இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0695



எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை

(அதிகாரம்:மன்னரைச்சேர்ந்தொழுகல் குறள் எண்:695)

பொழிப்பு (மு வரதராசன்): (அரசர் மறைப்பொருள் பேசும்போது) எப்பொருளையும் உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.

மணக்குடவர் உரை: யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க.
இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.

பரிமேலழகர் உரை: மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க.
('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.)

சி இலக்குவனார் உரை: மறைவாக ஒன்றைப்பற்றி அரசன் பேசினால் , யாதொன்றையும் காது கொடுத்துக் கேட்டல் இலராய், அது பற்றித் தொடர்ந்து வினவாராய் அரசனே கூறும்போது கேட்டல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மறை எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க.

பதவுரை: எப்பொருளும்-எந்தச்செய்தியும்; ஓரார்-உற்றுக் கேளாராய்; தொடரார்-நெருக்கிச் சென்று வினவாதவராய்; மற்று-பின்; அப்பொருளை-அந்தப் பொருளை; விட்டக்கால்-அடக்காது சொன்னால்; கேட்க-கேட்க வேண்டும்; மறை-இரகசியம்.


எப்பொருளும் ஓரார் தொடரார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது;
பரிப்பெருமாள்: யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது;
பரிதி: மந்திரி ஒரு ரகசியத்தை முகத்திலே மனத்திலே காட்டாமல்;
காலிங்கர்: எப்பொருளும் ஓரார் என்பது அரசர்மாட்டுப் பிறரால் சில மறை உளதான காலத்து அப்பொருள் சிறிதேயாயினும் பெரிதேயாயினும் தாம் அதனைப் பொருட்படுத்திக் குறிக்கொண்டு விரும்பார். தொடரார் என்பது, மற்று அவர் அங்கு நின்றும் நீங்கிப் போன இடத்தும் பின்பும் அவரோடு பற்றிக் கொள்ளார்;
பரிமேலழகர்: யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது, அவனை முடுகி வினவுவதும் செய்யாது; [முடுகி-விரைந்து]
பரிமேலழகர் குறிப்புரை: 'ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார் 'எப்பொருளும்' என்றார். [ஓர்தற்கு ஏற்கும் - ஆலோசித்தற்குத் தக்க]

'யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாதே; சொல்லும்படி கேளாதே', 'ஒருவன் யாதொரு பொருளையும் கூர்ந்து கேட்காமலும் பேசியது யாதெனத் தொடர்ந்து வினவாமலும்', 'ஏதேனும் ஒரு நியாயத்தைப் பற்றி அரசனிடம் சபையில் சொல்லும்போது, அதை அவன் சரியாக அறிந்து கொள்ளாமலோ அல்லது கவனமாகத் தொடர்ந்து கேட்காமலோ போய்விட்டால் அதைப் பற்றிச் சபையில் சொல்லாமல்', 'அரசர் பிறரிடம் மறைவாகப் பேசும் எக்காரியத்தையும் செவி கொடுத்துக் கேளாமலும், அவரிடம் அதனை வினவாமலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேட்காமலும் அதுபற்றிச் சொல்லும்படி நெருக்கிக் கேளாமலும் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க.
மணக்குடவர் குறிப்புரை: இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.
பரிப்பெருமாள்: அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.
பரிதி: மறைத்து அந்தக் காரியம் முடிந்தவாறே இரகசியத்தைப் பிரசங்கம் செய்வான் என்றவாறு.
காலிங்கர்: மற்று அப்பொருள் தான் புறத்து எங்கும் தானேவிட்டு வெளிப்பட்ட காலத்தும் வேண்டுகின் கேட்பாராக, அம்மறைப் பொருளினை என்றவாறு. [வேண்டுகின் - விரும்பினால்]
பரிமேலழகர்: அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க.
பரிமேலழகர்: 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது. [மற்று என்பது தொடரார் என்னும் வினையை மாற்றித் தொடர்வார் என்னும் பொருளில் வந்தது]

'அம்மறை பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சொன்னாற் கேள்', 'அரசன் பிறரிடம் மறைவாகப் பேசுங்கால் அவனே அம்மறைப் பொருளை வெளிப்படுத்தினால் கேட்பானாக', 'பேச்சு முடிந்துவிட்ட பிறகு மறைவாகத் தனித்துக் கேட்க வேண்டும்', 'அவராக அதனைத் தம்மிடந் தெரிவித்தால் கேட்டுக் கொள்ளுதலுஞ் செய்யவேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மறைபொருளை ஆட்சித்தலைவனே வெளிப்படுத்தினால் கேட்பானாக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேட்காமலும் அதுபற்றிச் சொல்லும்படி நெருக்கிக் கேளாமலும், மறைபொருளை ஆட்சித்தலைவனே வெளிப்படுத்தினால் கேட்டுக் கொள்ளவேண்டும் என்பது பாடலின் பொருள்.
'தொடரார்' என்ற சொல்லின் பொருள் என்ன?

சேர்ந்தொழுகுவோர் எந்த மறைச்செய்தியையும் தலைவரிடம் துருவித் துருவிக் கேட்க வேண்டாம். ஆட்சித் தலைவர் பிறரோடு மறைவாகப் பேசுவது எப்பொருள் குறித்தாயினும் அதனை உற்றுக் கேளாமலும், அவரைப் பின்தொடர்ந்து வினவாமலும் அம்மறைப் பொருளை அவர் தாமே தம் வாய்விட்டு வெளிப்படுத்தினால் மட்டுமே கேட்டறிதல் வேண்டும்.
ஆட்சித்தலைவர் ஏதாவது மறை பேசும்போது, தான் தலைவரின் வட்டத்திற்குள்தானே இருக்கிறேன் என்ற எண்ணத்தில் சார்ந்தொழுகுவோர் அதை உற்றுக் கேட்கக்கூடாது. பேச்சு கேட்கக்கூடிய தொலைவில் நிகழ்ந்தாலும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிப்பதும் தவறு. பேசிக்கொண்டே உங்கள் அருகில் வந்தால் நீங்களளாகவே தள்ளிப்போய் நிற்கவேண்டும். அதுதான் பண்பான பழகுமுறை. தலைவரின் பார்வையில் ஒட்டுக்கேட்பவரை (உற்றுக்கேட்பவரை) தாழ்த்தவும் செய்யும். 'என்ன பேசினீர்கள்?' என்று அவரைத் தொடர்ந்து பின்சென்று வினவவும் கூடாது. பி என்னதான் செய்வது? தலைவராக மனத்தில் இருக்கும் அந்த மறைச் செய்தியை வெளிவிட்டால்மட்டுமே அதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். உரிய சமயம் வரும்பொழுது மறைச்செய்தியை தலைவரே வெளிப்படுத்துவார்; தலைவராகவே முன்வந்து, முன்பு மறைத்துப் பேசிய பொருளைப் பற்றி கூறுவாரானால் அப்போது மட்டும் கேட்க வேண்டும். மறை என்பதே மூன்றாவதுபேருக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான். அதை உணர்ந்து அதுபற்றி தலைவர்க்கு நெருக்கமானவர்களானாலும் ஆர்வம் காட்டவேண்டாம். தலைவரைச் சூழ்ந்துள்ளவர்கள் இதை உணரவில்லையெனில், அவர்கள் தலைவரின் நம்பிக்கையையும் இழக்க நேரிடும்.
மறைப்பொருள் என்பது வெளிப்படையாகவே சொல்லப்பட்டுள்ளது. அப்பொருள் தன்னைப் பற்றியதானாலும் அல்லது தன் துறை சார்ந்த பேச்சாக, தாம் கேட்டறிந்து எண்ணுவதற்குத் தக்கதாக இருந்தாலும் அதை ஒட்டுக்(உற்றுக்) கேட்கக்கூடாது.

'தொடரார்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'தொடரார்' என்ற சொல்லைத் தொடர்ந்து கேளாது, அவர் அங்கு நின்றும் நீங்கிப் போன இடத்தும் பின்பும் அவரோடு பற்றிக் கொள்ளார், அவனை (அரசனை) முடுகி வினவுவதும் செய்யாது, தொடர்ந்து வினவாமல், அவற்றைப்(மறைச்செய்திகள்) பற்றித் தோண்டித் துருவி அறியுமாறு தொடரலாகாது, அரசரைத் தொடர்ந்து மற்றவரிடம் பேசிய செவிச் சொல் பற்றிக் கேட்கவும் மாட்டார், சொல்லும்படி கேளாதே, பேசியது யாதெனத் தொடர்ந்து வினவாமல், கவனமாகத் தொடர்ந்து கேட்காமலோ போய்விட்டால், அவனிடம்(ஆட்சியாளனிடம்) வினாவி அறியாமலும், அரசரிடம் அதனை வினவாமலும், அது பற்றித் தொடர்ந்து வினவாராய், அரசரைப் பின்தொடர்ந்து வினவாமலும், அவனை அணுகி வினவாமலும், அதைத் தொடர்ந்து கேட்காமலும் என்றவாறு உரையாளர்கள் விளக்கிக் கூறினர்.

பெரும்பான்மையர் 'அரசனிடம் தொடர்ந்து கேளாது' என்றே பொருள் உரைத்தனர். காலிங்கர் மட்டும் 'அரசனிடம் மறைபேசிச்சென்றவனைத் தொடர்ந்துபோய் அறியார்' என பிறரைத் பின்தொடரார் என விளக்கினார்.
'தொடரார்' என்றதற்கு பின் தொடர்ந்து செல்லமாட்டார் என்பது நேர்பொருள். இங்கு சேர்ந்தொழுகுவார் ஆட்சித்தலைவரைத் தொடர்ந்து சென்று 'என்ன பேச்சு' என்று அவராகக் கேட்கமாட்டார் என்னும் பொருள்பட்டது. தலைவரை நெருக்கிச் சென்று மறைச்செய்தி பற்றித் திரும்பத் திரும்பக் கேட்பது நல்ல ஒழுகுமுறை அல்ல எனச் சொல்லப்பட்டது.

'தொடரார்' என்ற சொல் இங்கு பின் தொடர்ந்து வினவார் என்ற பொருள் தரும்.

எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேட்காமலும் அதுபற்றிச் சொல்லும்படி நெருக்கிக் கேளாமலும், மறைபொருளை ஆட்சித்தலைவனே வெளிப்படுத்தினால் கேட்டுக் கொள்ளவேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மறைகளைத் தெர்ந்துகொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது மன்னரைச்சேர்ந்தொழுகலில் நல்ல பண்பு.

பொழிப்பு

எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாமலும் அதைச் சொல்லும்படி நெருக்கிக் கேளாமலும், மறைபொருளை ஆட்சித்தலைவனே வெளிப்படுத்தினால் கேட்க.