இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1329



ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா

(அதிகாரம்:ஊடலுவகை குறள் எண்:1329)

பொழிப்பு (மு வரதராசன்): காதலி இன்னும் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

மணக்குடவர் உரை: விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும்.
இது மனவூக்கத்தின்கண் வந்தது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக.
('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்)

தமிழண்ணல் உரை: இரவெல்லாம் கூடி மகிழவேண்டும் என்ற கருத்திற்கு மாறாக, ஊடி மகிழ வேண்டுமென்கிறது வள்ளுவம். ஒளிவீசும் அணிகளை யணிந்த எம் காதலி இன்னும் எம்மொடு ஊடுவாளாக! அவள் ஊடவும் அவ்வூடலைத் தவிர்க்க யாம் அவளிடம் இரந்து நிற்கவும் மிகுந்த நேரம் கிடைக்கும்படி, இவ் இரவுப்பொழுது நீட்டிக்குமாக! ஊடி மகிழும் இன்ப விளையாட்டிற்கு உள்ள இரவு போதாதாம்; அது இன்னும் நீட்டிக்கவேண்டுமாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒளியிழை ஊடுக மன்னோ யாம்இரப்ப இரா நீடுக மன்னோ.

பதவுரை:
ஊடுக மன்+ஓ- மன் என்பது ஆக என்னும் ஆக்கப் பொருளில் வந்து ஊடுவாளாக எனப் பொருள் தரும். ஓகாரம் அசை நிலை; ஒளியிழை-ஒளிரும் அணியுடையாள்; யாம் இரப்ப-கெஞ்சி நிற்க; நீடுக மன்-னோ- இங்கும் மன் என்பது ஆக என்னும் ஆக்கப் பொருளில் வந்து நீடுவதாக எனப் பொருள்படும். ஓகாரம் அசை நிலை; இரா-இரவுப் பொழுது.


ஊடுக மன்னோ ஒளியிழை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்;
பரிப்பெருமாள்: விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேணும்;
காலிங்கர்: ஒள்ளிய இழையினையுடையாள் ஊடுவாள் ஆகவேண்டும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக;

'ஒள்ளிய இழையினையுடையாள் ஊடுவாள் ஆகவேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலி மேன்மேலும் ஊடுக', 'ஒளி பொருந்திய அணிகளை உடையவள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக', 'காதலி பிணங்கிக் கொள்ளட்டும்', 'விளக்கம் மிக்க அணிகலன்களை உடையாள் இன்னும் தம்மோடு ஊடுவாளாக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒளிரும் அணிகளை உடையவள் இன்னும் ஊடுவாளாக என்பது இப்பகுதியின் பொருள்.

யாம்இரப்ப நீடுக மன்னோ இரா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும்.
மணக்குடவர் குறிப்புரை: இது மனவூக்கத்தின்கண் வந்தது.
பரிப்பெருமாள்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மன ஆக்கத்தின்கண் வந்தது. என்றும் உளதாக வேண்டும் என்றதனால் கூடலினும் ஊடல் நன்று என்றது.
காலிங்கர்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிது ஆக என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. [உணர்த்துதற் பொருட்டு- தெளிவித்தற் பொருட்டு]
பரிமேலழகர் குறிப்புரை: 'ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்.

'யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நான் வேண்ட இரவு நேரம் மேன்மேலும் நீளுக', 'அவள் ஊடலை நீக்குவதற்காக யாம் இரந்து வேண்ட, இந்த இராப்பொழுது நீடிப்பதாகுக', 'நான் வேண்டிக் கொள்கிறபடி (அப்பிணக்கம்) இன்று இரவு (முழுதும்) நீடிக்கட்டும்', 'அவளைத் தெளிவிக்கும் பொருட்டு யாம் கெஞ்சி வேண்ட இராக்காலம் நீளுமாக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

(அவள் ஊடலை நீக்குவதற்காக) யாம் கெஞ்சி வேண்ட, இந்த இரவு நேரம் நீள்வதாக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒளிரும் அணிகளை உடையவள் இன்னும் ஊடுவாளாக; (அவள் ஊடலை நீக்குவதற்காக) யாம் கெஞ்சி வேண்ட, நீடுக இரா என்பது பாடலின் பொருள்.
'நீடுக இரா' என்ற தொடர் குறிப்பது என்ன?

தலைவி ஊடிக் கொண்டிருப்பதைக் கண்டு தலைவன் அவள் விடிய விடிய என்னுடன் சண்டை போடட்டும்! என்கிறான் மகிழ்ந்து.

ஒள்ளிய அணிகளை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும்பொருட்டு, நான், அவளை இரந்து நிற்கும்படியாக, இராக்காலமும் நீளட்டுமே!
காட்சிப் பின்புலம்:
அயல் சென்றிருந்த கணவன் வெகுநாட்கள் கழிந்தபின் பணி முடித்து வீடு திரும்பி விட்டான். அன்றிரவு படுக்கையறையில் அவன் தலைவியுடன் இருக்கிறான். மனைவி அவனுடன் கூடுவதற்கு முன் ஊடல் இன்பம் பெறவேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதால், அவனது காமமிகுதியை அறிந்தும் அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பொய்யாகக் குற்றங்களைச் சொல்லி ஊடிக்கொண்டிருக்கிறாள். ஊடலைத் துய்த்துக்கொண்டு ஊடுதலைவிட மேலுலகம் இன்பம் தரவல்லதா? என வினவவும் செய்கிறாள். தழுவவரும் காதலனை விலகிச் செல்கிறாள்; அதே நேரம் ஊடாமல் கூடுவதில்லை என்ற அவளது மனஉறுதி காமநோயின் தாக்கத்தால் உடைந்து நொறுங்கிப் போவதையும் உணர்கிறாள்.
மனைவியின் மனநிலையை உணர்ந்த தலைவனும் ஊடல் உணர்தலில் முனைகிறான். ஆயினும் இந்த ஊடல் நீடிப்பு நல்லதுதான் என நினைக்கிறான். அவள் என்னைத் தொடவிடாமல் தள்ளிப் போவதால் நான் தோற்றேனா? அல்ல. பின் அவள்தான் தோற்றாளா? அதுவும் இல்லை. யார் வென்றார் யார் தோற்றார் என்பதை நாங்கள் கூடுதலின் போது தெரிந்துகொள்வோம். நெற்றி வியர்க்க அவளைக் கூடி இன்பவெற்றி பெறுவேனா? என அவனது எண்ண ஓட்டங்கள் தொடர்கின்றன.

இக்காட்சி:
ஊடல் செய்கின்ற தலைவியைக் காண்பதில் இன்பம் கொள்கிறான் கணவன்; அவள் ஊடிக் கொண்டே இருக்கட்டும். நான் ஊடல் தீர்க்கும் வண்ணம் அவளைக் கெஞ்சிக் கொஞ்சிக் கொண்டே இருப்பேன் என்கிறான். ஊடல் தீர்க்க அவளை இரந்து நிற்பதிலும் தலைவன் உவகை கொள்கின்றான்; இன்ப விளையாட்டிற்கு மிகுந்த நேரம் கிடைக்கும்படி இரவு நீள்வதாக! என வேண்டவும் செய்கிறான்.
ஊடுதல் தலைவன் தலைவி இருவர்க்கும் உளது. எனினும் பெரும்பாலும் தலைவியே ஊடிநிற்பாள். தலைவி ஊடுதலைத் தலைவனும் விரும்புகின்றான் ஊடல் சிறிதளவே நிற்பின், பின் கூடலில் துய்க்கும் இன்பம் சிறிதாகத்தான் இருக்கும். இதை உணர்ந்திருந்த தலைவன் பொழுது விரைவில் விடிந்துவிடுமோ, ஊடல் நின்றுவிடுமோ என்று அச்சம் கொள்கிறான். அவள் ஊடலை விடுதல் கூடாது என்று கருதுகிறான், அதனால் இரவும் நீடித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று இறைஞ்சுகிறான். அவள் ஊடுவாளாக! இரவுப் பொழுது நீண்டு கொண்டே போகட்டும்! எனத் தான் விரும்புவனவற்றைத் தெரிவிக்கிறான். 'இந்த இரவுக் காலம் நீண்டால் ஊடலின்பத்தை மிகுதியாக நுகர்வேன்' என்பது அவன் விழைவு. பொழுது விடியவே வேண்டாம் என்பதுதான் அவன் விருப்பம்.

தலைமகள் பொய்யாக ஊடி நிற்கின்றாள் என்பது தலைவனுக்கும் தெரியும்; இருந்தும் தலைமகளின் ஊடலைத் தணிக்கும்பொருட்டு இவனும் இறைஞ்சுவதுபோல நடிக்கிறான். காமத்தில் இன்பம் மிகுவது கூடுதலில் அன்று என்பது வள்ளுவர் கருத்து; ஊடலில்தான். ....புணர்தலின் ஊடல் இனிது (1326) என்று இவ்வதிகாரத்து முந்தைய குறள் ஒன்று கூறிற்று.
தலைவி, தலைவன் இரந்து ஊடல் தீர்ந்து கூடும் நிலை உண்டாகும் வரை, அவள் ஊடவேண்டும் என்பதற்காகத் தலைவியை 'யாமிரப்ப' என்ற தொடர் வந்தது. அதுவே இரவுப்பொழுது நீடிக்கவேண்டும் என்று இரவை இரப்பதற்கும் பொருந்துவதாக 'யாமிரப்ப' என்ற இத்தொடர் அமைந்துள்ளது.

'நீடுக இரா' என்ற தொடரின் பொருள் என்ன?

இரவு நேரம். தலைவியும் தலைவனும் உள்ள இடத்தில் வெளிச்சம் இல்லை. அவளது ஒளி பொருந்திய வளையல் மின்னிடுகிறது. அவள் ஊடிக்கொண்டிருக்கிறாள். ஊடல் தீர்க்க அவன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறான். நேரம் கரைந்து கொண்டிருக்கிறது. இரவு சுருங்குவதாக அவன் எண்ணுகிறான். நீண்ட ஊடல் விழையும் அவன் 'நீடுக இரா' என்கிறான். இவ்விதம் அவள் ஊடல் தணிக்க அவன் கையேந்தி, கெஞ்சிக் கெஞ்சி, கொஞ்சுகிறான். இவ்விரப்பில் மகிழ்வைக் கண்ட அவன் இன்ப இரவு இன்னும் நீளுமாக! என வேண்டுகிறான்.
மாந்தர் உள்ளம் இன்பமாக உணருமானால் காலம் சுருங்கித் தோன்றும். ஊடல் இன்பத்தை நுகரக் காதலன் இராப்பொழுது நீடிக்கவேண்டுமென்று விழைகிறான். காலம் நீட்டிப்பதாக அமைய தலைவன் நீடுக' என்று வேண்டிக் கொள்கிறான். 'யான் அவளுடைய ஊடல்தீர வேண்டி இரப்பேனாக; அவ்வாறு நீண்ட நேரம் இருக்குமாறு இராக்காலம் நீடிப்பதாக' என்று தனது விருப்பத்தை முழக்கம் செய்கின்றான்: இரவு நீடிக்காவிடின் ஊடல் கொண்டிருப்பவளை இரக்க முடியாது. பொழுது விடியின் காதல் செயல்களை முடிக்க வேண்டி வரும் என்பதால் ஊடலும், இரவுப் பொழுதும் நீண்டு கொண்டே செல்ல வேண்டும் என்று இரவைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறான். காலம் இயற்கை இயக்கவிதிப்படிப் பிழையாமல்தான் நிகழும். அது தெரிந்தும் இரவு நீள அவன் வேண்டுதல் செய்கிறான்.

'நீடுக இரா' என்ற தொடர்க்கு இரவு நீடிக்கட்டும் என்பது பொருள்.

ஒளிரும் அணிகளை உடையவள் இன்னும் ஊடுவாளாக; (அவள் ஊடலை நீக்குவதற்காக) யாம் கெஞ்சி வேண்ட, இந்த இரவு நேரம் நீள்வதாக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இரவு முழுவதும் ஊடலுவகை பெற இரக்கின்றேன்.

பொழிப்பு

ஒளிரும் அணிகளை உடையவள் இன்னும் ஊடுவாளாக; (அவள் ஊடலை நீக்குவதற்காக) யாம் கெஞ்சி வேண்ட, இந்த இரவு நேரம் நீடிப்பதாகுக.