இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0967



ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

(அதிகாரம்:மானம் குறள் எண்:967)

பொழிப்பு (மு வரதராசன்): மதியாதவரின் பின்சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

மணக்குடவர் உரை: ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று.

பரிமேலழகர் உரை: ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று - அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று.
(ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு, அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது.)

குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவனுக்குத் தன்னை ஒட்டி உறவு கொள்ளாது இகழ்வார் பின் வாழ்வதை விட, அவன் கெட்டுப்போனான் என்ற சொல்லோடு வாழ்தல் நன்று. விரும்பி உறவு கொள்ளாது இகழ்வாரின் பின் செல்வதில் என்ன பயன்? ஒன்றுமில்லை. மானமிழப்பது தான் மிச்சம். 'கெட்டான்' பொருள் முதலிய வளத்தில் குன்றிப் போன நிலை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று.

பதவுரை: ஒட்டார்-பகைவர், (எவ்வகையினும்) பொருந்தாதவர், சேர்த்துக் கொள்ளாதவர், அவமதிப்பவர்; பின் -பின்னே, பின்னால்; சென்று-போய்; ஒருவன்-ஒருவன்; வாழ்தலின்-வாழ்க்கை நடத்துவதைக் காட்டிலும்; அந்நிலையே-அந்த நிலையிலே; கெட்டான்-கெட்டுப்போனான்; எனப்படுதல்-என்று சொல்லப்படுதல்; நன்று-நன்மையுடையது.


ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின்;
பரிப்பெருமாள்: ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் அவ்வாழ்க்கையின்;
பரிதி: சத்துருவின் பின்சென்று வயிறு வளர்ப்பதில்;
காலிங்கர்: குடிமரபாளன் தனக்கு மானக்கேடாம். மற்று இன்னாதார் பின்சென்று உயிர் வாழ்தலின்;
பரிமேலழகர்: தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்;
பரிமேலழகர் குறிப்புரை: ஒட்டுதல் - பொருந்துதல்.

'தன்னை இகழ்வார்/சத்துருவின்/இன்னாதார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவருக்குப் பின்போய் வாழ்ந்தான் என்பதினும்', 'ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று மானங்கெட்டு வயிறு வளர்ப்பதிலும்', 'ஒருவன் தன்னுடைய பகைவரிடத்தில் அடங்கி மானமின்றி வாழ்க்கை நடத்துவதைவிட', 'தன்னை இகழும் பகைவர் பின்னே சென்று ஒருவன் வாழ்தலைவிட' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன்னை இகழும் பகைவர் பின்னே சென்று ஒருவன் வாழ்க்கை நடத்துவதைவிட என்பது இப்பகுதியின் பொருள்.

அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று.
பரிப்பெருமாள்: அவர்பால் செல்லாத அந்நிலையிலே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் இம்மை மறுமையில் பயன்படாது என்றார்; அஃது எற்றுக்குப் பொருள் பயக்குமே என்றாற்குக் கூறப்பட்டது. இவை, இரண்டும் இகழ்வார்பால் சேறல் ஆகாது என்பது கூறிற்று. [எற்றுக்கு - எதற்கு]
பரிதி: அன்றே கெட்டான் என்பது நன்று என்றவாறு.
காலிங்கர்: அப்பொழுதே மானித்து இறந்து பட்டான் என்று பலராலும் எடுத்துரைக்கப்படுதல் சால இனிது; மற்று அதுதான் வந்து எய்துமாயின் என்றவாறு.
பரிமேலழகர்: அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு, அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது. [புத்தேள் நாடு- வானுலகம்]

'அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மானத்தோடு கெட்டான் என்பது நல்லது', 'மானத்தோடு அவன் அந்நிலையிலேயே மாய்ந்தொழிந்தான் எனக் கூறப்படுதல் நல்லது', 'அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டபோதே இறந்துபோவது நல்லது', 'துன்பம் வந்த அப்போதே இறந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மானம் நின்ற நிலையிலேயே கெட்டான் என உரைக்கப்படுவது நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒட்டார் பின்னே சென்று ஒருவன் வாழ்க்கை நடத்துவதைவிட மானம் நின்ற நிலையிலேயே கெட்டான் என உரைக்கப்படுவது நல்லது என்பது பாடலின் பொருள்.
'ஒட்டார்' யார்?

துன்பமுற்றாலும் மானத்துடன் வாழவேண்டும்.

தன்னை மதித்துத் தம்முடன் சேர்த்துக்கொள்ளாதவர் பின் சென்று வாழ்வதைவிட மானத்துடன் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது. தன்னிடம் பகைபாராட்டி வெறுத்துப் புறக்கணிப்பவர்பின் சென்று கெஞ்சி வாழுவதைவிட, தான் இருந்த துன்ப நிலையிலேயே மானத்துடன் வாழ்ந்தான் என்று பெயர்பெறுவது நன்று. எதற்காக அவரிடம்போய் ஒட்டிக்கொண்டு வாழவேண்டும்? பொருள் பெறுவதற்கா? பொருள் செய்வதற்கு ஊரிலே உலகத்திலே ஓராயிரம் தொழில்கள் உண்டு.
நாம் உலகில் உயிர்வாழும் காலத்தில் நம் மானத்துக்கு ஊறுநேராதவாறு போற்றிக் கொள்ளவேண்டும் என்பது ஒருவரது வாழ்வின் நோக்கமாக இருக்கவேண்டும். முயற்சி ஏதும் செய்யாமல், உள்ளம் போற்றாமல், உயிரைக் காத்துக் கொள்பவன் என அறியப்படுதலினும் மானத்துடன் வாழ்ந்து கெட்டான் எனப்படுதல் நன்று என்கிறார் வள்ளுவர்.
மானம் கெட வாழும் வாழ்க்கையை வள்ளுவர் வெறுக்கிறார். வறுமையைத் தீர்ப்பதற்காக இகழ்வான வாழ்க்கை வேண்டாம் எனக் கூறுகிறார். வேறுவழி ஒன்றும் தெரியாமல், தன்னோடு பொருந்தாமல் எஞ்ஞான்றும் மதியாமல் இகழ்கின்றவரை நாடி அவர் பின்சென்று, தந்நிலையில் தாழ்ந்து, உயிர்வாழ்வதைவிட மானம்காத்து வாழ்ந்தான் என்று உலகம் சொல்லுமாறு அழிவதே நல்லது.

அந்நிலையே என்றது மானம் நின்ற நிலையிலேயே அதாவது துன்பமுறும் நிலையிலும் மானம் கெடாது என்ற பொருளில் ஆளப்பட்டது. தன்னை ஆகாதவர் என்று கருதும் பகைவரை அண்டி ஒருவர் வயிறுவளர்ப்பதினும், அத்தகைய இழிநிலைக்குச் செல்லாமல் மானமுள்ள அந்த நிலையிலேயே ஒருவன் துன்பநிலை எய்தி உருக்குலைந்துவிட்டான் என்றறியப் படுதலே பெருமை படைத்தவர்க்கு நன்றாகும்.
சேரமன்னன் ஒருவன் போரில் தோல்வியுற்று சிறையில் அடைக்கப்பட்டபின், உண்ணுநீர் ஆயினும் பகைவரிடமிருந்து இரந்து பெறுதலைத் தனது மானத்திற்கு இழுக்காகக் கருதினான் என்னும் வரலாற்று உண்மையைப் புறநானூற்று பாடல் ஒன்றின்மூலம் அறிகிறோம். சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போர்செய்து தோல்வி அடைந்து சோழனால் சிறையிலிடப் பெறுகிறான். சிறையில் தனக்கு ஏற்பட்ட நீர்வேட்கை மிகுதியால் காவலரை நீர் தருமாறு கேட்கிறான். அவர்கள் காலந்தாழ்த்தி சில நாழிகை கழித்துக் நீர் கொணர்ந்து தருகின்றார்கள். அந்த மானக்கேட்டைப் பொறாத சேரமன்னன் இரும்பொறை நீரை அருந்தாமல் உயிர் துறக்கிறான். அப்பாடல்:
குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆஅள்அன்று றென்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே.
(புறநானூறு 74 பொருள்: அரசராயினார், குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும் இவை வாள் வாய்ப்பட்டு இறந்தாலன்றி நலமின் றெனக் கருதி அவற்றையும் வாளாற் போழ்ந்து அடக்கம் செய்வர்; அக் குடி யிற் பிறந்த யான் சிறைப்பட்டுக் கிடந்து உயிர் நீத்தல் தீது; இத்தகைய மறக் குடியினரான எம் பெற்றோர் பகைவர்பால் உணவிரந்துண்டு உயிர் வாழு மாறு மக்களைப் பெறார் காண்)

'ஒட்டார்' யார்?

'ஒட்டார்' என்ற சொல்லுக்குத் தன்னை இகழ்வார், சத்துரு, இன்னாதார், பொருந்தாதார், மதியாதவர், தன் பகைவர், தன்னை ஒட்டி உறவு கொள்ளாது இகழ்வார், உள்ளத்தோடு ஒட்டாத பகைவர், தன்னோடு இணக்கமில்லாதவர், தன்னை இகழும் பகைவர், தன்னை மதித்துத் தம்முடன் சேர்த்துக்கொள்ளாதவர், தன் நிலைக்குத் தாழ்ந்தவரும் தன்னோடு மனம் ஒன்றுபடாதவருமானவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஒட்டார் என்பதற்கு பகைவர் என்றே பலர் பொருள் கூறினர். சிலர் குறள் 966-இல் சொல்லப்பட்டதுபோல் அச்சொல்லுக்கு இகழ்வார் எனவே பொருள் செய்தனர். நாமக்கல் இராமலிங்கம் 'முன் குறளில் சொல்லப்பட்ட 'இகழ்வார்' என்பவர் வெறும் அவமதிப்பாகப் பேசுவதும் நடப்பதும் மட்டும் செய்கிறவர்கள். இந்தக் குறளில் சொல்லப்படுகிற 'ஒட்டார்' என்பவர் அழித்துவிடவும் விரும்பக் கூடியவர்கள். 'இகழ்வார்பின் சென்று' வாழ்வதைக் காட்டிலும் 'ஒட்டார் பின் சென்று வாழ்வது மிகவும் மானங் கெட்ட காரியம் என்பதைக் குறிக்கவே இறந்து போவது நல்லது என்றார். 'அந்நிலையே' என்பதற்கு அப்படி ஒரு நிலைமை உண்டானால் அப்பொழுதே என்பது பொருள். அதாவது பகைவனுக்கு அடங்கி அவன் சொன்னபடி கேட்டால்தான் உயிர் வாழலாம் என்ற நிலைமை ஏற்பட்டால்- என்பது குறிப்பு' என விளக்கவுரை தந்து 'ஒருவன் தன்னுடைய பகைவனுக்கு அடங்கி மானத்தை விட்டு உயிரோடிருப்பதைக் காட்டிலும் இறந்து போவது புகழுடையது' என முடிக்கிறார். இவ்வுரை ஒட்டார் என்பதற்குப் பகைவர் எனப்பொருள் கூறி பகைவர்பின் சென்று வாழ்தல் பெரிதும் மானக்கேட்டிற்குரியது எனச் சொல்வதால் அழுத்தமான கருத்தைத் தருகிறது.

'ஒட்டார்' என்ற சொல் பகைவர் எனப்பொருள்படும்.

தன்னை இகழும் பகைவர் பின்னே சென்று ஒருவன் வாழ்க்கை நடத்துவதைவிட மானம் நின்ற நிலையிலேயே கெட்டான் என உரைக்கப்படுவது நல்லது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மானம்கெட பகைவர் பின் பணிந்து செல்லவேண்டாம்.

பொழிப்பு

தன்னை இகழும் பகைவர் பின்போய் ஒருவன் வாழ்வு நடத்துவதைவிட மானம் நின்ற நிலையிலேயே கெட்டான் எனக் கூறப்படுதல் நல்லது.