இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0041இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:41)

பொழிப்பு:(மு வ) இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

மணக்குடவர் உரை: இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை.
(தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.

பரிமேலழகர் உரை: இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை- அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம்.
(இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.)

சி இலக்குவனார் உரை: இல்லற வாழ்க்கை (மனைவியோடு வாழும் வாழ்க்கை) உடையவன் என்று சொல்லப்படுபவன், அற இயல்பினை உடைய மூவர்க்கும் நல்வழியில் ஒழுகுவதற்கு நிலைபெற்ற துணையாவான். (மூவர்-மாணவர், தொண்டர், அறிவர்.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.


இல்வாழ்வான் என்பான்:
பதவுரை: இல்வாழ்வான்-இல்லற வாழ்க்கை நடத்துபவன்; என்பான்-என்று சொல்லப்படுபவன்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்)என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன்;
காலிங்கர்: மறைகளாலும் மற்றுள்ள நூல்களாலும் இல்வாழ்வான் என்று சொல்லப்படும் மரபினையுடையான் அவனே;
பரிமேலழகர்: இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்;
பரிமேலழகர் குறிப்புரை: இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது.

'இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன்' என்று பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லறத்தான்', 'இல்லறத்தான் எனப்படுபவன்', 'இல்லறத்தில் வாழுஞ் சிறப்புடையவன்', 'மனைவி மக்களோடு வாழ்ந்து குடும்பம் நடத்துகிறவன்' என்றபடி உரை தந்தனர்.

இல்லறத்தில் வாழ்வான் என்பது இத்தொடரின் பொருள்.

இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை:
பதவுரை: இயல்புடைய-(அறத்தோடு கூடிய) தன்மையுடைய; மூவர்க்கும்-மூன்று திறத்தார்க்கும்.நல்லாற்றின்-நல்ல நெறியின்கண்; நின்ற-நிலைபெற்ற; துணை-உதவி.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை.
மணக்குடவர் விரிவுரை: தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.
பரிதி: இயல்புடைய மூவராய பிரம்மசாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி என்கிற மூவர்க்குந் துணையாம் என்றவாறு.
காலிங்கர்: பிரம்மசரியம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்கின்ற மரபினையுடைய மூவர்க்கு வழிபாட்டின் தன்னிலை நின்ற துணை என்றவாறு.
பரிமேலழகர்: அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம்.
பரிமேலழகர் விரிவுரை: ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.

'பிரம்மசரியம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்கின்ற மரபினையுடைய மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மரபான மூவேந்தர்க்கும் நல்லாட்சிக்கு உற்ற துணையாவான்', 'மரபில் வந்த மூவேந்தர்க்கும் நல்லாட்சி புரிய உறுதுணையாவான்', 'பிற மூன்று அறநிலைகளில் நிற்பவர்க்கும் நன்மை பயக்கும் வழிகளில் உறுதியான உதவியாளனாவான்', 'சமுதாயத்திலுள்ள உறவினர், நண்பர்கள், எளியவர்கள் ஆகிய மூன்று இனத்தாருக்கும் நல்ல முறையில் உதவியாக இருப்பவன்' என்றபடி பொருள் உரைத்தனர்.

இயல்பினை உடைய மூவர்க்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
அறம் குடும்பத்திலிருந்து தொடங்குகிறது என்பதைச் சொல்லும் பாடல்.

இல்லறத்தில் வாழ்வான் இயல்புடைய மூவர்க்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் என்பது பாடலின் பொருள்.
யார் அந்த இயல்புடைய மூவர்?

இல்வாழ்வான் என்ற சொல் இல்லறத்தில் வாழ்வான் என்று பொருள்படும். குடும்பவாழ்க்கை நடத்துபவரை இது குறிக்கும்.
இக்குறளில் உள்ள 'நல்லாற்றின் நின்ற' என்ற சொற்றொடர்க்கு 'நன்னெறிக்கண் செலுத்துவதற்கு' என்பது பொருள்.
துணை என்பது ஆதரவு தருபவன் என்ற பொருளைத் தரும்.

யார் அந்த இயல்புடைய மூவர்?

இயல்புடைய என்பதற்குத் 'தவத்தின்பாற்பட விரதங்கொள்ளும் தவத்தை மேற்கொண்டு ஒழுகுகிற' என்கிறார் மணக்குடவர். 'இயல்புடைய' என்றே பரிது எழுத, 'மரபினையுடைய' என்பார் காலிங்கர். 'அறஇயல்பினையுடைய' என்பது பரிமேலழகரின் உரை. 'குணம் நிறைந்த' என்பர் திரு வி க. 'இயல்பாக நெறிப்பட வாழும்', 'இயல்பாகவே முறைமையோடு பொருந்திய', 'இயல்பாக உறவுடைய' என்பன மற்றவர்கள் தரும் பொருள் ஆகும்.

மூவர் யார் என்பது பற்றிப் பலரும் பலவிதமாகக் கருத்துக்கள் தெரிவித்தனர். இதற்குத் தொல்லாசிரியர்கள் அனைவரும் ஒரு திறத்தாகப் பொருள் கூற, இன்றைய ஆசிரியர்களில் பெரும்பான்மையோர் முற்றிலும் மாறுபாடான வேறுவேறு வகையாகப் பொருள் கூறினர்.

தொல்லாசிரியர்கள்- மணக்குடவர், பரிதி, காலிங்கர், பரிமேலழகர்- அனைவரும் இல்வாழ்வான் என்பவன் கிருஹஸ்தன் எனக் கூறி, மற்ற மூவராவர் பிரம்மசாரி, வனப்பிரஸ்தன், சந்நியாசி என்று கொண்டனர். அதைப் பின்பற்றியே பிற்கால உரையாசிரியர்களும் இன்றைய உரையாசிரியர்கள் சிலரும் உரை செய்தனர். இவ்வுரைகள் எல்லாம் வடநாட்டவர் பின்பற்றிய நான்கு வகை வாழ்க்கை நெறிக் கொள்கையைச் சார்ந்தனவாகும். வடவர் மனிதவாழ்வை நான்கு ஆசிரமங்களாகப் (ஆசிரமம்-வாழ்வு நிலை) பகுத்துப் புரிந்து கொள்கின்றனர். ஆசிரம முறையில் வாழ்வுமுறையைப் பிரித்துக் காணுதல் தமிழ் மரபன்று என்று இக்கால உரையாளர்களில் பெரும்பான்மையோர் ஆசிரமம் சார்ந்த இவ்விளக்கத்தை ஏற்க மறுத்தனர். குறளில் எங்குமே இந்நான்கு முறைகள் பேசப்படவில்லை; வள்ளுவர் வகுத்தது இல்லறம், துறவு என்ற இரண்டு வாழ்வு நெறி முறைகள்தாம் என்பர் இவர்கள்.
இக்குறளில் மூவரில் ஒருவராகத் துறவியைச் சொல்லிவிட்டதால், அடுத்து வரும் குறள் 42-இல் 'துறந்தார்' குறிப்பிடப்படுவதைக் கண்டு குழப்பமடைந்து அக்குறள் உரையில் 'துறந்தாரை' மூவருள் ஒருவராகவுள்ள சந்நியாசியினின்றும் வேறுபடுத்த மணக்குடவர் முயன்றுள்ளார். பரிமேலழகர்க்கும் அந்த குழப்பம் தோன்றியுள்ளது எனவே அடுத்த குறளில் உள்ள துறந்தார் என்ற சொல்லுக்கு வேறு ஒரு புதிய பொருள் காண்கின்றார். இக்குறளுக்கான பரிமேலழகர் உரையிலும் 'பிறமதம் (பிறர் கொள்கை) மேற்கொண்டு கூறினார்' என்ற குறிப்பு உள்ளது. முதல் இரண்டு குறட்பாக்களையும் சேர்த்து வாசித்தால், துறந்தார் இக்குறளில் இடம்பெறவில்ல என்பதை உணரமுடியும். வள்ளுவரது பகுப்பு இல்வழி-துறவுவழி என்ற இரண்டும்தான். எனவே அவர் பிறர் கொள்கையை இக்குறளில் சொல்லியிருக்கவில்லை.
வள்ளுவர் நால்வகை ஆசிரமநெறியை ஒப்பாதவர் ஆதலாலும் அடுத்த குறளில் 'துறந்தார்' என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டதாலும் மூவர் என்பது கிருகசாஸ்திரத்தில் சொல்லப்பட்ட பிரம்மசாரி, வனப்பிரஸ்தன், சந்நியாசி மற்ற மூவர் அல்லர் என்பது தெளிவு.

அடுத்த குறளிற் கூறப்படும் 'துறந்தார், துறவோர், இறந்தார்' என்போரே அந்த மூவர் என சிலர் கருத்துத் தெரிவித்தனர். 'இயல்புடைய மூவருள்' மறுபடியும் துறந்தாரை அவர் உள்ளடக்கிச் சொல்லியிருக்கமாட்டார். முற்குறளில் மூவர் எனத் தொகைப் பெயராற் குறித்துப் பின்னர் வகைப்படுத்திக் கூறுதல் வள்ளுவர்க்கு யாண்டும் வழக்கமின்று; இங்கு மட்டும் கூறுகிறார் எனிலோ, இக்குறளும் மூவர்க்கும் துணையாதலையே குறித்து ஒரே கருத்தைக் கூறியதாகக் கொள்ளப் பெறுதலின் பயன்கருதாது கூறியது கூறலாகும். ஆதலானும் இதுவும் பொருந்துவதன்று எனத் தோன்றுகிறது (ச தண்டபாணி தேசிகர்). எனவே இக்குறள் கூறுவது 'துறந்தார், துறவோர், இறந்தார்' என்போரும் அல்லர்.

மற்ற உரையாளர்களும் அறிஞர்களும் மூவர் யார் என்று கீழே கண்டது போல் பொருள் கூறினர்:
தமிழக மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திரு வி க, வ சுப மாணிக்கம், இரா சாரங்கபாணி, குழந்தை
இளையர், முதியோர், பெண்கள் ச தண்டபாணி தேசிகர்
உறவினர், நண்பர், ஏழைகள் நாமக்கல் இராமலிங்கம்.
கல்வி நிலை, மனைத் தவநிலை, துறவுநிலை நிற்பார் கா சுப்பிரமணியம் பிள்ளை
பார்ப்பான், அரசன், வணிகன் தேவநேயப் பாவாணர்
சைவர், வைணவர், வைதிகர் அல்லது அரசன், ஆசான், ஆன்றோர் மு கோவிந்தசாமி
அறவாழ்வை உள்நின்றியக்கும் அறவோர், பொருள் வாழ்வை உள்நின்று இயக்கும் ஒழுக்கத்து நீத்தார், இன்ப வாழ்க்கை இயக்கும் அந்தணர் கா அப்பாத்துரை
மாணவர், தொண்டர், அறிவர் சி இலக்குவனார்
தாய், தந்தை, தாரம் வ உ சிதம்பரம், இரா இளங்குமரன்
பெற்றோர், துணைவி, மக்கள் கு ச ஆனந்தன், நெடுஞ்செழியன், கலைஞர், சுஜாதா.

மேலே கண்ட பட்டியலிருந்து இவர்கள் உரை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பெரிதும் வேறுபாடுடையது என்பதை அறிய முடிகிறது. இக்குறளில் கூறப்பட்டுள்ள மூவர் யாவர் என்பதை நிறுவ அறிஞர்களும் ஆய்வாளர்களும் பெரிதும் முயன்றுள்ளனர். ஆனாலும் இக்குறள் சொல்லமைப்பு தடை உண்டாக்கியதால் எவராலுமே இவர்தான் மூவர் என்று முடிவாகச் சுட்டிக் கூற இயலவில்லை. .

மூவர் யார் என்பதற்கு பொருள் கண்டதில் கு ச ஆனந்தனின்:
"குடும்பத் தலைவன், பெற்றோர், துணைவி, மக்கள் ஆகிய இல்வாழ்க்கை இயல்புடைய முத்திறத்தார்க்கும் நன்னெறி நின்று பயன்தரும் துணையாவான்"
என்ற உரை பொருத்தமாகப்படுகிறது. இநத உரையில் மூவர் என்றதற்கு மூன்று பேர் எனக் கொள்ளாமல் முத்திறத்தார் எனக் கூறப்பட்டுள்ளது. தாயையும் தந்தையையும் தனித்தனியே கொள்ளாமல் எல்லா வகையிலும் இணையான பெருமையுடைய அவர்களைப் பெற்றோர் என ஒருதிறத்தாராக் கொள்ளப்பட்டது. மற்ற இரு திறத்தார் மனைவியும் மக்களும் ஆவர். எனவே இயல்புடைய மூவர் என்பவர் இல்வாழ்வானுக்கு இயல்பாகவே முறைமையோடு பொருந்திய, உரிமையால் இயல்பாக ஒன்றியவர்களான இம்மூன்று திறத்தார் என்பது ஏற்கத்தகும்.
இயல்புடைய அதாவது இயற்கையில் தொடர்புடைய மூவர் என்றால் இல்லத்திலேயுள்ள பெற்றோரும், துணைவியும், தாம் பெற்ற மக்கட் செல்வங்களும் ஆகும். உலகிற்குத் தம்மை அளித்த தாய்-தந்தையர், பின்னர் தம் வாழ்வில் இணையும் வாழ்க்கைத் துணை, மற்றும் இல்வாழ்வினால் அமையும் தம்முடைய மக்கள் எனப்பட்ட இந்த மூன்று உறவுகளும் இயல்பாக வந்து சேருவன என்பதால் இக்குறளில் குறிக்கப்பட்ட அந்த மூவர் பெற்றோர், துணைவி, மக்கள் என்று கொள்ளலாம்.

இல்வாழ்வானுக்குரிய அடிப்படையான கடமை ஒன்று இங்கு அறிவுறுத்தப்படுகிறது. இல்லற வாழ்க்கை நடத்துகிறவன் தன்னைச் சார்ந்தவர்களைப் பேணுதலும், அவர் நெறிப்பட வாழ்வதற்குத் துணை நிற்றலும் வேண்டும் என்பது அது.
இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் அவர்கள் நெறி தவறாமல் காக்கும் நிலையான துணையாவான். இம்மூவரும் ஒரு குடும்பத்தின் மூலக்கூறுகள் என்று அறியப்படுபவர்
இவர்களுக்கு இயற்கையாகவே இல்லறத்தான் உரிமையுடைத்தவனாக இருப்பதால், அறநெறியில் நின்று அவர்களை எந்நிலையிலும் எப்போதும் காத்து அவர்களுக்கு வழிகாட்டியாகவும் துணையாகவும் இருக்க வேண்டுமென எண்ணியே நல்லாற்றின் நின்ற துணை எனச் சொல்லப்பட்டது.

இக்குறள் மேலை நாடுகளில் வழக்கிலுள்ள 'Charity Begins At Home' என்ற முதுமொழியை நினைவுபடுத்தும். இதன் பொருள்: அறப் பணியின் தொடக்கம் தனது இல்லமே. அதாவது மற்றவர்களுக்கு உதவும் முன் தன்னுடைய குடும்பத்தை நினைக்க வேண்டும் என்பது.

இல்லறத்தில் வாழ்வான் இயற்கையாக உரிமை உடைய பெற்றோர், வாழ்க்கைத்துணைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இல்வாழ்க்கை வாழ்வானது இன்றியமையாக் கடமையை ஒன்றைச் சொல்லும் பாடல்.

பொழிப்பு

இல்லறத்தான் எனப்படுபவன் இயல்பினை உடைய மூவர்க்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான்.