இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0829



மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று

(அதிகாரம்:கூடாநட்பு குறள் எண்:829)

பொழிப்பு (மு வரதராசன்): புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத்தொடர்பு சாகுமாறு நடக்கவேண்டும்.

மணக்குடவர் உரை: [உரை இல்லை.]

பரிமேலழகர் உரை: மிகச் செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை; நட்பினுள் நகச் செய்து சாப்புல்லற்பாற்று - தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம்வண்ணம் பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி.
('நின்று' என்பதூஉம், 'அரசநீதி' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத் தகாது எனினும், பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல் துணிபு என்பார். அதன்மேல் வைத்துக் கூறினார். 'சாவ' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. 'கோட்டின்வாய்ச் சாக்குத்தி' (கலித். முல்லை.5) என்புழிப்போல. 'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக.)

சி இலக்குவனார் உரை: பகைமை தோன்றாமல் புறத்தில் நட்பினை மிகுதியாகச் செய்து உள்ளத்தில் தம்மை இகழும் பகைவரைப் புறத்தில் சிரிக்கச் செய்து அகத்தில் நட்பு அற்றுப் போகுமாறு பொருந்தும் தன்மை கொள்ளல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மிகச்செய்து தம் எள்ளுவாரை நட்பினுள் நகச்செய்து சாப்புல்லற் பாற்று.

பதவுரை: மிக-பெருக்கமாக; செய்து-செய்து; தம்-தம்மை; எள்ளுவாரை-இகழ்பவரை; நக-உள்ளம் மகிழ; செய்து-செய்து; நட்பினுள்-நட்பின்கண்; சா-இறக்கும்படியாக; புல்லல்-தழுவல்; பாற்று-தன்மையுடையது.


மிகச்செய்து தம்மெள்ளு வாரை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: நட்டாரைப் போலச் செய்யுமவற்றை மிகச் செய்து மனத்தினால் தம்மை இகழுமவர்களை;
பரிதி: மிகையானது செய்து நம்மை இகழ்வார் நட்பு;
காலிங்கர்: கீழ்ச்சொன்ன அவையே அன்றிப் பின்னும் மிகப் பல செய்தே தம்மை உள்ளத்தால் பெரிதும் இகழ்ந்திருப்பாரை ஓர்ந்து; [ஓர்ந்து - ஆய்ந்து]
பரிமேலழகர்: பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை;

'புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மையிகழும் பகைவரை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகவும் பழகி உள்ளே இகழ்பவருடன்', 'புறத்தே நட்பினை மிகுதியாகப் புலப்படுத்தி மனத்தினால் தம்மை இகழும் பகைவரை', 'தம்மைத்தாமே அதிகப்படியாக இகழ்ந்து கொண்டு (தம்மைப் புகழ்ந்து) பேசுகிற வஞ்சகரை', 'வெளியே நட்பினை மிகுதியாகச் செய்து பாராட்டி உள்ளத்தே இகழும் பகைவரை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நட்பினை மிகுதியாகப் புலப்படுத்தி உள்ளத்தில் தம்மை இகழ்பவரை என்பது இப்பகுதியின் பொருள்.

நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: தாமும் மகிழுமாறு செய்து நட்பின்கண் நட்புச்சாவ நட்க என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, கருமம் காரணமாகிய நட்டாரோடு ஒழுகும் திறன் கூறிற்று.
பரிதி: முகஞ்சிரிக்கச் சொல்லி மனத்தில் நட்பு விடுவான் என்றவாறு.
காலிங்கர்: தாம் புறமே முகத்தான் நகச்செய்த அவரோடு நட்பினால் உள்ளுறச் செறியும் பகுதியினை உடைத்து அன்று என்றவாறு. [உள்ளூறச் செறியும் - மனத்துக்குள் நிறைந்திருக்கும்]
காலிங்கர் குறிப்புரை: நட்பினுள் சாப்புல்லற் பாற்று என்பது தாம் அவரோடு நட்பின்கண் சாவப் புல்லுதல் என்றது. உள் புல்லற் பாற்றன்று- தாம் அவரொடு உள்ளுற அணைக்கும் பகுதியினை உடைத்தன்று என்றவாறு.
பரிமேலழகர்: தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம்வண்ணம் பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி. [அகத்தின்கண் அது சாம்வண்ணம்- மனத்தில் அது அழியும் வண்ணம்]
பரிமேலழகர் குறிப்புரை: 'நின்று' என்பதூஉம், 'அரசநீதி' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத் தகாது எனினும், பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல் துணிபு என்பார். அதன்மேல் வைத்துக் கூறினார். 'சாவ' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. 'கோட்டின்வாய்ச் சாக்குத்தி' (கலித். முல்லை.5) என்புழிப்போல. 'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக. [அகனொன்று புறனொன்றாதல் - உள்ளே பகையும் உதட்டில் உறவுமாதல்]

'தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம்வண்ணம் பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீயும் மகிழப் பேசி நட்பைக் குறைக்க', 'தாமும் புறத்தே அவர் மகிழுமாறு செய்து மனத்தில் அவரது நட்பினைச் சாகடிக்க வேண்டும்', '(அப்பேச்சில்) மகிழ்ந்து அவரை நட்பாகக் கொண்டுவிட்டால், அது தற்கொலை செய்து கொள்ளுவதற்கு ஒப்பாகும்', 'புறத்தே அவர் மகிழும்படி செய்து அகத்தே அம்மகிழ்ச்சி (சாவும்படி) சாகும்படி நடப்பதே தக்கது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நட்பில் அவர் மகிழப் பழகி அத்தொடர்பு சாகுமாறு நடக்கவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நட்பினை மிகுதியாகப் புலப்படுத்தி உள்ளத்தில் தம்மை இகழ்பவரை, நட்பில் அவர் மகிழப் பழகி அத்தொடர்பு சாப் புல்லற்பாற்று என்பது பாடலின் பொருள்.
'சாப்புல்லற்பாற்று' என்ற தொடரின் பொருள் என்ன?

வெளிவேடத்துடன் பழகும் கூடாநட்பினர் உறவை நாமும் நடித்தே நீக்கிக்கொள்ளலாம்.

வெளியே மிகுதியாக நட்புத் தோன்றும்படி செய்து உள்ளத்திலே நம்மை இகழுகிறவர்களை, நாமும் அவர்கள் மகிழ்ச்சியடையும்படி பழகி, தொடர்பு தானே அழிந்து போகும்படி செய்தல் வேண்டும்.
நம்முடன் பழகுபவர்க்கு நம்மைப் பற்றி உள்ளத்தில் நல்ல கருத்து இல்லை; தாழ்வாகவே, இகழ்ச்சியாகவே எண்ணுகின்றார்; ஆனால் நம்மூலமாக ஏதோ ஒரு நன்மை பெறுவதற்காக நம்முடன் சிரித்து உறவாடுகிறார். வெளியுலகுக்கு மிகுதியான நட்புடையார் போல் காட்டிக்கொள்கிறார், இந்நட்புத் தொடர வேண்டுவதில்லை. உள்ளத்தால் நம்மை எள்ளுவாரை நாமும் புறத்தே மகிழும்படியாக நட்பினைச் செய்து பக்குவமாய் அந்நட்பு அழியும்படிச் செய்தல் வேண்டும்.

மாந்தர்க்கு முரண்பாடுகளுக்கிடையே வாழவேண்டிய கட்டாயம் இருப்பதால் அவற்றை எதிர்கொண்டு வாழ சில உத்திகளைக் கையாளத் தேவையிருக்கிறது. தன்னியல்புக்கு மாறாக, நிலைப்பாடுகளில் நெகிழ்ச்சி காட்டித் திறம்பட நடந்தால் அவற்றை எளிதாகக் கடந்துபோகலாம். குறளும் இந்த வகையில் சில வழிகளைச் சொல்கிறது. புறத்தில் முகமலர்ச்சியுடன் நட்பாக நடித்து மனத்தளவில் மதிக்காது இகழ்ச்சி காட்டுபவரை அவர் வழியிலேயே சென்று நாமும் அவர்கள் மகிழும்படியாக நண்பர்களாகக் காட்டிக்கொண்டு, நம் உள்ளத்தினை அவர் அறியவொண்ணாதபடி செய்து, அத்தொடர்பு அழிந்தொழிந்து மறையும்படி செய்யலாம். அதாவது நாம் நமது நிலைப்பாடுகளை மாற்றியமைத்து அவர்களைச் சிறுகச் சிறுக ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். முன்னர் .......சொல்லாடார் சோரவிடல் (தீ நட்பு 818 பொருள்: ......வெளிப்படையாகச் சொல்லாமலே நழுவ விட்டுவிடல் வேண்டும்) என்ற குறளில் சொல்லப்பட்டது போன்று அவனை நட்பினனாகக் கொண்டுவிடாமல் மனத்தால் ஒன்று படாது விலகி நின்று நட்பிலிருந்து நீங்கிவிடவேண்டும்.
இங்ஙனம் செய்தால் அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத் தகுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்குப் 'பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல் துணிபு என்பார் அதன்மேல் வைத்துக் கூறினார்' எனப் பரிமேலழகர் அமைது கூறுவார். இது ஓர் உலகியல் அணுகுமுறை. இதை அரசநீதி என்பர். அரசு நெறிப்படி, அரசியல் உறவிலோ நிர்வாகத்திலோ மனம் ஒப்பாத இருதரப்பினரிடம் நயமாக (diplomatic way), அமைதி முயற்சி மேற்கொள்வதைக் குறிப்பது இது. இங்கு மாறுபாடாகப் பழகிய இருவர் இனிமையாகப் பிரிந்து கொள்வதற்கு அவ்வழி பரிந்துரைக்கப்படுகிறது.

'மிகச் செய்தல்' என்பது பகைமை தோன்றாதபடி நட்புடையார் போல் மிகுதியாகக் காட்டிக் கொள்ளுதல் என்பதைச் சொல்வது.
நாமக்கல் இராமலிங்கம் 'தம்மைத் தாமே அதிகப்படியாக இகழ்ந்து கொண்டு நம்மைப் புகழ்ந்து பேசுகிற பகைவர்களை' எனப் புதிய பொருள் கூறினார். இவர் ‘தம்’ என்பது கூடா நட்பினரைக் குறிக்கும் என்றும் ‘தம்மெள்ளுவார்’ என்னும் குறிப்பால் பிறரைப் போற்றுவார் என்றும் கொண்டார். இவ்வுரையில் 'செய்து' என்ற சொல் பொருட்சிறப்பின்றி உள்ளதால் இதை அறிஞர்கள் ஏற்பதில்லை.

'சாப்புல்லற்பாற்று' என்ற தொடரின் பொருள் என்ன?

'நட்பினுள் சா புல்லற்பாற்று' என்று இயைத்து அகத்தே அந்நட்புச் சாகும்வண்னம் பழகவேண்டும் என்ற கருத்தைக் கூறுவார் பரிப்பெருமாள். இவர் கருத்தைத் தழுவி சாவப்புல்லற்பாற்று என்பது சாப்புல்லற்பாற்று என்று வந்தது என்று கூறி 'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக என்பார் பரிமேலழகர். சாப்புல்லல் என்பது அந்த நட்பு ஒழியும்படி நடந்து கொள்ளுதல் என்பதைச் சொல்வதாகிறது. 'தம் மிகச் செய்து எள்ளுவாரை' என இயைத்துத் தம்மைத் தாமே அளவுக்கு மிச்சமாக இகழ்ந்து கொள்ளும் பகைவர்களைத் தழுவிக்கொண்டால் அது நாமே வலியச் சாவைத் தழுவிக் கொள்வது போலாம்' என்பது நாமக்கல் இராமலிங்கத்தின் உரை.
'காலிங்கர் உரையை நோக்கின் 'நட்பினுள் புல்லற்பாற்றன்று' என்ற பாடம் இருந்திருக்கலாம் என எண்ண இடமுண்டு' எனச் சொல்லி 'அப்பாடம் காணப்படின், ஏற்றுக் கொள்ளலாம். நடையும் பொருளும் தெளிவாக அமையும்' என்று கருத்துரைப்பார் இரா சாரங்கபாணி.

இத்தொடர் 'சாவினைப் புல்லித் தழுவுகின்ற தன்மையினை உண்டாக்கும்' என்று சுருக்கமாகக் கூறும் முறையில் 'சாப்புல்லற் பாற்று' என்று அமைந்தது. பழகுபவர்களை சாகடிக்கச் செய்யவேண்டுமென்பது பொருளல்ல; அத்தொடர்பு சாகும்வண்ணம் பழகுக அதாவது நட்பு ஒழியும்படி நடந்து கொள்க என்பது கருத்து. அவர்களின் வஞ்சகமும் ஒழிந்து அவர்களின் நட்பும் அற்றுப்போகும் என்பது சொல்லப்பட்டது.

நட்பினை மிகுதியாகப் புலப்படுத்தி உள்ளத்தில் தம்மை இகழ்பவரை, நட்பில் அவர் மகிழப் பழகி அத்தொடர்பு சாகுமாறு நடக்கவேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உள்ளத்தால் நம்மை மதியாதாருடனான கூடாநட்பிலிருந்து நயமாக விடுபட்டுக் கொள்க

பொழிப்பு

மிகுதியாக நட்புடன் பழகி உள்ளத்தில் தம்மை இகழ்பவரைத் தாமும் புறத்தே அவர் மகிழுமாறு செய்து அந்நட்பினைச் சாகடிக்க வேண்டும்.