இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0821 குறள் திறன்-0822 குறள் திறன்-0823 குறள் திறன்-0824 குறள் திறன்-0825
குறள் திறன்-0826 குறள் திறன்-0827 குறள் திறன்-0828 குறள் திறன்-0829 குறள் திறன்-0830

கூடாநட்பாவது சுற்றத்தாராயினும் பிறராயினும் மனத்தினால் நள்ளாது, நட்டாரைப்போல் ஒழுகுவாரது இயல்பும், அவர் மாட்டு ஒழுகும் திறமும் கூறுதல். தமக்கு இனம் அன்றிக் கருமம் காரணமாக நட்பாரும், பகைவராய் நட்பாரும் என அவ்விருவகையாரையும் தீநட்புப் போலக் கடிய வேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது.
- மணக்குடவர்

உள்ளத்தால் கலவாது புறத்துமட்டும் செய்யும் நட்பு கூடாநட்பு எனப்படுகிறது. இது சேர்ந்தும்‌ சேராமல்‌ இருக்கும்‌ இயல்பினது. இவ்வாறு உள்நெருக்கம் இன்றி வெளிநட்பு மட்டும் கொண்டு நட்பாடுபவர்கள் முகத்தில் மட்டும் புன்னகை அணிந்து கொண்டவர்களாக இருப்பர்; அவர்கள் மனத்தில் வெறுப்போ பகையோ இருக்கலாம்; சிலர் வஞ்சம் கொண்டு நமக்குத்‌ தீங்கு செய்வதற்கு வாய்க்கும்‌ இடமும்‌ நேரும்‌ வரும்வரை நண்பர்கள்‌ போலக்‌ கூடிப்‌ பழகுவார்‌. இவர்களுள் கொலைக்கருவியைக் கைக்குள் மறைத்து வைத்துப் பகை தீர்த்துக்கொள்பவரும் இருப்பராதலால் பொருத்தமற்ற இத்தகைய நட்பை உரிய நேரத்தில் நயமாக நீங்கிவிடச் செய்யவேண்டும் என்றும் கூறுகிறது அதிகாரம்.

கூடாநட்பு

பகைநெஞ்சம் கொண்டோர், சுற்றத்தார், அண்டைவீட்டார், பணிசெய்யும் இடத்தில் உடனிருப்போர், மற்றும் மனித உறவில் நாம் அடிக்கடி ஊடாட நேரும் பலர் உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்து மட்டும் நண்பராகக் காட்டிக்கொள்வர். அவர்களிடம் எப்படி ஒழுகுவது என்பதைச் சொல்லும் பாடல் தொகுதி இது.
கூடாநட்பினரை நேரா நிரந்தவர்‌(கூடாமலிருந்து கலப்பவர்), இனம்‌ போன்று இனமல்லார்‌, அகத்தின்னா வஞ்சர்(மனத்தில் கொடிய எண்ணங்களை உடைய வஞ்சர்), மனத்தின்‌ அமையாதவர், ஒட்டார்‌(அகத்து ஓர் ஒட்டு இல்லாதார்) என்று அழைத்து அவரது தன்மைகளைத் தெரியப்படுத்துகிறது இவ்வதிகாரம்.

வஞ்சக உள்ளத்தோடு உறவுகொள்பவர்களையே இவ்வதிகாரம் பெரிதும் பேசுகிறது. அவர்கள் தமக்கு வாய்க்குமிடம் பெறுமளவும் கூடியொழுகுவர்; அதன்பின் ஓங்கி அடிக்கும் பட்டடை ஆகிவிடுவர். அவர்கள் மனம் ஒருநிலைப்பட்டிருக்காது. கற்றவன் ஏமாற்றமாட்டான் என எண்ணவேண்டாம். மனத்தில் ஒன்றாதவர் சொல்லில் உண்மை இல்லை என்பதைப் பேசும்போதே அறிந்து கொள்ளலாம். பணிவாகப் பேசுகின்றான் என்பதற்காக அவன் சொல்வதை ஏற்க வேண்டியதில்லை. இவை அதிகாரம் தரும் செய்திகள்.
தீய நட்பு வெளிப்படையாகத் தெரியக் கூடியது. கூடா நட்பு என்பது நட்பு போலக் காட்டிப் பகையும் பழியும் கொண்டிருப்பது. இத்தகு நட்பினால் அழிந்தோர் வரலாற்றில் பலர். ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் காட்டப்படும் ஜூலியஸ் சீசர்- புரூட்டஸ் உறவு மனத்தொடு பொருந்தாத கேண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சீசரின் உள்வட்ட நண்பனாக இருந்துகொண்டே மனத்துள் கொடிய பகையுடன், அவரைக் கொலை செய்த சூழ்சிக்காரர்களில் ஒருவனானான புரூட்டஸ் 'நீ கூடவா புரூட்டஸ்!' என சீசரை அதிரும்படி செய்ய வைத்தான். இயேசு கிறுஸ்துவைக் காட்டிக் கொடுத்ததும் யூதாஸ் உடனான கூடா நட்புத்தான்.

மனம் பொருந்தாக் கேண்மையரிடம் நாம் உள்ளன்புடன்‌ பழகுவது நமக்குக் கேடு உண்டாக்கும்‌. அவர்களிடம்‌, நாமும்‌ உண்மையாகப்‌ பழகாமல்‌, அவர்கள்‌ போலவே மகிழ்ந்து பேசி உறவாடிக் காலம்‌ வந்தபோது அவர்களின்‌ நட்பினை அழித்தொழித்து விடவேண்டும் என்று கூடாநட்பை நீங்குவதற்கு ஒரு உத்தி சொல்கிறது அதிகாரப் பாடல் ஒன்று.
அதுபோலவே பகை நட்பாகுங் காலம் வந்தால், முகநட்புச் செய்து அகநட்பை நீக்கிக் கொள்ளலாம் என்கிறது இன்னொரு குறள்.

கூடாநட்பு அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 821ஆம் குறள் உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்தே ஒத்தவர்போல பழகுபவரது நட்பு வாய்ப்பான இடம் வரும்போது அடிக்கும் பட்டடை என்கிறது.
  • 822ஆம் குறள் நட்புறவினர் போன்று பழகி உள்ளத்தில் நட்பில்லாதார் உறவு மகளிர் மனம்போல் மாறுபடும் எனச் சொல்கிறது.
  • 823ஆம் குறள் நல்லன பலவற்றைக் கற்ற விடத்தும் நல்ல மனம் உடையவராகப் பழகுதல் மாட்சியில்லார்க்கு கடினமாம் எனக் கூறுகிறது.
  • 824ஆம் குறள் முகத்தில் இனிமை காட்டி நகுதல் செய்து உள்ளத்தில் தீயவற்றை நினைக்கும் வஞ்சகரை அஞ்சுதல் வேண்டும் என்கிறது.
  • 825ஆம் குறள் மனத்தில் நட்பாய்ப் பொருந்தி வாராதவரை எந்த ஒன்றையும் அவர் பேசுவது கொண்டு தெளிதல் கூடாது எனச் சொல்கிறது.
  • 826ஆம் குறள் நண்பர் போல நல்லவற்றைச் சொன்னாலும் உள்ளத்தால் பொருந்தாதார் சொற்கள் வேறென்பதை உடனே அறிந்து கொள்ளலாம் என்கிறது.
  • 827ஆம் குறள் பகைவரது சொற்பணிவை நம்பற்க; வில்லின் வளைவு தீமைசெய்தலைக் குறிக்கொண்டமையால் எனச் சொல்கிறது.
  • 828ஆம் குறள் தொழுத கையுள்ளும் கொலைக்கருவி மறைந்து இருக்கும்; பகைவர் கண்ணீர்விட்டு அழுதிடுவதும் அத்தகையதே என்கிறது.
  • 829ஆம் குறள் நட்பினை மிகுதியாகப் புலப்படுத்தி உள்ளத்தில் தம்மை இகழ்பவரை, நட்பில் அவர் மகிழப் பழகி அத்தொடர்பு சாகுமாறு நடக்கவேண்டும் என்கிறது.
  • 830ஆவது குறள் பகைவர் தமக்கு நட்பாய் ஆகும் காலம் வரும்பொழுது முகத்தால் ஏற்று மனத்தால் நட்பை நீங்கவிடுக என்கிறது.

கூடாநட்பு அதிகாரச் சிறப்பியல்புகள்

கும்பிட்டுக் கொண்டே வருபவர் தம் கையினுள் கொலைப்படையும் மறைத்து வைத்திருப்பர்; அழுத கண்ணீருக்குள்ளும் அதுபோல் ஏதோ ஒன்று மறைக்கப்பட்டு இருக்கலாம் என்னும் கருத்திலமைந்த குறள் தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து (828) என்பது. பகைவன் வணக்கத்துடன் கும்பிடத்தானே செய்கிறான் என்று ஏமாற்றம் அடையவேண்டாம்; ஐயோ! அழுகின்றானே என்ன துன்பமோ! என்று இரங்கவும் வேண்டாம் என எச்சரிக்கின்றது இது. இப்பாடல் எழுதப்பட்டு ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தொழுத கையுள் மறைக்கப்பட்ட துப்பாக்கி வெடித்து நம் நாட்டிற்கு விடுதலை வாங்கித்தரப் போராடியவர்களுக்குத் தலைமை தாங்கிய காந்தியடிகள் மறைந்தார்.

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று(829) என்ற பாடல் வெளியுலகத்துக்கு நம்மிடம் மிக நெருக்கம் காட்டிக்கொண்டு உள்ளுக்குள் நம்மைப் பற்றி ஏளனமாக நினைத்துப் பழகுபவரை அவர் முறையிலேயே அவர் மகிழும்படி வெளிக்குக் காட்டி சிறிது சிறிதாக அந்நட்பைச் சாகடிக்க வேண்டும் என்கிறது. கூடா நட்பை நீங்கச் செய்ய நாமும் நடிக்கலாம் என்கிறது இது.

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல் (830). இப்பாடல் பகைநட்பாகும் காலம் வந்தால் அவருடம் சிரிப்பது போல் நடி; செயல் முடிந்தபின் பின் உள்ளத்திலிருந்து அதையும் விலக்கிவிடு எனச் சொல்கிறது. இதுவும் மென்மையான அணுகுமுறையால் கூடாநட்பை நீங்குக எனச்சொல்வது.




குறள் திறன்-0821 குறள் திறன்-0822 குறள் திறன்-0823 குறள் திறன்-0824 குறள் திறன்-0825
குறள் திறன்-0826 குறள் திறன்-0827 குறள் திறன்-0828 குறள் திறன்-0829 குறள் திறன்-0830