இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0604



குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

(அதிகாரம்:மடியின்மை குறள் எண்:604)

பொழிப்பு (மு வரதராசன்): சோம்பலில் அகப்பட்டுச் சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்குக் குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

மணக்குடவர் உரை: குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு.
இது பிறாரால் இகழப்படுவ ரென்றது.

பரிமேலழகர் உரை: மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும் - குடியும் மடிந்து குற்றமும் பல்கும்.
('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: சோம்பலில் பொருந்தித் திருந்திய முயற்சி இல்லாதவர்க்கு குடி அழிந்து குற்றம் மிகுதியாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மடிமடிந்து மாண்ட உஞற்றிலவர்க்கு குடிமடிந்து குற்றம் பெருகும்.

பதவுரை:
குடி-குடும்பம்; மடிந்து-அழிந்து; குற்றம்-குற்றம்; பெருகும்-பல்கும்; மடி-சோம்பல்; மடிந்து-சோம்பி; மாண்ட-திருந்திய; உஞற்று-முயற்சி; இலவர்க்கு-இல்லாதவர்க்கு.


குடிமடிந்து குற்றம் பெருகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்;
மணக்குடவர் குறிப்புரை: இது பிறாரால் இகழப்படுவ ரென்றது.
பரிப்பெருமாள்: குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, குடி கெடுதலே அன்றிக் குற்றமும் உண்டாம் என்றது.
பரிதி: குடியும் கெட்டுக் குற்றமும் பெருகும்;
காலிங்கர்: தன் கோல்கீழ் வாழும் குடிகளும் தத்தம் வினைச்செயலைச் செய்யாது மடிந்து பின்னும் தமக்கும் குற்றம் பெருகும்;
காலிங்கர் குறிப்புரை: குடி மடிந்து என்பது வினை மடிந்து என்றது; குடிமடிந்து என்பதனைச் சுற்றத்தார் மாய்ந்து என்பாரும் உளர்.
பரிமேலழகர்: குடியும் மடிந்து குற்றமும் பல்கும்.

'குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடும்பமும் அழியும், குற்றமும் பெருகும்', 'அவர் குடும்பமும் அழிந்து குற்றமும் பெருகும்', 'அவர்களுடைய குடித்தனத்தின் பெருமை கெட்டுப் போகும் என்பது மட்டுமல்ல; அவர்கள் குற்றவாளிகளும் ஆவார்கள். (அந்தக் குற்றத்துக்காக அவர்களுக்குத் தனியான தண்டனையும் வரும்.)', 'குடியும் கெட்டு குற்றமும் அதிகப்பட்டுப்போம் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குடும்பப் பெருமை கெட்டு குற்றமும் பல்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு.
பரிப்பெருமாள்: மடியின்கண்ணே ஒன்றி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு.
பரிதி: மடித்த புத்தி உள்ளாற்கு என்றவாறு. [மடித்த புத்தி-சோம்பல்]
காலிங்கர்: யார்க்கு எனின், மடியின்கண் தங்கியதனாலே மாட்சிமை உடைய முயற்சி இல்லா மன்னவர்க்கு என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மடி மடிந்து என்பது மடியின்கண்ணே மடிந்து என்றது.
பரிமேலழகர்: மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: 'மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.

'சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பலிற் பட்டுச் சுறுசுறுப்பு இல்லாதவர்க்கு', 'சோம்பலிலே வீழ்தலால் சிறந்த முயற்சி இல்லாதவர்க்கு', 'சோம்பலில் ஒடுங்கி, குடித்தனத்துக்குப் பெருமை யுண்டாக்கிய காரியங்களைச் செய்யாமலிருப்பவர்களுக்கு', 'சோம்பலில் ஆழ்ந்து சிறந்த முயற்சி செய்யாதவருடைய' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சோம்பலிலே சோம்பிக் கிடந்து, திருந்திய முயற்சி இல்லாதவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சோம்பலிலே சோம்பிக் கிடந்து, திருந்திய முயற்சி இல்லாதவர்க்கு குடிமடிந்து குற்றமும் பல்கும் என்பது பாடலின் பொருள்.
'குடிமடிந்து' என்பதன் பொருள் என்ன?

மடியுடையான் குடும்பச் சிறப்பு கெடுவதோடு அவனுக்குக் குற்றங்கள் பலவும் உண்டாகும்.
சோம்பலுடையான் குடும்பம் அவன் இறக்குமுன்னரே அழியும் என்ற முன்னர் கூறிய வள்ளுவர் இக்குறளில் அவனுக்கு இழிவுகள் பல எய்தும் என்கின்றார்.
மடி மடிந்து என்ற சொற்றொடர் சோம்பலினாலே சோம்பிக்கிடந்து என்ற பொருள் தருவது.
‘மாண்ட உஞற்றிலவர்’ என்பதற்குத் திருந்திய முயற்சியிலாதார் என்பது பொருள்.
சோம்பல் மடிந்து சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் பாடல். அவ்விதம் முயற்சி இல்லாதவர்க்கு குடும்பம் கெட்டுக் குற்றமும் பெருகும். குடும்பம் கெடும் என்பது குடும்பப் பெருமை அழியும் என்பதைக் குறிக்கும். சோம்பல் காரணமாக சிறப்பான நிலை தாழ்ந்து சிறுமையும் பழியும் அடைந்து பிறரால் இகழப்படுவர்.

'குடிமடிந்து' என்பதன் பொருள் என்ன?

'குடிமடிந்து' என்றதற்குக் குடியுங் கெட்டு, தன் கோல்கீழ் வாழுங் குடிகளும் தத்தம் வினைச்செயலைச் செய்யாது மடிந்து, குடியும் மடிந்து, குடியின் பெருமை அழிந்து, குடியும் அழிந்து, குடும்பமும் அழியும், குடித்தனத்தின் பெருமை கெட்டு, குடும்பம் அழிவதுடன், குடி அழிந்து, குடும்பத்தின் பெருமை அழிந்து, குடும்பப் பெயரும் கெடும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவ்வதிகாரத்தில் காலிங்கர் தமது உரையில் குடி என்ற சொல்லுக்கு அரசர் குலம் என்றும் குடிமக்கள் என்றும் பொருள் கொண்டு உரை செய்துள்ளார். இங்கும் 'தன் கோல்கீழ் வாழும் குடிகளும் தத்தம் வினைச்செயலைச் செய்யாது மடிந்து பின்னும் தமக்கும் குற்றம் பெருகும்; யார்க்கு எனின், மடியின்கண் தங்கியதனாலே மாட்சிமை உடைய முயற்சி இல்லா மன்னவர்க்கு' என உரை வரைந்துள்ளார். குடிகள் சோம்பி இருந்தால் அதனால் அவர்களுக்கு மட்டுமன்றி மன்னர்க்கும் குற்றம் பெருகும் என்கிறார் மேலும் 'குடிமடிந்து என்பதனைச் சுற்றத்தார் மாய்ந்து என்பாரும் உளர்' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் கூறும் உரையாசிரியர் யார் என்று தெரியவில்லை.

'குடிமடிந்து' என்ற தொடர்க்கு குடும்பத்தின் பெருமை அழிந்து என்பது பொருள்.

சோம்பலிலே சோம்பிக் கிடந்து, திருந்திய முயற்சி இல்லாதவர்க்கு குடும்பப் பெருமை கெட்டு குற்றமும் பல்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மடியின்மை குடும்பப் பெருமை காத்து குற்றம் வராமல் தடுக்கும்.

பொழிப்பு

சோம்பலில் சோம்பிக் கிடந்து, திருந்திய முயற்சி இல்லாதவர்க்கு குடும்பப் பெருமை அழிந்து குற்றமும் பல்கும்.