இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0702



ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:702)

பொழிப்பு (மு வரதராசன்): ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும்.

மணக்குடவர் உரை: பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரைத் தேவரோடு ஒப்பக் கொள்க.

பரிமேலழகர் உரை: அகத்தது ஐயப்படாது உணர்வானை - ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை; தெய்வத்தொடு ஒப்பக்கொளல் - மகனேயாயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க.
(உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர்நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடுஒப்ப' என்றார்.)

இரா சாரங்கபாணி உரை: ஐயுறவு இல்லாமல் ஒருவன் உள்ளத்தில் உள்ளதைத் தெளிவாக அறிபவனை மாந்தனே யாயினும் தெய்வத்தோடு ஒப்பக் கருதி மதித்துப் போற்றுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.

பதவுரை: ஐயப்படாஅது-சந்தேகத்துகிடமின்றி; அகத்தது-நெஞ்சத்துள்ளதை; உணர்வானை-அறிபவனை; தெய்வத்தோடு-தேவரோடு; ஒப்பக் கொளல்-சமமாக நன்கு மதிக்க.


ஐயப் படாஅது அகத்தது உணர்வானை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரை;
பரிப்பெருமாள்: பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரை;
பரிதி: சந்தேகமற மனத்தின் நினைவை அறியும் மந்திரிக்கு;
காலிங்கர் ('உணர்வாரை' பாடம்): ஒருவர் தாம் உள்ளத்துக் குறித்த பொருளை அல்ல ஆம் என்று ஐயப்படாதே இதுவே ஆகும் என்று அறியவல்ல குறிப்பு அறிவாளராகிய அமைச்சரை;
பரிமேலழகர்: ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை;

'பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றி அறியவல்லாரை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தெளிவாக உள்ளோட்டத்தை உணர்பவனை', 'இன்னொருவன் மனதிலுள்ளதை (அவன் வாயாற் சொல்லாமல்) சந்தேகத்துக்கிடமில்லாமல் உள்ளபடி அறிந்து கொள்ளக் கூடிய ஒருவனை', 'ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதை ஐயமின்றி உறுதியாய் அறியவல்லவனை', 'ஐயத்திற்கு இடமின்றி பிறர் உள்ளத்தில் உள்ளதை அறியக் கூடியவனை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறர் உள்ளத்தில் உள்ளதை ஐயுறவு இல்லாமல் அறிபவனை என்பது இப்பகுதியின் பொருள்.

தெய்வத்தோடு ஒப்பக் கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தேவரோடு ஒப்பக் கொள்க.
பரிப்பெருமாள்: தேவரோடு ஒப்பக் கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: அவரும் பிறர் நினைவு அறிவர்; இவரும் அவ்வாறு அறிதலான் இவரைத் தேவராக மதிக்கப்படும் என்றது. இவை இரண்டும் குறிப்பறிந்தார்க்கு உளதாகும் நன்மை கூறின.
பரிதி: தேவர் நிகராம்.
காலிங்கர்: அவ்வரசர் தெய்வத்தோடு ஒப்புக்கொண்டு ஒழுகுக என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே, கருதியது அறிவார் கடவுளர் ஆகலான், மற்று இவர் மக்கள் யாக்கையின் வந்தனராயினும் வானக்கடவுளரோடு ஒப்பர்.
பரிமேலழகர்: மகனேயாயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க.
பரிமேலழகர்: உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர்நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடுஒப்ப' என்றார்.

'தெய்வத்தோடு ஒப்பக் கொள்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தெய்வத்துக்கு நிகராக மதிக்க', 'தெய்வத்துக்குச் சமானமாகத்தான் மதிக்க வேண்டும்', 'தெய்வத்தோடு ஒப்பவனாகக் கருத வேண்டும்', 'தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்கவும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தெய்வத்தோடு ஒப்பக் கருதி மதிக்கவும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறர் உள்ளத்தில் உள்ளதை ஐயுறவு இல்லாமல் அறிபவனை தெய்வத்தோடு ஒப்பக் கருதி மதிக்கவும் என்பது பாடலின் பொருள்.
'தெய்வத்தோடு ஒப்பக்' கொள்க என்றா சொல்லப்படுகிறது?

மற்றவர் மனத்துள் கருதுவதை மாறாமல் உள்ளபடியே அறியக்கூடியவன் மனிதரிலும் மேம்பட்டவன்.

ஒருவன் உள்ளத்தில் உள்ளதை ஐயமில்லாமல் உறுதியாக அறிய வல்லவனை தெய்வத்தோடு ஒப்பவனாக மதிக்க.
பிறர் உள்ளத்தின் குறிப்பை, உள்ளது உள்ளவாறு உணரவல்லவனை தெய்வம் போன்றவன் என்று வள்ளுவர் இக்குறளில் கூறுகின்றார். குறிப்பறிதலின் சிறப்பினைத் தெரிவிக்கவே அவர் இவ்விதம் கூறினார்.

ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் தெய்வத்திற்கு மட்டுமே உண்டு. ஒருவன் ஐயமின்றித் தெளிவாக உணரவல்லனாயின், அவனைத் 'தெய்வம்' என்றே கூறிவிடலாம் என்றது அது மேலான ஆற்றல் என்பதைச் சொல்வதற்காகத்தான்.
புறத்தே காணுகின்ற காட்சிகளாலும், முகம், கண் முதலியவற்றாலும் பிறர் மனத்துள் நினைப்பதை ஓரளவு ஊகித்து அறிந்து கொள்ளமுடியும். ஐயமற உணர்ந்துகொள்ளுதல் யாராலும் இயலக்கூடியது அன்று.
புறக்குறிப்பால் ஒருவரது அகத்தின் 'இயல்புகளை' உளவியல் அறிஞர்களாலும் உணரமுடியும். ஆனால் அவர் கருதுவதைத் துல்லியமாக அறியமுடியாது. இன்று செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) என்ற அறிவியல் பிரிவு வளரத் தொடங்கியுள்ளது. இதன்மூலமும் ஒருவரது குணநலன் அல்லது அவரின் தனித்தன்மையைக் கண்டு கொள்ளலாமே யொழிய அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிதல் இயலாது.
மெய்யியல் பேசுவோர், பொறிவெறிகள் நீங்கித் தலையான மெய்யறிவு சார்ந்தவரிடம் தோன்றும் நிலையான சாந்திநிலை பெற்றவரால் பிறர் மனத்துள்ளதை அறியமுடியும் என்பர். யோகா பயிற்சியுடையோர் குண்டலினி போன்றவற்றால் மற்றவர் உள்ளத்தில் எண்ணுவதை உணரமுடியும் என்கின்றனர்.
எம்முறைகளிலானாலும் அடுத்தவரின் மனக்கருத்தைச் ஐயமறக் கண்டு அறிந்தவர் முன்பும் இருந்ததில்லை, இன்றும் இல்லை.

'தெய்வத்தோடு ஒப்பக்' கொள்க என்றா சொல்லப்படுகிறது?

மனிதன் ஆறறிவு படைத்தவன். அதற்குமேல் அறிவு படைத்த உயிர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மனம் கடந்த மாந்தர் என்று ஒருவகை உண்டு. அவர்களால் பிறர் உள்ளோட்டத்தை ஐயப்பாடின்றி உறுதியுடன் வாசிக்க இயலும் என்று சிலர் நம்புகின்றனர். அதுபோன்ற நம்பிக்கையில் தோன்றிய மனிதர்களையா இங்கு வள்ளுவர் தெய்வத்திற்கு ஒப்பானவர் என்று சொல்கிறார்? அவர் குறிப்புணர்வார்க்கு இவ்வளவு பெரிய உயர்வை ஏன் தருகிறார் என்பது புரியவில்லை. குறிப்பறிதல் என்பது ஒரு ஆற்றல். அவ்வளவே. என்னதான் உயர்வு நவிற்சியாகக் கூறப்பட்டது எனக் கொண்டாலும் இங்கு அது எல்லை கடந்துசென்றுள்ளது போல் தோன்றுகிறது. 'மற்றவரின் உள்ளத்தில் என்ன உள்ளது' என்பதை உணர்வது யார்க்கும் இயலாத ஒன்று. அது கடவுளுக்கு மட்டுமே உண்டு.

பரிமேலழகர் 'உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும் பிறர்நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடுஒப்ப' என்றார்' என சிறப்புரையில் கூறியுள்ளார். தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ள தெய்வங்கள் கண்ணிமையார்; அவர்கள் கால்கள் தரையில் படா; அவர்கள் நிழல்தோன்றா; அவர்களுக்கு வியர்க்காது; அவர்கள் அணியும் பூமாலை வாடாது. இவற்றில் குறிப்புணர்வார் உடம்பால் வேறுபடுவர் என்பது பரிமேலழகர் கருத்து.
புலவர் குழந்தை இக்குறளில் வரும் தெய்வத்தோடு ஒப்பக் கொளல் என்பதற்கு நன்கு மதித்தல் எனப் பொருளுரைப்பார்.
‘தெய்வத்தோடொப்பக் கொளல்’ என்பது................................. வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். (இல்வாழ்க்கை 50) என்பது போன்ற நடையின்று. ஆதலின், ஐயப்படாஅ தகத்த துணர்வான் நன்று மதிக்கத் தக்கவன் என்பதே கருத்து. (இரா சாரங்கபாணி)

பிறர் உள்ளத்தில் உள்ளதை ஐயுறவு இல்லாமல் அறிபவனை தெய்வத்தோடு ஒப்பக் கருதி மதிக்கவும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

குறிப்பறிதல் மிக மேன்மையான ஆற்றல்.

பொழிப்பு

பிறர் மனஓட்டத்தைத் ஐயுறவு இன்றி அறிபவனைத் தெய்வத்தோடு ஒப்பக் கருதி மதிக்க.