இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0961 குறள் திறன்-0962 குறள் திறன்-0963 குறள் திறன்-0964 குறள் திறன்-0965
குறள் திறன்-0966 குறள் திறன்-0967 குறள் திறன்-0968 குறள் திறன்-0969 குறள் திறன்-0970

மக்கள் தம்முடைய வாழ்க்கைக்கு உயர்ந்த நோக்கங்களாகக் கொண்டுள்ள கொள்கைகளுக்குக் குறைவு வந்துவிடக் கூடாது என்று எண்ணுகிற உணர்ச்சிக்கு 'மானம்' என்று பெயர்.
- நாமக்கல் இராமலிங்கம்

நற்குடியில் உள்ளவர்களது இயல்புகளில் ஒன்றான பழிப்படுவ செய்யாமை அதாவது குன்றுவ செய்யாமை மானம் என்ற சொல்லால் குறிக்கப் பெறுகிறது. மானம் என்ற சொல் அளவு அதாவது ஒரு நிலையைக் கூறுவது. (அளக்கும் கருவி மானி என்று சொல்லப்படுவதை நினைக்க-வெப்பத்தை அளக்கும் கருவியை வெப்ப மானி என்கிறோம்) உலகோர் நிலையத்தனைக்கும் ஒப்பாய் நிற்றலையுணர்த்துவது. அதனால் தன்னிலையில் தாழாமை என்ற பொருளாயிற்று. எனினும் மானம் என்ற சொல் 'பெருமை' என்ற பொருளிலேயே பெரிதும் வழங்குகிறது. மானம் என்பது ஆழமான மதிப்புக் கோட்பாட்டில் சொல்லப்படுவது. மானம் அதிகாரம் கொள்கைப் பிடிப்போடு, மதிப்பு கெடாதவாறு, வாழ்தல் பற்றியும் மானமா உயிரா என்ற நிலை வருகையில் மானம் காப்பதற்காக அவ்வாழ்வைத் துறப்பது பற்றியும் கூறுகிறது.

மானம்

'மானமாவது எக்காலத்தினும் தமது நிலைமையில் திரியாமை. இது, தமது தன்மை குன்றுவன செய்யாமையும். இகழ்வார்மாட்டுச் செல்லாமையும், இளிவரவு பொறாமையும் என மூன்று வகைப்படும்' என மானத்துக்கு விளக்கம் தருவார் மணக்குடவர். ஒருகால்‌ தம்‌ நிலையில் தாழ்ச்சி வருமானால்‌ மானமுடையார் உயிர்‌ வாழாது மாள்வர்‌. தன் மதிப்பில் குறையாத தன்மையாகிய மானம் என்னும் வாழ்வியல் கூறு 'பேராண்மை', “நிலை', 'பெருந்தகைமை' என வரும்‌ சொற்களாலும் இவ்வதிகாரத்தில் உணர்த்தப்படுகின்றது.
'மானம்' என்பதற்கு, அளவு என்று கூறுதல்‌ உண்டு. நெல், உளுந்து போன்ற தானியங்களை அளக்கப் பயன்படுத்தப்படும் படி, மரக்கால் என்ற அளவைக் கருவிகள் மானம் என வழங்கப்படுகின்றன. மனிதப்‌ பிறப்பு இன்ன செயல்களைச்‌ செய்துதான்‌ வாழவேண்டும்‌ என்று அளவு மரபாகத் தொடர்ந்து வருகிறது. அவ்விதம் வாழ்வதில் ஒரு மதிப்பு உண்டாகிறது. அதுவே மானம்.
இன்றைக்கு மானம் என்பது வெட்கம், நாணம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. மானக்குறைவு ஏற்படுவதை அவமானம் என்ற சொல்லாலும் மானஉணர்ச்சி உடையவனை மானஸ்தன், மானி என்றும் குறிப்பிடுகின்றார்கள். தன்மானம் என்ற சொல்வழக்கும் மானம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.
மானத்தை மறைப்பதற்காகவும் காப்பதற்காகவும் ஆடை உடுத்துகிறோம் என்று சொல்கிறோம். மோசமான உடையால் மானம் காற்றில் பறக்கிறது என்போம். வள்ளுவரும் ஆடைகொண்டு உடலை மறைப்பதை அற்றம் மறைத்தல் (846) என்றும் உடுக்கை இழந்தவன் கைபோல.. (788)என்று மானம் காத்தலையும் குறித்துள்ளார். ஆனால் அந்த மானத்திற்கும் இங்கு சொல்லப்படும் மானத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
குறளில் இதற்கு முந்தைய குடிமை அதிகாரத்தில் ................குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் (954) என்ற பாடலில் சொல்லப்பட்ட குன்றுவ செய்தல் இல்லாமை என்ற குடிமைப் பண்பின் விரிவாகவே மானம் என்ற அதிகாரம் படைக்கப்படுகிறது.

உணவு தேடல். இணை விழைச்சு, பகையிடமிருந்து தற்காப்பு இவற்றிற்காக ஒருவரோடொருவர் போட்டியிட்டுக்கொண்டு மாந்தர் வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்த எல்லையைக் கடந்து, அறிவும் உணர்வும் மிகுந்த மாந்தர் வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்களை வைத்துக்கொண்டுப் போராடுகின்றனர். அந்நிலையில் உணவு முதலிய தேவைகளைப் பொருட்படுத்தாமல் கொள்கைகளைப் போற்ற முற்படுவார்கள்; அதாவது, உயிர் வாழ்க்கையின் அடிப்படைகளைப் பற்றிக் கவலைப்படாமல், உயர்ந்த கோட்பாடுகளிலிருந்து பிறழாமல், அவற்றைக் காக்கப் பாடுபடுவர். அவர்களது கொள்கைகளை இழக்கும் நிலை வந்தால், உயிரை ஈயவும் தயங்கமாட்டார்கள். இத்தகைய மானம் உடையவர்களல்தான், மக்கள் வாழ்க்கை பெருமையுடையதாக விளங்குகின்றது; உணவு போன்ற சிறுமைப் போராட்டத்தைக் கடந்து சிறப்புற வேண்டுமானால், குடிமக்களுக்கு மான உணர்ச்சி வேண்டும் என்று வள்ளுவர் இங்கே அது பற்றிப் பேசுகிறார். மானம் உடையவர்களிடத்திலேயே பெருந்தன்மை, சான்றாண்மை, பண்புடைமை, நாணுடைமை முதலிய உயர்ந்த பண்புகளும் தங்கும்.
'பழியெனின் உலகுடன் பெறினும்' வேண்டாத மானம் மிக்கவர்களாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள் எனப் பழம்பாடல் வழி அறிகிறோம்.

நாமக்கல் இராமலிங்கம் 'மக்கள் தம்முடைய வாழ்க்கைக்கு உயர்ந்த நோக்கங்களாகக் கொண்டுள்ள கொள்கைகளுக்குக் குறைவு வந்துவிடக் கூடாது என்று எண்ணுகிற உணர்ச்சிக்கு 'மானம்' என்று பெயர். உதாரணமாக ஒரு வீரனுக்குத் தோல்வி அடையாமல் இருப்பது மானம். ஒரு பெண்ணுக்குக் கற்பு கெடாமல் இருப்பது மானம். ஒரு ஈகைக்குணம் கொண்டவர்க்கு 'இல்லை'யென்று சொல்லாதிருப்பது மானம்; எப்பொழுதும் உண்மையே பேசுபவனுக்குப் பொய் சொல்லாமல் இருப்பது மானம் என்பன போன்றவை. பொதுவாக 'மானம்' என்பது பிறர் பழிப்புக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சி' என மானத்தை விளக்குவார்.
'மானம் உடையவர் தன்னலம் குறைந்தவராக இருப்பர்; தன்னல உணர்ச்சியை மானம் என்று கூறுவது பொருந்தாது. எனவே மானம் என்பது தன்குடி, தன்நாடு முதலியவற்றின் பெருமையையும், உலக வாழ்க்கைக்கு அடிப்படையான உயர்ந்த கொள்கைகளின் பெருமையையும் காக்கப் பயன்படுவதே அல்லாமல், தன்னல அடிப்படை கொண்ட தன்பழி, தன்புகழ், தன்ஆக்கம், தன்கேடு என்பவற்றைப் பொருளாகக் கொள்வது அன்று. தன்னைவிடத் தன் குடி பெரியது. அதைவிட நாடு பெரியது, அதைவிட உலகம் பெரியது, அதைவிட உலக வாழ்விற்கு அடிப்படையான ஓப்புரவு பெரியது என்று எண்ணுவதே மானமாகும்; இந்த உண்மையை உணர்ந்தே திருவள்ளுவர் பொதுவாழ்வைக் கூறும் பொருட்பாலில் மானத்தைப் பற்றி விளக்கியுள்ளார்' என்பார் மு வரதராசன்.

நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மானம் என்னும் பண்பை ஒரு மதிப்புமிக்க உடைமையாகக் கருதி வாழ்வார்கள். மானம் அழிய வந்த இடத்து அதனை உயிரினும் மேலாகக் கருதுவார். மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு தம் உயிரையும் விட்டு விடுவர்.
உயிர் இனியது. மாந்தர்க்குச் சாதலின் இன்னாததில்லை..... (230); உயிரை இழப்பது பொல்லாத துன்பமாகும். ஆயினும் உயிரைக் காக்க மானத்தை இழப்பது அறம் ஆகாது. மக்கள் ....உயிர் நீப்பர் மானம் வரின் என இங்கு சொல்லப்படுகிறது.
இரத்தலால் ஒருவனுடைய மானம் அழியும், மானம் என்னும் பெருந்தகைமையின் சிறப்பு கெட நேர்ந்தபோது, அவனது உடலை மட்டும் (இரத்தலால்) பேணிக்காத்து வாழ்வதும் ஒரு வாழ்க்கைதானா? எனக் கேட்கிறது இவ்வதிகாரத்துப் பாடல் ஒன்று.

கண்ணகியின் தோற்றத்தைக் கண்டதுமே, பாண்டியன் நெடுஞ்செழியன், தான் கோவலனுக்கு சாவுத் தண்டனை வழங்கியது குற்றம் என உணர்ந்தான்; அரசவையில் அவள் தன்னிடமுள்ள மற்றொரு காற்சிலம்பைத் தெறிக்கவிட்டு உண்மையைப் புலப்படுத்தியதும் தன் குலத்தின் மானம் போய்விட்டதே எனத் தன் உயிரை அவ்விடத்திலேயே நீத்தான்.
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போரில் தோல்வி அடைந்து சிறையிலிடப் பெறுகிறான். தனக்கு ஏற்பட்ட நீர்வேட்கை மிகுதியால் சிறைக்காவலரை நீர் தருமாறு கேட்கிறான். அவர்கள் காலந்தாழ்த்தி நீர் தருகின்றார்கள். அதை மானத்திற்குப் பெரும் இழுக்காகக் கருதினான். அதனால் நீரை அருந்தாமல் உயிர் துறக்கிறான் சேரமன்னன் இரும்பொறை.
இந்நிகழ்ச்சிகள், மானத்திற்கும் - மானத்தோடு வாழ்வதற்கும் மன்னர் உட்பட்ட நம் முன்னோர், எத்தகைய சிறப்பிடம் கொடுத்திருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

மானம் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 961ஆம் குறள் செய்தே ஆகவேண்டிய சிறப்புடைய செயல்களாயினும் மானம்கெட வருவனவற்றைச் செய்தலை விடுக என்கிறது.
  • 962ஆம் குறள் புகழோடு மானம் காத்தலையும் விரும்புபவர் புகழ் மிகுதி உண்டாகுமென்றாலும் நேர்மையற்ற செயல்கள் ஆற்ற மாட்டார்களே எனச் சொல்கிறது.
  • 963ஆம் குறள் வளமான காலத்தில் பணிதல் வேண்டும்; வளம் மிகக்குறைந்த காலத்தில் பெருமித உணர்வு கொள்ள வேண்டும் என்கிறது.
  • 964ஆம் குறள் மக்கள் மானம் என்ற உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்தபோது தலையிலிருந்து வீழ்ந்த மயிர் போல்வர் என்கிறது.
  • 965ஆம் குறள் தமது மானம் குறைதற்கு ஏதுவாகிய சிறுமையை குன்றிமணியளவு செய்யினும் மலை போன்ற உயர்வுடையாரும் தாழ்வர் எனச் சொல்கிறது.
  • 966ஆம் குறள் தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது புகழ் இல்லை; நல்வினைப் பயனும் கிடையாது; பின் எதற்கு? என்கிறது.
  • 967ஆம் குறள் தன்னை இகழும் பகைவர் பின்னே சென்று ஒருவன் வாழ்க்கை நடத்துவதைவிட மானம் நின்ற நிலையிலேயே கெட்டான் என உரைக்கப்படுவது நல்லது எனச் சொல்கிறது.
  • 968ஆம் குறள் மானத்தின் ஏற்றம் அழிய வந்தவிடத்து உடலை வளர்ப்பது வாழ்வுக்கு மருந்தாகுமா? எனக் கேட்கிறது.
  • 969ஆம் குறள் மயிர் நீங்கின் உயிர்வாழ முடியாத கவரிமாவைப் போன்றோர் மானத்துக்கு கேடு நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர் என்கிறது.
  • 970ஆவது குறள் பெருமைக்கு இழிவுவந்தபோது உயிர் வாழாத மானமுடையவரது புகழ் விளங்கும் தோற்றத்தை நினைந்து உள்ளத்தால் புகழ்ந்துரைப்பர் உலகோர் என்கிறது.

மானம் அதிகாரச் சிறப்பியல்புகள்

அது இல்லாது அமையாது எனத்தக்க சிறப்பைக்கொண்டதென்றாலும், மானம் கெடுவதால் வருவது என்றால் அதைச் செய்யாது விடுக என்கிறது இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் (961) என்னும் குறள். குன்றிமணி அளவேனும் பெருமை குன்ற வருவன செய்யக்கூடாது என்பது வள்ளுவம்.

தலையிலிருந்து விழுந்த முடிக்கு என்ன மதிப்பு இருக்கும்? ஒன்றுமேயில்லை. யாருமே அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். அதுபோலவே மக்கள் தம் நிலையிலிருந்து தாழ்ந்துவிட்டவரும் மதிப்பிழந்து செல்லாக் காசு ஆகிவிடுவர் என்கிறது தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை (964) என்னும் குறள்.

ஒருவன் எப்பொழுதும் உன்னை மதிப்பதில்லை; உடன் சேர்த்துக்கொள்வதுமில்லை. ஆனாலும் அவனை நம்பித்தான் உன் வாழ்வியல் உள்ளது என்ற நிலை வந்தால் அவனுடன் செல்லாமல் நல்லநிலையிலே கெட்டழிந்தான் எனச் சொல்லப்படுதல் நல்லது என்று ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று (967) என்னும் பாடல் சொல்கிறது. தன்னை இகழ்வார்பின் செல்வது மானங்கெட்ட செயல் என்பது இது.

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு (970) என்ற குறள் பொதுவாழ்வில் உள்ளவர் பற்றியதாக உள்ளது. உயர்ந்த கொள்கைகளுக்காக வாழும் அவர் தான் கொண்ட பெருநோக்கிற்கு இழிவு வந்தபோது அதைக் காக்க முடியாத நிலையில் தன் உயிரை மாய்த்துக்கொள்வார்; அவரை உலகோர் உள்ளத்தால் வாழ்த்தி வணங்குவர் என்கிறது.




குறள் திறன்-0961 குறள் திறன்-0962 குறள் திறன்-0963 குறள் திறன்-0964 குறள் திறன்-0965
குறள் திறன்-0966 குறள் திறன்-0967 குறள் திறன்-0968 குறள் திறன்-0969 குறள் திறன்-0970