இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1324புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை

(அதிகாரம்:ஊடலுவகை குறள் எண்:1324)

பொழிப்பு (மு வரதராசன்): காதலரைத் தழுவிக் கொண்டு விடாமலிருப்பதற்குக் காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

மணக்குடவர் உரை: என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும்.
அது புணர்ந்த பின்பு தோன்றாமையால் அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை- பணிமொழி. இவை யெட்டும் தலைமகன் கூற்று.

பரிமேலழகர் உரை: (அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம்.
('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும் . படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.)

இரா இளங்குமரனார் உரை: துணைவரைத் தழுவிக் கொண்டு விடாமல் இன்புறச் செய்தற்கு உதவும் ஊடலிலே என் மன உறுதியை உடைக்கும் படைக்கலம் உருவாகின்றது!


பொருள்கோள் வரிஅமைப்பு:
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என் உள்ளம் உடைக்கும் படை.

பதவுரை:
புல்லி-தழுவி; விடாஅ-விடாமைக்கு ஏதுவாகிய; புலவியுள்-ஊடலுள்; தோன்றும்-உண்டாகும்; என்-எனது; உள்ளம்-நெஞ்சம்; உடைக்கும்-கெடுக்கும்; படை-அழிக்கும் கருவி (ஆயுதம்).


புல்லி விடாஅப் புலவியுள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்து;
பரிப்பெருமாள்: புல்லினவிடத்து துனியாம்படி இவளைப் பொருந்தி விடாதே நிற்கின்ற புலவிக்கண்ணே;
காலிங்கர்: புல்லின இடத்துவிட்டுப் புலந்த இடத்து; பரிமேலழகர்: (அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது.) காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே;
பரிமேலழகர் குறிப்புரை: 'புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது.

மணக்குடவரும் காலிங்கரும் 'புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்து' என்ற பொருளில், ‘விடாஅ’ என்பதனைச் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக்கொண்டு, இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிப்பெருமாள் 'புல்லினவிடத்து துனியாம்படி இவளைப் பொருந்தி விடாதே நிற்கின்ற புலவிக்கண்ணே' என்றார். பரிமேலழகர் 'காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே' என வருவித்துரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலரை உடனே தழுவிவிடாத ஊடலில்', 'காதலரைத் தழுவிக்கொண்டு பின் நீங்காமைக்குக் காரணமாகிய புலவி இடத்தே', 'புணர்ச்சி செய்து தீர்த்துவிடாமல் (வெறும்) பிணக்கத்தில் இருந்தபோது', 'காதலரைத் தழுவிக்கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக் கண்ணே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காதலரைத் தழுவிவிடாத ஊடலில் என்பது இப்பகுதியின் பொருள்.

தோன்றும் என்உள்ளம் உடைக்கும் படை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தோன்றும் என் உள்ளத்தை அழிக்குங் கருவி.
மணக்குடவர் குறிப்புரை: அது புணர்ந்த பின்பு தோன்றாமையால் அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை- பணிமொழி. இவை யெட்டும் தலைமகன் கூற்று.
பரிப்பெருமாள்: வெளிப்படும் எனது உள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம் போன்ற துன்பம் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: நீடுங்கால் புலவி துன்பம் எனவே, புலவி கடிது நீங்க வேண்டும் என்றது. விட்டுப் புலந்த இடத்துத் தோற்றும் எனது உள்ளத்தை அழிக்கும் கருவி என்றவாறு. அஃதாவது தலைமகள் புலவியால் கூறும் சொற்கள், அது புணர்ந்த பின்பு தோற்றாமையால் அதனைக் கேட்டால் இன்பம் உடைத்து என்று கூறியது. இவை எட்டும் தலைமகன் கூற்று. .
காலிங்கர்: தோன்றும் எனது உள்ளத்தை அழிக்கும் கருவி என்றவாறு.
காலிங்கர்: அஃதாவது தலைமகள் புலவியால் கூறும் சொற்கள் புணர்ந்த பின்பு தோற்றாமையால் அதனைக் கேட்டல் இன்பம் உடைத்து என்று கூறியது. இவை எட்டும் தலைமகன் கூற்று.
பரிமேலழகர்: உளதாம் அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும் . படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.

'தோன்றும் எனது உள்ளத்தை அழிக்கும் கருவி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறக்கின்றது என் நிறையை உடைக்கும் படை', 'உள்ளது என் நெஞ்சத்தை உடைக்கும் படைக்கலம். (படைக்கலம் பணிமொழியைக் குறிக்கும்)', 'என் மனதைக் கோடாரி கொண்டு பிளப்பதைப் போன்ற துன்பம் இருந்தது', 'என் உள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம் தோன்றும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என்உள்ள உறுதியை உடைக்கும் கருவி தோன்றுகிறது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புல்லி விடாஅப் புலவியுள் என்உள்ள உறுதியை உடைக்கும் கருவி தோன்றுகிறது என்பது பாடலின் பொருள்.
'புல்லி விடாஅப் புலவியுள்' என்ற பகுதி குறிப்பதென்ன?

தலைவியை அரவணைத்துப் பணிமொழி கூறி அளிசெய்கிறான் தலைவன்; ஊடல் கொள்ளும் தலைவிக்கு அணைப்பை விடமுடியவில்லை; அவளது ஊடலை உடைத்தெறியும் கருவி தோன்றிவிட்டது என்கிறாள் அவள்.

நெடுநாள் பிரிவிற் சென்றிருந்த தலைவன் திரும்பி வந்துள்ளான். காம இன்பம் மிகவேண்டும் என்ற நோக்கில் தலைவி நேரே கலவியில் ஈடுபடாமல் அவனுடன் ஊடல் கொண்டு அதைத்தொடர்வதில் உறுதியோடு இருக்கிறாள். ஊடல் உணரும் (காரணத்தை அறிந்து தெளியும்)வண்ணம் தலைவன் அவளை இதமாகத் தழுவிப் பணிமொழி கூறத் தொடங்குகிறான். ஊடல் இன்பமும் வேண்டும்; அவன் தழுவுதலையும் நெகிழ்த்துவிட மனமில்லை. இந்நிலையில் தலைவியின் ஊடல் நீட்டிக்க வேண்டும் என்ற உள்ள உறுதி குலைந்து விடும்போல் தோன்றுகிறது. அப்பொழுது 'என் உள்ளம் உடைக்கும் படை புலவியுள் தோன்றும்' என மொழிகிறாள்.
புலவியிலிருந்து நீங்கும் நேரம் வந்துவிட்டதாகத் தலைவி எண்ணுகிறாள்.

தலைவனின் பணிமொழியும் தண்ணளி செய்தலும் தழுவதலும் தலைவியின் இன்னும் ஊடவேண்டும் என்ற மன உறுதியைக் கரைத்து விடுகிறது. இப்பொழுது காதலரோடு கூடலுக்கான வேட்கைத் தோன்றுகிறது, அது சமயம் அவள் உள்ளத்தை அழிக்கும் கருவி புலவியுள் உண்டாகுவதாகச் சொல்கிறாள். காதலனின் வணக்கங்களும் கெஞ்சும் மொழிகளும், நீக்கமுடியாத தழுவலுடன் நிகழும் புலவியுள் வேட்கையை தலைவியின்கண் உண்டாக்கி ஊடலில் கொள்ளும் உறுதியை உடைக்கவல்ல கருவியானது.
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை (நிறையழிதல் குறள்எண்:1258 பொருள்: பலவிதமான மாயங்களைச் செய்து மயக்கும் காதலனது மென்மையான இனிய சொற்களல்லவா பெண்தன்மையை உடைக்கும் கருவி) என்று முன்னரும் காதலனது பணிமொழியானது அவளது நிறையை உடைக்கும் கருவி எனச் சொல்லப்பட்டது.

'புல்லி விடாஅப் புலவியுள்' என்ற பகுதி குறிப்பதென்ன?

'புல்லி விடாஅப் புலவியுள்' என்றதற்குப் புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்து, புல்லினவிடத்து துனியாம்படி இவளைப் பொருந்தி விடாதே நிற்கின்ற புலவிக்கண்ணே, காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே, காதலரைத் தழுவிக் கொண்டு விடாமலிருப்பதற்குக் காரணமான ஊடலுள், தலைவரைத் தழுவுதலைக் கைவிடாதிருந்தே புலக்கின்ற ஊடலின்போது, காதலரை உடனே தழுவிவிடாத, காதலரைத் தழுவிக்கொண்டு பின் நீங்காமைக்குக் காரணமாகிய புலவி இடத்தே, புணர்ச்சி செய்து தீர்த்துவிடாமல் (வெறும்) பிணக்கத்தில் இருந்தபோது, துணைவரைத் தழுவிக் கொண்டு விடாமல் இன்புறச் செய்தற்கு உதவும் ஊடலிலே, அன்பரைத் தழுவிவிடாமைக்கு ஏதுவாகிய பிணக்கினுள்ளே, காதலரைத் தழுவிக்கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக் கண்ணே, என் காதலரைத் தழுவிப் பிரியாதிருப்பதற்காகச் செய்யும் ஊடலில் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'காதலரை உடனே தழுவிவிடாத' என வ சுப மாணிக்கம் சற்று வேறுபாடான உரை கூறினார். மற்றவர்கள் பிணங்கி விலகிப் போகாமல், அருகிலிருந்தே பிணங்குவது. என்ற பொருளில் உரை செய்தனர். புலவியின் போதே ஊடல் உணர்தல் நடைபெறுகின்றது. அது அவளை அமைதிப்படுத்தக் காதலன் அவளைத் தழுவிக்கொண்டு கெஞ்சிக் கொஞ்சுவதைக் குறிப்பது. அதனால் அவள் மனவுறுதி குலைந்து தழுவலை விடாதிருக்கச் செய்கிறது.

'புல்லி விடாஅப் புலவியுள்' என்ற பகுதிக்குத் தழுவுதலைக் கைவிடாதிருந்தே ஊடும்போது என்பது பொருள்.

காதலரைத் தழுவிவிடாத ஊடலில் என்உள்ள உறுதியை உடைக்கும் கருவி தோன்றுகிறது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஊடலுவகையிலேயே நிறையுடைதலும் நிகழ்கிறது.

பொழிப்பு

காதலரை உடனே தழுவிடாத ஊடலில் என் நெஞ்சத்தை உடைக்கும் கருவி தோன்றுகிறது.