இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0114



தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்

(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:114)

பொழிப்பு (மு வரதராசன்): நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

மணக்குடவர் உரை: செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது அவரவர் ஆரவாரத்தொழிலினானே காணப்படும்.
இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை: தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும்.
(தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருடைய புகழ் அல்லது பழியால் அறியப்படும். (எச்சம் -இறந்த பின்னர் எஞ்சி நிற்பது புகழ் அல்லது பழி)


பொருள்கோள் வரிஅமைப்பு:
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

பதவுரை: தக்கார்-நடுநிலைமையுடையவர்; தகவு-நடுவு நிலைமை; இலர்-இல்லாதவர்; என்பது-என்று சொல்லப்படுவது; அவரவர்-அவரவர், ஒவ்வொருவரின்; எச்சத்தால்-எஞ்சுவதால்; காணப்படும்-அறியப்படும்.


தக்கார் தகவிலர் என்பது :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது; [செவ்வை உடையார் - செம்மை உடையார்]
பரிப்பெருமாள்: செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது;
பரிதி: போன சென்மத்திலும் இந்தச் சென்மத்திலும் நடுவு நிலைமை பெற்றவராம் என்று அறிக;
காலிங்கர்: இவர் நடுவுநிலைமையாளர் என்பதும் மற்று அஃது இல்லாதவர் என்பதும்;
பரிமேலழகர்: இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்;

'நடுவுநிலைமையாளர் என்பதும் மற்று அஃது இல்லாதவர் என்பதும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவர் நேர்மையர் நேர்மையற்றவர் என்பது', 'இவர் நடுவுநிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இல்லாதவர் என்பது', 'ஒருவன் நடுவுநிலைமை தவறாமல் இருந்தவனா அல்லவா என்பதை', 'ஒருவர் நடுவுநிலைமை உடையவர் அஃதில்லாதவர் என்பதை' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நடுவுநிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பது என்பது இப்பகுதியின் பொருள்.

அவரவர் எச்சத்தால் காணப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரவர் ஆரவாரத்தொழிலினானே காணப்படும்.
மணக்குடவர் குறிப்புரை: இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று.
பரிப்பெருமாள்: அவரவர் ஒழிபினானே காணப்படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஒழிபு- மக்கள் முதலாய பொருள்கள். கேடு வரும் என்றது என்னை? நடுவுநிலைமையை நீக்கி ஆக்கமுற்றாரும் உளரால் என்றார்க்கு அவ்வாக்கம் அவர்தம் அளவிலே நின்று வற்றுவது அல்லது மக்கட்குப் பயன்படாது என்பது கூறிற்று. [ஆக்கம் உற்றார் - செல்வம் உற்றார்; நின்று வற்றுவது - அழிவது]
பரிதி: அவரவர் புதல்வர் சற்குணத்தால் என்றவாறு. [சற்குணம் - நற்குணம்]
காலிங்கர்: அதனை அவரவர் ஒழுக்கத்தால் காணப்படும் என்றவாறு.
பரிமேலழகர்: அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். [உண்மையான் - இருத்தலான்]
பரிமேலழகர் குறிப்புரை: தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது. [தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் -நடுவுநிலைமை உடையோர்க்கு நல்ல பிள்ளைகள் உண்டாதலும்; தகவிலார்க்கு இல்லையாதலும் - நடுவுநிலைமை இல்லாதவர்களுக்கு நல்லபிள்ளைகள் இல்லையாதலும்; இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின - நடுவுநைலைமையுடையாரையும் அஃது இல்லாதாரையும் தெரிந்து கொள்ளுதற்கு அவரவர்களது நல்லபிள்ளைகள் இருத்தலும் துஷ்டபிள்ளைகள் இருத்தலும் அடையாளங்கள் ஆயின]

மணக்குடவர் இப்பகுதிக்கு 'ஆரவாரத்தொழிலினானே காணப்படும்' என்று பொருள் கூற பரிப்பெருமாள் 'ஒழிபினானே காணப்படும்' என்றார். பரிதி 'புதல்வர் நற்குணத்தால்' என்றார். காலிங்கர் 'அவரவர் ஒழுக்கத்தால் காணப்படும்' என உரை நல்கினார். பரிமேலழகர் 'நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும்' எனச் சொல்லித் 'தக்கார்க்கு நன்மக்கள் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் உறுதி' என விரிவுரையில் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரவர் வழியினரால் காணமுடியும்', 'அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் இகழாலும் அறியப்படும்', 'அவனுடைய சந்ததிகளில் கண்டு கொள்ளலாம் (ஓரவஞ்சனையால் வருகின்ற செல்வம் சந்ததியைக் கெடுத்து விடும்)', 'அவருக்கு நன்மக்களிருப்பதாலும் இல்லாததாலும் அறிந்து கொள்ளலாம். (அவர் புகழாலும் தெரிந்து கொள்ளலாம் என்பாரும் உளர்)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவரவர் இறப்பிற்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் அல்லது பழியால் அறியப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நடுவுநிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர் எச்சத்தால் அறியப்படும் என்பது பாடலின் பொருள்.
'எச்சத்தால்' என்றதன் பொருள் என்ன?

நடுநிலையாளர் மறைந்த பின்பும் நல்லவிதமாகப் பேசப்பட்டு நினைக்கப்படுவார்.

நடுவுநிலைமை கொண்டு ஒழுகியவர் மறைவுக்குப் பின்னும் அவரது புகழ் நிற்கும். நடுவுநிலைமை அல்லாதார் இறந்தபின் பழியே எஞ்சும்.
தக்கார் - தகவிலர் (தகவு+இலர்) என்பன பல்வேறு தகுதிகளையுணர்த்தும் பொதுச் சொல்லாயினும் அதிகாரம் நோக்கி இங்கு நடுவுநிலைமை உடையார் - நடுவுநிலைமை இல்லாதார் எனப் பொருள் கொள்வர். நடுவுநிலைமை உடையார் என்பது நடுவுநிலைமைஅற வழியில் ஒழுகுபவரைக் குறிக்கும். அது இல்லாதவர் செம்மையற்ற வழியில் செல்பவராவார்.
ஒருவர் நேர்மையாக நடந்து கொண்டாரா அல்லவா என்பதை அவர் மறைவுக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்சொல்லோ அல்லது பழிச் சொல்லோ தெரிவித்துவிடும். ஒருவர் அவரது நெருங்கிய தொடர்பு உடையார் மற்றும் நண்பர்கள், உறவினர், உலகோர் இவர்களிடம் எப்படி நடந்து கொண்டார்; எப்படிப் பொருள் சேர்த்தார் என்பனபற்றி அவர் மறைந்தபின் அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகவாகவும் பேசுவர்; அவர் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் சுடுகாடு/இடுகாடு ஆகிய இடங்களிலிலேயே அப்பேச்சு உளவாகும்; இறந்தபின் எவருடைய செல்வாக்குக்கும் அஞ்சாமல் பொதுமக்கள் அவரவர் உணர்ந்தவாறு அவரைப்பற்றிய உண்மையை உரைப்பார்கள். அவர்கள் சொற்களிலிருந்து அவர் நடுநிலையோடு இருந்தாரா அல்லவா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

நேர்மையாயிருந்தவர் எப்பொழுதும் பாராட்டிப் பேசப்படுவார். நேர்மை கோடியவர் வெறுப்புப் பேச்சுக்கு உள்ளாவர். நடுநிலை நீங்கி ஒழுகுகின்றவர்கள் செல்வமும் செல்வாக்கும் பெற்று வாழலாம்; அவற்றின் ஆற்றலால் நடுநிலை பிறழ்ந்ததை மறைக்கவும் முடியலாம். ஆயினும் பின்னால் ஒருசமயம் அவர் செய்த தவறுகள் வெளிப்பட்டே தீரும். அப்பொழுது அவர் வாழ்ந்த வாழ்க்கை வெளிச்சத்துக்கு வந்து இழிவடைவர். ஒருவர் உயிருடன் இருக்கும்போது பேசுவதைவிட இறந்த பிறகே, அவர் பின்பற்றிய நேர்மைக் குணம் போன்ற உயர் பண்புகளோ அல்லது நேர்மையற்ற குணங்களோ, உள்ளார்ந்தும் வெளிப்படையாகவும் பேசப்படும். ஆகவே நடுநிலையானவரா அல்லரா என்பது வாழும்போது முழுமையாக விளங்காவிட்டாலும், அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் இகழாலும் தெரியவரும்.

ஒருவர் வாழ்ந்து முடிந்த பின், அவர் விட்டுச்செல்வன அவருடைய நற்பண்புகளுக்காக உண்டான புகழ் அல்லது நேர்மையற்ற குணங்களால் வந்த பழிச்சொற்கள் இவைதாம். இவற்றினால் மறைந்தவரது தகுதி அறியப்படும் என்பது கருத்து.

'எச்சத்தால்' என்றதன் பொருள் என்ன?

எச்சம் என்னும் சொல்லுக்கு நேர் பொருள் மிச்சம் அல்லது எஞ்சி நிற்பது என்பது. இப்பாடலில் எச்சம் என்பது ஒருவர் உயிர்நீத்தபின்னர் அவருக்கு எஞ்சி நிற்பது பற்றியது. இறந்த பிறகு மிச்சமாகும். பொன் பொருள், புகழ், பிள்ளைகள் இவற்றை எஞ்சி நிற்பனவாகக் கூறமுடியும். இவற்றுள் இங்கு எச்சம் என்பதற்குப் புகழ் என்று பொருள் கொள்வது சிறக்கும்.
நடுவுநிலைமை கொண்டொழுகியோருக்குப் புகழ் நிற்கும். அல்லாதோர்க்குப் பழி மிஞ்சும் இவ்விரண்டு காட்சிகளையும் நாம் நாளும் பார்க்கிறோம்.

பரிப்பெருமாள் 'பிள்ளைகள் இறந்தவரது வழி வந்த செல்வம் உடையராயிருந்தால் நடுநிலையாளர், அத்தகைய ஆக்கம் இல்லாமலிருந்தால் நடுநிலை இல்லாதவர்' என்று உரை செய்துள்ளார். இவர் உரையின் பொருள் 'நடுவுநிலைமை யில்லாதாரின் எச்சம் அதாவது செல்வம் அவர்தம் மக்கட்கும் பயன்படாது' என்பது. மணக்குடவர் 'ஒருவன் நடுநிலைமை இல்லாதவனாயிருந்தால், அத்தகவின்மை அவன் பிள்ளைகளையும் பற்றும்' என்கிறார். பரிமேலழகர், நன்மக்கட்பேறு உள்ளவர், இல்லாதவர் என்றிவை மறைந்தவர் நடுவுநிலையாளராக இருந்தாரா என்பதை அறிய அடையாளமாயின என்றார். இது நல்லமக்களைப்பெற்றவர் தக்கார் என்றும் அப்பேறில்லாதவர் தகவிலர் என்றும் பொருள்படுவது. இக்கருத்தைப் பின்பற்றிப் பலரும் பிள்ளைகளே தந்தையின் குணநலன்களின் அடையாளங்கள் என்று சொல்லி, அவர்கள் நன்மக்களாய் இருந்தால் இறந்தவர் தக்கார் என்றும் நன்மக்கள் அல்லாராயிருந்தால் அவர் தகவிலர் என்றும் கூறினர். இவர்கள் கூற்றுப்படி ஒருவரது நேர்மைக் குணத்தை அறியச் செய்யும் அளவு கருவியாக பிள்ளைகளே இருக்கின்றனர் என்பது.
இன்றைய அறிவியல் சான்றுப்படி பெற்றோரின் குணநலன்கள் ஓரளவே மரபு வழி தோன்றும். மற்றப்படி, குழந்தைகள் பெறும், கல்வி, வளரும் முறை, சுற்றுச் சூழல்கள் போன்றவையே ஒருவருடைய பண்புகளைத் தீர்மானிக்கும்.
நன்மக்கட்பேறு வாய்ப்பதற்குத் தந்தை தக்காராக இருக்க வேண்டும் என்பது காரணமாக இருப்பதில்லை. நல்ல குழந்தைகளைப் பெறாதார் பலர் நடுவுநிலைமையுடையவராக இருக்கிறார்கள், நடுவுநிலைமையில்லாதவர்கட்கு குணங்கொண்ட குழந்தைகள் இருக்கின்றன. தக்கார்க்கு அறம் பேணாத மக்களும் தகவிலார்க்கு நல்ல மக்களும் பிறத்தலும் உண்டு என்பதும் உலகம் அறிந்ததே.
எனவே எச்சம் என்பது பிள்ளைகள் குறித்தது என்பது இப்பாடலுக்குப் பொருந்தி வரவில்லை.

'எச்சம்' என்னும் சொல்லுக்குப் புகழ் அதாவது நற்செயல்களால் ஒருவர் விட்டுச் செல்லும் நற்பெயர் என்னும் பொருளே இங்கு பொருந்தும். ஒருவர் இறந்தபின் நிற்கும் புகழை- நற்பெயரை- எச்சம் என்று வள்ளுவர் கருதுவதை ...... இசையென்னும் எச்சம்.... (புகழ் 238 [பொருள்:....எஞ்சி நிற்பதாய புகழ்.....) என்ற தொடரில் 'புகழ் என்னும் எச்சம்' என்று புகழும் எச்சமாகக் கருதப்படும் எனச் சொல்லப்படுவதால் அறியலாம்.
உட்கோட்டம் இல்லாமல் வாழ்ந்தவன் புகழ் அவன் இறந்தபின்னும் நிலைத்து நிற்கும். எனவே எச்சத்தால் என்பது இப்பாடலில் நடுநிற்றலைக் குறித்தது.

'எச்சத்தால்' என்ற சொல்லிற்கு, 'விட்டுச் சென்ற புகழால் அல்லது பழியால்' என்பது பொருள்.

நடுவுநிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர் இறப்பிற்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் அல்லது பழியால் அறியப்படும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒருவரது உண்மையான நடுவுநிலைமைப் பண்பு அவரது சாவுக்குப்பின் நன்கு வெளிப்படும்.

பொழிப்பு

நடுவுநிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் இகழாலும் அறியப்படும்.