இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0041 குறள் திறன்-0042 குறள் திறன்-0043 குறள் திறன்-0044 குறள் திறன்-0045
குறள் திறன்-0046 குறள் திறன்-0047 குறள் திறன்-0048 குறள் திறன்-0049 குறள் திறன்-0050

காதல் வயப்பட்ட ஒருவனும் ஒருத்தியும் தம்முள் கலந்து கூடி வாழ்தல் இல்வாழ்க்கை என்பதாகும். அறநெறி கண்டுணர்த்திய வாழ்வியல் நெறியில் இல்லறநெறி தலையாயது. அன்பின் விரிவுக்கும் சமூக வரலாற்றின் நீட்சிக்கும் துணை செய்யக்கூடியது இல்வாழ்க்கையேயாம். இல்வாழ்க்கை அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமைகளைச் செய்யும் களமாகும்.
- குன்றக்குடி அடிகளார்

இல்லில் மனைவியோடு கூடி வாழ்தல் இல்வாழ்க்கை ஆகும். இது குடும்ப வாழ்க்கை என்றும் அறியப்படும். இல்வாழ்க்கை அதிகாரம் இல்வாழ்வார் வாழும் திறன் கூறுவது. அவரது கடமையும் பொறுப்பும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இல்வாழ்க்கையின் சிறப்பும் இல்வாழ்வார் மாண்பும் சொல்லப்படுகின்றன.

இல்வாழ்க்கை

இல்வாழ்க்கை அதிகாரம் மனைவி மக்களோடு குடும்பம் நடத்தி, அறம் செய்யும்முறையை விளக்குகிறது. இல்லாளோடு கூடி இல்லத்தை நடத்துவது இன்ப நுகர்ச்சிக்காக மட்டுமன்று. அது பலருக்கும் துணையாக நின்று உதவுதற்குரிய அறம் செய்வதற்கும் ஆகும். இன்பமும் அறமும் இணைந்ததே இல்வாழ்க்கையாகும். வீட்டிலிருந்து அறவாழ்க்கையை மேற்கொள்வதால் அது இல்லறம் எனப்படுகிறது. மாந்தர் தாம், தமக்கு எனத் தன்னலவாழ்வு வாழாமல் துணைவி, பிள்ளைகள், பெற்றோர், சுற்றம், விருந்தினர், வறியர், ஆதரவு நாடுவோர் முதலானோருக்காக மேற்கொள்ளும் அறவாழ்வே குடும்ப வாழ்க்கை அல்லது இல்லறமாம். இல்லறமே மற்ற வாழ்வு நெறிகளுக்கும் ஆதாரமாக உள்ளது. இல்லற வாழ்க்கையைச் சரியான முறையில் நடத்துவதற்கு பொறுப்பும் சகிப்புத் தன்மையும் மிகையாக வேண்டும். அதனால் இல்வாழ்வான் முயல்வாரு ளெல்லாம் தலையாவான்.

அதிகாரத்தின் முதல் மூன்று பாடல்கள் இல்வாழ்வார் கடமைகளைச் சொல்கின்றன. நான்காம் பாடல் அவரது பொறுப்புகளைக் கூறுகிறது. ஐந்தாவதும், ஆறாவதாகவும் அமைந்த குறள்கள் அறத்துக்கும் இல்வாழ்க்கைகுமுள்ள சிறந்த தொடர்புகளை விளக்குகின்றன. ஏழாம் பா இல்வாழ்வானது முயற்சியையும் எட்டாம் பா அவனுறும் துன்பங்களைப் பேசுகிறது. ஒன்பதாம் பாடல் அறமே இல்வாழ்க்கைதான் என்று சொல்கிறது. துறவு போன்ற வாழ்வுநெறிகள் பிறவற்றுள்ளும் இல்வாழ்வே ஏற்றமுடையது என்று 46, 47, 48, 49 ஆகிய பாடல்கள் நிறுவுகின்றன. இறுதிக் குறள் (50) இல்வாழ்க்கை மேற்கொள்பவன் தெய்வமாகவும் உயர்வான் என்று பகர்கிறது.

சமுதாயத்தில் குடும்பம் என்பது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு எனலாம். இவர்கள் நல்வழியில் நிற்றலுக்கு குடும்பத்தலைவனாக இல்வாழ்வான் துணையாயிருக்கிறான். அன்பும் அறமும் உடையது இல்லறம்; அன்பு என்னும் பண்பு உடைய குடும்பம் அறம் நிறைந்த பயனுடைய வாழ்வுநடாத்தும். இல்லறத்தில் இருப்போர் துறவிகள், பசித்திருப்போர், கைவிடப்பட்டவர்கள் ஆகியோரைப் பேணிக்காக்கின்றார்கள். இறந்த முன்னோர் நினைவுகளைப் பாதுகாப்பது, தெய்வ வழிபாடு செய்வது, விருந்தினர் மற்றும் சுற்றத்தார்களைக் காப்பாற்றுவது ஆகியவற்றை இவர்கள் கடமையாகச் செய்கிறார்கள். தன் குடும்பத்தின்மீது பழி ஏற்படாமல் காத்து, பகுத்துண்டு வாழ்கிறான் இல்வாழ்வான். அவன் இல்லறத்தின்படி குடும்ப வாழ்க்கையை நடத்துவதால் வேறு எந்த வாழ்வுநிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டியதில்லை; அங்குப் போய் பெறப்போவதும் இதனினும் மிக்கது ஒன்றுமில்லை. வாழும்நெறிப்படி இல்வாழ்க்கை மேற்கொள்பவன் தெய்வமாகவே உயர்ந்துவிடுவான். இவை இந்த அதிகாரம் தரும் செய்திகள்.

சில புரிதல்கள்

காமத்துப்பாலில் சொல்லப்பட்டதும் ஆண் பெண் இருவரும் சேர்ந்து வாழும் வாழ்க்கை பற்றியே என்றாலும் அது ஒருவர்க்கொருவர் செலுத்தும் அன்பு பற்றியது. அறத்துப்பாலின் இல்வாழ்க்கை அந்த இருவரும் மனம்ஒருப்பட்டு அவரது மக்கள், மாற்றார் முதலானவர்களுக்காக விட்டுக்கொடுத்து நடத்தும் அறம் சார்ந்த வாழ்க்கை பற்றியது.

வடநூலார் வாழ்வுநெறியை நான்காகப் (பிரம்மசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்) பகுத்துக் காண்கின்றனர். இந்நிலைகளுள் சந்நியாசத்தை மிகவும் உயர்த்திக் கூறுவர். ஆனால் வள்ளுவர் இல்நிலை-துறவு நிலை என்ற இரண்டு பகுப்பினையே குறளில் பேசுகிறார். துறவினும் இல்லறத்தாலே சமுதாயத்திற்குப் பயன் மிகுதி என்பதால் இல்லறமே சிறந்தது என்பதை இவ்வதிகாரத்தில் அவர் விளக்கியுள்ளார்.

அறஞ் செயல்முறையாக வடவர் கூறிய இஷ்டம், பூர்த்தம், தத்தம் இவற்றையே இல்வாழ்க்கை அதிகாரம் சொல்கிறது என்றும் இயல்புடைய மூவர் (குறள் 41) என்போர் நால்வகை ஆசிரமங்களில் கிருஹஸ்தர் தவிர்த்த ஏனைய மூன்று ஆசிரமத்தார் ஆவர் என்றும் 'ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை' (குறள் 43) என்ற பாடலில் நேரடியாகவே கிருஹதர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட 'பஞ்சமஹா யக்ஞம்' கருத்துக்கள் ஆளப்பட்டுள்ளன என்றும் சிலர் உரைத்தனர். இந்த அடிப்படையில் அதிகாரக் குறட்பாக்கள் நோக்கப்பட்டதாலே பல உரையாசிரியர்கள் பிழையான உரை கண்டனர். உலகப் பொருள் எல்லாம் எடுத்தோதப்பட்ட குறளில் வாய்ப்பாக இங்கொன்றும் அங்கொன்றும் சில கருத்து ஒற்றுமை இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் வள்ளுவர் வழி எப்பொழுதும் தனிச் சிறப்பானது. இந்தப் புரிதல் இருந்தால்தான் குறட்பொருளை அவர் அணுகிய நோக்கில் நன்கு புரிந்துகொள்ள முடியும். வடவரது தவம், துறவு, அவற்றிற்கான மெய்யியல் ஆகியன நம் மண்ணின் மரபிலிருந்து வேறுபட்டவை என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

இல்வாழ்க்கை அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 41 ஆம்குறள் அறம் குடும்பத்திலிருந்து தொடங்குகிறது என்பதைச் சொல்வது.
  • 42 ஆம்குறள் துறவியர், வறுமையாளர், ஆதரவற்றோர் ஆகியோர்க்கு இல்வாழ்வான் உதவ வேண்டும் என்கிறது.
  • 43 ஆம்குறள் குடும்பத்தை மேம்படச் செய்யும் ஐந்து கடமை நெறிகள் பற்றிக் கூறும் பாடல்.
  • 44 ஆம்குறள் பழி வராமல் பார்த்துக்கொள்வதும், பிறருடன் பங்கிட்டு உண்பதும், குடும்பம் நடத்துவனது பொறுப்புக்களாகும்.
  • 45 ஆம்குறள் அன்பு என்ற பண்பும் அறம் என்ற பயனும் உள்ளதாக இல்லறவாழ்வு விளங்கும் என்பதைச் சொல்வது.
  • 46 ஆம்குறள் அறவழியில் நடத்தப்படும் இல்வாழ்க்கை மற்ற எந்தவொரு வாழ்வு முறையினும் மேம்பட்டது என்னும் பாடல்.
  • 47 ஆம்குறள் இயல்பான வாழ்வு நடத்தும் இல்லறத்தான் வெற்றி வாழ்க்கைக்கு முயல்வோருள் சிறந்தவன் என்னும் பாடல்.
  • 48 ஆம்குறள் இல்வாழ்க்கை தவத்தினும் நோவுமிக்கது என்று சொல்லும் குறள்.
  • 49 ஆம்குறள் இல்லறமே நல்லறம் என்று கூறும் குறள் இது.
  • 50 ஆவதுகுறள் வாழும் முறைப்படி வாழும் இல்வாழ்வான் தெய்வமாக உயர்வான் எனக் கூறுவது.

இல்வாழ்க்கை அதிகாரச் சிறப்பியல்புகள்

இன்பம் நோக்கிய இல்வாழ்க்கை, அன்பால் தூண்டப்பட்டு அறத்தில் மலர வேண்டும் என்று எண்ணிய வள்ளுவர் "அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்று இல்வாழ்க்கையை இல்லறமாக்கினார். குடும்ப வாழ்க்கை குறிக்கோள் மிக்க வாழ்க்கை ஆனது. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (45) என்ற பாடல், அன்பு இல்வாழ்வின் பண்பு; அறம் தழைப்பது இல்வாழ்க்கையின் பயன் என்கிறது.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்? (46) என இல்வாழ்க்கையை அறவழியிற் செலுத்துபவனுக்கு, அறத்தாற்றிற்குப் புறமான பிற வழியில் சென்று வாழ்வதால், என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று இல்வாழ்க்கையினும் மிக்கது ஒன்றும் துறவில் இல்லை என்பதை ஓங்கி உரைக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற விருப்புடன் இயல்பான வாழ்வு நடத்தினால் அதுவே இல்லறத்தான் வெற்றி வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்கிறது இவ்வதிகாரத்து இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை (47) என்ற பாடல்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்னும் பாடல் இல்வாழ்க்கை எத்துணை மேலானது என்பதைத் தெளிவாக்குகிறது: குற்றமற்ற இல் வாழ்வு ஒன்றே போதுமானது; குடும்பச் சூழலில் வாழ்ந்தே, பொருளுரிமை ஏற்றும் இன்ப நுகர்ச்சி கொண்டும் மிக உயர்ந்த நிலையை ஒருவர் அடையலாம். தெய்வநிலை எய்துவது என்பது இயற்கை நிலைக்கு அப்பால் இருந்து பெறப்பட வேண்டியது அல்ல; இல்வாழ்க்கை மேற்கொண்டோர் தெய்வ நிலைக்கு உயரலாம் என்கிறது. இச்சீரிய சிந்தனை வேறெங்கும் காணப்படாதது ஆகும்.




குறள் திறன்-0041 குறள் திறன்-0042 குறள் திறன்-0043 குறள் திறன்-0044 குறள் திறன்-0045
குறள் திறன்-0046 குறள் திறன்-0047 குறள் திறன்-0048 குறள் திறன்-0049 குறள் திறன்-0050