இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0601 குறள் திறன்-0602 குறள் திறன்-0603 குறள் திறன்-0604 குறள் திறன்-0605
குறள் திறன்-0606 குறள் திறன்-0607 குறள் திறன்-0608 குறள் திறன்-0609 குறள் திறன்-0610

'மடி இன்மை' என்பது சோம்பல் இல்லாதிருத்தல். மடி என்றால் சோம்பல். உள்ளத்தில் ஊக்கமிருந்தும் உடலின் சோம்பலால் வாழ்க்கை கெடுவதுண்டு. ஊக்கத்தை உழைப்பில் செலுத்த வேண்டும் என்பது. இது எல்லாருக்கும் பொது.
- நாமக்கல் இராமலிங்கம்

மடி என்ற சொல்லுக்குச் சோம்பல் என்பது பொருள். ஒருவனது குடும்பம் குன்றா விளக்காக ஒளிவிட அவன் எப்பொழுதும் சோம்பலின்றி இருக்கவேண்டும் என்பதைச் சொல்வது மடியின்மை. நெஞ்சில் ஊக்கம் உடையோரிடமே அதாவது உயரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவரிடம் மடி குடி புகாது. சோர்வு, அதன் தொடர்புடைய நெடுநீர்மை, மறதி, தூக்கம் என்ற நான்கும் ஒருவரது எழில்நலம், வளமை அழிக்கும் தன்மையன. குடும்ப மேலாண்மையில் உண்டாகும் குற்றங்களை ஒழிக்க தன்னை ஆளும் சோம்பலை நீக்க வேண்டும். சோம்பலுற்றவன் குடும்பம் அழியுமென திரும்பத் திரும்ப இங்கு வற்புறுத்துப்படுகிறது.

மடியின்மை

ஊக்கம் உள்ளத்தின் எழுச்சியாக இருப்பது. மடி என்பது உள்ள எழுச்சி இன்மையாலும் உடம்பின் சோம்பலாலும் உண்டாவது. தன் குடியை மேன்மேல் உயரச் செய்ய விரும்புவர் சோம்பலைச் சோம்பலுறச் செய்து வாழ்வர். மடியுடையான் தன் குடும்பத்துக்கு கேடு உண்டாக்கிவிட்டுத்தான் சாவான். நெடுங்காலம் இருப்பதால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கடமைகளைத் தள்ளிப் போடுவதும், காலம் கடந்துவிட்டதால் எப்படி கடமை புரிவது என்று அதையே காரணம் சொல்வதும் சோம்புடையார் குணங்கள். அவர்கள் தங்களை மறதியுள்ளவராகக் காட்டிக்கொள்வர். சுறுசுறுப்பின்றி நாள் முழுவதும் ஓய்வு மனநிலையிலேயே இருப்பர்.
மடியை ஆளத்தெரியாதவர் புதுச் செல்வங்களை ஈட்டவும் மாட்டாமல், முன்பு இருந்த பொருளையும் பேணிக் காக்க இயலாமலும் எல்லாவற்றையும் இழந்து நிற்பர். அரசியலார் உறவு கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முன்வராமல் சோம்பலுணர்வு தடுக்கும். நண்பர்களும் சுற்றமும் இடித்துரையையும் எள்ளல் மொழிகளையும் கேட்டு அதற்கு மறுப்புச் சொல்ல இயலாமல் மானம் இழப்பர். மடிமை குடியில் தங்கிவிட்டால் பகைவர்க்கு அடிமையாகவும் நேரிடும். சோம்பலை நீக்கியவன் உலகெல்லாம் வெல்லும் வல்லமை பெறுவான். இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.
இவ்வதிகாரப் பாடல்கள் குடியியல் அதிகாரங்களை, குறிப்பாக குடிமை, குடிசெயல்வகை ஆகியவற்றை எண்ண வைக்கிறது.

ஆட்சியாளர் மேல் வைத்துக் குடிகட்கும், குடிகள் மேல் வைத்து ஆள்வோருக்கும் அறம் உரைத்தல் வள்ளுவர் வழக்கம். அறம் இருபாலார்க்கும் இன்றியமையாதது என்பதால் தனிமனிதனது குடும்பத்துக்கும், நாட்டை ஆள்பவர்க்கும் அந்நாட்டுக் குடிகளுக்கும், சோம்பலை அகற்ற அறிவுரை கூறுமாறு அதிகார அமைப்பு உள்ளது.

மடியின்மை அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 601ஆம் குறள் ஒருவனது குடும்பம் என்னும் குறைவில்லாத விளக்கு அவனது சோம்பல் என்னும் மாசு படர மங்கி மறையும் என்கிறது.
  • 602ஆம் குறள் தம் குடியை நற்குடியாகவே இருக்க விரும்புபவர் சோம்பலைச் ஒழித்து (முயற்சியாக) வாழவேண்டும் எனக் கூறுகிறது.
  • 603ஆம் குறள் சோம்பலை மடியிலே வைத்துக்கொண்டு ஒழுகும் அறியான் பிறந்த குடும்பம் அவனுக்கு முன் விரைந்தழியும் எனச் சொல்கிறது.
  • 604ஆம் குறள் சோம்பலிலே சோம்பிக் கிடந்து, திருந்திய முயற்சி இல்லாதவர்க்கு குடியும் கெட்டு குற்றமும் பல்கும் என்கிறது.
  • 605ஆம் குறள் காலந்தாழ்வு, மறதி, சோம்பல், உறக்கம் இவை நாலும் கெட்டழிவார் விரும்பிப் பூணும் அணிகலன்கள் எனத் தெரிவிக்கிறது.
  • 606ஆம் குறள் நாடாள்வோரின் நல்லுறவு வாய்க்கப் பெற்றாலும் சோம்பலுடையார் அதனால் பெரும் பயன் அடைதல் இல்லை என்கிறது.
  • 607ஆம் குறள் சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சியை விட்டவர்கள் பலரால் இடித்துரை செய்யப்பட்டு இகழப்படும் சொல்லையும் கேட்க நேரும் எனச் சொல்கிறது.
  • 608ஆம் குடும்பத்தில் சோம்பல் புகுந்து தங்கிவிட்டால், அது அவனை அவன் பகைவர்க்கு அடிமையாகப் புகுமாறு செய்துவிடும் என்கிறது.
  • 609ஆம் குறள் குடும்பத்தை ஆளும் தன்மையில் உள்ள குற்றம் தன்னை ஆண்டு கொண்டிருக்கும் சோம்பலை ஒருவன் ஒழித்து விடுவானானால் தீர்ந்துவிடும் எனக் கூறுகிறது.
  • 610ஆவது குறள் அடியால் திருமால் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே சோம்பல் இல்லா மன்னவன் அடைவான் என்கிறது.

மடியின்மை அதிகாரச் சிறப்பியல்புகள்

இவ்வதிகாரப் பாடல்களில் வள்ளுவர் சொல் நடை சுவை மிகுந்ததாக உள்ளது. மடியை மடியா, குடியைக் குடியாக, மடிமடிக் கொண்டொழுகும், குடிமடிந்து, மடிமடிந்து, மடிமை, குடிமை, அடிமை, குடியாண்மை, மடியாண்மை போன்ற சொற்களும் சொற்றொடர்களும் படிப்பதற்கு இனிமை தருவனவாக உள்ளன.

சோம்பித் திரியும் அறியான் குடும்பம் அவன் அழிவதற்கு முன் கெட்டழியும் அதாவது அவன் தன் குடியை அழித்துவிட்டுத்தான் சாவான். கேடுறுவதற்கு முன் முயன்று குடும்பத்தைக் காப்பாற்று என்னும் கருத்தை அறிவுறுத்துவது மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து(603) என்னும் குறள்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் (605) என்ற பாடலில் சோம்பல் தொடர்பான நான்கு குணங்களைக் கூறி அவற்றை விரும்பி ஏற்பவர்கள் பொலிவற்றுத் தோன்றுவார்கள் என்கிறது.

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் (608) என்ற குறள் ஒருவன் பிறர்க்கு அடிமையாக வாழ்வதற்குக் காரணம் சோம்பலுடைமை என்கிறது. மடியுடையார் நிறைந்த நாடும் அடிமைப்பட்டுத்தான் கிடக்கும் என்ற உண்மையையும் உணர வைக்கின்றது.




குறள் திறன்-0601 குறள் திறன்-0602 குறள் திறன்-0603 குறள் திறன்-0604 குறள் திறன்-0605
குறள் திறன்-0606 குறள் திறன்-0607 குறள் திறன்-0608 குறள் திறன்-0609 குறள் திறன்-0610