இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0315



அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை

(அதிகாரம்:இன்னாசெய்யாமை குறள் எண்:315)

பொழிப்பு (மு வரதராசன்): மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?

மணக்குடவர் உரை: பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது.
இஃது அறிவுடையார் செய்யார் என்றது.

பரிமேலழகர் உரை: அறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ, பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவா இடத்து?
(குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறிணைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், அது 'செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனால் சோர்வால் செய்தல் விலக்கப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பிறர் துன்பத்தைத் தந்துன்பம் போலக் கருதாத இடத்து அறிவினால் என்ன பயன்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை அறிவினான் ஆகுவது உண்டோ?

பதவுரை: அறிவினான்-அறிவினால்; ஆகுவது-ஆதல்; உண்டோ-உளதோ; பிறிதின்-மற்றதனுடைய; நோய்-துன்பம்; தம்-தமது; நோய்-துயரம்; போல்-போல; போற்றாக்கடை-காவாவிடத்து.


அறிவினான் ஆகுவது உண்டோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது;
பரிப்பெருமாள்: அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது.
பரிதி: அறிவென்னும் பொருளைக் கொண்டிருக்க வல்லவன்;
காலிங்கர்: தம் அறிவினால் மேலோவதோர் ஆக்கம் உண்டோ; எனவே அஃது இல்லை;
பரிமேலழகர்: துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ,

'அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவினால் என்ன பயன்?', 'தாம் பெற்ற அறிவினால் வரும் பயன் உண்டோ?', 'அறிவினால் அடையக்கூடிய பயன் என்ன? -ஒன்றுமில்லை', 'பொருள்களை உள்ளவாறு அறிந்த அறிவால் உண்டாகக் கூடிய பயன் யாது?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறிவினால் அடையக்கூடியது இருக்கிறதா என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.

பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து,
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறிவுடையார் செய்யார் என்றது.
பரிப்பெருமாள்: பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து,
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறிவுடையார் செய்யார் என்றது.
பரிதி: பிறர் நோவையும் தன்நோவு என்று போற்றுவானாகில் அவன் கேடிலாத கதியினை அடைவன் என்றவாறு.
காலிங்கர்: துறவு நெறி ஒழுக்கமுடைய துய்ய அறிவினர் பிறிதுயிர்க்கு வருவதோர் இடரையும் தமது இடர்போலத் தேர்ந்து குறிக்கொள்ளாதவிடத்து;.
பரிமேலழகர்: பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவா இடத்து?
பரிமேலழகர் குறிப்புரை: குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறிணைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், அது 'செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனால் சோர்வால் செய்தல் விலக்கப்பட்டது.

பிறிதோர் உயிர்க்கு வரும் நோயை/நோவை/இடரை/ இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவா இடத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் துன்பத்தைத் தந்துன்பம் போலக் கருதாத இடத்து', 'பிறிதோர் உயிர்க்கு வரும் துன்பங்களைத் தமக்கு வந்தனவாக நினைத்து அவற்றைப் போக்கிக் காப்பாற்றாவிட்டால்', 'இன்னொருவனுடைய துன்பங்களைத் தமக்கு வந்த துன்பங்களைப் போல் உணர்ந்து பார்க்க முடியாதவர்கள்', 'பிறிதோருயிரின் துன்பத்தைத் தமக்கு நேர்ந்த துன்பம்போலக் கருதி அதனைப் போக்காதவிடத்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறர் உறும் இன்னாதவற்றைத் தன்துன்பம் போலக் கருதாத இடத்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறஉயிர் உறும் இன்னாதவற்றைத் தம்துன்பம் போலப் போற்றாக் கடை அறிவினால் ஆகக்கூடியது இருக்கிறதா என்ன? என்பது பாடலின் பொருள்.
'போற்றாக் கடை' என்ற தொடர் குறிப்பது என்ன?

ஒரு உயிர் மற்ற உயிருக்கு இன்னா செய்வதை உணர்ந்தும் அதைப் பொருட்படுத்தாமல் இருப்பது கடை அறிவாம்.

மற்ற உயிருக்கு நேரும் இன்னாதனவற்றைத் தமக்கு நேர்ந்த துன்பம் போல் எண்ணி அவ்வுயிரை மீட்காவிட்டால் உயிர்களின் இயல்பை அறிந்த அறிவினால் உண்டாகக்கூடிய பயன் என்ன இருக்கிறது?
தமக்கு அறிமுகமேயில்லாத யாரோ ஒருவர் மற்றொருவரால் கொடுமைப்படுத்தப்படுவது கண்டு எல்லோருமே இரக்கப்படுவர். அதுபோலவே ஒரு விலங்கு, பறவை அல்லது எந்த உயிரானாலும் தீங்குக்கு உட்பட்டால் வருந்துவர். இது பொதுவான மாந்தர் குணம். வலியவர் எளியவரைக் கண்டால் அவருக்கு அச்சம் உண்டாக்கவும், துயர் தரவும், இழிவு ஏற்படுத்தவும், அவரை எளிமைப் படுத்தவும் செய்வர். இயல்பான அறிவுடையோர், இத்தகைய இன்னாச் செயலை வறிதே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் அவ்வுயிர் உறும் துன்பத்தைத் தனக்கு உண்டான துயர் என்றெண்ணி, இன்னா செய்யப்பட்டார்க்கு உதவி செய்ய விரைவர். அவ்வுயிரைக் கொடுமையிலிருந்து மீட்கவும் அதைப் போக்கவும் முயல்வர். உயிர்அன்பு போற்றுவது அறிவின் பயன்.
அறிவில்லாதவன்தான் அத்துயரைப் பொருட்படுத்தாமல் 'நமக்கென்ன ஆயிற்று' என்று விலகிச் செல்வான். மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பது மட்டுமன்றி அவைகளுக்குண்டாகும் கொடுமைகளிலிருந்து அவற்றைக் காக்கவும் வேண்டும்.

'பிறிதின்நோய்' என்பது வறுமை, நோய்த்துன்பம், போன்றவற்றையும் குறிக்கலாம் எனினும் இன்னா செய்யப்படுவதால் உண்டாகும் துயரமே இங்கு சொல்லப்படுகிறது எனக் கொள்வதே தகும்.
இக்குறளில் 'பிறரின்' என்றில்லாமல் 'பிறிதின்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால். பிற மனிதர்களின் நோயை மட்டுமல்ல பிற உயிர்களின் துன்பத்தையும் தம் நோய் போலப் போற்ற வேண்டும் என்றாகிறது.

இப்பாடலின் பின்பகுதியிலுள்ள 'பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை' என்பது போன்ற பகுதியை உள்ளடக்கிய கலித்தொகைப் பாடலில் சான்றவிர், வாழியோ! சான்றவிர்! என்றும் பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: (கலித்தொகை 139 பொருள்: நற்குணங்கள் எல்லாம் அமைந்தீர்! நற்குணங்களெல்லாம் அமைந்தீர்! நீர் வாழ்வீராக! பிறருடைய நோயும் தம்முடைய நோய்போலே எந்நாளும் பேணி அதனாற் பெறும் அறனை அறிந்து போதுதல் உலகத்துள்ள சான்றவர்க்கெல்லாம் முறைமையானால், நுமக்கும் அது முறைமையென்று கருதி நுமக்கொரு காரியத்தினைக் கூறுவேன்) 'பிறன் நோயும் தம் நோய்போல் போற்றி' என்ற தொடர் உள்ளது.

'போற்றாக் கடை' என்ற தொடர் குறிப்பது என்ன?

'போற்றாக் கடை' என்ற தொடர்க்குக் காவாதவிடத்து, தேர்ந்து குறிக்கொள்ளாதவிடத்து, குறிக்கொண்டு காவா இடத்து, காப்பாற்றாவிட்டால், காவாதுவிடின், கருதாத இடத்து, போக்கிக் காப்பாற்றாவிட்டால், மதிக்க முடியாத இடத்தில், உணர்ந்து பேணாவிட்டால், கருதிப் போக்காதவிடத்து, கருதித் தடுக்கா விடத்து, எண்ணி அந்த உயிரைக் காப்பாற்றாவிட்டால்,பாவிக்காவிட்டல், போக்க முயலாதபோது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதி அறிவுடை மக்கள் பிறருக்கோ பிறவுயிர்கட்கோ கொடுமை நேராமல் காத்துக் கொள்ள வேண்டும் என விதிக்கிறது இக்குறட்பா.
நாமக்கல் இராமலிங்கம் 'போற்றாக் கடை என்பதற்கு 'பாராட்டா விட்டால்' அதாவது 'பாவிக்காவிட்டால்' என்பதுதான் பொருள். பிறிதொரு உயிரின் நோயைத் தனக்கு வந்த நோய் போல் பாவித்தால் உடனே துன்பம் செய்யாமலிருக்க வேண்டிய உணர்ச்சியும் துன்பத்தை நீக்க உதவ வேண்டிய உபாயங்களும் அவனவன் சூழ்நிலைக்குத் தக்கபடி உண்டாகும்' என விளக்கம் தருவார்.

'போற்றாக் கடை' என்ற தொடர் இங்கு கருதாத இடத்து என்ற பொருள் தரும்.

பிறர் உறும் இன்னாதவற்றைத் தன்துன்பம் போலக் கருதாத இடத்து அறிவினால் அடையக்கூடியது இருக்கிறதா என்ன? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

எல்லா உயிர்க்கான இன்னாசெய்யாமையையும் பாராட்டுதல் அறிவுடைமை.

பொழிப்பு

பிறர் உறும் தீங்குகளைத் தன் துன்பம்போலக் கருதாவிட்டால் பெற்ற அறிவினால் ஆகக்கூடியது எதுவும் உள்ளதா?