இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0698



இளையர் இ(ன்)னமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்

(அதிகாரம்:மன்னரைச்சேர்ந்தொழுகல் குறள் எண்:698)

பொழிப்பு (மு வரதராசன்): (அரசனை) "எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்" என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

மணக்குடவர் உரை: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்.

பரிமேலழகர் உரை: இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும் - அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்.
(ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.)

வ சுப மாணிக்கம் உரை: இளையவன் உறவினன் என அவமதியாமல் அரசனது அதிகாரத்தை மதித்து ஒழுகுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இளையர் இ(ன்)னமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.

பதவுரை: இளையர்-(என்னைவிட)வயதில் இளமையானவர்; இ(ன்)னமுறையர்- (எனக்கு)இந்தவகையில் உறவின் முறையுடையவர்; என்று-என்பதாக; இகழார்-பழிக்கமாட்டார்; நின்ற ஒளியோடு-பெற்றுள்ள சிறப்போடு, இறைமையாண்மை கருதி, அதிகாரத்தோடு; ஒழுகப்படும்-ஒழுகுதல் செய்யப்படும்.


இளையர் இ(ன்)னமுறையர் என்றுஇகழார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது;
பரிப்பெருமாள்: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது;
பரிப்பெருமாள் குறிப்புரை: முறையர் என்றது இளங்கிழமையின் முறை. [இளங்கிழமையின் முறை-தொடக்க காலத்துப் பழக்கத்தால் உண்டான முறைமை]
பரிதி: இவர்க்கும் நமக்கும் இப்படி நட்பு இவர் நமக்கு இன்ன முறையாம் என்ற இப்படி அரசரை அவமதியாது;
காலிங்கர்: இவர் மிகவும் இளையராய் இருந்தார் என்றும், ஒருவாற்றால் நமக்கு இன்னமுறையினர் இவர் என்றும், கருதிக் கொண்டு இகழாராய்;
பரிமேலழகர்: இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது;

'இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவர் எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று கருதி அரசரை அவமதிக்காமல்', 'அரசன் வயதில் இளையவனாக இருக்கிறான் என்றாவது, நெருங்கிய சொந்தக்காரனாக இருக்கிறான் என்றாவது அஜாக்ரதையாக இருந்துவிடாமல்', 'அரசரை இவர் எமக்கு இளையவர் உறவினர் என்று அவமதியாது', 'இவர் எம்மைவிட இளையர் என்றும், எமக்கு இன்ன உறவு முறையினர் என்றும் அரசரை இகழாமல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று தாழ்வாக எண்ணாமல் என்பது இப்பகுதியின் பொருள்.

நின்ற ஒளியோடு ஒழுகப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்.
பரிப்பெருமாள்: அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலத்துக்குத் தக்க காட்சி செய்யவேண்டும் என்றது. இவை மூன்றும் பெரும்பான்மையும் தன் அரசனை நோக்கின.
பரிதி: அவர்மாட்டு நின்ற ஒளியோடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவ்வரசர்க்கு அவரது குலமரபினால் உளதாம். நிலைபெற்று வருகின்ற பெரியதோர் ஒளி உண்டு அன்றே; மற்று அதனோடு சாரக் குறிக்கொண்டு ஒழுக அடுக்கும் அமைவுடையோர் என்றவாறு. [அமைவுடையோர்-தகுதியுடையோர்]
பரிமேலழகர்: அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.

'அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரிடமுள்ள ஒளியோடு (செல்வாக்கோடு) பொருந்த மதித்து நடக்க வேண்டும்', 'அவனுக்குள்ள பதவிக்குத் தகுந்த வணக்கம் காட்டி நடந்து கொள்ள வேண்டும்', 'அவரது அதிகார நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்ளுதல் வேண்டும்', 'அவரிடம் பொருந்தியுள்ள அரச விளக்கத்தோடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தலைமைநிலைக்குத் தக்கவாறு நடக்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று ஆட்சியரைத் தாழ்வாக எண்ணாமல், நின்ற ஒளியோடு நடக்க வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'நின்ற ஒளியோடு' குறிப்பது என்ன?

தாம் பார்த்து வளர்ந்தவர், தமக்கு உறவுகாரர்தான் என்று தலைவரைப் பொருட்படுத்தாத மனநிலையை நீக்கி ஒழுகுக.

தலைவரைத் 'தமக்கு இளையர்தாமே, இன்ன உறவுமுறை யுடையவர்தாமே' என்று தாழ்வாக நோக்காது, அவர்தம் அரச பதவியின் பெருமைக்கு ஏற்ப மன்னரைச் சார்ந்தோர் ஒழுகுதல் வேண்டும்.
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் வயதில் இளையர்; இன்ன முறையில் உறவினர் என்று தலைவரை அவமதியாமல் ஆட்சியின் அதிகாரச் சிறப்புக்கு மதிப்பு தந்து சேர்ந்தொழுகுவோர் நடந்துகொள்ள வேண்டும். தலைவர் வயதில் சிறியவராக இருந்தாலோ அல்லது அவர் நெருங்கிய உறவுமுறையில் உள்ளவராக இருந்தாலோ அது கருதி சார்ந்தொழுகுவார் தலைவரை மதியாமல் நடக்க உள்ளம் உந்தப்படலாம். ஆனால் ஆட்சியாளரின் தலைமை, சிறப்பு இவற்றிற்கு உரிய மதிப்பைத் தந்தே பழகவேண்டும். தலைவர்க்கு நெருக்கமாக இருப்பவர் தலைவரைவிட அறிவிலும் அனுபவத்திலும் கூடியவராக இருந்தாலும் இறையாண்மையை மதித்தே ஒழுகவேண்டும். அதுவே மாட்சிமையுள்ள பழகுமுறை.

'நின்ற ஒளியோடு' குறிப்பது என்ன?

'நின்ற ஒளியோடு' என்றதற்கு பெற்றுநின்ற தலைமையோடே, நின்ற ஒளியோடு, குலமரபினால் உளதாம் நிலைபெற்று வருகின்ற பெரியதோர் ஒளியோடு, அவர் மாட்டு நின்ற கடவுட்டன்மையொடு, நின்ற அரசாக்கினையை அறிந்து அதனோடு, அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன், அவர் இருக்கும் உயர்ந்த நிலையாகிய சிறப்பு, அரசின் ஆட்சி ஒளியோடு, அதிகாரம், அவரிடமுள்ள ஒளியோடு (செல்வாக்கோடு), அவனுக்குள்ள பதவிக்குத் தகுந்த வணக்கம் காட்டி, அவரது அதிகார நிலைக்குத் தக்கவாறு, நின்ற புகழுடன், அரச விளக்கத்தோடு, அரச பதவியின் பெருமைக்கு ஏற்ப, அமைந்துள்ள தெய்வத் தன்மையொடு என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

ஒளி என்பது கடவுளைக் கண்டபோது உண்டாகும் அன்பு கலந்த அச்சவுணர்வு போன்றதோர் உயர்ந்தநிலை என்பர். 'நின்ற ஒளியோடு ஒழுகப்படும்' என்பது இப்பொழுது பெற்றிருக்கிற சிறப்புக்கேற்ப ஆட்சியாளரைச் சார்ந்தவர் நடந்துகொள்ள வேண்டும் எனப்பொருள்படும். ஒளி என்றதற்கு 'அதிகாரம்' எனப் பொருள் கூறியுள்ளார் வ சுப மாணிக்கம். அரசியல் அமைப்பின் அடிப்படையான 'Sovereignty' அதாவது இறையாண்மை என்று சொல்லப்படுவதை 'நின்ற ஒளி' குறிக்கிறது எனலாம்.
அரசுரிமை பெற்றவனிடம் ஓர் ஒளியுண்டு என்பது முன்னையோர் கொள்கை. உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி கறங்கு தெண் திரை வையகம் காக்குமால் (சீவக சிந்தாமணி. 248 பொருள்: அரசன் உறங்கிக் கொண்டிருப்பினும் அரசநீதி வழுவாது நடைபெறும்) என்று உலகம் காக்கின்ற வேந்தரிடத்து ஓர் ஒளி உண்டென்றும், அவ்வொளியே உலகினைக் காக்கும் பெருந்திறமென்றும் சிந்தாமணி கூறுகின்றது.

'நின்ற ஒளியோடு' என்றது பெற்றிருக்கும் தலைமை, பதவி, சிறப்புக்குத் தக எனப் பொருள் தரும்,

எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று ஆட்சியரைத் தாழ்வாக எண்ணாமல், தலைமைநிலைக்குத் தக்கவாறு நடக்க வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இறையாண்மையை மதித்து மன்னரைச்சேர்ந்தொழுகல் வேண்டும்.

பொழிப்பு

எமக்கு இளையவர், இன்ன உறவு முறைமையுடையவர் என்று அவமதியாமல் ஆட்சித் தலைவரது அதிகாரத்தை மதித்து ஒழுக வேண்டும்.