாதிருக்க, சேர்ந்தொழுகுவோர் தலைவர் விரும்புவனவற்றில் தாம் நாட்டம் கொள்ளாமல் இருக்கவேண்டும், பெருங்குற்றங்கள் தம்மிடம் நிகழாமல் காத்துக்கொள்ளவேண்டும்; அவர் முன்னிலையில் செவிச்சொல் கூறுவதையும் சேர்ந்து நகையாடலையும் நீக்க்கவேண்டும்;. அவரது ஒழுங்கமைதியைத் தெரிந்து கொள்ள முயலாதிருக்க வேண்டும்; அவரது முகம், கண்கள் மூலம் குறிப்பறிந்து உரிய நேரம் பார்த்து, வெறுப்பில்லாதனவாய், வேண்டிய அளவினவாய் ஏற்கத்தக்க வகையில் சொல்லவேண்டும்; பயனுள்ள செயலைக் கேட்காமலேயே சொல்லவேண்டும், பயனற்றதைக் கேட்டாலும் சொல்லக்கூடாது. தலைவர் வயதில் தன்னில் சிறியவன், உறவினன் என்பதற்காகத் தாழ்வாக எண்ணக்கூடாது.
மிக்க உரிமை கொண்டாடுதல் கூடாது:
மதிக்கப்பட்டேன் என்று மதியாதன செய்யாதே; பழையவன் என்று பண்பில்லாமல் நடக்காதே.
பாராட்டுப் பெற்று தலைவரின் நெருக்கத்தை உண்டாக்கிக்கொண்டவர் அந்த அணுக்கம் தான் விரும்பத்தகாதன செய்வதற்கான உரிமை என்று எண்ணாமல் அளவோடு நடந்துகொள்ளவேண்டும்; அதுபோல உறவினர்களையும் நண்பர்களையும் அருகாமையில் வைத்துக்கொள்வதில் சில நன்மைகள் உண்டு என்றாலும் அவர்கள் தமக்கு நிறைய உரிமைகள் உண்டு என்ற தவறான எண்ணத்தில் அடாத செயல்களைச் செய்தால் ஆட்சியின் பெயருக்குத் தீராத களங்கத்தை ஏற்படுத்திவிடுவர். அவர்களும் உரிமை வரம்பு மீறக்கூடாது.

மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 691ஆம் குறள் மனம் மாறுபடுதற்குரிய ஆட்சியாளரோடு பழகுவோர் தீயில் குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் இருக்க என்கிறது.
  • 692ஆம் குறள் ஆட்சித்தலைவர் விரும்புவனவற்றைச் சேர்ந்தொழுகுவோர் விரும்பாதிருத்தல் ஆட்சித்தலைவரால் நிலையான முன்னேற்றம் தரும் எனக் கூறுகிறது.
  • 693ஆம் குறள் காத்துக்கொள்ளக் கருதினால் பெருங்குற்றம் தம்மிடம் நிகழாதவாறு காத்துக் கொள்க; ஆட்சித்தலைவர் ஐயுற்றால் அவரைத் தெளிவுபடுத்தல் யாராலும் முடியாது எனச் சொல்கிறது.
  • 694ஆம் குறள் பண்பு நிறைந்த பெரியவர் முன்பாக ஒருவன் செவியுள் மறைவாகச் சொல்லுதலும், அதனோடு சேர்ந்த சிரிப்பும் தவிர்ந்து நடக்க வேண்டும் என்கிறது.
  • 695ஆம் குறள் எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேட்காமலும் அதுபற்றிச் சொல்லும்படி நெருக்கிக் கேளாமலும், மறைபொருளை ஆட்சித்தலைவனே வெளிப்படுத்தினால் கேட்டுக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறது.
  • 696ஆம் குறள் ஆட்சித் தலைவர் குறிப்பு அறிந்து, தக்க காலத்தை நோக்கி, வெறுப்பு உண்டாக்காதனவாய் வேண்டியளவானவற்றை, அவன் விரும்பி ஏற்கும் வகையில் சொல்லுக என்கிறது.
  • 697ஆம் குறள் விரும்புவனவற்றைச் சொல்லிப் பயனில்லாதவற்றைக் கேட்டாலும் எப்பொழுதும் சொல்லாது விடுக எனச் சொல்கிறது.
  • 698ஆம் குறள் எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று ஆட்சியரைத் தாழ்வாக எண்ணாமல், தலைமைநிலைக்குத் தக்கவாறு நடக்க வேண்டும் என்கிறது.
  • 699ஆம் குறள் பிறழாத தெளிவுடையவர்கள் ஆட்சித்தலைவரால் கைக்கொள்ளப்பட்டவர் என்று கருதி ஏற்றுக் கொள்ளத் தகாதனவற்றைச் செய்ய மாட்டார்கள் எனக் கூறுகிறது.
  • 700ஆவது குறள் ஆட்சித்தலைவரிடம் முன்பே பழகியவன் என்று பண்பற்றவற்றைச் செய்யும் உரிமை கேட்டினை விளைக்கும் என்கிறது.

மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரச் சிறப்பியல்புகள்

தலைவரைச் சேர்ந்தொழுகுவோர் நெருப்பின் முன்னே குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் பழகுக என ஓர் சிறந்த உவமையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (691) என்பது அக்குறள்.

பதவி ஒன்றைப் பெறும்போது ஒருவர் ஒருவகை மனப்பான்மையுடன் இருக்கிறார், அதை அடைந்தவுடன் அவரது மனப்பான்மை மாற்றம் பெற்று வேறுவகையாக நடப்பதை நாம் காண்கிறோம். கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் (699) என்ற பாடலில் நன்றாக ஒழுகித் தலைவரின் பாராட்டைப் பெற்றபின் அவர்க்கு நெருக்காமானவர் ஆகிய ஒருவர் பின்னர் 'நான் என் தகுதியால் இங்கு வந்துள்ளேன்' என்று தன்னைத் தலைவர் எஞ்ஞான்றும் கைவிடார் என்று கருதி விரும்பத்தகாதனவற்றைச் செய்யக்கூடாது என அறிவுரை தருகிறார் வள்ளுவர்.

நண்பர்கள் எப்பொழுதும் உரிமையோடு பழகுபவர்கள். அதிலும் சிறுவயதுப் பழக்கமான நண்பர் என்றால் இன்னும் நிறைய உரிமைகள் எடுத்துக்கொள்வார். அவர் தலைவருடன் சேர்ந்தபின் தான் பழையம் எனக் கருதிப் பண்பற்றவற்றைச் செய்தால் அது ஆட்சியின் பெருமைக்குக் கேடு விளைக்குமென்று பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்(700) என்ற பாடல் கூறுகிறது.




குறள் திறன்-0691 குறள் திறன்-0692 குறள் திறன்-0693 குறள் திறன்-0694 குறள் திறன்-0695
குறள் திறன்-0696 குறள் திறன்-0697 குறள் திறன்-0698 குறள் திறன்-0699 குறள் திறன்-0700