இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0603



மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து

(அதிகாரம்:மடியின்மை குறள் எண்:603)

பொழிப்பு (மு வரதராசன்): அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்துவிடும்.

மணக்குடவர் உரை: நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும்.
சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும்.
(அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும'¢ என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: சோம்பலை மடியிற் கொண்டிருக்கும் மடவன் பிறந்தகுடி அவனுக்குமுன் விரைந்தழியும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடி தன்னினும் முந்து மடியும்.

பதவுரை:
மடி-சோம்பல்; மடி- மடியில் (தன்னுள்); கொண்டு-கைக்கொண்டு; ஒழுகும்-நடந்து கொள்ளும்; பேதை-அறியான்; பிறந்த-தோன்றிய; குடி-குடும்பம்; மடியும்-அழியும்; தன்னினும்-தன்னைக்காட்டிலும்; முந்து-முற்பட்டு.


மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி;
பரிப்பெருமாள்: நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி;
பரிதி: மடித்த புத்தியுள்ளவன் கெடுவதற்கு முன்னே;
காலிங்கர்: மடித்தலாகிய இதனைத் தன்மாட்டுக் கொண்டு ஒழுகும் மடவோனாகிய மன்னவன்;
காலிங்கர் குறிப்புரை: மடி மடிக்கொண்டு ஒழுகும் என்பது மடியாகிய இதனைத் தன்மேல் வைத்துக்கொண்டு என்றது.
பரிமேலழகர்: விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி;

'உள்ளத்துச் சோம்பலாலே தொழிலிற் சோம்பலுறும் அறிவிலி பிறந்தகுடி' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'மடியைத் தன்மேல் வைத்துக்கொண்டு ஒழுகும் மடவன்' என்றார். பரிமேலழகர் 'மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி' என உரை தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பலைத் தன் அடிமடியிலே வைத்துக்கொண்டு நடக்கும் அறிவிலி பிறந்த குடும்பம்', 'சோம்பேறித்தனம் மிகவும் உள்ளவனான ஒரு மூடன் பிறந்த குடித்தனம்', 'சோம்பலைத் தன்னிடத்தே கொண்டு ஒழுகும் அறிவில்லாதவன் பிறந்த குடி', 'சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவிலாதான் பிறந்த குடி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சோம்பலை மடியிலே வைத்துக்கொண்டு ஒழுகும் அறியான் பிறந்த குடும்பம் என்பது இப்பகுதியின் பொருள்.

மடியும் தன்னினும் முந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு முன்பே கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: தனக்கு முன்பே கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மடியுடைடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: அவன் உறவின் முறை முந்தக் கெடும் என்றவாறு.
காலிங்கர்: தான் மாய்தலேயும் அன்றித் தன்னினும் முந்துறத் தனது குடி முழுதும் மாயும் என்றவாறு.
பரிமேலழகர்: அவன் தன்னினும் முந்துற அழியும்.
பரிமேலழகர் குறிப்புரை: அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.

'தனக்கு முன்பே கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவனினும் முன்னதாக அழியும்', 'அவன் இறந்து போவதற்கு முன் (அவன் காண அவனால்) கெட்டுப் போகும்', 'அவனைப் பார்க்கிலும் முற்பட்டு அழியும்', 'அவனுக்கு முன் அழிந்துவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவனுக்கு முன் விரைந்தழியும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சோம்பலை மடியிலே வைத்துக்கொண்டு ஒழுகும் அறியான் பிறந்த குடும்பம் அவனுக்கு முன் விரைந்தழியும் என்பது பாடலின் பொருள்.
'மடிமடிக் கொண்டு' என்றதன் பொருள் என்ன?

சோம்பலைத் தன்னுள் சுமந்து கொண்டு வாழும் விவரம் கெட்டவன் குடும்பம் அவன் சாவதுக்கு முன்னரே அழியும்.
இப்பாடலிலுள்ள முதல் சொல்லான மடி சோம்பல் என்ற பொருள் தரும். இரண்டாவதான 'மடி' என்பது மடித்த தொடையின் மேற்பாகத்தைக்(lap) குறிக்கும். 'மடிமடிக்கொண்டு ஒழுகும்' என்ற தொடர் 'சோம்பலை உடம்பிலே சுமந்து கொண்டு வாழும்' எனப் பொருள்படும். 'அகத்தே கொண்டு' எனவும் இதற்குப் பொருள் கூறுவர்.
மனச்சோம்பலாலே தொழிலிலும் சோம்பலுறுகிறான் இப்பேதை. மற்றவர்கள் உணர்த்தியும், அக்கறை இல்லாதவனாய் இருக்கிறான். அவன் சோம்பியிருக்கிறோம் என்பதையே தெரியாதவனாயிருக்கிறன். இதனால் அவனை அறியாதவன் என இக்குறள் சொல்லுகிறது, சுறுசுறுப்பின்றி, சோம்பலை மடியில் கொண்டிருக்கின்ற குற்றத்தால் அவன் குடும்பம் அவனுக்கு முன்பாகவே கெட்டழியும்.

சோம்பலுடையான் ஆக்கங்கள் தர வல்ல ஊக்கத்தைக் கைவிட்டவன். அவன் தன்அகத்தே சோம்பலைக் கொண்டு திரிகிறான். அவன் குடும்பத்தின் பொருள் வளம் குன்றி குடிப்பெயரும் மங்கும். சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் (கொன்றைவேந்தன் 36 பொருள்: சோம்பலுடையவர் என்று சொல்லப்படுவோர் (வறுமையினால்) வருந்தி, (இரந்து) அலைவார்கள்) என்றார் ஔவையாரும். மடியுடையான் குடும்பம் விரைவில் மாயும். அறியான் பிறந்த குடி அவன் மடியு முன்னரே அழியும். குடும்ப விளக்கத்தை மங்கச் செய்த பேதை தான் முடியுமுன்பே தன் குடியழியக் காண்பான்.

'மடிமடிக் கொண்டு' என்றதன் பொருள் என்ன?

'மடிமடிக் கொண்டு' என்ற தொடர்க்கு நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து, மடித்த புத்தியுள்ளவன், மடித்தலாகிய இதனைத் தன்மாட்டுக் கொண்டு, மடியைத் தன்னுள்ளே கொண்டு, மடியாகிய சோம்பலை மடியென்னும் புடவையாக உடுத்தி, அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு, சோம்பலைத் தன்னுடையதாக்கிக் கொண்டு, சோம்பலை உடனுறையும் ஒழுகலாறாகக் கொண்டு, சோம்பலை மடியிற் கொண்டிருக்கும், சோம்பலைத் தன் அடிமடியிலே வைத்துக்கொண்டு, சோம்பேறித்தனம் மிகவும் உள்ளவனான, சோம்பலைத் தன்னிடத்தே கொண்டு, சோம்பலைத் தன்னிடம் கொண்டு, அடிமடியில் சோம்பலைக் கட்டிக்கொண்டு, அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங்கொண்டு என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவற்றுள் 'சோம்பலை புடவையாக உடுத்தி' என்னும் பழைய உரையாசிரியர் ஒருவரது கருத்து வேடிக்கையாக இருக்கிறது. இவர் மடி என்பதற்குப் புடவை எனப் பொருள் கொண்டுள்ளார். 'மடிகொண்டொழுகலாவது சோம்பலை விடாது பிடித்திருத்தல்' என்பது ஜி வரதராஜன் உரை. சோம்பலைத் தன் அடிமடியிலே வைத்துக்கொண்டு என்ற பொருள் தருபவர்கள் 'நெருப்பை மடியிற் கட்டிக்கொண்டான் போல',‘குரங்கை மடியில் கட்டிக் கொண்டு போனது போல’, 'பூனையை மடியிற் கட்டிக்கொண்டு' 'சனியனை அடிமடியிற் கட்டியதுபோல', என வழங்கும் பழமொழிகளை நினைவிற் கொண்டிருக்கலாம்.
‘குடிமடியும் தன்னினும் முந்து’ என்ற கேட்டின் பேரளவிற்கேற்ப, ‘மடி மடிக்கொண்டு’ என்று ஒருவன் மடியின் பேரழுத்தத்தையும் ஆசிரியர் அழுத்தமாகக் காட்டுவதாக இரா சாரங்கபாணி குறித்துள்ளார். இது '.....தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்' (1023 பொருள்: ...தெய்வம் இடையில் ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்) என்பது போன்ற குறள் நடையில் அமைந்தது.
'மடிமடிக் கொண்டு' என்பதற்குச் 'சோம்பலை மடியில் கட்டிக் கொண்டு' என்பது நேர்பொருள்.

'மடிமடிக் கொண்டு' என்ற தொடர்க்கு சோம்பலைத் தன்னகத்தே கொண்டு அல்லது தன்மேல் வைத்துக்கொண்டு என்பது பொருள்.

சோம்பலை மடியிலே வைத்துக்கொண்டு ஒழுகும் அறியான் பிறந்த குடும்பம் அவனுக்கு முன் விரைந்தழியும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மடியின்மை இல்லாதவன் தன் குடும்பத்தை அழித்துவிட்டுத்தான் சாவான்.

பொழிப்பு

சோம்பலை மடியிற் கொண்டு ஒழுகும் அறியான் பிறந்த குடும்பம் அவனுக்கு முன்னதாக அழியும்.