இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0710



நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்
கண்அல்லது இல்லை பிற

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:710)

பொழிப்பு (மு வரதராசன்): யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவருடைய கண்களே அல்லாமல் வேறு இல்லை.

மணக்குடவர் உரை: யாம் நுண்ணிய அறிவையுடையே மென்றிருக்கும் அமைச்சர் பிறரை அளக்குங் கோலாவது ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை.

பரிமேலழகர் உரை: நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் - யாம் நுண்ணறிவு உடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்குங் கோலாவது; காணுங்கால் கண் அல்லது பிற இல்லை -ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை.
(அறிவின் நுண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன் அறிந்த வழி அவரான் மறைக்கப்படும்; நோக்கம் மனத்தோடு கலத்தலான் ஆண்டு மறைக்கப்படாது என்பது பற்றி அதனையே பிரித்துக் கூறினார். இனி 'அலைக்குங்கோல்' என்று பாடம் ஓதி, 'நுண்ணியம்' என்று இருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் கோலாவது கண் என உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப்பு அறிக என்பது கருத்தாக்குவாரும்உளர். இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: நுண்ணிய அறிவுடையேம் என்பார் பிறர் கருத்தை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுமிடத்து அப்பிறரது கண்களல்லது பிறிதில்லை; கண்களே உண்மையை மறைக்காமல் வெளிப்படுத்தும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால் கண்அல்லது பிற இல்லை.

பதவுரை: நுண்ணியம்-நுட்பமுடையவர்; என்பார்-என்று அறியப்படுபவர்(ரை); அளக்கும்கோல்-அளவுகோல்; காணுங்கால்-ஆராயும்போது; கண்-விழி; அல்லது-அல்லாமல்; இல்லை-இல்லை; பிற-வேறு.


நுண்ணியம் என்பார் அளக்கும்கோல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாம் நுண்ணிய அறிவையுடையே மென்றிருக்கும் அமைச்சர் பிறரை அளக்குங் கோலாவது;
பரிப்பெருமாள்: யாம் நுண்ணிய அறிவையுடையம் என்பார் பிறரை அளக்குங் கோலாவது;
நுண்ணியார் முகத்தின் தோற்றம் விடார்; அவரைக் கண்டு அறிய வேண்டும் என்றது.
பரிதி: கூரிய காரியத்தை அளக்கும் கோல் எது என்னில்;
காலிங்கர்: உலகத்து யாவரினும் பெரிதும் கூரியேம் என்று இருப்போரையும், தாம் மற்றுத் தம் குறிப்பினான் அதை அறிந்து சீர்தூக்கும் கோல்;
காலிங்கர் குறிப்புரை: அளக்கும் கோல் என்பது ஏற்றமும் தாழ்வும் இனிது உணரப் பலகாலும் தட்டியும் அசைத்தும் சீர்தூக்கும் தராசு என்று ஆயிற்று.
பரிமேலழகர்: யாம் நுண்ணறிவு உடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்குங் கோலாவது;

'யாம் நுண்ணிய அறிவையுடையே மென்றிருப்போர் பிறரை அளக்குங் கோலாவது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மற்றவர்கள் பொதுமையில் கூற மணக்குடவரும் பரிமேலழகரும் அமைச்சர் எனக் குறித்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூரிய அறிவுடையோம் என்பவர்க்கு அளவுகோலாவது', 'மதிநுட்பம் உடையோம் என்பவர் அளக்குங்கோல்', 'கூர்மையான அறிவுடையவர்கள் என்பவர்கள், எதையும் அளந்தறிய (உபயோகப்படுத்த் வேண்டிய) கருவி', ''யாம் நுண்ணறிவு உடையோம்' என்று கூறுகின்றவர் பிறர் கருத்தை அளந்து அறியும் கோல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நுட்பமுடையவர் என்று அறியப்படுவரை அளக்குங்கோல் என்பது இப்பகுதியின் பொருள்.

காணுங்கால் கண்அல்லது இல்லை பிற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை.
பரிப்பெருமாள்: விசாரிக்குமிடத்துக் கண் அல்லது பிற இல்லை; ஆகலான் கண் கண்டு அறிந்து கொள்க என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: நுண்ணியார் முகத்தின் தோற்றம் விடார்; அவரைக் கண்டு அறிய வேண்டும் என்றது.
பரிதி: கண்ணல்லது இல்லை.
காலிங்கர்: ஆராயும் இடத்து மற்று அவர்கண் தாமே அல்லது, வேறு இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: அறிவின் நுண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன் அறிந்த வழி அவரான் மறைக்கப்படும்; நோக்கம் மனத்தோடு கலத்தலான் ஆண்டு மறைக்கப்படாது என்பது பற்றி அதனையே பிரித்துக் கூறினார். இனி 'அலைக்குங்கோல்' என்று பாடம் ஓதி, 'நுண்ணியம்' என்று இருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் கோலாவது கண் என உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப்பு அறிக என்பது கருத்தாக்குவாரும்உளர். இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.

'ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் கண்ணே; வேறில்லை', 'ஆராய்ந்து பார்க்குமிடத்து பிறர் கண்கள் அல்லது வேறு இல்லை. (பிறர் கண்களை அளக்கும் கோலாகவும், அவர் மனக் குறிப்பை நிலமாகவும் கொள்க.)', 'ஆராய்ந்து பார்த்தால் அவர்களுடைய கண்களேயல்லாமல் வேறில்லை', 'ஆராயுமிடத்துக் கண்ணல்லது வேறு இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆராயுமிடத்துக் கண்கள் அல்லது வேறு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நுட்பமுடையவர் என்று அறியப்படுவரையும் அளக்குங்கோல், ஆராயுமிடத்துக் கண்கள் அல்லது வேறு இல்லை என்பது பாடலின் பொருள்.
யாருடைய 'கண்' சொல்லப்படுகிறது?

கண்களே சிறந்த குறிப்பறி கருவியாம்.

நுட்பமானவர் என்று சொல்லத்தக்கவரது உள்ளக் கருத்துக்களையும் அறிந்துகொள்ள உதவும் அளவுகோல் யாது என்று ஆராய்ந்தால், அது கண்ணைத் தவிர்த்து மற்றது இல்லை.
ஒருவரது கண்ணே அவரது அந்த உள்ளக்குறிப்பை நன்றாக வெளிப்படுத்தக்கூடியது. நுண்ணறிவு உடையவரது மனத்தையும் அறிவதற்கான அளக்கும் கோலாக கண்ணையே பயன்படுத்துவர். நுட்பமுடையவர் என்றதால் அவர் உணர்ச்சிகளை எளிதில் மறைத்துவிடக்கூடியவராயிருப்பர். சொல், செயல் முதலியவற்றால் உள்ளம் கருதியதை பிறர் அறிய முடியாதிருக்கலாம். ஆனால் எவராயிருந்தாலும் அவரது கண் ஏமாற்றாது. கண் வழி குறிப்பை அறிந்து கொள்ளுவதில் தவறு உண்டாகாது. நுண்ணியவர் உள்ளக் குறிப்பையும் அவர் கண்ணை நோக்கி அறிந்துகொள்ளலாம் எனச் சொல்லப்படுகிறது.

'நுண்ணியம் என்பார்' என்றதற்கு யாம் நுண்ணிய அறிவுடையேம் என்பார், கூர்மையான அறிவுடையவர்கள் என்பவர்கள், 'யாம் நுண்ணறிவு உடையோம்' என்று கூறுகின்றவர், 'யாம் நுட்பமான அறிவுடையோம்' என்று சொல்லிக் கொள்ளத்தக்க அறிவுடையவர், யாம் நுண்ணறிவுடையேம் என்று தம்மைக் கருதும் அமைச்சர் எனப் பொருள் கூறினர். 'நுண்ணியம் என்பார்' என்ற தொடர்க்கு 'நுண்ணியம் எனத் தம்மைத் தாமே மதித்திருப்பார்' என்பதைவிட 'நுட்பமானவர் என அறியப்படுபவர்' என்பது பொருத்தமாகலாம். பரிப்பெருமாள் 'நுண்ணியார் முகத்தின் தோற்றம் விடார்' எனத் தன் சிறப்புரையில் கூறுகிறார். இதன் பொருள் 'நுண்ணியர்தம் குறிப்பினை முகத்தினால் பிறரறியுமாறு காட்டிவிடமாட்டார்கள்' என்பது. ஆதலின், அவர் குறிப்பினை அவர்கள் கண்கொண்டுதான் அறிய வேண்டும் எனவும் உரைத்தார். காலிங்கரும் இதே கருத்தினர்.
'அளக்கும் கோல்' என்றது குறிப்பை அறிந்தறியும் கருவி எனப்பொருள்படும். இதற்குத் தராசு என்றும் நீட்டியளக்கும் கோல் என்றும் கொள்வராதலால், அளக்கப்படும் குறிப்பின் எடை, அதன் பரப்பு இவற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

நுண்ணியாரது உள்ளக்குறிப்பு காண்பதற்கும் அவர் கண்களே அளவுகோல் என்பது கருத்து.

யாருடைய 'கண்' சொல்லப்படுகிறது?

கண் மிகச்சிறந்த குறிப்பறி கருவி என்பது வள்ளுவர் கருத்து. காமத்துப்பால் குறிப்பறிதல் அதிகாரத்திலும் (110) கண்கள்வழி குறிப்பறிதல் சிறப்பித்துச் சொல்லப்படும்.
ஒருவரது உள்ளக் குறிப்பைப் பலவகைகளில் அறியலாம். பரிமேலழகர் உரையில் இது நன்கு விளக்கப்பட்டுள்ளது. அதைத் தேவநேயப்பாவாணர் இன்னும் விரித்துக் கூறுவதாவது: 'நோக்கு, வடிவு, சொல், செயல், கூட்டுறவு, பொருள், பிறர் கூற்று முதலியனவாக, ஒருவர் மற்றொருவர் கருத்தை அளந்தறியும் வழிகள் பலவாயினும், அவற்றுள் நோக்கு வேறுபாட்டைக் கொள்ளும் கண்ணே, அகக் கண்ணாகிய மனத்தொடு நெருங்கிய தொடர்புடையதாய், அடுத்தது காட்டும் பளிங்குபோல் உள்ளக் கருத்தை உடன் காட்டுவதாயும் எளிதில் மறைக்கக் கூடாததாயும், நோக்கல்லாத பிறவெல்லாம் மனத்தொடு தொடர்பற்றனவாயும் எளிதில் மறைக்கக் கூடியனவாயும் இருத்தலால், கண்ணைப் பிரித்துக் கூறினார். நோக்கு குறிப்புள் ஒரு கூறாய் அடங்கும். குறிப்பு உடல் முழுவதையும் தழுவுமேனும், முகக் குறிப்புச் சிறந்ததும் அதன் ஒரு கூறான கண்குறிப்புத் தலைசிறந்ததுமாகும்.'

இப்பாடலில் சொல்லப்பட்ட கண் யாருடையது - அளப்பவருடையதா? அளக்கப்படுவருடையதா?
இக்குறளிலுள்ள கண் என்பது அளக்கும் அமைச்சர் கண்ணைக் குறிக்கும் என்றும், அளக்கப்படும் நுண்ணியர் கண்ணைக் குறிக்கும் என்றும் இருதிறமாகப் பொருள் கூறினர். இங்கு நாம் அளப்பவர் அமைச்சர் என்றும் அளக்கப்படுவார் நுண்ணியார் எனக் கொள்கிறோம். பழைய (உ வே சா) உரை 'அரசர் கண்ணைக் கோலாகவும், அரசர் மனக்குறிப்பை நிலமாகவும் அளந்தறிவான் அமைச்சன் என்க' என்கிறது. இவ்வுரையைத் தழுவி நுண்ணியர் மனக்குறிப்பை நிலமாகவும் நுண்ணியர் கண்ணைக் கோலாகவும் கொண்டு அளப்பவர் அமைச்சர் எனக் கொள்வது பொருத்தமாகும்.

இப்பாடலில் சொல்லப்பட்ட கண் அளக்கப்படுபவரான நுண்ணியருடையது ஆகும்.

நுட்பமுடையவர் என்று அறியப்படுவரையும் அளக்குங்கோல், ஆராயுமிடத்துக் கண்கள் அல்லது வேறு இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நுண்ணியர் கண்ணும் குறிப்பறிதலில் தப்பாது.

பொழிப்பு

நுட்பமானவர் என்பவர்க்கும் அளவுகோலாவது, ஆராய்ந்து பார்க்குமிடத்து, அவர் கண்கள் அல்லது வேறு இல்லை.