இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0311 குறள் திறன்-0312 குறள் திறன்-0313 குறள் திறன்-0314 குறள் திறன்-0315
குறள் திறன்-0316 குறள் திறன்-0317 குறள் திறன்-0318 குறள் திறன்-0319 குறள் திறன்-320

இன்னாசெய்யாமையாவது, யாரொருவருக்கும் யாதொரு தீங்கும் செய்யாது வாழ்தல். பிணக்கு, வெகுளி, பகை காரணமாகவும் அழுக்காறு, அவா காரணமாகவும் புகழ் வேட்கை காரணமாகவும் நெறி கடந்த இன்ப நுகர்வு காரணமாகவும் தீங்கு செய்யும் இயல்பு தோன்றும். எந்த உயிருக்கும் எந்த ஒரு தீங்கையும் செய்யக்கூடாது என்பதே திருக்குறளின் அறம்.
- குன்றக்குடி அடிகளார்

பிற உயிர்கட்குத் துன்பம் உண்டாக்காமல் இருப்பது என்பது இன்னாசெய்யாமை ஆகும்.
அறஞ்சாரா நிலையில் பொருளை ஈட்டுவதும் பயன்படுத்துவதும் இன்பம் காண்பதும் ஆகாததுபோல், விலக்கத்தக்கனவற்றையும் செய்தல்கூடாது என்பதை வள்ளுவர் பல அதிகாரங்களில் கூறியுள்ளார். அவற்றுள் இன்னாசெய்யாமை என்ற அதிகாரம் ஒன்று. இவ்வதிகாரத்துடன் ஓரளவு தொடர்புடையது தீவினையச்சம் என்ற அதிகாரம். 'தீவினையச்சம்' தீச்செயல்களை அதாவது பாவச் செயல்களைச் செய்ய அஞ்சவேண்டும் எனக் கூறும்; 'இன்னாசெய்யாமை' பிற உயிர்கட்குத் தீங்கு செய்யாமல் இருக்க அறிவுறுத்துவது. இவ்விரு அதிகாரங்களும் பிறர்க்குத் தீமை செய்தவர் தீமையையே அடைவர் என்னும் கருத்தைக் கூறுகின்றன.

இன்னாசெய்யாமை

இன்னா செய்யாமை என்பது என்றும் எதற்காகவும் எங்கும் எவர்க்கும் எத்துயரும் செய்யாமையைச் சொல்வது. பிற உயிர்கள்-மாந்தரோ, விலங்கோ பறவையோ- எதுவும் துயருறும் காட்சியைக் காணும்போது இரக்கம்கொள்வது மனித இயல்பு. இன்னாசெய்யாமை அதிகாரம் எல்லா உயிரையும் தம் உயிர்போல் கருதி அதற்குத் தீங்கு இழைத்தல் கூடாது எனச் சொல்கிறது. இன்னாசெய்யாமையை மனம், மொழி, மெய் சார்ந்த அறமாக வள்ளுவர் கருதுகிறார். இந்த அதிகாரத்தையும் துறவறத்தார்க்கு மட்டும் உரியதாகக் கொள்ள வேண்டியதில்லை.
'தொல் தமிழரின் 'வீர யுக'த்தைச் சேர்ந்த குருதி உறவுகளும் குழு உறவுகளும் பெரிதும் இயல்பூக்கத்தின் வழிப்பட்டவையாகச் செயல்பட்டன. பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகப் போற்றல், யார்க்கும் மனத்தாலும் துன்பம் செய்யாமை, உயிர்களுக்கு ஊறு செய்யாமை, வேண்டுமென்றே கெடுதல் செய்தார்க்குப் பதிலுக்குக் கெடுதல் செய்யாமை முதலிய பண்பட்ட அறங்கள் எல்லாம் வள்ளுவர் காலத்துத் தோன்றியன' என்பார் ராஜ் கௌதமன்.

பெருஞ்சிறப்பைத் தருகிற அருஞ்செல்வங் கிடைப்பதாயினும், பிறருக்குத் துன்பம் செய்தல் கூடாது; அதுதான் அறிவுடைமை. பெருஞ் சீற்றத்துடன் ஒருவன் தனக்கு இன்னா செய்தவிடத்தும், மாசற்ற நன்னெறியாளர் அவர்க்கு இன்னா செய்வதில்லை. தான் ஒரு குற்றமும் செய்யாதிருக்க, தனக்கு இன்னாதவற்றைச் செய்தவர்க்கும், இன்னா செய்யற்க. இன்னா செய்தாரைத் தண்டிப்பது அவர் நாணுமாறு அவருக்கு நன்மை செய்து விடுவது. பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதாதவனுடைய அறிவு பயனற்ற அறிவு. இன்னாது எனத் தெரிந்தும் அதை ஒருவன் பிறர்க்குச் செய்வது ஆகாது. எப்போதும், யாருக்கும் எந்த அளவிலும் இன்னா செய்யாமையே சிறப்பாகும். தன் உயிர்க்குச் செய்யப்பட்ட தீங்குகளின் துன்பத்தை அனுபவித்த ஒருவன் அத்தீமையையே பிறனுக்கு ஏன்தான் செய்கின்றானோ? முற்பகல் இன்னா செய்தால் பிற்பகல் இன்னா தானே வரும். ஒருவன் செய்த துன்பம் அவனையே சாரும் அதாவது அவனையே வருத்துமாதலின், துன்பமில்லாமல் வாழ விரும்புகிறவர்கள், பிறருக்குத் துன்பம் செய்ய மாட்டார்கள். இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.

'தனக்குத் துன்பம் செய்தாரைத் தண்டிப்பது அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்து விடுவது'. போன்ற அறிவுரைகள் நடைமுறைக்கு ஒத்துவருமா? வள்ளுவர் மிக மிக உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு மக்கள் மனநிலையை அறியாமல் ஆற்றுப்படுத்துகிறாரா? இல்லை. இன்னாசெய்யாமை அதிகாரத்தில் கூறப்பட்டவை எல்லோராலும் பின்பற்றத் தக்கனவே. தீமை செய்தார்க்கும் நன்மை செய்துவிடுக என்பது உளவியல் அடிப்படையில் கூறப்பட்ட நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய ஒன்றுதான். பழி வாங்கும் உணர்வுடைய மனிதர்களோடு கூடவே சென்று திருத்துவதையே 'ஒறுத்தல்', 'அவர்நாண' என்ற சொற்கள் புலப்படுத்துகின்றன. இவை உடன்பாட்டுச் சொற்கள். பழிவாங்கும் மனப்பான்மையில் இருப்பவனது சினத்தை முதலில் தணித்து அவ்வேளையில் அவனுக்கு ஒரு நன்மை செய்தால் மனம் மகிழ்ந்து திருந்துவதற்கான வாய்ப்பு உண்டு. நம்மைச் சுற்றியுள்ளவர்களை ஆராய்ந்தால் இதுபோன்று திருந்தியவர்களின் உண்மை நிகழ்வுகள் பலவும் தெரியவரும்.
தீயரை விட்டுவிட வேண்டும் என்பதல்ல அவரை அடக்க வேண்டும் என்பதுவே வள்ளுவம். அதனால்தான் இன்னா செய்தாரைப் 'பொறுத்தல்' என்று சொல்லாது, 'ஒறுத்தல்' எனச் சொல்லப்பட்டது. எண்ணமும் அறிவும் உணர்வும் புலன்களும் கேடுற்றவர்களே பிற உயிர்களுக்கு இன்னா செய்வர். இன்னா செய்தவர்களுக்குத் திரும்ப இன்னா செய்தால் தீமை தொடர்ந்துகொண்டேதான் போகும். எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்தாற்றும் பண்பை மேற்கொண்டால் அது அமைதிக்கு வழிவகுக்கும். மாறாகப் பதிலுக்கு தீங்கு செய்து பழிவாங்குவதால் இன்பத்தையும் அமைதியையும் இழக்க நேரிடும். எப்பொழுதும் மனத்தில் அச்சம் குடிகொண்டுவிடும், மனச்சான்று, அரசின் சட்டங்கள் போன்றன ஒருங்கு கூடி வாழ்க்கையைத் துன்பமாக்கிவிடும்.

இன்னாசெய்யாமை அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 311 ஆம்குறள் பிறர்க்குத் துன்பம் செய்து சிறப்புச் செல்வம் பெறினும் அதைச் செய்யாதிருத்தலே மனக்குற்றமற்ற நல்லோர் கொள்கை என்கிறது.
  • 312 ஆம்குறள் மனவைரத்துடன் சீற்றம்கொண்டு தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும் திரும்ப அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் குற்றமற்ற மனத்தோர் கொள்கை எனச் சொல்கிறது.
  • 313 ஆம்குறள் தான் ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்னைப் பகைத்தவர்க்குக்கூட தீங்கிழைத்தல் அது மீள முடியாத துயரத்தைக் கொடுக்கும் என்கிறது.
  • 314 ஆம்குறள் தமக்குத் தீமை செய்தாரைத் தண்டித்தல் தீங்கு செய்தவர்கள் தாமாகவே வெட்கப்படும்படி அவர்களுக்கு நன்மை செய்துவிடுவது எனக் கூறுகிறது.
  • 315 ஆம்குறள் பிறர் உறும் இன்னாதவற்றைத் தன்துன்பம் போலக் கருதாத இடத்து அறிவினால் அடையக்கூடியது இருக்கிறதா என்ன? எனக் கேட்கிறது.
  • 316 ஆம்குறள் கொடுமையானவை எனத் தான் அறிந்தவற்றைப் பிறர்க்குச் செய்யாமல் இருக்க வேண்டும் எனச் சொல்கிறது.
  • 317 ஆம்குறள் எவ்வகையாலும் எக்காலத்தும் எவர்க்கும் கொடியவற்றை மனத்தாலும் செய்ய நினையாதிருத்தல் தலைசிறந்தது என்கிறது.
  • 318 ஆம்குறள் தன்னுயிர்க்குத் துன்பம் தருதலை உணர்பவன் பிற உயிர்க்குத் தீங்கைச் செய்தல் என்னத்துக்காக? என வினவுகிறது.
  • 319 ஆம்குறள் ஒருவர் பிறர்க்கு ஒருபொழுது கொடுமை செய்தால் அவர்க்கு மறுபொழுது துன்பம் தானேவரும் எனக் கூறுகிறது.
  • 320 ஆவதுகுறள் தாம் செய்த துன்பங்களெல்லாம் தம்மையே வந்து சேரும்; தமக்குத் துன்பம் வரக்கூடாது என்று விரும்புகிறவர்கள் பிறருக்குத் துன்பம் செய்யார் என்கிறது.

இன்னாசெய்யாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

'திருக்குறளின் சிறப்பை, உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரும் தத்துவ அறிஞருமான டால்ஸ்டாய் கி பி 1906-இல் எழுதிய கட்டுரையில் இருந்து உணர்ந்து, அதைப் படிக்கத் தொடங்கினார் காந்தியடிகள். அந்தக் கட்டுரையில் டால்ஸ்டாய் தம்முடைய உள்ளத்தைக் கவர்ந்ததாக 'இன்னா செய்யாமை' அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ஆறு குறட்பாக்களை (311, 313, 312, 314, 315, 319 ) மேற்கோளாகக் காட்டியுள்ளார். டால்ஸ்டாயின் கட்டுரையில் இருந்தே காந்தியடிகள் திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அதனைப் படிக்கத் தொடங்கினார்' என்பார் க த திருநாவுக்கரசு.
தாம் படித்த ஆறு குறட்பாக்களின் அடிப்படையிலேயே, டால்ஸ்டாய் தமது அகிம்சைக் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். அறப்போராட்டம் பற்றிய சிந்தனைக்கு இதுவே உரமூட்டியுள்ளது. காந்தியடிகள் இவற்றைக் கற்றதனால், இக்கோட்பாடு 'செய்முறை'களுக்கு உட்படுத்தப்பட்டு, வெற்றி காணப்பட்டது. இன்று உலகம் 'அகிம்சை'க் கோட்பாட்டை வியந்து போற்றுகிறது. உலகம் போற்றும் 'அறப் போராட்ட' நெறிக்குத் திருக்குறள் அடியெடுத்துக் கொடுத்தது என்ற உண்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது (தமிழண்ணல்).

குறளுக்கு மிகச்சிறப்புச் சேர்த்த குறள்களில் ஒன்று இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் (314) என்பது. இதன் பொருள்: ஒருவன் உனக்குத் தீமை செய்தால் அவனைத் தண்டிக்கச் சிறந்த வழி என்னவென்றால் அவனுக்கு நன்மை செய்வதுதான்; அது அவனை வெட்கப்படுத்தும். தனக்கு இன்னாத செய்தவர்களை ஒருவன் மன்னித்து விட்டுவிட வேண்டுவதில்லை.மாறாகத் தண்டிப்பது தேவைதான். ஆனால் அத்தண்டனை அவனுக்குத் திருப்பித் துன்பம் செய்யுமாறு அமைதல் தகாது. இன்னா செய்த அவரே, தன் செயலுக்கு வருந்தி நாணமடையும் வகையில், அவருக்கு நேர்மையின் பாற்பட்டவற்றைத் திருப்பிச் செய்துவிட வேண்டும். அதுவே அவருக்கு மிகப்பெரிய தண்டனை. உலகத்து மற்ற அறநூலார் கூறாத ஒரு புதிய தண்டனை முறையை நமது வள்ளுவர் இங்கு கூறியுள்ளார்.

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும் (319) என்ற பாடல் இன்னாசெய்தவன் தப்பித்துச் சென்றுவிடமுடியாது; இன்றில்லாவிட்டாலும் விரைவில் அவன் தானாகவே துன்பம் உறுவான் என்கிறது. இதன் கருத்திற்காகவும் முற்பகல்-பிற்பகல் என்ற சொல்நடைக்காகவும் பின்வந்த கவிஞர்களும் இவற்றை எடுத்தாண்டனர்.




குறள் திறன்-0311 குறள் திறன்-0312 குறள் திறன்-0313 குறள் திறன்-0314 குறள் திறன்-0315
குறள் திறன்-0316 குறள் திறன்-0317 குறள் திறன்-0318 குறள் திறன்-0319 குறள் திறன்-320