இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0606



படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது

(அதிகாரம்:மடியின்மை குறள் எண்:606)

பொழிப்பு (மு வரதராசன்): நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

மணக்குடவர் உரை: பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை.
இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.

பரிமேலழகர் உரை: படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் - நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது - மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.
('உம்மை' எய்தாமை விளக்கி நின்றது. மாண்பயன் - பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம். இதற்கு 'நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்' என்று உரைப்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: நாடு ஆள்பவரின் நல்லுறவு இருப்பினும் சோம்பேறி பெரும்பயன் அடையான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.

பதவுரை:
படி-நிலம்; உடையார்-உரிமைகொண்டவர்; பற்று-செல்வம்; அமைந்தக்கண்ணும்-அமைந்தாலும் மடி-சோம்பல்; உடையார்-உடையவர்; மாண்-சிறந்த; பயன்-நன்மை; எய்தல்-அடைதல்; அரிது-அருமையானது.


படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும்;
பரிப்பெருமாள்: நில வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும்;
பரிதி: மண்டலத்தரசர் செல்வம் நிலையில்லை;
காலிங்கர்: மண் ஆளும் வேந்தரானவர் தம்மினும் வலிய வேந்தரைப் பற்றி வாழ்தல் முற்றும் பெற்ற இடத்தும்;
பரிமேலழகர்: நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'உம்மை' எய்தாமை விளக்கி நின்றது. இதற்கு 'நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்' என்று உரைப்பாரும் உளர்.

'நிலம் ஆள்வாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தை உரிமையாக உடைய அரசர் தொடர்பு கிடைத்தாலும்', 'உலக மக்களின் அபிமானம் கிடைத்தாலும்', 'நிலமுழுதும் உடையராய்ச் செல்வம் இயற்கையாக நன்கு வாய்க்கப்பெற்ற போதும்', 'நிலத்தை ஆளுகின்றவரின் உதவி பொருந்தியவிடத்தும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாடாள்வோரின் நல்லுறவு வாய்க்கப் பெற்றாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.
பரிப்பெருமாள்: மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது செல்வமுண்டாயினும் கெடும் என்றது.
பரிதி: அது நிலை பெற்றாலும் மடித்த புத்தியுள்ளார் பயன்பெறமாட்டார்கள் என்றவாறு.
காலிங்கர்: மடியுடைய மன்னராயின் மாட்சிமை உடைய அரசர் வாழ்க்கைப் பயன் எய்தல் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: மாண்பயன் - பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம்.

'மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பலுடையார் அதனால் சிறந்த பயனை அடைய முடியாது', 'சோம்பலுடையவர்கள் அதனால் அடையக்கூடிய பெரும் பயன்களை அடைவது முடியாது', 'சோம்பல் உடையவர்கள், அதனால் சிறந்த பயனை அடைவது இல்லை', 'சோம்பலுடையார் அதனால் சிறந்த பயனை அடைதல் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சோம்பலுடையார் அதனால் பெரும் பயன் அடைதல் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாடாள்வோரின் நல்லுறவு வாய்க்கப் பெற்றாலும் சோம்பலுடையார் அதனால் பெரும் பயன் அடைதல் இல்லை என்பது பாடலின் பொருள்.
'படியுடையார் பற்று' என்றல் என்ன?

அரசியல் தொடர்பு கிடைத்தாலும் சோம்பியிருப்பவர் அந்த உறவால் பெரும் பயன் ஏதுவும் அடைதல் இல்லை.
நாடாள்வோர் ஆதரவு கிடைக்கப்பெற்றாலும் சோம்பலுடையவர் அதனால் சிறந்த பயன் பெற மாட்டார்.
அரசியல் தொடர்பு மிகுந்த பயனளிக்கக் கூடியது. அரசுடன் நட்பு கொண்டவர்கள் வளம் பெற்ற வாழ்வை விரைவில் அடைகின்றார்கள். ஆனால் சோம்பலுடையவராக இருந்தால் அரசியலார் நல்லுறவு வாய்க்கப்பெற்றாலும் அவர்கள் சிறந்த நன்மை பெறப்போவதில்லை; அவர் முயற்சியுடையாராக இல்லாவிட்டால் ஆற்றல் மிக்க அந்த நட்புறவைப் பயன்படுத்திக் கொள்ளாமாட்டாதவராயிருப்பர். அரசின் ஆதரவு என்பது அரிதாக அமைவது. அரசியலார் துணையோ அல்லது பொருளோ இருப்பினும், முயற்சி இல்லாதவர், அவற்றைப் பயன்படுத்துவதற்குக்கூட சோம்புவராதலால், அப்பேற்றைப் பயன்படுத்தி இன்புறும் நிலையை அடையமாட்டார். இதனாலேயே மாண்பயன் எய்தலரிது எனச் சொல்லப்பட்டது. அதற்கும் ஊக்கமுள்ள முயற்சி தேவை என்பது கருத்து.

நாமக்கல் இராமலிங்கம் படியுடையார் என்பதற்கு உலகமக்கள் எனப் பொருள் கொண்டு 'படியுடையார் பற்று என்பது ஒருவனுடைய கல்வி, ஒழுக்கம், திறமை முதலிய நற்குணங்களுக்காகப் பொது மக்கள் அவனைப் பாராட்டுதல். அதைப் பெற்றவனாக இருந்தாலும் அவன் சோம்பல் உள்ளவனாக மட்டும் இருப்பானானால் மற்ற எல்லாக் குணங்களும் பயனற்றவையாகும். பிறர் அவனிடத்தில் வைத்த நம்பிக்கையும் மதிப்பும் வீணாகும்' என்று சற்று மாறுபாடாக உரை வரைந்தார்.

இக்குறளுக்கு 'மண் முழுதாளும் மன்னராயினும் மடியுடையார் மாட்சியுற்ற பயனை எய்தார்' என்ற பொருளில் சிலர் உரை எழுதியுள்ளனர். இது படியுடையாரையும் மடியுடையாரையும் ஒருவராகக் கொண்டு சொல்லப்படுவது. இவ்வகையான உரை இக்குறள் நடைக்கு ஏற்றதாக இல்லை.

'படியுடையார் பற்று' என்றல் என்ன?

'படியுடையார் பற்று' என்றதற்குப் பூமியையுடைய வேந்தர் பலபொருள், மண்டலத்தரசர் செல்வம், மண் ஆளும் வேந்தரானவர் தம்மினும் வலிய வேந்தரைப் பற்றி வாழ்தல், நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம், நாட்டை ஆளும் தலைவருடைய உறவு, படியையுடைய அரசர் கைப்பிடித்து மிகுந்த செல்வம், உலக முழுதுமுடையாராய் ஆள்பவர்களது துணையே பற்றுக் கோடாக, நிலம் முழுதும் ஆண்டாரது செல்வம், நாடு ஆள்பவரின் நல்லுறவு, உலகத்தை உரிமையாக உடைய அரசர் தொடர்பு, உலக மக்களின் அபிமானம், நாடாளும் பெருமக்களின் நல்ல தொடர்பு, நிலமுழுதும் உடையராய்ச் செல்வம், நிலத்தை ஆளுகின்றவரின் உதவி, இந்தப் பெரிய உலகத்தையே தனக்கு உரிமையுடையதானதாக உள்ள ஒர் பேரரசனின் உறவு, மாநிலம் முழுதுமாளும் மாபெருவேந்தரின் துணை, உலக மக்களின் அன்பும் ஆதரவும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

படி என்ற சொல்லுக்குப் பூமி எனப் பொருள் கொண்டு படியுடையார் என்பதற்குப் பெருநிலம் உடையவன் அல்லது ஆள்பவன் எனப் பொருள் கூறுவர். பற்று என்ற சொல்லுக்கு செல்வம், பற்றுக்கோடு, ஆதரவு, உறவு, தொடர்பு எனப் பலவாறாக உரைப்பொருள் கொள்வர். எல்லாவற்றையும் இணைத்து நோக்கும்போது 'படியுடையார் பற்று' என்ற தொடர்க்கு நாடாள்வோரின் தொடர்பு என்பது பொருத்தமாகலாம்.

கா சுப்பிரமணியம் பிள்ளை 'நிலமுழுதும் உடையராய்ச் செல்வம் இயற்கையாக நன்கு வாய்க்கப்பெற்ற போதும்' என இரு தகுதிகளைக் கூறினார். நாமக்கல் இராமலிங்கமும் ஜி வரதராஜனும் இத்தொடர்க்கு முறையே உலகவர் நன்மதிப்பு, உலக மக்களின் அன்பும் ஆதரவும் எனப் பொருள் கூறினர். 'அதற்குப் படியார் (படி=உலகம்) என இருப்பின் ஓராற்றான் ஒக்கும். ‘உடையார்’ எனப் பிற சொல் அமைந்திருத்தலின், மன்னரைக் குறிப்பதே வழக்கு' எனக் கூறி இரா சாரங்கபாணி இவ்வுரைகளை மறுப்பார். ஆனால் தண்டபாணி தேசிகர் 'படியுடையார் என்பது முடியாட்சிக் காலத்து மன்னரையும், குடியாட்சிக்காலத்து மக்களையும் உணர்த்துவதாய் எக்காலத்தும் ஏற்புடைத்தாதல் காண்க' என்று சொல்லி இவ்வுரைகளை வரவேற்பார்.

நாடாள்வோரின் நல்லுறவு வாய்க்கப் பெற்றாலும் சோம்பலுடையார் அதனால் பெரும் பயன் அடைதல் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மடியின்மை இல்லாதவிடத்து ஆற்றல்மிக்கோர் ஆதரவு இருந்தும் பயன் இல்லை.

பொழிப்பு

நாடாள்வோரின் உறவு கிடைத்தாலும் சோம்பலுடையார் அதனால் பெரும்பயன் அடைவதில்லை.