இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0970



இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு

(அதிகாரம்:மானம் குறள் எண்:970)

பொழிப்பு (மு வரதராசன்): தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏத்தி நிற்பார்கள்.

மணக்குடவர் உரை: இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழைத் தொழுது துதிக்கும் உலகு.

பரிமேலழகர் உரை: இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகு - எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார்.
('புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி - எய்துவர,' (புறநா.27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: இழிவு நேர்ந்தால் சாகும் மானமுடையவரின் புகழ் விளக்கை உலகம் தொழுது போற்றும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி தொழுது ஏத்தும் உலகு.

பதவுரை: இளி-இழிவு, மானக்கேடு; வரின்-வந்தால்; வாழாத-உயிர் வாழாத; மானம்-நிலையில் தாழாமை; உடையார்-உடையவர்; ஒளி-புகழ்; தொழுது ஏத்தும்- வணங்கிப் போற்றும். உலகு-உலகம்.


இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழை;
பரிப்பெருமாள்: இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழை;
பரிதி: ஒரு மான ஈனம் வந்தால் உயிர்விடுவார் புகழை;
காலிங்கர்: (8) ......................................இவரது பெருமை விளங்கும் தோற்றம் குறிக்கொண்டு;
பரிமேலழகர்: தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; [அதனை நீத்த - உயிரினைத் துறந்த]

'இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தமக்கு இழிவுவரின் உயிர்வாழாத மானமுடையவரது புகழ் வடிவத்தை', 'மானக்கேடு உண்டானால் உயிரைத் துறந்து விடுகிற மானிகளுடைய பெருமையை', 'மானக்கேடு வந்தவிடத்து உயிர்வாழ மாட்டாதாருடைய புகழ்வடிவத்தை', 'தமக்கு இழிவுவந்தபோது உயிர் வாழாது அதனை விட்ட மானமுடையாரது புகழ்வடிவினை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெருமைக்கு இழிவுவந்தபோது உயிர் வாழாத மானமுடையவரது புகழ் விளங்கும் தோற்றத்தை நினைந்து என்பது இப்பகுதியின் பொருள்.

தொழுது ஏத்தும் உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தொழுது துதிக்கும் உலகு.
பரிப்பெருமாள்: தொழுது துதிக்கும் உலகு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் சாவார் என்றதனால் பயன் என்னை என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: உலகத்தார் ஏத்துவர் என்றவாறு.
காலிங்கர்: உள்ளத்தால் புகழ்ந்துரைப்பர் உலகத்தோர் என்றவாறு,
பரிமேலழகர்: எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். [துதியாநிற்பர்-வழிபடுவர்]
பரிமேலழகர் குறிப்புரை: 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி - எய்துவர,' (புறநா.27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது. [துறக்கச் செலவு- சொர்க்கத்தை அடைதல்]

'தொழுது துதிக்கும் உலகு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகோர் கைகூப்பித் தொழுது போற்றுவர்', 'உலகம் வாழ்த்தி வணங்கும்', 'உலகத்தவர் வணங்கிப் போற்றுவர்', 'எப்பொழுதும் உலகு தொழுது போற்றும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உள்ளத்தால் புகழ்ந்துரைப்பர் உலகோர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெருமைக்கு இழிவுவந்தபோது உயிர் வாழாத மானமுடையவரது ஒளியை நினைந்து உள்ளத்தால் புகழ்ந்துரைப்பர் உலகோர் என்பது பாடலின் பொருள்.
'ஒளி' குறிப்பது என்ன?

மானத்துக்காக உயிரை விட்டவரை உலகம் நினைந்துகொண்டேயிருக்கும்.

பெருமைக்கு இழிவு நேர்ந்தவிடத்து உயிர் வாழாத மனமுடையவரின் புகழை உலகத்தார் வணங்கிப் போற்றுவர்.
இளிவு வரின் என்பது இழிவு வரின் எனப்பொருள்படும். அது நிலையிலிருந்து தாழ்வு உண்டாவதைச் சொல்வது. இளிவு என்பது மானம் நீங்கியநிலையைக் குறிக்கும். மானம் அழியத்தக்க இழிவு வந்தால் மானம் உடையார் உயிர் நீப்பர் என்கிறது பாடல். மானம் உடையார் என்றது இயல்பாக வாழ்வோடு ஒன்றிப்போன மானவுணர்வு கொண்டவர்களைக் குறிக்க வந்தது.

மானத்துக்காக உயிரை விடுவது ஒளிபடைத்த புகழ் என ஏற்றிப் போற்றப்படுகிறது. நாட்டுக்காக உயிர் நீத்தவர்க்கு நடுகல் நட்டு வழிபடுதல் உண்டு. அதுபோல் தம் கொள்கைபற்றி உயிர் நீத்தவர் தொழப்பெறுவர் என இங்கு சொல்லப்படுகிறது. பெருமை காக்க விரையும் நெஞ்சத் துணிவையே வீரம் என்கிறோம்; அதுவே தன்னுயிர் துறக்கச் செய்கிறது. ஒளி, தொழுதுஏத்தும், உலகு என்ற சொல்லாட்சிகள், நாட்டுப்பெருமை, பண்பாட்டுச் சிறப்பு போன்ற பெருநோக்கிற்காக உயிரை நீக்கியவர் புகழை உலகம் போற்றும் என்ற கருத்தைத் தருவதாக உள்ளது.

ஒழுக்கத்துக்கும் (131), அருளுக்கும் (327), கொள்கைக்கும் (779), செய்ந்நன்றிக்கும் (780), நாணத்துக்கும் (1017) இன்னபிறவற்றிற்கும் துறக்கத்தகுவது உயிர் எனக் குறள் கூறும்.
தொழுது என்பது இங்கு வணங்கு என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. தொழுவெனும் பகுதியை உள்ளடக்கிய சொற்கள் வேறு சில இடங்களிலும் குறளில் காணப்படுகின்றன. அவை: நற்றாள் தொழாஅர் எனின் (2), தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் (55), கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260) மன்னுயிர் எல்லாம் தொழும் (268) தொழுத கையுள்ளும் (828) தொழுதுண்டு (1033) என்பன.

'ஒளி' குறிப்பது என்ன?

'ஒளி' என்ற சொல்லுக்குப் புகழ், பெருமை விளங்கும் தோற்றம், புகழ் வடிவு, கீர்த்தி, புகழ் விளக்கு, புகழ் வடிவம், பெருமை, ஆளுமை, புகழுடம்பு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மானம் உடையவன் ஒளியுடையவனாவான். ஒளி உள்ளத்தின் பெருமிதத்தைக் காட்டும். மானத்தின் முன் எனக்கு எதுவும் பெரிதில்லை என்று உள்ளுபவனின் உள்ளத்தின் ஒளி முகத்திலும் கண்ணிலும் உண்டாகும் பொலிவால் விளங்கும்.
ஒளி என்ற சொல் குறளில் பல இடங்களில் பயிலப்பட்டுள்ளது. .... வேந்தர்க்கு ஒளி (இறைமாட்சி 390) என்றதில் நல்லாட்சி செய்பவன் பிற ஆட்சியாளர்களுக்கு விளக்காக ஒளிர்வான் என்றும், .....மன்னாவாம் மன்னர்க்கு ஒளி (கொடுங்கோன்மை 556) எனச் செங்கோன்மையில்லையானால் அரசுக்கு ஒளியுடைமை நிலைபெறா என்றும் .... ஒல்லானை ஒல்லாது ஒளி (பகைமாட்சி 870) என்பதில் அரசியல் கல்லாது வரும் வலுவற்றவனை வெல்லமாட்டாதவனை புகழாகிய ஒளி பொருந்தாது என்றும் உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்று ஐந்தும்... (சூது 939 ) எனச் சூதினை மேற்கொண்டவன் உடை செல்வம் உணவு மதிப்பு கல்வி ஆகிய ஐந்துடன் விளங்கித் விளங்கித்தோன்ற மாட்டான் என்றும் சொல்லப்பட்ட இடங்களில் 'ஒளி' ஆளப்பட்டது. மேலும் ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை ... (பெருமை 971) என்ற அடுத்த அதிகாரத்துக் குறளிலும் ஊக்கமிகுதியே ஒருவனுக்கு ஒளி ஆகும் எனச் சொல்லப்படும்.

'ஒளி' என்ற சொல் இங்கு பெருமை விளங்கும் தோற்றம் எனப் பொருள் தரும்,

பெருமைக்கு இழிவுவந்தபோது உயிர் வாழாத மானமுடையவரது புகழ் விளங்கும் தோற்றத்தை நினைந்து உள்ளத்தால் புகழ்ந்துரைப்பர் உலகோர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மானம் உடையவர் சாவிற்குப் பின்னும் ஒளிவீசித் திகழ்வர்.

பொழிப்பு

பெருமைக்கு இழிவுநேர்ந்தபோது உயிர்வாழாத மானமுடையவரது புகழ் விளக்கை உலகோர் தொழுது போற்றுவர்.