இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0316



இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்

(அதிகாரம்:இன்னாசெய்யாமை குறள் எண்:316)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

மணக்குடவர் உரை: தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும்.
இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: இன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும்.
(இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: தனக்குக் கொடியது எனப் பட்டதைத் தான் பிறர்க்குச் செய்ய விரும்பலாமா?


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்னா எனத்தான் உணர்ந்தவை பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும்.

பதவுரை: இன்னா-தீங்குகள்; என-என்று; தான்-தான்; உணர்ந்தவை-அறிந்தவை; துன்னாமை-மேவாமை; வேண்டும்-வேண்டும்; பிறன்கண்-மற்றவனிடத்து; செயல்-செய்தல்.


இன்னா எனத்தான் உணர்ந்தவை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றை;
பரிப்பெருமாள்: தான் இன்னாதனவென்று அறிந்தவற்றை;
பரிதி: தன் மனத்திற்குப் பொருந்தாத பொல்லாங்கு;
காலிங்கர்: ஒருவன் தனக்கு இன்னாதன எனத் தான் அறிந்தனவற்றை;
பரிமேலழகர்: இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை;
பரிமேலழகர் குறிப்புரை: இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.

'தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவை துன்பம் தருவன எனத் தான் அறிந்து உணர்ந்த தீமைகளை', 'தீமை உண்டாக்கக் கூடியவை என்று தான் உணருகின்ற எதையும்', 'துன்பந்தருவன என்று தான் அறிந்தவற்றை', 'துன்பம் தருவன என்று தான் அறிந்தனவற்றை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொடுமையானவை எனத் தான் அறிந்தவற்றை என்பது இப்பகுதியின் பொருள்.

துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.
பரிதி: தனக்கு வேண்டாதார்க்கும் செய்வானல்லன் என்றவாறு.
காலிங்கர்: பிறர்மாட்டுச் செய்தலை அடையாமை வேண்டும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: துன்னாமை என்பது அடையாமை என்றவாறு.
பரிமேலழகர்: பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும்.

'பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறனிடத்துச் செய்தல் கூடாது', 'இன்னொருவருக்குச் செய்துவிடாமல் இருக்க வேண்டும்', '(தவஞ்செய்வான்) பிறர்க்குச் செய்தலை மனத்தில் கருதாதிருத்தல் வேண்டும்', 'பிறனுக்குச் செய்யாமல் இருத்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறனிடத்துச் செய்தலை அடையாமை வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொடுமையானவை எனத் தான் அறிந்தவற்றைப் பிறனிடத்துச் செய்தலைத் துன்னாமை வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'துன்னாமை' என்ற சொல்லின் பொருள் என்ன?

இது தீங்கானது என்று ஒன்றைத் தெரிந்தால் அதைப் பிறர்க்குச் செய்யாதே!

இவை உயிர்களுக்குத் துன்பத்தைத் தருவன என அறிந்து கொண்ட செயல்களை ஒருவன் மற்றவனுக்குச் செய்ய நினையாமல் இருத்தல் வேண்டும்.
தனக்குத் தாமே சில நடைமுறைகளை வகுத்துக்கொண்டு சிலர் ஒழுகுவர். பிறர் தம்மிடம் எப்படி நடந்து கொண்டாலும் ஏற்றுக்கொள்வது இன்னொருவகை நடைமுறை. மனித உள்ளம் பிறர்தன்னிடம் அன்புகாட்டுதலையும், இன்சொல் கூறுதலையும், உதவி செய்தலையும் விரும்பும். தான் இகழப்படுதல், சினப்படுதல், ஏமாற்றப்படுதல், தண்டிக்கப்படுதல், தன் உடைமை களவாடப்படுதல் போன்றவற்றை செயல்களை அவ்வுள்ளம் ஏற்பதில்லை.
தீச்செயல் அல்லது கொடுமையான செயல் எது என்பதில் தெளிவில்லாமல் போகலாம். பிறரை இழிவாகப் பேசிவிட்டு, பிறர் மனம் புண்படும் செயல்களைச் செய்துவிட்டு, தாம் எதுவும் தீங்கு செய்யாததாகவே உலகில் பலர் நினைக்கின்றனர். துன்பம் தரும் தீயவை எவை என்பதை எப்படி அறிவது? துன்பம் என்பது உயிர்க்குணம். எல்லாத் துன்பமும் காட்சி அளவையான் அறியப்படா. பல கருதல் அளவையால் உணரப்படுவன. பட்டறிவாலும் உணர்வினாலும் தீச்செயல்கள் உள்ளமை அறியப்படுவதால் 'உணர்ந்தவை' என்று சொல்லப்பட்டது.
பிறனால் நாம் இழித்துப்பேசப்பட்டால், நம் நெஞ்சம் பொறுப்பதில்லை; துன்பத்தை உணர்கிறோம். அவ்வாறெனில், அது தீங்கான செயல் ஆகிறது. பிறரால் உனக்குச் செய்யப்படுவன துன்பம் தருவதாக எவற்றை உணர்கிறாயோ, எவை உனக்கு மனவருத்தத்தை உண்டாக்குகின்றனவோ, அவையெல்லாம் இன்னாச் செயல்களாம். தீங்கு பயக்கும் அத்தகைய செயல்கள் பக்கம் நெருங்கவேண்டாம் அதாவது எண்ணிக்கூடப் பார்க்கவேண்டாம் என அறிவுறுத்துகிறது இப்பாடல். இன்னொருவகையில் சொல்வதானால், மற்றவர் தன்னிடம் எவ்வழி நடக்க வேண்டும் என ஒருவன் கருதுகிறானோ; அவ்வழி அவனும் உலகோர் மாட்டு நடந்துகொள்ளவேண்டும். அது இன்னாசெய்வதைத் துன்னும்.

'வேண்டும்' என்ற சொல் கடமையாகவே பின்பற்ற வேண்டும் என்ற நிலையில் அறச் செயல் வலியுறுத்தப்பட்டதைக் குறிக்கும்.

'துன்னாமை' என்ற சொல்லின் பொருள் என்ன?

'துன்னாமை' என்ற சொல்லுக்கு மேவாமை, செய்வானல்லன், அடையாமை, தவிர்க்க, பொருந்தாமை, செய்யாதிருத்தல், விரும்பாமை, செய்துவிடாமல் இருத்தல், மனத்தளவால் கூட நினையாதிருத்தல், மனத்தில் கருதாதிருத்தல், செய்யாமல் இருத்தல், (செய்யும்) முயற்சியில் ஈடுபடாமல் இருத்தல், நெருங்காமை என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'தீங்கு செய்யும் என்று உணர்ந்தபின் அப்படிப்பட்ட எதையும் ('துன்னாமை') நெருங்காமை வேண்டும் என்பதனால் மனத்தாலும் வாக்காலும் செயலாலும் செய்யாதிருக்க வேண்டும்' என்பது இக்குறளுக்கான நாமக்கல் இராமலிங்கம் தரும் விளக்கம்.
ஒரு செயல் இன்னாது என்று தெரிந்தபின் அச்செயலின் பக்கமே நெருங்கிச் செல்லவேண்டாம் என்பது கருத்து.
........துன்னற்க தீவினைப் பால்(தீவினையச்சம் 209 பொருள்: ...... ஒரு சிறுதும் தீய செயல்களின் பக்கம் செல்லாதே) என்று துன்னுதல் குறளில் மற்றோர் இடத்திலும் பயிலப்பட்டது.

'துன்னாமை' என்ற சொல் நெருங்காமை என்ற பொருள் தரும்.

கொடுமையானவை எனத் தான் அறிந்தவற்றைப் பிறனிடத்துச் செய்தலை அடையாமை வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தன்னைச் சான்றாக வைத்து இன்னாசெய்யாமை பயிலலாம்.

பொழிப்பு

கொடுமையானவை எனத் தனக்குப் பட்டவற்றைப் பிறர்க்குச் செய்ய விரும்பாமல் இருக்க வேண்டும்.