இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1328ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு

(அதிகாரம்:ஊடலுவகை குறள் எண்:1328)

பொழிப்பு (மு வரதராசன்): நெற்றி வியர்க்கும்படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை, ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?

மணக்குடவர் உரை: நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?
ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ?
(கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.)

வ சுப மாணிக்கம் உரை: நெற்றி வேர்க்கப் புணர்ந்த இனிமையை இன்னும் ஒருமுறை ஊடிப் பெறுவேனோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு.

பதவுரை:
ஊடி-பிணங்கி; பெறுகுவம்-அடைவோம்; கொல்லோ-(ஐய வினா); நுதல்-நெற்றி; வெயர்ப்ப-வேர்வையுண்டாக; கூடலில்-புணர்ச்சியின் கண்; தோன்றிய-உண்டாகிய; உப்பு-இனிமை.


ஊடிப் பெறுகுவம் கொல்லோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?
பரிப்பெருமாள்: இன்னும் ஒருகால் ஊடல் பெறுவோமோ?
காலிங்கர்: இன்னம் ஒருகால் ஊடிப்பெறுவோம் கொல்லோ யாம்?
பரிமேலழகர்: (இதுவும் அது.) இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ?

'இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவள் இன்னும் ஒரு முறை ஊடி யாம் பெற முடியுமா?', 'பிரிந்திருப்பதால் பெறுவோம் என்பது நிச்சயம்', 'இன்னுமொருமுறை பிணங்கிப் பெறுவோமா?', 'இவளோடு ஊடி அடைய வல்லோமோ?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இன்னும் ஊடிப் பெறுவோமோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை.
மணக்குடவர் குறிப்புரை: ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.
பரிப்பெருமாள்: நுதல் வியர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஊடுதல் இருவர்க்கும் உண்டாகலால் பொதுப்படக் கூறினார். நுதலின் வியர்ப்ப என்றான், புணர்ச்சிக்காலத்து வேகம் மிகுதலை. இவ்வின்பம் ஊடினார்க்கு அல்லது பெறுதலரிது என்றது.
காலிங்கர் (வியர்ப்பக் பாடம்): நுதல் வியர்ப்பக் கூடின் கூடலாலே உண்டாகிய இன்பம் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: உப்பு என்பது இனிமை.
பரிமேலழகர்: இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை;
பரிமேலழகர் குறிப்புரை: கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.

'நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவளது நெற்றி வியர்வை கொள்ளும்படி செய்த புணர்ச்சியில் தோன்றும் உப்பை (இன்பத்தை) (உப்பு-இன்பம். உலர்ந்த வியர்வையில் படியும் உப்பு என்னும் இரண்டையும் குறிக்கும்)', 'உடல் வேர்க்கும்படி புணர்ச்சி செய்தபோது வெளியேறிய இன்பத்தை', 'நெற்றி வியர்வுதோன்றப் புணர்வதிலே தோன்றிய இனிமையை', 'நெற்றி வியர்க்குமாறு கூடுதலில் தோன்றிய இனிமை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நெற்றி வேர்க்கச் செய்த புணர்ச்சியில் உண்டான இனிமையை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெற்றி வேர்க்கச் செய்த புணர்ச்சியில் உண்டான இனிமையை இன்னும் ஊடிப் பெறுவோமோ? என்பது பாடலின் பொருள்.
'கூடலில் தோன்றிய உப்பு' என்ற பகுதியின் பொருள் என்ன?

ஊடியபின் கூடினேன். அதில் பெற்ற இனிமையை என்னென்று சொல்வேன்! அதை இன்னொருமுறை ஊடிப் பெறலாமோ!

கடமை காரணமாக அயல் சென்றிருந்த காதலன் நீண்ட இடைவெளிக்குப் பின் இல்லம் திரும்பியுள்ளான். அன்றிரவு காதலனும் காதலியும் படுக்கையில் இருக்கிறார்கள். காதலி அவனுடன் ஊடியபின்தான் கூட வேண்டும் என உறுதியாக இருந்தாள். தலைவனும் அவள் மனநிலையை அறிந்து ஊடலைத் தீர்க்கின்றான். நெடுநேரம் ஊடல் உவகை கொண்டபின் இருவரும் புணர்ச்சியில் ஈடுபட்டனர். அந்தக் கூடலில் அப்படி ஒரு இன்பம்! அம்மம்மா! நெற்றி வியர்த்து விட்டது. நேரே கலவியில் ஈடுபட்டிருந்தால் அதில் இவ்வளவு சுவையும், இன்பமும் இருந்திரா. ஊடிக் கூடியதால் அல்லவோ இத்துணை இன்பம்! அந்த இன்பம் பெற இன்னொரு முறை ஊடிக் கொள்ளலாமோ! ஊடித் துய்க்கும் இனிமை திகட்டாதது. துய்க்கத் துய்க்க மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவது என்கிறது இப்பாடல்.
காம நுகர்வை நுதல் வெயர்ப்பக் கூடியது என்று இடக்கரடக்கலாக உரைக்கப்பட்டு வள்ளுவரின் கவித்திறத்தையும் வெளிச்சமாகக் காட்டியது.

ஊடுதல் இருவர்க்கும் உண்டாம் ஆதலால் பொதுப்படக் கூறினார் என்பார் பரிப்பெருமாள். பரிமேலழகர் இக்குறளைத் தலைவன் கூற்றாகக் கொள்கிறார்.

'கூடலில் தோன்றிய உப்பு' என்ற பகுதியின் பொருள் என்ன?

'கூடலில் தோன்றிய உப்பு' என்றதற்குக் கூட்டத்தாலே யுண்டாகிய இன்பம், கூடலாலே உண்டாகிய இன்பம், கலவியின்கண் உளதாய இனிமை, கூடுவதில் உளதாகும் இனிமை, கூடிய பொழுது உண்டாகிய இன்பம், புணர்ந்த இனிமை, புணர்ச்சியில் தோன்றும் உப்பை (இன்பத்தை), புணர்ச்சி செய்தபோது வெளியேறிய இன்பம், கூடுதலில் தோன்றும் இன்சுவை, புணர்வதிலே தோன்றிய இனிமை, கூடுதலில் தோன்றிய இனிமை, கூடி இருக்கும்பொழுது உண்டாகும் இன்பம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பரிமேலழகர் உப்பு என்பதற்கு இனிமை என்று பொருள் கூறி, இனிமை என்பதை 'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம்' என விளக்கினார், மு கோவிந்தசாமி இக்குறளுக்குப் புணர்ச்சியில் நுதல் வியர்த்தலும் வியர்வை வாய்ந்த உப்பும் என்பது. உப்பு இன்பமுமாம். இன்ப உச்சத்தில் ஏற்படும் கைகாலாட்டத்தில் வியர்வை துளிக்கும் என விளக்கம் கூறினார்.
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின்
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்
(அகநானூறு 390: பொருள்: அழகிய வளைந்த உந்தியினையும் மூங்கில் போன்ற தோளினையுமுடையாயய்!, நினது உடலின்கண் உளதாம் இன்பத்திற்கு விலையினை அறிந்திலமே என்று யாம்) என அகநானூற்றில் உப்பு என்பது இன்பம் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.
ஊடுதலும் ஊடலில் உப்புப் பெறுதலும் தலைவன் தலைவியர் இருவர்க்கும் உரிய. உப்பு என்பது இங்கு வியர்வையால் உடம்பிற் படிந்த உப்பையும் இன்பத்தையும் சுட்டுமாறு குறள் அமைந்திருக்கிறது.

நெற்றி வேர்க்கச் செய்த புணர்ச்சியில் உண்டான இனிமையை இன்னும் ஊடிப் பெறுவோமோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கூடலில் பெற்ற உடல்வியர்வைப் பெருக்கம் ஊடலுவகையின் விளைவே.

பொழிப்பு

நெற்றி வியர்க்கப் புணர்ந்த இன்பத்தை இன்னும் ஒருமுறை ஊடிப் பெறுவோமோ?