இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0609



குடியாண்மை உள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்

(அதிகாரம்:மடியின்மை குறள் எண்:609)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றி விட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.

மணக்குடவர் உரை: குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும்.
குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங்குற்றம்.

பரிமேலழகர் உரை: ஒருவன் மடி ஆண்மை மாற்ற - ஒருவன் தன் மடியாளுந் தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும்.
(மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏதுவாய தாமத குணம். 'குடியாண்மை' என்பது உம்மைத்தொகை. 'அவற்றின்கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: குடிமை ஆளும் தன்மையுள் பொருந்திய குற்றம், சோம்பல் ஆளும் தன்மையை ஒழிக்கவே, இல்லாமல் போகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குடியாண்மை உள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.

பதவுரை:
குடி-குடும்பம்; ஆண்மை-ஆளுந்தன்மை; உள்-இடத்தில்; வந்த-நேர்ந்த; குற்றம்-பிழை; ஒருவன்-ஒருவன்; மடியாண்மை-சோம்பலுடைமை; மாற்ற-ஒழிக்க; கெடும்-இல்லையாகும்.


குடியாண்மை உள்வந்த குற்றம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது;
மணக்குடவர் குறிப்புரை: குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங்குற்றம்.
பரிப்பெருமாள்: குடியையாள்தலை உடைமையின்கண் வந்த குற்றமானது;
பரிப்பெருமாள் குறிப்புரை: குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமை வருங்குற்றம்.
பரிதி: தன் குடியிலே ஒரு குற்றம் வந்தால்;
காலிங்கர்: குடிகளைத் தான் ஆண்டு ஒழுகுமிடத்து அவர்க்கு வந்து எய்திய வடுப்பாடும், மற்று அம்மன்னவன் தனக்கு வந்த வடுப்பாடும்; [வடுப்பாடு - குற்றப்படுதல்]
பரிமேலழகர்: அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'குடியாண்மை' என்பது உம்மைத்தொகை. 'அவற்றின்கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை.

'குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது' என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் கூறினர். காலிங்கர் 'குடிகளுக்கான குற்றமும் அரசனுக்கு வந்த குற்றமும்' என உரை கூறினார். பரிமேலழகரும் 'குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் என வேறு இருவகைக் குற்றங்களைக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடும்பம் நடத்துகையில் வந்த குறைபாடுகள்', 'ஒருவன் தன் குடும்பத்தை நடத்துவதில் உண்டாகும் குற்றம்', 'ஒரு குடும்பத்துக்கு வந்துவிட்ட பல துன்பங்களும்', 'ஒருவன் தனது குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குடும்பத்தை ஆளும் தன்மையில் உள்ள குற்றம் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும்.
பரிப்பெருமாள்: ஒருவன் மடி ஆள்தல் உடைமையைக் கெடுக்கக் கெடும். இது மடி இல்லார்க்குப் போக்கலாம் என்றது.
பரிதி: மடித்த புத்தியை விட்டுக் காரியவாதியாகில் அந்தக் குற்றம் கெடும் என்றவாறு.
காலிங்கர்: மற்றும் இங்ஙனம் வந்த மடியாட்சியைத் தவிர்க்கவே கெட்டுவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் தன் மடியாளுந் தன்மையை ஒழிக்கவே;
பரிமேலழகர் குறிப்புரை: மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏதுவாய தாமத குணம். அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.

'ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பலை ஒழிக்கவே நீங்கிப்போம்', 'அவன் தன் சோம்பலுடைமையை ஒழிக்கவே கெடும்', '(அக்குடும்பத்திலுள்ள) ஒருவன் சோம்பலுக்கு இடங்கொடாமல் உழைத்தால் தீர்ந்து போகும்', 'அவன் தனது சோம்பலுடைமையை ஒழிக்கவே நீங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன்னை ஆண்டு கொண்டிருக்கும் சோம்பலை ஒருவன் ஒழித்து விடுவானானால் தீர்ந்துவிடும். என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குடும்பத்தை ஆளும் தன்மையில் உள்ள குற்றம் தன்னை ஆண்டு கொண்டிருக்கும் சோம்பலை ஒருவன் ஒழித்து விடுவானானால் தீர்ந்துவிடும் என்பது பாடலின் பொருள்.
'குடியாண்மை உள்வந்த குற்றம்' குறிப்பது என்ன?

சோம்பலால் குடும்பத்தை ஆளும் தன்மையில் குற்றம் உண்டாகும்.
குடும்பத்தைச் சீராகச் செலுத்த சோம்பலை ஒழிக்க வேண்டும். சோம்பலின்றி நல்ல முயற்சி எடுத்துச் செயல்பட்டால் குடும்ப மேலாண்மையிலுள்ள குற்றங்கள் நீங்கி குடும்பம் செம்மைப்படும்.
மடியாண்மை என்ற தொடர் சோம்பல் ஆளும் தன்மை எனப் பொருள்படும். இதற்குச் சோம்புடைமை என்றும் பொருள் கூறியுள்ளனர். சோம்பல் நீக்கப்படவேண்டியது; ஆளப்பட வேண்டியதல்ல. எனவே மடியாண்மை என்பதற்கு சோம்பலுடைமை என்று பொருள் கொள்வதே நன்று. குடியாண்மை குடும்பத்தை ஆளும் தன்மையைக் குறிக்கும். மடியாண்மை மாற்றக் குடியாண்மை குற்றம் கெடும் என்கிறது பாடல். 'மாற்றக் கெடும்' என்றதால் சோம்பலை மனத்திட்பத்துடன் நீக்கி ஊக்கம் கொள்ள வேண்டும் என்ற செய்தி கிடைக்கிறது. சோம்பலை ஒழித்துவிடின், அவன் குடும்பத்தை ஆளும் திறத்தில் காணப்படும் குற்றம் ஒழிந்துபோகும்.
இக்குறளைப் பொதுமையிற் கொள்ளாமல் நாடாள்பவரின் மேலதாகக் கொண்டு சிலர் உரை செய்தனர். ஆட்சியாளரின் சோம்பல், அவனது ஆட்சியில் தோன்றும் குற்றங்களுக்குக் காரணம்; சோம்பல் அவரை ஆள்வதை அவர் மாற்றிவிட்டால், ஆட்சியில் தோன்றும் குற்றம் அழிந்துவிடும் என்பர் இவர்கள்.
குடி மேலாண்மையால் வரும் குற்றங்கள், சோம்பல் மேலாண்மையால் நீங்கும் என்பது கருத்து.

'குடியாண்மை உள்வந்த குற்றம்' குறிப்பது என்ன?

குடியாண்மை என்பதை ஒரு தொடராகக் கொண்டு 'குடியை ஆளுதலுடைமையின்கண் வந்த குற்றம்' எனவும் 'குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள்' என 'உள்' என்பதைக் குடிக்கும் ஆண்மைக்கும் கூட்டி இருவகைப்படுத்தியும் இருதிறமாகப் பொருள் கண்டனர்.
'குறளின் இரண்டடிக் கண்ணும் அமைந்த பொதுநடை நோக்கிப் பொருள் காண்டலே யாண்டும் சிறக்கும். ‘குடியாண்மை’ என்ற ஒன்றனை மட்டும் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் என உம்மைத் தொகையாகக் கொண்டெழுதிய உரைகள் பொருந்தா. ‘குடியாண்மை’ ‘மடியாண்மை’ என்னும் இரண்டினையும் ஓரமைப்பு உடையனவாகக் கொண்டெழுதிய மணக்குடவர் உரையே சிறக்கும்' என்பார் இரா சாரங்கபாணி. அதாவது குடியாண்மை என்பதற்கு குடிமையாளுதலுடைமை என்ற பொருளே தகும் என்கிறார் இவர்.
குடியாண்மையாவது தான் பிறந்த குடியின் மீது மேலாண்மை செய்யக்கூடிய நிலை. குடியாண்மை-குடிகளையாளுந் தன்மை; அதாவது அரசாட்சி என்கிறது காலிங்கர் உரை. பரிப்பெருமாளும் இதே கருத்தினரே. காலிங்கர் 'தன்னால் குடிகட்கும், தனக்கும் வந்த வடுப்பாடும்' என வேறுவகையில் இருகூறுகள் கூறி உரை தந்தார்.
பரிப்பெருமாள் 'குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமை வருங்குற்றம்' என குற்றத்திற்கு விளக்கம் தருவார். பரிமேலழகர் 'குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள்' என்றார். மேலும் விரிவுரையில் 'மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றையும் குறிப்பார். இப் பிற காரணங்களை காலமறியாமை, இடமறியாமை, செய்வினையின் மூலமறியாமை, முடிவறியாமை, சூழ்வன சூழாமை, துணை வலி தெரியாமை முதலியனவாம் என மற்றவர்கள் விளக்கினர். குடியில் வந்த குற்றம் வறுமை; ஆண்மையில் வந்த குற்றம் கொடாமை எனப் பழைய உரை ஒன்று கூறுகிறது.

குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் பெரிதும் மடியால் வந்தனவாகவே இருக்கும். குடி மேலாண்மையில் உண்டாகும் கேடுகளுக்கு சோம்பல் தவிர்க்கக்கூடிய ஒரு குற்றமாகிறது. ஆதலால் மடி இல்லாமல் ஆளக் குற்றங் கெடும் என்று சொல்லப்பட்டது.

குடும்பத்தை ஆளும் தன்மையில் உள்ள குற்றம் தன்னை ஆண்டு கொண்டிருக்கும் சோம்பலை ஒருவன் ஒழித்து விடுவானானால் தீர்ந்துவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மடியின்மை குடும்ப வளத்தைப் பெருக்கும்.

பொழிப்பு

குடும்பத்தை ஆளுகையில் வரும் குறைபாடுகள் ஒருவன் தன் சோம்பலை ஒழிக்கவே நீங்கிவிடும்.