இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0699



கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்

(அதிகாரம்:மன்னரைச்சேர்ந்தொழுகல் குறள் எண்:0699)

பொழிப்பு (மு வரதராசன்): அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்` என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

மணக்குடவர் உரை: யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தெளிவுடையார்.
இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார்.
(கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அரசனால் தாம் ஏற்றுக்கொள்ளப் பட்டோம் என்று நினைத்து, அவன் ஏற்றுக் கொள்ளக்கூடாதவனவற்றை நிலைபெற்ற அறிவினை உடையவர்கள் செய்யமாட்டார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சியவர்.

பதவுரை: கொளப்பட்டேம்-ஏற்றுக் கொள்ளப்பட்டோம்; என்று-என்பதாக; எண்ணி-கருதி; கொள்ளாத-விரும்பாதவை; செய்யார்-செய்யமாட்டார்கள்; துளக்கு-நிலைபெறாமை; அற்ற-நீங்கிய; காட்சியவர்-தெளிவுடையார்.


கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார்;
பரிப்பெருமாள்: யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார்;
பரிதி: அரசன் உட்கொள்ளப் பெற்றோம் என்று அரசற்கு மனமில்லாத காரியம் செய்வான் அல்லன்;
காலிங்கர்: அரசரான் மிகவும் கைக்கொள்ளப்பட்டேம் என்று கருதி இது காரணமாக அரசரால் கைக்கொள்ளத் தகாதனவற்றைச் செய்வதிலர்;
பரிமேலழகர்: அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்;

'யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மதிக்கப்பட்டேன் என்று மதியாதன செய்யார்', 'அரசரால் நன்கு மதிக்கப்பட்டோம் என்று கருதி அவர் ஏற்றுக் கொள்ளாத செயல்களை செய்ய மாட்டார்கள்', ' (அரசன் தம்முடன் எவ்வளவு சரசமாகப் பழ்கினாலும்) நாம் அரசனுக்கு மிகவும் பிரியமுள்ளவர்கள் ஆகிவிட்டோம் என்று எண்ணிக்கொண்டு அரசனுடன் தகாத முறையில் நடந்து கொள்ள மாட்டார்கள்', 'அரசர் அன்புக்கு உரியவரானோம் என்று கருதி அரசர் நிலைக்குப் பொருந்தாதவற்றைச் செய்யமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆட்சித்தலைவரால் கைக்கொள்ளப்பட்டவர் என்று கருதி ஏற்றுக் கொள்ளத் தகாதனவற்றைச் செய்ய மாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

துளக்கற்ற காட்சி யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அசைவற்ற தெளிவுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அசைவற்ற தெளிவுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அரசன் இசைவன செய்ய வேண்டுமென்றது.
பரிதி: அறிவுடையான் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் கலக்கமற்ற திண்ணிய அறிவினையுடையோர் என்றவாறு.
பரிமேலழகர்: நிலைபெற்ற அறிவினையுடையார்.
பரிமேலழகர் குறிப்புரை: கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.

அசைவற்ற தெளிவுடையார்/அறிவுடையான்/கலக்கமற்ற திண்ணிய அறிவினையுடையோர்/நிலைபெற்ற அறிவினையுடையார் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறழாத அறிவினை யுடையவர்', 'நிலைத்த அறிவினை உடையவர்கள்', 'தெளிந்த அறிவுடையவர்கள்', 'நடுங்குதல் இல்லாத அறிவினை உடையவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறழாத தெளிவுடையவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறழாத தெளிவுடையவர்கள் ஆட்சித்தலைவரால் கைக்கொள்ளப்பட்டவர் என்று கருதி ஏற்றுக் கொள்ளத் தகாதனவற்றைச் செய்ய மாட்டார்கள் என்பது பாடலின் பொருள்.
'கொளப்பட்டேம்' என்றதன் பொருள் என்ன?

தலைவரால் விரும்பப்பட்டு உள்வட்டத்துள் வந்தவன் என்ற எண்ணத்தில் தாறுமாறாக நடக்கக்கூடாது.

நிலைத்த தெளிவுடையவர், 'யாம் ஆட்சித்தலைவரது நம்பிக்கை பெற்று விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டோம்' என்று எண்ணி, ஏற்றுக் கொள்ளத் தகாதனவற்றைச் செய்யமாட்டார்.
தலைவரின் நேரடிப்பார்வையில் உள்ளவர் தமது திறமையால் விரைவில் அவரது தனிஅன்பு பெற்று அதிகாரமும் பெற்றவராகிடுவார். தலைவர்க்கு மிக நெருக்கம் ஆகிவிட்டபின் தான் எதுசெய்தாலும், தலைவர் எச்சமயத்திலும் நமக்குத் துணையிருப்பார் என்ற துணிவில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்று இப்பாடல் அறிவுறுத்துகிறது. அசைவற்ற தெளிவான உள்ளம் கொண்டவர், தலைவரின் நம்பிக்கை பெற்றவர் என்றதில் செருக்கடையாமல், தனக்குக் கிடைத்த பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள, ஏற்பிலாதன செய்ய மாட்டார்கள் என்கிறது இது.
தலைவரின் வட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவது எளிதில் பெறமுடியாத ஒரு மதிப்பு. ஆனால் அதைக் காப்பாற்றி நிலை நிறுத்திக்கொள்வதற்கு தெளிவான சிந்தனை கொண்டாரேலேயே இயலும். அது இல்லாதவர், தனக்குக் கிடைத்த ஆற்றலைப் பயன்படுத்தி, மனம்போன போக்கில், 'ராஜா வீட்டு கன்றுக்குட்டி' என்றாற்போல், துள்ளிக்குதித்துத் தகாதன செய்தால் எல்லாவற்றையும் இழக்க நேரிடும். தெளிவான சிந்தனை உடைய சேர்ந்தொழுகுவார் ஒரே நிலையில் இருந்து ஏற்கத்தக்கச் செயல்களைச் செய்வார்

'கொளப்பட்டேம்' என்றதன் பொருள் என்ன?

'கொளப்பட்டேம்' என்றதற்குக் கைக்கொள்ளப்பட்டோம், உட்கொள்ளப் பெற்றோம், மிகவும் கைக்கொள்ளப்பட்டேம், நன்கு மதிக்கப்பட்டேம், நம்பேரிலே சந்தோஷமாய் இருக்கிறான், ஆதிக்கங் கொள்ளப் பெற்றோம், விரும்பப்பட்டோம், மிகவும் மதிக்கப்பட்டுத் தம்முடையவராகக் கைகொள்ளப்பட்டிருக்கிறோம், ஆள்வோர்க்கு மிகவும் வேண்டியவர்கள், ஆதிக்க எல்லையில் கொள்ளப் பெற்றமை, மதிக்கப்பட்டேன், நன்கு மதிக்கப்பட்டோம், மிகவும் பிரியமுள்ளவர்கள் ஆகிவிட்டோம், விரும்பப்பட்டேம், ஏற்றுக்கொள்ளப் பட்டோம், அன்புக்கு உரியவரானோம், விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டோம், மதிப்பாக ஏற்றுக்கொள்ளப் பட்டேம் பெருமைப்படுத்தப்பட்டு ஏற்கப்பட்டுவிட்டோம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'கொளப்பட்டேம்' என்றது ஆட்சியின் ஆதிக்க எல்லையுள் ஏற்றுக் கொள்ளப்படுவதைக் குறிக்கிறது. பாராட்டப்பெற்றுத் தலைவர்க்கு வேண்டியவராகி மேல்நிலைக்கு உயர்வதைச் சொல்கிறது. உயர்நிலை என்றதால் ஆற்றலும் மிகுதிஉடையது. தலைவரைச் சேர்ந்தொழுகுவோர் அதிகாரம் கூடியபின், கொளப்பட்டோம் என்ற காரணத்தினால், உளநிலையில் அசைவுஇல்லாமல் இருக்கவேண்டும் என்ச் சொல்கிறது இக்குறள்.

'கொளப்பட்டேம்' என்பதற்கு ஏற்றுக்கொள்ளப் பட்டோம் என்பது பொருள்.

பிறழாத தெளிவுடையவர்கள் ஆட்சித்தலைவரால் கைக்கொள்ளப்பட்டவர் என்று கருதி ஏற்றுக் கொள்ளத் தகாதனவற்றைச் செய்ய மாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பதவிபெற்றாலும் பண்பாடு திரியாமல் மன்னரைச்சேர்ந்தொழுகல் வேண்டும்.

பொழிப்பு

பிறழாத அறிவினை உடையவர்கள் தலைவரால் மதிக்கப்பட்டோம் என்று கருதி ஏற்றுக் கொள்ளத் தகாதனவற்றைச் செய்ய மாட்டார்கள்.