கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்
(அதிகாரம்: நடுவுநிலைமை
குறள் எண்:116)
பொழிப்பு: தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கி நினைக்குமாயின், 'நான் கெடப்போகின்றேன்' என்று ஒருவன் அறிய வேண்டும்
|
மணக்குடவர் உரை:
தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.
பரிமேலழகர் உரை:
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக - அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக.
(நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.)
நாமக்கல் கவிஞர் உரை:
(நடுவு நிலைமை தவறக் கூடாது என்பதை ஒருவனுடைய மனச்சாட்சியே சொல்லும்.) ஒருவன் நடுவுநிலைமை தவறிப் பாரபட்சமாக ஒரு தீர்ப்புச் சொல்ல நினைக்கும்போது அவனுடைய மனச்சாட்சி நான் கெடப்போவேன் என்று எச்சரிக்கும். அதை அறிய வேண்டும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின், யான் கெடுவல் என்பது அறிக.
|
கெடுவல்யான் என்பது அறிக:
பதவுரை: கெடுவல்-அழியக்கடவேன்; யான்-நான்; என்பது-என்று; அறிக-தெரிந்து கொள்க.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எனக்குக் கேடு வருமென்று தானே யறிக
பரிப்பெருமாள்: எனக்குக் கேடு வருமென்று தானே யறிக
பரிதியார்: தன்னெஞ்சம் நடுவு நிலைமையை விட்டால் அப்போதே தனக்கு விதனம்2 வருமென்று அறியவனாக வேணும்; .
காலிங்கர்: தான் செய்யப்பட்டார் கெடுவதன்றி யானே கெடுவன் என்பதனை முதலே உணர்ந்துகொள்க; .
பரிமேலழகர்: அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக.
'எனக்குக் கேடு வருமென்று தானே யறிக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அந்நினைப்பு யான் கெடுவேன் என்பதை உணர்த்தும் முன் அறிவிப்பென உணர்க.', 'கேடுகாலம் என்று தெரிந்து கொள்க', 'யான் கெடுவேன் என்று ஒவ்வொருவனும் உணரல் வேண்டும்', ''யான் கெடுவேன்' என்று அறியும் உணர்வைக் கொள்க', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
யான் கெடுவேன் என்று உணரல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
தன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின் :
பதவுரை: தன்-தனது; நெஞ்சம்-உள்ளம்; நடுவு-நடுவு நிலைமை; ஒரீஇ-ஒழிந்து; அல்ல-ஆகாதவைகளை; செயின்-செய்தால்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக
பரிப்பெருமாள்: தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நடுவு செய்யாக்கால் கேடுவரும் என்றது.
பரிதியார்: தனக்கு இறுதி வரும் என்ற காலம் நடுவுநிலைமையை விடும் என்றறிக என்றவாறு.
காலிங்கர்: தன்னெஞ்சமானது நடுவுநிலைமை நீங்கி மனக்கோட்டத்தினால்3 அல்லாதனவற்றைச் செயின் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; .
பரிமேலழகர் குறிப்புரை: நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.
தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.பரிமேலழகர் 'நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்' என உரை தந்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'தன்மனம் நடுநிலை நீங்கி தீயவற்றை நினைக்குமாயின்', 'தன் நெஞ்சம் நேர்மை தவறிச் செல்லின்', 'தனது நெஞ்சறிய முறையில்நின்று விலகித் தவறானவற்றைச் செய்தால் அதனால்', 'தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழிந்து தீயவை செய்ய நினைக்குமாயின்,' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
தன் உள்ளம் நடுநிலை நீங்கியவற்றைச் செய்ய நினைக்குமாயின்', என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நடுவுநிலைமை அல்லாதனவற்றைச் செய்ய நினைத்த போதே தான் கெடப்போகிறேன் என்பதை உணர வேண்டும் என்னும் பாடல்.
தன் நெஞ்சம் நடுநிலை நீங்கியவற்றைச் செயின் யான் கெடுவேன் என்று உணரல் வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'நெஞ்சம் செயின்' எனச் சொல்லப்பட்டுள்ளது. நெஞ்சம் என்ன 'செய்ய' முடியும்?
|
கெடுவல்யான் என்ற தொடர்க்கு நான் அழிந்துபடுவேன் என்பது பொருள்.
என்பது என்ற சொல் என்று என்ற பொருள் தரும்.
அறிக என்ற சொல் உணரவேண்டும் என்ற பொருளது.
தன் நெஞ்சம் என்ற தொடர் தனது உள்ளம் குறித்தது.
நடுஒரீஇ அல்ல என்ற தொடர்க்கு நடுவுநிலைமை ஒழிந்து அல்லன அதாவது தீயவை என்று பொருள்.
|
தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழிந்து தீயவை செய்ய நினைக்குமாயின் அதுவே தான் கேடுறுவேன் என்பதை உணர்த்தும் முன் அறிவிப்பென உணர்க.
தன் நெஞ்சம் எப்பொழுது நடுவுநிலைமை தவறிய எண்ணங்களை நினைந்து செயல்களைச் செய்யுமோ, அப்பொழுதே தனக்குக் கேடுகாலம் தொடக்கம் என்பதை அறியவேண்டும்.
. நடுநிலை தவறுதல் என்பது மற்றவர்க்கு கேடுவிளைக்கக் காரணமாகப் போகிறது என்பதையும் குறிக்கும். ஒருவனது நடுநிலை தவறிய செயல் யாருக்குக் கேடு விளைவிக்குமோ அவன் கெடுவதன்றி தானே அழிந்து படுவேன் என்பதனை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கிறார் வள்ளுவர். கெடுவான் கேடு நினைப்பான் என்ற வழக்கும் உள்ளது. "கெட்டுப்போவேன்" என்பதை அறிந்து கொள்க என்கிறது இப்பாடல். 'அறிக' என்று சொல்லப்பட்டதால் இங்கு தானே உணர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
அதாவது நடுநிலை தவற நினைப்பதையே கேடு அடையப்போவதை முன்னறிவிக்கும் தீக்குறியாகக் கொண்டு "நான் இனிக் கெட்டழியப் போகிறேன் " என்று திண்ணமாய் அறிந்து கொள்க என்று சொல்கிறது பாடல்.
ஒருவன் நேர்மையான முறையில் நடந்து கொள்ளும்போது ஊக்கம் கொடுப்பதும், நடுநிலை நீங்கி செயலாற்ற நினைக்கும் போது அவனை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து தடுப்பதும் அவனது மனச்சான்றுதான். மனம் நினைப்பதை அறிந்து உடனே அச்செயலிலிருந்து நீங்கவேண்டும் என்பது கருத்து..
பொதுவாக வள்ளுவர் அறிவுரை நடையிலேயே பாக்களைப் படைப்பார். சில வேளைகளில் அச்ச நடையையும் பயன்படுத்துவார். அப்படி அச்ச நடையில் சொல்லப்பட்டது இக்குறள். ஒருவன் நடுவுநிலைமை தவறி ஒருதலையாக செயலாற்றும்போது அவனுடைய மனம் நான் கெடப்போவேன் என்று எச்சரிக்கும். இந்த எண்ணம் நம் அழிவுக்கு அறிகுறி என்று உணர்ந்து அந்தச் செயலைக் கைவிட வேண்டும்.
இக்குறள் ஒருவன் தன் மனச்சான்று சொல்வதைக் கேட்கவேண்டும் என்று சொல்கிறது. மனசான்றைத் தொட்டுக் காட்டும் மற்றொரு குறள்:
தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். (அதிகாரம்:வாய்மை
குறள் எண்:293) (பொருள்: ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால் அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்)
இக்குறளின் நடையில் அமைந்துள்ள மற்றொரு பாடல் ஒன்று உள்ளது. அது: கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. (அதிகாரம்:பெரியாரைப் பிழையாமை குறள் எண்:893) (பொருள்: அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்துமுடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலே செய்யலாம்.)
|
'நெஞ்சம் செயின்' எனச் சொல்லப்பட்டுள்ளது. நெஞ்சம் என்ன 'செய்ய' முடியும்?
செயின் என்ற சொல்லுக்குச் செய்தால் என்பது பொருள். 'நெஞ்சம் செயின்' அதாவது நெஞ்சம் செய்தால் என்று சொல்லப்பட்டுள்ளது. நெஞ்சம் எப்படி ஒரு செயலைச் செய்ய முடியும்? 'ஒருவனுடைய நெஞ்சம் நடுவுநிற்றலை ஒழிந்து, அல்லதைச் செய்ய நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்' என்று பரிமேலழகர் இதற்கு விளக்கம் தருவார். அதாவது கேடு நினைத்தலே இப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது எனக் கொள்ளவேண்டும்.
நெஞ்சம் செயதல் இயையாமை கருதி நடுவொரீஇ அல்ல செயின் நெஞ்சம் கெடுவல்யான் என்பதறிக' என்றியைத்துப் பொருள் கூறுவர் நாமக்கல் இராமலிங்கம். அதாவது நடுவு நிலைமையை விட்டு அதற்கு மாறாக காரியத்தை ஒருவன் செய்யும்போது -அவனுடைய மனச்சாட்சி நான் கெட்டுப் போவேன் என்று எச்சரிப்பதை அறிய வேண்டும் என உரை தருவார். .
தேவநேயப் பாவாணர் கருதலாய தொழிலும் மனத்தின் செயலாதலின் செயின் என்றார் என்கிறார். நெஞ்சம் அறிக என இயைத்துக் கூட்டி ஒரு செய்லைச் செய்யும்போது என்கிறார்
மனமாயினும் உடலாயினும் மொழியாயினும் தத்தம் தொழிலைச் செய்ய முற்படும்போது செயின் என்னும் வாய்பாட்டாற் சொல்வது பொருத்தமற்ரது ஆகாது கேடு செய்ய நினைத்தலும் செய்ததோடு ஒக்கும்' நினைத்தலை மட்டும் தொழிலாகக் கொண்ட நெஞ்சத்திற்கு 'செயின்' என்னும் வினை புணர்த்து ஓதினார். நினைப்பதே பாவமாயினும் செயலுக்கு வாராவிடத்து வெளிப்படையாகத் தீமை விளையாது. அங்ஙனமாகத் தீமை எண்ணிய நெஞ்சம் தொழிற்படுத்தவும் தூண்டுமாயின் விளையும் கேடு பெரிது என்பதை விளக்கியவாறு.
(தண்டபாணி தேசிகர்).
நெஞ்சத்தின் செயல் நினைப்பது. நினைத்தலும் செய்தாற் போன்றதே. எனவே நெஞ்சம் செயின் எனச் சொல்லப்பட்டது.
|
தன் உள்ளம் நடுநிலை நீங்கியவற்றைச் செய்ய நினைக்குமாயின் யான் கெடுவேன் என்று உணரல் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.
நடுவுநிலைமை பிறழும்படி சிந்திப்பது கெடப்போகிறான் என்பதற்கான அறிகுறி என்னும் குறட்பா.
ஒருவன் தன் நெஞ்சறிய நடுவு நிலையல்லாதனவற்றைச் செய்ய நினைப்பானேயானால்,அவ்வெண்ணம் தான் கெடப்போகிறேன் என்பதை உணர்த்துவது என்று தெரிந்து கொள்க..
|