இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0696



குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்

(அதிகாரம்:மன்னரைச்சேர்ந்தொழுகல் குறள் எண்:696)

பொழிப்பு (மு வரதராசன்): அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.

மணக்குடவர் உரை: அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க.
இது சொல்லுந் திறம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி- சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இலவேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக.
(குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.)

தமிழண்ணல் உரை: அரசர்களிடம் அல்லது தமக்கு மேலேயுள்ளவர்களிடம் ஏதும் காரியமாகப் பேச நினைக்கின்றபொழுது, அவர்தம் மனக் குறிப்பினையறிந்து, சொல்லுதற்கேற்ற காலத்தையும் நோக்கி, அவர்க்கு வெறுப்பை விளைவிக்காதவையும் மிகவும் வேண்டியளவுமானவற்றை மட்டும் அவர் விரும்பும் வகையில் சொல்லுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்.

பதவுரை: குறிப்பறிந்து-இங்கிதம் தெரிந்து; காலம்-பருவம்; கருதி-பார்த்து; வெறுப்பு-விருப்பமின்மை; இல-இல்லாதவைகளை; வேண்டுப-வேண்டியளவுமானவற்றை; வேட்ப-விரும்பும் வண்ணம்; சொலல்-சொல்லுக.


குறிப்பறிந்து காலம் கருதி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து;
பரிப்பெருமாள்: அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து;
பரிதி: அரசன் குறிப்பறிந்து காலம் அறிந்து;
காலிங்கர்: அரசனது உள்ளக் குறிப்பினை ஆராய்ந்து உணர்ந்து தான் சென்று அறிவுரைக்கும் காலத்தையும் கருதிச்சென்று;
பரிமேலழகர்: அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினை அறிந்து, சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி;

'அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மன்னனின் குறிப்பறிந்து காலம் பார்த்து', 'குறிப்பினால் உணர்ந்து, அரசன் கோபமாக இல்லாத சமயம் பார்த்து', 'அரசனிடம் ஒரு காரியத்தைச் சொல்லக் கருதினால், அவன் மனக்குறிப்பினை அறிந்து சொல்லுதற்கேற்ற காலத்தையும் அறிந்து', 'அரசரிடம் ஒன்றைப்பற்றிச் சொல்ல விரும்பினால் அவர் குறிப்பு அறிந்து, தக்க காலத்தை நோக்கி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆட்சித் தலைவர் குறிப்பு அறிந்து, தக்க காலத்தை நோக்கி என்பது இப்பகுதியின் பொருள்.

வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க.
மணக்குடவர் குறிப்புரை: இது சொல்லுந் திறம் கூறிற்று.
பரிப்பெருமாள்: வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சொல்லுந் திறம் கூறிற்று.
பரிதி: சோம்பாமல் அரசனது அவா உள்ளவாறு வசனம் சொல்லுவான் என்றவாறு.
காலிங்கர்: உரைக்கும் இடத்து அவர்க்கு வெறுப்பு இல்லனவுமாய்ப் (பின்னும் மிகுதிக் குறை) யின்றி ஒருவண்ணம் வேண்டும் அளவினவுமாய் இருப்பனவற்றையே அரசர் பெரிதும் விருப்புற்றுக் கேட்குமாறு சொல்லுக மன்னனைச் சேர்ந்து ஒழுகும் அமைச்சர் என்றவாறு.
பரிமேலழகர்: வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக.
பரிமேலழகர் குறிப்புரை: குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார். [ஏலாக் காலத்தும் -பொருந்தாக் காலத்தும்]

'வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேண்டியவற்றை விரும்புமாறு சொல்லுக', 'அவனிடம் அணுகி, அவன் கேட்ட பின்பு சொல்ல வேண்டியதை அவனுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி விநயமாகச் சொல்ல வேண்டும்', 'அவனுக்கு வெறுப்பு விளையாதனவாய் விரும்பத்தக்கனவாய் உள்ளனவற்றை அவன் விரும்பும் வகையில் சொல்லுக', 'வெறுப்பு இல்லாதவனாய், விரும்புவனவற்றை அவர் விரும்பும் வகையில் சொல்லுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வெறுப்பு உண்டாக்காதனவாய் வேண்டியளவானவற்றை அவன் விரும்பி ஏற்கும் வகையில் சொல்லுக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆட்சித் தலைவர் குறிப்பு அறிந்து, தக்க காலத்தை நோக்கி, வெறுப்பு உண்டாக்காதனவாய், வேண்டுப, அவர் விரும்பி ஏற்கும் வகையில் சொல்லுக என்பது பாடலின் பொருள்.
'வேண்டுப' என்றால் என்ன?

ஆட்சித்தலைவர் நல்ல மனநிலையில் உள்ளபோது பக்குவமாகச் செய்திகளை சொல்லுக.

ஆட்சித்தலைவரிடம் செய்திகளைச் சொல்லும்போது, அவன் உள்ளக் குறிப்பை அறிந்து, சொல்வதற்கு ஏற்ற காலத்தையும் எண்ணி, வெறுப்பு கொள்ளத்தகாவனவாயும் சொல்லவேண்டியவனவாயும் உள்ள செய்திகளை உகந்த வகையில் சொல்லுக.
சேர்ந்தொழுகுவோர் ஆட்சியாளருக்கு எத்தகைய செய்திகளை எந்த வகையில் சொல்ல வேண்டும் என்பதைக் கூறும் பாடல் இது. தலைவருக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று எதை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லக் கூடாது. எந்தச் செய்தியானாலும் அதைத் தெரிவப்பதற்கான முறைமையைப் பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் செய்திக்குரிய பயன் கிடைக்கும். அவனுடைய குறிப்பை அறிந்து, பேசுவதற்கு ஏற்ற காலத்தை ஆராய்ந்து. அவனுக்கு வெறுப்பு உண்டாக்காத, தேவையான செய்திகளையும் அவனுடைய மனம் விரும்பும்படியாக எடுத்துச்சொல்ல வேண்டும்.

கேட்பவருடைய மனநிலையை அவரது முகமே நன்கு காட்டும். தலைவர்க்கு நெருக்கமாயிருப்பவர்களுக்கு அவரது முகத்தை வாசிப்பது கடினமே அல்ல. அதுபோல் ஏற்புடைய காலத்தை அறிவதும் அவர்களுக்கு எளிதானதுதான். காலமறிந்து சொல்வதைக்கூடக் குறிப்பறிந்து சொல்லாதபோது தீய பயக்கும் ஆதலால் குறிப்பறிதல் முதலில் கூறப்பட்டது. மேலும் செய்தியைச் சுருக்கி, தேவையற்றவற்றை நீக்கி, வேண்டியவற்றை மட்டும் பேசவேண்டும், கேட்பவர் விரும்பி ஏற்குமாறு நயமாகச் சொல்வதும் முக்கியம். செய்தி உரியமுறையில் தலைவனிடம் சென்றடைய வேண்டும் என்பது நோக்கம்.

'வேண்டுப' என்றால் என்ன?

'வேண்டுப' என்ற சொல்லுக்குச் சொல்ல வேண்டுவனவற்றை, மிகுதிக் குறையின்றி ஒருவண்ணம் வேண்டும் அளவினவுமாய் இருப்பனவற்றை, பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாவாறு, விருப்பமானவற்றை, மிகவும் வேண்டியளவுமானவற்றை மட்டும், வேண்டியவற்றை, விரும்புகின்றவுமாகிய, சொல்ல வேண்டியதை, அவர் விரும்புவதை, விரும்பத்தக்கனவாய் உள்ளனவற்றை, விரும்புவனவற்றை, தேவைப்படுவனவற்றை, வேண்டியவற்றை, விருப்பமானவற்றை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'வேண்டுப' என்றதற்குத் தொல்லாசிரியர்கள் அனைவரும் சொல்லவேண்டுவனவற்றை அல்லது வேண்டும் அளவினவாய் என்று உரைக்க பின்வந்த ஆசிரியர்களில் பெரும்பான்மையோர் விரும்புனவற்றை என்று பொருள் கூறினர். இவற்றுள் இரண்டாவது வகையான உரை வேண்டுப என்பதற்கு 'விழைப' எனப்பொருள் கொண்டமையால் உண்டாயிற்று போலும், காலிங்கரின் 'மிகுதிக் குறையின்றி ஒருவண்ணம் வேண்டும் அளவினவுமாய் இருப்பனவற்றை' என்ற பொருள் நன்று. பழைய ஆசிரியர்களின் உரையான வேண்டுவனவற்றை என்ற பொருளே ஏற்புடையதும் பொருத்தமானதும் ஆகும்.
தலைவர் விழைபவற்றைத்தான் அதாவது பிடித்தவற்றை மட்டும்தான் சொல்லவேண்டும் என்றால் ஆலோசகர்களே தேவையில்லை. அவர் விழையாதவையாகவே இருப்பினும் செய்தியை அவரிடம் தக்கமுறையில் சேர்ப்பிப்பது சேர்ந்தொழுகுவாரது கடமையாகும்.

'வேண்டுப' என்றது வேண்டிய அளவானவற்றை என்ற பொருள் தருவது.

ஆட்சித் தலைவர் குறிப்பு அறிந்து, தக்க காலத்தை நோக்கி, வெறுப்பு உண்டாக்காதனவாய் வேண்டியளவானவற்றை, அவன் விரும்பி ஏற்கும் வகையில் சொல்லுக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செய்திக்குண்டான பயன் கிடைக்குமாறு மன்னரைச்சேர்ந்தொழுகல் வேண்டும்.

பொழிப்பு

ஆட்சித்தலைவரின் குறிப்பறிந்து ஏற்ற காலத்தைப் பார்த்து வெறுப்பில்லாதனவும் விரும்புகின்றவுமாகிய செய்திகளை அவன் மனம் விரும்புமாறு சொல்லுக.