இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0312



கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

(அதிகாரம்:இன்னாசெய்யாமை குறள் எண்:312)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

மணக்குடவர் உரை: தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,

பரிமேலழகர் உரை: கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு.
(இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.)

குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவன் தன் மேல் கறுவு கொண்டு தீயவை செய்தாலும் அதற்குத் திருப்பி அவனுக்குத் தீமையைச் செய்யாதிருத்தல் குற்றமற்றவர்களின் கொள்கையாகும். பழி வாங்குதல் தொடருமெனில் ஒரு முடிவே இல்லாமல் அழிவே ஏற்படும் என்பதால் குற்றமற்றவர்கள் பழிவாங்குதலை விரும்ப மாட்டார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.

பதவுரை: கறுத்து-கடுமையாகச் சினந்து; இன்னா-தீங்குகள்; செய்தஅக்கண்ணும்-செய்தவிடத்தும், செய்தவற்கண்ணும்-செய்தவன்மாட்டும்; மறுத்து-எதிர்; இன்னா-தீங்குகள்; செய்யாமை-செய்யாதிருத்தல்; மாசற்றார்-குற்றமற்றவர்; கோள்-கொள்கை.


கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்(‘செய்தவற் கண்ணும்’ பாடம்): தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும்;
பரிப்பெருமாள்(‘செய்தவற் கண்ணும்’ பாடம்): தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும்;
பரிதி: தனக்கு ஒருவர் மனங்கன்றப் பொல்லாங்கு செய்தால்;
காலிங்கர்(‘செய்தவர் கண்ணும்’ பாடம்): ஒருவர் தம்மாட்டுச் சினந்து இன்னாதனவற்றைச் செய்தவர்மாட்டும்;
காலிங்கர் குறிப்புரை: கறுத்து என்பது சினந்து என்றவாறு,
பரிமேலழகர்: தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும்;

'தாம்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். மற்றவர்கள் 'ஒருவர் தம்மாட்டுச் சினந்து இன்னாதனவற்றைச் செய்த இடத்தும்' எனப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கருவன் கொண்டு துன்புறுத்தினும்', 'சினந்து தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும்', 'ஒருவன் பகைமை கொண்டு தமக்குத் தீங்கு செய்துவிட்டாலும்', 'சீற்றம் கொண்டு தமக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்தாலும் திரும்பத் தாம், அவ்வாறு செய்தவர்க்குத் துன்பம் தருவன செய்யாமல் இருத்தல் குற்றமற்ற பெரியோர்களின் துணிவாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கடும்சீற்றம்கொண்டு தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,
பரிப்பெருமாள்: தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு,
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற் பொதுவாக இன்னா செய்யற்க என்றார்; இது காரணமுண்டாக இன்னாசெய்தவற்கு மாறாக இன்னா செய்தலைத் தவிர வேண்டும் என்றது.
பரிதி: அவனுக்குத் தான் பொல்லாங்கு செய்யாமை இருப்பது நல்லோர் கொள்கை.
காலிங்கர்: தாம் பெயர்த்து அவர்க்கு இன்னாதன செய்யாமை உள்ளழுக்கற்ற (உணர்வுடைய) துறவோரது கோட்பாடு என்றவாறு.
பரிமேலழகர்: மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு.
பரிமேலழகர் குறிப்புரை: இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.

'தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு/துணிவு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திரும்பத் துன்பம் செய்யாமையே தூயவர் நோக்கம்', 'திருப்பி அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் மனக்குற்றம் நீங்கிய நல்லோர் கோட்பாடு', 'அவனுக்குக்கூட, திருப்பித் தீங்கு செய்யாதிருப்பது குற்றமற்ற தூய மனமுடையவர்களின் கொள்கை', ' ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

திரும்ப அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் குற்றமற்ற மனத்தோர் கொள்கை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கறுத்து தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும் திரும்ப அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் குற்றமற்ற மனத்தோர் கொள்கை என்பது பாடலின் பொருள்.
'கறுத்து' என்ற சொல்லின் பொருள் என்ன?

மனவைரத்துடன் ஒருவர் தீங்கு செய்தாலும் அவர்க்கு எதிராகத் தீமை செய்யாமல் இருப்பது மனமாசற்றவர் கொள்கையாம்.

மனதுள் நீண்டகாலம் வஞ்சம் கொண்டு ஒருவன் தமக்குத் துன்பம் பல தொடர்ந்து செய்தபோதிலும் பதில் தீங்கு செய்யாமலிருத்தலே குற்றமற்ற நல்லோரது கொள்கையாகும்.
தணியாத சினம் கொண்டு ஒருவன் தீமைகள் பல செய்துகொண்டிருந்தாலும், மன அழுக்கற்ற நல்லவர்கள், அவனுக்கு எதிர் தீங்குகள் செய்யாமாட்டார்கள் ; இதை அவர்கள் தங்கள் கொள்கையாகக் கடைப்பிடிப்பர். தங்கள் தற்காப்புக்காவும் இன்னா செய்யார் என்பது குறிப்பு. மற்றவர்க்குத் துன்பம் செய்யக்கூடாது என்பது மட்டுமன்றி, தனக்குக் கொடுமைகளைச் செய்தவருக்குக் கூட எத்தகைய தீங்கையும் செய்தல் ஆகாது என்பது வற்புறுத்தப்படுகிறது.
பிறருக்குத் துன்பம் செய்யாமல் வாழ்வோர் உலகில் பலர் உண்டு. ஆனால் அவர்களிலேயும் சிலர் பிறர் தமக்குத் தீங்கிழைக்கும்போது 'பழிக்குப் பழி' என்ற கறுவு நிலை எடுப்பவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் 'வலுச்சண்டைக்குப் போக மாட்டேன், ஆனால் வந்த சண்டையை விடமாட்டேன்' என்பவர்கள். இந்த நிலையில் உள்ளோரை நோக்கி 'மாசற்ற மனத்தார், கொடுந்துயர் செய்வோர்க்கும் எதிர்த்துன்பஞ் செய்யாதிருப்பதைக் கொள்கையாகக் கொள்வர்' எனச் சொல்லி யாவரும் 'மறு தீங்கு' செய்யவேண்டாம் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் (தீவினையச்சம் 203 பொருள்: கொடிய செயல்களைத் தம்மை வருத்தியவரிடத்தும் செய்யாதொழிதல், அறிவுடைமை எல்லாவற்றுள்ளும் சிறந்தது என்று சொல்வர்) என்ற குறள் இப்பாடற் கருத்தையொத்ததை வேறொரு சூழலில் சொல்கிறது.

இப்பாடலில் பரிமேலழகர் கொண்ட 'செய்த அக் கண்ணும்’ என்றதற்கு மணக்குடவர் ‘செய்தவற் கண்ணும்’ என்றும் காலிங்கர் ‘செய்தவர் கண்ணும்’ என்றும் பாடம் கொண்டனர். 'செய்த அக் கண்ணும்’ என்ற பரிமேலழகர் பாடத்தை 'அகரச் சுட்டு வேண்டாத தொன்று ஆகலானும் ‘மறுத்து’ எனக் குறளில் பின்னர்க் கூறுதலானும் பொருந்தாது' எனப் பொருந்த மறுத்து 'முந்திய மணக்குடவர் போன்றோர் பாடமே வள்ளுவர் பாடம்' எனக் கூறுவார் வ உ சிதம்பரம்.
'செய்தவர் மாட்டும்' எனப் பொருள் தரும் மணக்குடவர் பாடமே சிறந்தது.

'கறுத்து' என்ற சொல்லின் பொருள் என்ன?

'கறுத்து' என்ற சொல்லுக்கு வெகுண்டு, மனங்கன்ற, சினந்து, செற்றம் கொண்டு, கறுவுகொண்டு, கடுஞ்சீற்றம் கொண்டு, கருவன் கொண்டு, பகைமை கொண்டு, வெகுண்டெழுந்து, அறிவு கெட்டுப் போய், சினம்முற்றி, கருக்கட்டிக்கொண்டு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.

மணக்குடவரும் பரிப்பெருமாளும் இக்குறளுக்கான உரையில் 'தாம் செய்த குற்றத்தினால் சினந்து தனக்குத் தீமை செய்தவனிடத்தும்' எனச் சொல்கின்றனர். இவ்வுரை முன் செய்யப்பட்ட தீங்குக்குக் கறுவிக்கொண்டு பழி வாங்குதலைச் சொல்வதாக அமைந்துள்ளது. ஒரு காரணமுமின்றி சினந்து வருபவனைவிட, முன்பு தீமை செய்தவனிடம் உண்டாகும் சினம் கடுமையாகத்தான் இருக்கும். அக்கடுமையைக் காட்டவே கறுத்து என்ற சொல்லுக்கு பழிக்குப் பழி என்ற பொருளில் மணக்குடவர்/பரிப்பெருமாள் கூறினர் எனத் தோன்றுகிறது. 'மாசற்றார் கோள்' என்ற தொடர் இருப்பதால் மாசற்றார் முன்பு தீங்கு செய்தார் என்பது பொருந்தாது. எனவே எக்காரணமின்றியும் வெகுண்டு தனக்குத் தீங்கு செய்பவனுக்கு மறு தீங்கு செய்யவேண்டாம் என இப்பாடலுக்குப் பொருள் கொள்வது தகும்.

கறுத்து என்பதற்கு சினந்து என்ற பொருளிலேயே அனைவரும் உரை செய்தனர்.
இக்குறள் கறுவுகொண்டு துன்பம் செய்பவர்கள் பற்றிப் பேசுகிறது. கறுத்து இன்னா செய்தல் என்பதற்குப் பழிவாங்கும் எண்ணத்தில் சீற்றம் கொண்டு துன்பம் செய்தல், மனம் இருண்டு (கறுத்து) துன்பம் செய்தல் எனவும் பொருள் கூறினர். அவனைப் பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கறுவினான்/ கறுவிக்கொண்டு திரிகிறான் என்னும் பேச்சு வழக்கில் உள்ள பொருளிலேயே 'கறுத்து' ஆளப்பட்டது எனவும் கூறினர். 'கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்' என்னும் தொடரை 'முன்பகை காரணமாக மனத்திற்குள் வஞ்சம் வளர்த்து அப்பழிதீர்ப்பதற்காகச் சினந்து கொடுமை செய்தவரிடத்தும்' என விளக்கலாம்.

'கறுத்து' என்ற சொல்லுக்கு கடுஞ்சீற்றம் கொண்டு என்பது பொருள்.

கடும்சீற்றம்கொண்டு தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும் திரும்ப அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் குற்றமற்ற மனத்தோர் கொள்கை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

துன்பம் தந்தார்க்கும் இன்னாசெய்யாமை சிறந்த கொள்கை.

பொழிப்பு

கடுஞ்சினம் கொண்டு தமக்குத் தீங்கிழைத்தவரிடத்தும் திருப்பி அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் குற்றம் நீங்கிய உள்ளத்தார் கொள்கை