இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0701 குறள் திறன்-0702 குறள் திறன்-0703 குறள் திறன்-0704 குறள் திறன்-0705
குறள் திறன்-0706 குறள் திறன்-0707 குறள் திறன்-0708 குறள் திறன்-0709 குறள் திறன்-0710

ஒருவருக்கொருவர் குறிப்பறிந்து பழகுதல். அரசன் குறிப்பறிந்து அமைச்சர் பழகுதலும் அவ்வாறே ஆள்பவன் மற்றவர்களின் குறிப்பறிந்து பழகுதலும் எல்லாம் இதிலடங்கும்.
- தமிழண்ணல்

குறிப்பறிதல் என்பது பிறர் உள்ளத்துள் எண்ணுவதை அவர் சொல்லாமலேயே அதாவது அவருடைய மனக் குறிப்பை அறிந்து நடக்கக்கூடிய திறமையாம். ஆட்சித் திறத்தில் தலைவனைச் சேர்ந்தொழுகுவார்க்கு இது இன்றியமையாததாகக் கருதப்படுவதால், அமைச்சர் தலைவன் குறிப்பறிந்து செயல்படவேண்டும் என்றும் தலைவனும் அமைச்சர், குடிகள் குறிப்பு உணர்ந்து செயல்படவேண்டும் என்றும் சொல்வதாக அமைகிறது இவ்வதிகாரம். குறிப்பறி கருவிகளாக முகமும் கண்ணும் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இவற்றை நோக்கியே ஒருவரது அகக்குறிப்பை அறிந்துகொள்ளலாம் எனக் கூறப்படுகின்றது. .

குறிப்புஅறிதல்

குறளில் குறிப்பறிதல் தொடர்பான அதிகாரங்களாக மூன்று உள. ஒன்று பொருட்பாலில் வரும் குறிப்புஅறிதல் என்னும் இவ்வதிகாரம். மற்ற இரண்டும் காமத்துப்பாலில் வருகின்றன. ‘குறிப்பறிதல் (110)' என்ற அதிகாரம் காதலில் வீழ்ந்த இருவரும் ஒருவர் உள்ளத்தில் உள்ள காதல் குறிப்பை மற்றவர் அறிவதைச் சொல்கிறது. காலிங்கரின் உரை குறளின் 110 ஆம் அதிகாரத்தைக் ‘குறிப்பு உணர்தல்’ எனக் குறிக்கிறது. ‘குறிப்பறிவுறுத்தல் (128)’ என்ற மற்றொரு அதிகாரம் பிரிவிற் சென்ற கணவன் திரும்பியபோது இல்லாள், வாய்ச்சொற்கள் இல்லாமல், தம் உள்ளக் குறிப்பை, கண்களால் இறைஞ்சுவது போன்ற, புறத்தே உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் ஒருவர்க்கொருவர் அறியுமாறு செய்தலைச் சொல்கிறது.

ஒருவர் மற்றவர் வாயால் சொல்லாமலேயே அவர் நினைப்பதை / சொல்ல வருவதை / செய்ய விரும்புவதை அவரது முகத்தை நோக்கிப்புரிந்து கொள்ளுதலைச் சொல்வது குறிப்பறிதல். நோக்கு என்பது உள்ளம் தாக்கும் உரனுடைய மனப்பார்வையைச் சுட்டும். பொதுவாக உலகத்தில் பிறரோடு பழகுகின்றவர்கள் அனைவருக்கும் குறிப்பறிதல் வேண்டும்; தலைவரோடு பழகுவோர்க்கு இது இன்றியமையாதது. ஆட்சி நிர்வாகத்தில் தலைவன் எண்ணங்களை ஆழ்ந்துணர்ந்து அமைச்சர் ஒழுகுதலும் அவ்வாறே ஆள்பவன் மற்றவர்களின் குறிப்பறிந்து பழகுதலும் சொல்லப்படுகின்றன. குடிகளின் அகக்குறிப்பையும் தலைவன் அறிபவனாவான் என்கிறது ஒரு குறள். குறிப்பறிதலில் முகத்திற்குள்ள வெளிப்பாடுகளும் கண்ணுக்குள்ள திறப்பாடுகளும் பெரிதும் பேசப்படுகின்றன.

சிரிப்பது பேசுவது போல குறிப்பறிந்தொழுகுகிறதும் மனித இனத்துக்கு மட்டுமே உரிய தனிப்பண்பு. பேச்சு என்பது மாந்தரை இயக்கி மனித இன வளர்ச்சிக்கு உதவுவது. பேச்சில்லாமல், கருத்தைத் தெரிவிப்பதிலும்/வாங்கிக் கொள்வதிலும், உடல் மொழியால், உளக் கருத்தைக் கண்டு கொள்ளும் குறிப்பறி திறன் கொண்டவர்கள் மற்ற மனிதர்களிலும் மேம்பட்டவர்கள் என்று வள்ளுவர் கருதுகிறார்.

இயற்கை அறிவு, கல்வியறிவு, பட்டறிவு இவை மாந்தர் நல்வாழ்வு மேற்கொள்ளத் தேவையானவை. இவற்றுடன் வைத்து எண்ணக்கூடியதல்லாத, தனிப்பட்ட சிறப்புடையதாக குறிப்புணரும் திறனுக்கு மிக மேலான இடம் தருகிறார் வள்ளுவர். அத்திறனுடையவன் உலகிற்கே ஒரு அணிகலன் ஆவான் என்றும் அவனது உறவைப் பெற உயர்வான விலையும் கொடுக்கலாம் எனவும் சொல்கிறார். அவனைத் தெய்வத்திற்கு ஒப்பக் கொள்ளவேண்டும் எனவும் குறிக்கிறார்.
பேசும் மொழியிலேயே பலவேளைகளில் உண்மைப் பொருள் எது என்று காணமுடியாமல் போவதுண்டு. அப்படி இருக்க, ஒருவரது முகமும் கண்ணும் வேறுவேறு சூழ்நிலைகளில் பலதிறப்பட்ட செய்திகளைக் குறித்து நிற்கும்போது அவற்றையெல்லாம் தெளிவாக உணர்ந்துகொள்வது சிறப்பான இயல்புதான். சொற்களின் துணையின்றியே மற்றவர்கள் நம் மனக்குறிப்பை உணர்ந்து செயல்பட்டால் நமக்குக் கூடுதல் வலிமை கிடைத்தது போல் உணர்வோம் என்பதும் உண்மையே. ஆயினும் அவ்வியல்பு வாய்த்தவன் தெய்வத்திற்கு ஒப்பானவன்; எது கொடுத்தேனும் அவனைப் பணிக்கு எடுத்துக்கொள்ளலாம்; குறிப்புணர்வற்றவர் ஏதோ ஓர் உறுப்புக் குறையுற்றவர் போல்வர் என்றவாறு அமைந்த பாடல்கள் மிகையான கூற்றுக்களாகத்தான் தோன்றுகின்றன.

குறிப்புஅறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 701ஆம் குறள் ஒருவன் ஏதும் கூறாமலே அவனை உற்று நோக்கி உள்ளத்திலுள்ளதை அறிபவன், எப்பொழுதும் வற்றாத நீரால் சூழப்பட்ட உலகத்தார்க்கு ஓர் அணிகலன் என்கிறது.
  • 702ஆம் குறள் பிறர் உள்ளத்தில் உள்ளதை ஐயுறவு இல்லாமல் அறிபவனை தெய்வத்தோடு ஒப்பக் கருதி மதிக்கவும் எனக் கூறுகிறது.
  • 703ஆம் குறள் பிறர் முகக் குறிப்பினாலே மற்றவர் உள்ளக்கருத்தை அறிய வல்லவரை எதைக் கொடுத்தும் தம் அவையில் இருத்திக் கொள்க எனச் சொல்கிறது.
  • 704ஆம் குறள் ஒருவன் தன் மனத்தில் கருதியதை அவன் சொல்லாமலே குறிப்பினால் அறிந்துகொள்ள வல்லவரோடு மற்றையவர் உறுப்புக்களால் ஒத்தவரே; ஆயினும் வேறானவர் என்கிறது.
  • 705ஆம் குறள் புறக்குறிப்பாலே ஒருவன் உள்ளக் கருத்தை அறியமுடியாவிட்டால் உறுப்புகளுள் கண்ணினால் ஆகும் பயன் என்னவோ? என வினவுகிறது.
  • 706ஆம் குறள் தன்னை நெருங்கிய பொருளைக் காட்டும் பளிங்கினைப் போல் உள்ளத்தில் உள்ள மிக்க உணர்ச்சிகளை வெளிக் காட்டும் முகம் என்கிறது.
  • 707ஆம் குறள் மகிழ்வடைந்தாலும் வெறுப்படைந்தாலும் அவ்வுணர்வுகளைக் காட்ட முகம் முற்பட்டு நிற்கும்; முகத்தைவிட அறிவுமிக்கது பிறிது இல்லை எனச் சொல்கிறது.
  • 708ஆம் குறள் ஒருவனது உள்ளத்தை நோக்கி அதிலுற்றதனை அறியவல்லாரைப் பெற்றால் முகத்தைப் பார்த்து நின்றாலே போதும் என்கிறது.
  • 709ஆம் குறள் பார்வை வகைகளை அறிய வல்லவரைப் பெற்றால், பகைமையையும் நட்பையும் கண்களே சொல்லிவிடும் எனக் கூறுகிறது.
  • 710ஆவது குறள் நுட்பமுடையவர் என்று அறியப்படுவரையும் அளக்குங்கோல், ஆராயுமிடத்துக் கண்கள் அல்லது வேறு இல்லை என்கிறது.

குறிப்புஅறிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

குறிப்புணர்வதற்குக் கண்ணே சிறந்த கருவி. ஒருவர் முகம் பார்த்து அவர் உள்ளக் குறிப்பினை அறியமுடியாத கண்களை ஒருவன் பெற்றும் என்ன பயன் என்று கேட்கிறது குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் (705) என்ற பாடல் குறிப்பறிதலுக்காகவே கண்கள் படைக்கப்பட்டுள்ளன எனச் சொல்லி அத்திறனை வளர்த்துக் கொள்ள அறிவுறுத்துகிறது.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் (706) என்ற பாடல் ஒருவர் நம்மிடம் மாறுபாடு கொண்டிருக்கிறார் என்பதை அவர் முகம் பளிங்குபோல் காட்டும் என்கிறது. அகத்தது காட்டும் கண்ணாடி போன்றது முகம் என்னும் இக்குறள் அடிக்கடி மேற்கோள் காட்டப்பெறும் ஒன்றாகும்.




குறள் திறன்-0701 குறள் திறன்-0702 குறள் திறன்-0703 குறள் திறன்-0704 குறள் திறன்-0705
குறள் திறன்-0706 குறள் திறன்-0707 குறள் திறன்-0708 குறள் திறன்-0709 குறள் திறன்-0710