இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0318



தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்

(அதிகாரம்:இன்னாசெய்யாமை குறள் எண்:318)

பொழிப்பு (மு வரதராசன்): தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாலோ?

மணக்குடவர் உரை: தன்னுயிர்க்கு உற்ற இன்னாமையை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ?

பரிமேலழகர் உரை: தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்: மன் உயிர்க்கு இன்னா செயல்என் கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்?
(இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப்பாவம் கழுவப்படாமையின், 'இன்னாதான் யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும் அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பது தோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: பிறர் செய்யும் தீங்குகள் தனக்குத் துன்பம் தருகின்றமையை அறிகின்றவன், பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தால்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் மன்னுயிர்க்கு இன்னா செயல் என்கொலோ?.

பதவுரை: தன்-தனது; உயிர்க்கு-உயிருக்கு; இன்னாமை-தீங்கு; தான்-தான்; அறிவான்-தெரிபவன்; என்-யாது? கொலோ- (ஐயம்) மன்-நிலைபேறு; உயிர்க்கு-உயிருக்கு இன்னா-தீயவை; செயல்-செய்தல்.


தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னுயிர்க்கு உற்ற இன்னாமையை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன்;
பரிப்பெருமாள்: தன்னுயிர்க்கு உற்ற இன்னாமை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றி அறியுமவன்;
பரிதி: தன் ஆத்மாவுக்குப் பொல்லாங்கு வருகின்ற போது தான் விதனப்படானோ?
காலிங்கர்: தனதுயிர்க்குச் சில இன்னாதனவற்றைத் தான் அறிந்து ஒழுகுவான்;
பரிமேலழகர்: பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்;

'தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னுயிர்க்குப் பிடிக்காது என்ற தீமையை', 'பிறர் செய்யும் தீமை தன்னுயிர்க்குத் துன்பம் செய்தலை உணர்பவன்', 'தனக்குத் துன்பம் தருவது எது என்பதைத் தானே அறிந்து அதை விலக்க விரும்புகின்றவன்', 'பிறர் செய்யும் தீங்குகள் தன் உயிருக்குத் துன்பம் பயப்பதை உணர்கின்றவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன்னுயிர்க்குத் துன்பம் தருதலை உணர்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.

என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ?
பரிப்பெருமாள்: பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதனைக் கருதியோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: மேலறிவுடையார் செய்யாரென்றார்; அதனானே அறிவிலாதார்க்குச் செய்யலாம் போலப்பட்டது நோக்கி உயிருடையார் செய்யார் என்றது.
பரிதி: அப்படியே, தான் ஒருத்தருக்கும் பொல்லாங்கு செய்யக் கடவனல்லன் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று உலகத்துப் பிறந்து இறந்து இங்ஙனம் [நிலைபெற்று] வருகின்ற உயிர்கட்குத்தான் இன்னாதன செய்யுஞ் செயல் என்னை கொல்லோ என்றவாறு.
பரிமேலழகர்: நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்?
பரிமேலழகர் குறிப்புரை: இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப்பாவம் கழுவப்படாமையின், 'இன்னாதான் யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும் அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பது தோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.

'பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறவுயிர்க்கு ஏன் செய்கின்றான்?', 'பிற உயிர்க்குத் தீங்கிழைத்தல் என்ன காரணத்தால்?', 'பிறருக்குத் துன்பம் செய்வது என்ன காரணத்தாலோ தெரியவில்லை', 'மற்ற உயிர்கட்குத் தான் தீங்கு செய்தல் எதனால் என்க?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிற உயிர்க்குத் தீங்கைச் செய்தல் என்னத்துக்காக? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன்உயிர்க்கு இன்னாமை தருதலை உணர்பவன் பிற உயிர்க்குத் தீங்கைச் செய்தல் என்னத்துக்காக? என்பது பாடலின் பொருள்.
'உயிர்க்கு இன்னாமை' குறிப்பது என்ன?

கொடுமையின் துன்பத்தை உணர்ந்தும் இன்னா செய்கின்றார்களே, ஏன்?

தன் உயிருக்குப் பிறனால் ஊறு விளைவிக்கப்படும்போது ஒருவன் துயரத்தை உணர்கிறான். அப்படியிருக்கும்போது தான் மற்ற உயிர்க்கு அத்தீங்கு செய்ய அவனுக்கு எப்படி மனது வருகிறது?
உயிர் உள்ளவரை உயிர்களுக்கு உணர்வுகள் இருக்கும். உயிர்களுக்குத் தீங்கு செய்யப்படும்போது அதன் துயரத்தை அவை உணரும். மாந்தர் செய்யும் கொடுமையைக் கண்டு வருந்திய வள்ளுவர். ஒருவர் தமக்கு பிறரால் துன்பம் வந்து, அதன் வருத்தத்தை உணர்ந்த பின்னும் அத்தீமையை பிறருக்குச் செய்யக்கூடாது என்று ஏன் நினைப்பதில்லை என வியக்கிறார்.
மன்னுயிரைத் தன்னுயிராக நினைக்க வேண்டும் என்பதும் அறிவுறுத்தப்படுகிறது.

தம்மை மற்றவர்கள் நிலையில் வைத்துப் பார்க்குமாறு முன்னர் கூறப்பட்டது. தனக்குத் துன்பம் தருவதைப் பட்டறிவினால் உணர்ந்த ஒருவன் அச்செயல்களைப் பிறரிடத்து ஏன் செய்கிறான் என்று இங்கு வினவப்படுகிறது.
பிறர் தன்னிடம் கூறும் இன்சொல் தனக்கு இனிமை பயப்பதை உணரும் ஒருவன் பிறரிடத்து வன்சொல் வழங்குவது ஏன் என வள்ளுவர் பிறிதோரிடத்தில் வினவினார் வள்ளுவர். இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. (இனியவை கூறல் 99 பொருள்: இன்சொற்கள் இன்பம் உண்டாக்குவதை அனுபவித்துக் கொண்டிருப்பவன் கடுஞ்சொற்களைப் பேசுவது எதனாலோ?) என்பது அக்குறட்பா.

'உயிர்க்கு இன்னாமை' குறிப்பது என்ன?

துன்ப அனுபவம் எல்லாவுயிர்க்கும் ஒன்றுதான். தன்னுயிர்க்குத் தீங்கானது மற்றவுயிர்க்கும் இன்னாதுதான். எதற்காக இன்னா செய்யப்படுகிறது? பயன் நோக்கிச் செய்தல். செற்றம் பற்றிச் செய்தல், சோர்வாற் செய்தல் என்னும் இன்னாச் செயல்களைப் பரிமேலழகர் குறிக்கிறார். மு கோவிந்தசாமி 'மன்னுயிர் என்றதால் ஓரறிவு முதல் ஐயறிவுகளும் தன்னுயிர் போலவே சமமான தன்மையன என்பதற்காம்' எனச் சொல்வார், மேலும் இவர் அறிவியல் சோதனைகளின் பொருட்டும் பிறவுயிர்களுக்கும் நாடுகளுக்கும் இன்னா செய்யாமை பற்றிப் பேசுகிறார். பிற வுயிர்களிடம் வருந்துமாறு வேலை வாங்குவதாம் எனவும் சொல்லப்படுகிறது.
உயிர்க்கு இன்னாமை என்றதால் இக்குறள் கொலைத் தொழிலில் ஈடுபடுவோர் பற்றியதாகலாம். கத்திக் குத்து வாங்கி அதன் துன்பத்தை உணர்ந்தவனே கத்தியை எடுத்துக்கொண்டு மற்றவர்க்கு இன்னா செய்யத் துணிகிறானே என வள்ளுவர் அக்கொடுமை கண்டு பதறிப் பாடுவதுபோல் தோன்றுகிறது.

தன்னுயிர்க்குத் துன்பம் தருதலை உணர்பவன் பிற உயிர்க்குத் தீங்கைச் செய்தல் என்னத்துக்காக? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உணர்வுள்ளவன் இன்னாசெய்யாமையைக் கடைப்பிடிப்பான்.

பொழிப்பு

தன்னுயிர்க்கு உண்டாகும் துன்பம் உணர்பவன் பிற உயிர்க்குத் தீங்கைச் செய்தல் என்னத்துக்காக?