இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0048ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:48)

பொழிப்பு (மு வ): மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

மணக்குடவர் உரை: பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவம் செய்வாரினும் வலியுடைத்து என்றவாறு.
ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்து என்றது.

பரிமேலழகர் உரை: ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து.
(பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: பிறரை நெறிப்படுத்தித் தானும் நெறிநிற்கும் இல்வாழ்வே தவத்தினும் ஆற்றல் உடையது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.


ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை :
பதவுரை: ஆற்றின்-நெறியின்கண்; ஒழுக்கி-ஒழுகப் பண்ணி; அறன் -நல்வினை; இழுக்கா-தவறாத; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை;
மணக்குடவர் குறிப்புரை: ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல்.
பரிதி: அறத்தின் மேலாகிய இல்லறத்தின்மேல் நின்று தருமத்தையும் கைவிடாதார்க்கு;
பரிமேலழகர்: தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை;
பரிமேலழகர் குறிப்புரை: பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார்.

இத்தொடரிலுள்ள அறனிழுக்கா இல்வாழ்க்கை என்பதற்கு அறத்தின் தவறாத இல்வாழ்க்கை என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் உரை பகன்றனர். ஆற்றின் ஒழுக்கி என்றதற்கு மணக்குடவர் 'பிறரையும் ஒழுகப் பண்ணி' என்று கூற பரிமேலழகர் தவம் செய்வாரை அவரவர் நெறியில் ஒழுகப் பண்ணி என்றார். பரிதி, யாரை ஒழுக்கி என்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை..

இன்றைய ஆசிரியர்கள் 'பிறரை அறநெறியில் நடத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்லறம்', 'முறைப்படி நடந்துகொண்டு தர்ம நியாயம் தவறாமல் குடும்பம் நடத்துகிறவன்', '(ஏனைய நிலையாரையுந் தத்தம்) நெறியிலே நிற்கச் செய்து (தானும்) அறநெறி நின்று நீங்காத (ஒருவனது) இல்வாழ்க்கையானது', 'இல்வாழ்க்கையில் செல்லாத பிறரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் தன் அறநெறியில் தவறான இல்லற வாழ்க்கை' என்றபடி உரை தந்தனர்.

பிறரை நெறியில் நடத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்வாழ்க்கை என்பது இத்தொடரின் பொருள்.

நோற்பாரின் நோன்மை உடைத்து:
பதவுரை: நோற்பாரின்-தவஞ்செய்வார் நிலையைக் காட்டிலும்; நோன்மை-விடாமுயற்சி; உடைத்து-உரிமையாகக் கொண்டது.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவம் செய்வாரினும் வலியுடைத்து என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது தவத்தினும் வலியுடைத்து என்றது.
பரிதி: பிரமசாரி, வானப்பிரத்தன், சந்நியாசி இம்மூவரும் நிகரல்லர் என்றவாறு.
பரிமேலழகர்: அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.

நோற்பார் என்பதற்குத் தவம் செய்வார் என்று பழைய ஆசிரியர்கள் பொருள் கொண்டனர். நோன்மை என்பதற்கு மணக்குடவர் வலி என்று பொருள் சொல்ல பரிமேலழகர் பொறை என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் ' தவஞ்செய்வான் நிலையினும் வலிமையுடையது', 'துறவுபூண்டு தவம் செய்கிறவர்களைவிடப் பொறுப்பும் சகிப்புத் தன்மையும் உடையவன்', 'தவஞ் செய்வாரது நிலையைப் பார்க்கினும் மிக்க பொறுப்புடையது', 'பற்றினைவிடத் தவம் செய்வார் நிலையினை விடத் தவச் சிறப்பு உடையது' என்றபடி பொருள் உரைத்தனர்.

நோன்பு செய்வார்க்கு உண்டாவதைவிட மிகையான வலி கொண்டது என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
இல்வாழ்க்கை தவத்தினும் நோவுமிக்கது என்று சொல்லும் குறள்.

ஆற்றின் ஒழுக்கித் தானும் அறநெறி பிறழாது நடத்துவானது இல்வாழ்க்கை, நோற்பார்க்கு உண்டாவதைவிட மிகையான வலி கொண்டது என்பது பாடலின் பொருள்.
ஆற்றின் ஒழுக்கியது யாரை?

ஆற்றின் என்ற சொல் (நல்)வழியின்கண் என்ற பொருள் தரும்.
ஒழுக்கி என்பது ஒழுகச் செய்து அல்லது ஒழுக்கநெறி நிற்க உதவி, நடத்தி; செலுத்தி என்றமையும்.
இழுக்கா என்ற சொல்லுக்கு வழுவா, தவறா, பிழையா என்பது பொருள்.
நோற்பார் என்றது தவம் செய்வாரைக் குறித்தது.
நோன்மை என்பதற்கு வலி, தவச்சிறப்பு, விடாமுயற்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, ஆற்றல் என்று பல பொருள் கொள்வர். நோவு அல்லது வலி என்பதே பொருத்தமான பொருள்.

யார் ஆற்றின் ஒழுக்கப்படுபவர்?

ஆற்றின் ஒழுக்கி என்ற தொடர்க்கு மணக்குடவர் பிறரையும் நன்னெறியில் ஒழுகப்பண்ணி என்று பொதுமையில் குறிப்பிடுகிறார்.
ஆனால் பரிமேலழகர் தவம் செய்வாரை தத்தம் நெறியில் ஒழுகப்பண்ணி என்று உரை செய்கிறார். பரிமேலழகர் உரையைப் பின்பற்றி பின்வந்த பலரும அதே கருத்தைத் தெரிவித்தனர்.
இன்றைய உரையாசிரியர்களில் சிலர், யாரையும் ஒழுகப் பண்ணுவது என்று கொள்ளாமல் 'ஆற்றொழுக்குப் போல' என்றும் 'ஆற்றைப் போல' என்றும் பொருள் கொண்டனர். நாமக்கல் இராமலிங்கம் 'ஆற்றொழுக்குப் போல' என்று பொருள் கண்டு ஆறு என்பது குறள் 43-இல் சொல்லியபடி ஐம்புலத்து ஆற்றை இக்குறள் குறிப்பிடுகிறது என்பார்.
பிறர் என்றும் தவம் செய்வார் என்றும் சொன்னவர்களே பெரும்பான்மையானோர். பிறர் என்ற கருத்து ஏற்புடையதே. இல்லறத்தான் தவம் செய்வாருக்கு நெறி காட்டுவது முறையாகும் என்று தோன்றவில்லை.
தம் இல்லில் உள்ளோரை நெறியிற் செல்வித்து என்பது இத்தொடர்க்குப் பொருத்தமான பொருளாகப்படுகிறது.

இல்லறம் நடத்துவது தவம் செய்வதை விட வலி அதாவது வேதனை மிகுந்தது என்னும் குறள்.

தவம் மேற்கொள்பவர்கள் உண்ணாமலும் உறங்காமலும் தன்னை வருத்திக் கொள்வர்; பசி, காமம், வெகுளி, முதலியவற்றைத் துறவிகள் அடக்கியாள்வர். அவர்கள் மிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையும் விடாமுயற்சியும் கொண்டவர்களாய் இருப்பர்.
குடும்ப வாழ்க்கையில் உள்ளோர்க்கும் தவம் செய்வாரது பண்புகள் எல்லாம் உண்டு வெளிப்பார்வைக்கு எளிதானதாகத் தோற்றம் தரும் இல்வாழ்வானுக்கு நேரிடும் துன்பங்கள், தடைகள், தோல்விகள் மிகப் பலவாகும். அவன் எதிகொள்ளும் இடர்கள், இன்னல்கள், தவம்செய்வார் தாங்குவனவற்றிலும் கூடுதலானவை. இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு, பொறுப்புணர்ச்சி மேலீட்டால், பொறுமை காத்து, இல்வாழ்க்கை நடத்துகிறான்.

'ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா' என்று சொன்னது இல்வாழ்வான் தானும் அறநெறியில் நின்று மற்றவர்களயும் நல்வழிப்படுத்துவதை உணர்த்துகிறது. நோன்மை என்பதற்கு நோவு அல்லது வலி என்று பொருள் கண்ட மணக்குடவர்.'நோற்பாரின் நோன்மை உடைத்து' என்பதற்கு 'தவம் செய்வாரினும் வலியுடைத்து' என்று உரை செய்தார். இதன் பொருள் தவம் செய்பவரை விட துன்பம் அடைகின்றனர் என்பது. இவ்வுரையே ஏற்றம் மிகுந்தது. (ஆனால் இவர் வலி என்று சொன்னதை மற்றவர்கள் வலிமை என்றும் ஆற்றல் என்றும் விள்க்கியுள்ளது ஏன் என்று தெரியவில்லை.) நல்வழியினின்று பிறழாமல் குற்றமற்ற இல்வாழ்க்கை நடத்தவும் பிறரை நெறிப்படுத்தவும் என்பதற்குப் பெருமுயற்சி தேவை.
இதனிடை சமூக பொருளாதார வழி உண்டாகும் அழுத்தங்களைத் தாங்கி குடும்பப் பொறுப்புகளை ஏற்று நடத்துகிறான அவன்.
மகனாக, கணவனாக, தந்தையாக, நண்பனாக, ஒப்புரவாளனாக என்று பல்வேறு சமூகப் பங்களிப்புச் செய்யக் கடமைப்பட்டவனாக இருக்கிறான். இயலபு வாழ்வு என்னும் அலைகளுக்கு நடுவில், நல்லொழுக்கம் கடைப்பிடித்து, பொறுமை காத்து, குடும்பம் என்னும் படகில் இல்வாழ்வார் பயணிக்கின்றனர்.

இல்லற வாழ்க்கை துறவு வாழ்வினும் வேதனை மிக்கதாகும்.
தவம் செய்வார் தம் தவம் நிறைவேறவேண்டும் என்றவரையில் மட்டுமே அவர்களது செயல்பாடுகள் இருக்கும். ஆனால் இல்லறத்தானுக்கோ தமக்கு ஏற்படும் உடல்வலியையும் மன உளைசலையும் பொறுத்துக் கொண்டும் பிறருக்கான கடமைச் சுமைகளையும் தாங்கிக்கொண்டு அவர்களது துன்பங்களையும் நீக்கி அவர்களை நெறிப்படுத்தும் கடமையும் உண்டு. இல்லறத்தாரின்றித் துறவறத்தார் வாழ்வது கடினம். ஆனால் இல்லறத்தார் துறவோர் உதவி நாடி நிற்பதில்லை. தவம் செய்வாரது விடாமுயற்சியைவிடக் கூடுதல் முயற்சி இல்லறத்தானுக்குத் தேவை.
தாம் மட்டும் நல்ஒழுக்கத்தின் பால் ஒழுகி நின்று விடாது பிறரையும் நெறிப்படுத்தும் இல்வாழ்வார் வாழ்க்கையின் வேதனை தவம் செய்வதில் உறும் துன்பத்தினும் மிகையாகும்.

பிறரை நெறியில் நடத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்வாழ்க்கை, நோற்பார்க்கு உண்டாவதைவிட மிகையான வலி கொண்டது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இல்வாழ்க்கை வாழ்வானது இன்னல் நிறைந்தது என்று சொல்லும் பாடல்.

பொழிப்பு

பிறரை நெறிப்படுத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்வாழ்க்கை தரும் நோவு, தவம்செய்வார்க்கு உண்டாவதைவிட மிகையானது.