இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0709



பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:709)

பொழிப்பு (மு வரதராசன்): கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால், (ஒருவனுடைய மனத்தில் உள்ள) பகையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லிவிடும்.

மணக்குடவர் உரை: ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல்லும்; கண்ணினது வேறுபாட்டையறிவாரைப் பெறின்.
இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது பிறர்க்கரிதென்றது.

பரிமேலழகர் உரை: கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும்.
(இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன: வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.)

இரா சாரங்கபாணி உரை: கண்பார்வையின் வேறுபாடுகளை அறிய வல்லவர்களைப் பெற்றால், ஒருவனது மனத்துக் கிடந்த பகைமையையும் நட்பையும் அவன் கண்களே அவர்களுக்குப் புலப்படுத்தி விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்.

பதவுரை: பகைமையும்-எதிரியாந்தன்மையும் கேண்மையும்-நட்பும்; கண்-விழி; உரைக்கும்-சொல்லும்; கண்ணின்-நோக்கினது; வகைமை-வேறுபாட்டின் தன்மை; உணர்வார்-அறிவார்; பெறின்-நேர்ந்தால்.


பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல்லும்;
பரிப்பெருமாள்: ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல்லும்;
பரிதி: உறவும் பகையும் என்ற இரண்டினையும் பார்வை சொல்லும்;
காலிங்கர்: ஒருவரோடு ஒருவர்க்கு உள்ளத்தான் உள்ள பகைமையும் கெழுமுதல் தன்மையும் அவர் கண்தானே சொல்லித் தரும்; [கெழுமுதல் தன்மை -நட்பு கொள்ளும் தன்மை]
காலிங்கர் குறிப்புரை: கண் உரைக்கும் என்றது 'மது மறைந்து உண்டோர் மகிழ்ச்சி' கண்ணினானே கண்டு கொள்வார் என்பது.
பரிமேலழகர்: அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும்.
பரிமேலழகர் குறிப்புரை: இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன: வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.

'ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல்லும்' என்று பொதுமையில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர் ஆகியோர் உரைக்க, பரிமேலழகர் 'பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும்' என்று வேற்று வேந்தர் மேலேற்றிக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகையா நட்பா என்பதைக் கண் சொல்லும்', 'பகைவனையும் நண்பனையும் அவர்களுடைய கண்ணே அவர்களுக்குச் சொல்லிவிடும்', 'கண்ணானது மாறுபாட்டையும் இணக்கத்தையும் அவர்களுக்கு நன்கு தெரிவிக்கும்', 'பகைமையையும் நட்பையும் கண்களே காட்டிவிடும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகைமையையும் நட்பையும் கண்களே சொல்லிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணினது வேறுபாட்டையறிவாரைப் பெறின்.
மணக்குடவர் குறிப்புரை: இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது பிறர்க்கரிதென்றது.
பரிப்பெருமாள்: கண்ணினது வேறுபாட்டையறிவாரைப் பெறின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது அரிது என்றது.
பரிதி: ஆகையாலே கண்ணிலும் ஒரு குறிப்பு இல்லை என்றவாறு.
காலிங்கர்: யார்க்கு எனின், அவை இரண்டையும் பிரித்து உணர்த்துகின்ற கூறுபாட்டை அங்ஙனம் தெரிந்து உணர்வார்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்.

'நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்லரைப் பெறின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண்ணின் கூறு தெரிந்தவர்கட்கு', 'கண்ணின் இயல்பையும் அவற்றை உபயோகப் படுத்திக் கொள்ளும் வகைகளையும் அறிந்தவர்கள் இருந்தால்', 'கண்ணின் குறிப்புவகைகளை அறிய வல்லவரைப் பெற்றால்', 'பார்வை வகைகளின் வேறுபாட்டை அறிவாரைப் பெற்றால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பார்வை வகைகளை அறிய வல்லவரைப் பெற்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பார்வை வகைகளை அறிய வல்லவரைப் பெற்றால், பகைமையையும் நட்பையும் கண்களே சொல்லிவிடும் என்பது பாடலின் பொருள்.
'கண்ணின் வகைமை' குறிப்பது என்ன?

ஒருவனது பார்வையே அவன் பகை உணர்த்துபவனா அல்லது நட்பு பாராட்டுபவனா என்பதை அறிவிக்கும்.

சேர்ந்தொழுகுவாரில் கண்நோக்கின் வேறுபாட்டை உணரும் திறமுடையவர் இருந்தால் பகைமையையும் நட்பையும் பிறர் கண்களே தெரிவித்துவிடும்.
பார்வையின் வேறுபாட்டைக் கொண்டு உள்ளத்து நிகழ்ச்சிகளை அறிய வல்லவர் பிறர் பகையையும் நட்பையும் கண்களாலேயே அறிந்துகொள்வர். உள்ளத்தில் உள்ள பகையையும் நட்பையும் அதாவது வெறுப்பையும் விருப்பையும் கண்ணே சொல்லிவிடும். முகம் வாசித்து உள்ளக்குறிப்பை அறியலாம் என்று முன்பு கூறப்பட்டது. முகத்திலுள்ள உறுப்புக்களில், கண்ணிலே அந்த உள்ளக்குறிப்பு இன்னும் நன்கு வெளிப்படுமாதலால் இங்கு கண்வழி பெறப்படும் குறிப்பறி திறன் சொல்லப்படுகிறது. இத்திறன் கொண்டவர்கள் அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறிவர். பகைமையையும் நட்பையும் மற்றவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்ளை நோக்கியே உணர்ந்துகொள்வர்.
கண்ணின் மெய்ப்பாடு போன்ற திறப்பாடுகளை அறியக் கூடியவர்களைப் பெறுதல் அரிது என்பதால் 'பெறின்' எனச் சொல்லப்பட்டது.
பகைவரா நட்பு நாடுபவரா என்று சொல்லப்பட்டதால் இது வேற்று நாட்டு ஆட்சித்தலைவரைக் குறிப்பதாகக் கூறுவார் பரிமேலழகர்.

'கண்ணின் வகைமை' குறிப்பது என்ன?

கண்ணின் வகைமை உணர்ந்தவர் என்பது கண்களைக் குறிப்பறி கருவிகளாகக் கொண்டு ஒருவரது உள்ளம் நினைப்பதை அறியவல்ல உடல்மொழி வல்லுநரைக் குறிப்பது.
உள்ளம் நினைப்பதைக் கண்காட்டும்; எதிரில் உள்ளவர் பகைமை கொண்டவரா அல்லது கேண்மை வேண்டுபவரா என்பதை அவர் கண்களை நோக்கியே கண்களின் வகைமை அறிவாரால் கூறமுடியும்.
வேறு சில பார்வை வகைகளையும் நோக்கலாம். ஒருவர் கண்களைப் பார்த்தே அவரது உள்ளத்து உணர்ச்சிகளை அறியமுடியும். அவர் கண்ணைப் பார்த்தே அவர் வாய்மையாளரா அல்லது பொய்யரா என்று தெரியலாம். ஒருவர் மற்றவர் கண்களை நேருக்குநேர் பார்த்துப் பேசினால் அவர் தன்னம்பிக்கை கொண்டவர், நேர்மையாளர் எனத் துணியலாம். மாறாக பேசும்பொழுது கேட்பவர் கண்களை விலக்குபவராக இருந்தால் அவரது விருப்பமின்மையயும், அவரது பதட்டநிலையையும் காட்டும். அது கேட்பவர்க்கு பேசுபவர் மீதுள்ள சினத்தையோ அல்லது வெறுப்பையோ சுட்டலாம். ஒருவர் முன்னோக்கி அமர்ந்துகொண்டு, பேசுபவரின் கண்களை நோக்கிக் கொண்டிருப்பாராயின் அவரது பேச்சில் மிகுந்த ஈடுபாடுடையவராக இருக்கிறார் என அறியலாம். அவர் ஓய்வுநிலையில் பின்புறம் சாய்ந்துகொண்டு, கண்களை வேறு பக்கம் நிலைக்கவைத்துக் கொண்டிருந்தால் அவர் பேச்சிலே ஈர்க்கப் படவில்லை என்று பொருள். அவரே கைகளைக் கட்டிக்கொண்டு விறைப்பாக நிற்பாரானால் பேசுபவர் கருத்தில் அவர்க்கு உடன்பாடில்லை எனக் கொள்ளலாம். கண்ணின் நிறம், தன்மை இவைகொண்டும் உளநிலையை அறியமுடியும் கண் சிவப்பாய் இருந்தால் சினமாக இருக்கிறார் என்றும் கண்பொலிவுடன் தோன்றினால் நட்புக்குரிய மகிழ்நோக்கு என்றும் தெரியவரும். இதுபோல் அருட்பார்வை, வெகுளிப்பார்வை போன்றவற்றையும் வகைதெரிந்து கண்டறியலாம்.
இவைபோன்று மற்றவர்களின் பார்வையிலிருந்தே அவர் உள்ளம் நினைப்பதை அறிந்துகொள்வது கண்ணின் வகைமை உணர்வார்க்கு எளிதாகும்.

பார்வை வகைகளை அறிய வல்லவரைப் பெற்றால், பகைமையையும் நட்பையும் கண்களே சொல்லிவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கண்வழிக் குறிப்பறிதல் மனித உறவுகளைத் தெளிவாக்கும்.

பொழிப்பு

பார்வை வகைகளை அறிய வல்லவர்களைப் பெற்றால், பகைமையையும் நட்பையும் கண்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.