இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0111 குறள் திறன்-0112 குறள் திறன்-0113 குறள் திறன்-0114 குறள் திறன்-0115
குறள் திறன்-0116 குறள் திறன்-0117 குறள் திறன்-0118 குறள் திறன்-0119 குறள் திறன்-0120

நடுவு, நிலைமை என்ற இரண்டும் ஒன்றையே குறிக்கும். வள்ளுவர் நோக்கிலே இஃது உணர்ச்சியோ பந்தமோ பாசமோ வெவ்வேறான திசையிலே இழுத்த போதிலும் நியாயம், நேர்மை, செம்மை, ஆகியவற்றிலிருந்து பிறழாமல் உண்மை என்று உணர்வதன்பால் நிர்றலையே குறிக்கும்
- மு மு இஸ்மாயில்

எப்பகுதியினரிடத்தும் ஒப்ப நடத்தல் நடுவுநிலையாகும். எல்லாத் துறையிலும் எல்லார்க்கும் வேண்டப்படும் பண்பு இது. கருத்து வேறுபாடுகளில் செல்வம் ஈட்டுவதில், அறம் கூறுதலில், என அனைத்து நிலைகளிலும் அன்றாட செயல்பாடுகளில் நடுவுநிலையைப் போற்றி நடத்தல் வேண்டும். வலியவன், எளியவன், வறியன். செல்வன், தாழ்ந்த நிலையிலுள்ளவன், உயர்ந்த நிலையிலுள்ளவன் நண்பன், பகைவன் என்றெல்லாம் பாகுபாடு கருதாது அனைவரிடத்தும் நடுநிலை பிறழாமல் ஒழுகுதல் வேண்டும். செய்ந்நன்றி அன்பு காரணமாகவும் நடுவு நிலை தவறக்கூடாது. தனிமனிதப் பண்பான நடுநிற்றல் சமுதாய வளன் என்ற பரப்பில் விரிவாக்கம் பெற்று அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பது வள்ளுவரின் எண்னம்...

நடுவுநிலைமை

நடுவுநிலைமை என்ற சொல் நடுநிற்றலின் தன்மை என்ற பொருள் தருகிறது.. நடுநிலை என்பது வழக்காற்றில் பல பொருள்களைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. சார்பு எடுக்காத நிலைமை, நேர்மை, சமரசம் செய்தல், என்பன அவற்றில் சில. யாரேனும் இருவருக்கிடையே கருத்து வேறுபாடோ முரண்பாடுடைய பூசலோ ஏற்படும்போது, அதில் குறுக்கிடாமல் யார் பக்கமும் சேராமல் ஒதுங்கி நிற்பதையும் நடுநிலை என்று சொல்கிறோம்.
குறள் கூறும் பொருளில் எல்லாச் செயல்களிலும் உள்ளார்ந்து நிற்கும் உயர் பண்பான நேர்மையே நடுநிலை எனப்படும். இது எல்லாத்துறையிலும் எல்லார்க்கும் இன்றியமையாது வேண்டப்பெறும் குணம் ஆகும்..வள்ளுவர் இதனைத் தகுதி என அழைக்கிறார். நடுவுநிலைமை என்பது செப்பம், ஒருபாற்சாராமை, உட்கோட்டம்இன்மை, நேர்மை, நியாய உணர்வு என்ற சொற்களாலும் அறியப்படும்.

வீட்டிலும் நாட்டிலும் உலக அள்விலும் நடுவு நிலைமை இன்றியமையாத தேவை ஆகும். .
ஒருவருடைய தனிவாழ்வில் தம் பெற்றோர் மனைவி, மக்கள், ,உடன்பிறந்தோர் ஆகியோருடன் உள்ள உறவின் அழுத்தத்திலுள்ள வேறுபாடு காரணமாக நடுநிலை பிறழாமல் நடந்து கொள்ளவேண்டும். ஒருவரது தாய்க்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு எற்படும் சமயங்களில் சார்புநிலை எடுக்காமல் உண்மை கண்டறிந்து ஒழுகுவது நடுநிலை காப்பது ஆகும்.
உதவி செய்தார்க்கு உதவவேண்டும் என்ற மனநிலை நடுநிலைமையுடன் நிற்பதற்குத் தடையாக அமைதல் கூடாது. (இது செய்ந்நன்றி அதிகாரத்துக்கு அடுத்து இவ்வதிகாரம் வைக்கப்பட்டதற்கான கார்ணம் என்று உரையாளர்கள் கூறுவர்.)
கேடும் பெருக்கமும் நடுநிலை தவறுவதற்கு ஊக்கமளிப்பதாக அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ந்ன்று செய்யுமாயினும் நடுநிலை தவறி கைய்யூட்டுப் பெறுதல் போன்றவற்றை வெறுத்து ஒதுக்க வேண்டும். செப்பமான வாழ்வு மேற்கொண்டவர் தாழ்ந்தாலும் அதை இழிவாக உலகோர் கருதார். நேர்மை வாழ்வு நடாத்தியவர்களை அவரது மறைவுக்குப் பின்னர் இன்னும் பெருமையாகப் பேசுவர். நீதியரசர்கள் துலாக்கோல் போல்- ஒரு பக்கம் சாராமல்- நேர் நின்று நீதி வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கும் நிலையில் இருப்போரது மனமும் நேர்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் சொற்களும் கோணலில்லாமல் வெளிவரும். வணிகர்கள் தம் ஆதாயம் ஒன்றை மட்டுமே கருதாமல் சமூக நலன் கருதிச் செயல்படவேண்டும் இவை இவ்வதிகாரச் செய்திகள்.

எல்லாத் துறையிலும் எல்லார்க்கும் வேண்டப்படும் பண்பானாலும், .சிறப்புக் கருதி, நடுநிலைமை சான்றோர், (நீதியரசர்கள்), வணிகர் ஆகியோர்க்குத் தனியாகக் கூறப்பட்டது.

நடுவுநிலைமை அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 111 ஆம்குறள் எப்பகுதியினரிடத்தும் நேர்மையாக நடந்து கொள்வதே ஒப்பற்ற நடுவுநிலைமை அறமாம் என்கிறது.
  • 112 ஆம்குறள் நடுநிலையோடு செயல்படுபவனது ஆக்கம் அவன் இறந்த பின்பும் நிலைத்து நிற்கும் எனச் சொல்கிறது.
  • 113 ஆம்குறள் நல்லது நேரினும், நேர்மையற்ற வழியில் செல்வம் சேர்ப்பதை கைவிடுக .என்பதைச் சொல்கிறது.
  • 114 ஆம்குறள் ஒருவர் நேர்மையாளராய் இருந்தாரா அல்லவா என்பது அவர் விட்டுச் செல்லும் புகழ், பழி என்னும் இவை சொல்லும் என்று சொல்கிறது.
  • 115 ஆம்குறள் கேடும் ஆக்கமும் இயற்கையின் பாற்பட்டது என உணர்ந்து நடுநிலை கோணாதிருத்தல் சால்புடையார்க்கு அழகாகும் என்கிறது.
  • 116 ஆம்குறள் நடுவுநிலைமை அல்லாதனவற்றைச் செய்ய நினைத்த போதே தான் கெடப்போகிறேன் என்பதை உணர வேண்டும் எனச் சொல்வது.
  • 117 ஆம்குறள் நேர்மையான வாழ்வைக் கடைப்பிடித்து அறநெறியில் நிற்பவன் அடையும் கேடு தாழ்வாகாது என்று சொல்கிறது.
  • 118 ஆம்குறள் ஒரு பக்கம் சாயாமல் துலாக்கோல் போல நடுநிலை கொள்வது சால்புடையார்க்கு அழகாகும் எனச் சொல்வது.
  • 119 ஆம்குறள் ஒருபால் உள்ளம் சாய்வு இல்லாமல் இருந்தால், நடுநின்ற சொற்கள் தெளிவாகவும் கோணாமலும் அமையும் என்பதைச் சொல்வது.
  • 120 ஆவதுகுறள் பிறர் பொருளையும் தமதே போல் பேணிச் செய்யும் நடுநிலை தவறாத வாணிகம் இன்னும் பெருக்கத்தை உண்டாக்கும் எனக் கூறுகிறது..

நடுவுநிலைமை அதிகாரச் சிறப்பியல்புகள்

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் (குறள் 113) என்ற பாடல் கையூட்டுப் பெறுதல போன்ற தவறான வழியில் பணம் தேடுவதைக் கண்டிக்கிறது. .

மனச்சான்றைத் தொடும் பாடலாக கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின் (குறள் 116) என்பது அமைகிறது.

தகுதி, செப்பம், தக்கார், தகவிலர், எச்சம், கோடாமை, இல்லல்ல, இல்லது, சீர்தூக்கும் கோல், சொற்கோட்டம், உட்கோட்டம், போன்ற சொற்கள் நினைவிற் கொள்ளத்தக்கனவாகும்.குறள் திறன்-0111 குறள் திறன்-0112 குறள் திறன்-0113 குறள் திறன்-0114 குறள் திறன்-0115
குறள் திறன்-0116 குறள் திறன்-0117 குறள் திறன்-0118 குறள் திறன்-0119 குறள் திறன்-0120