இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1323புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து

(அதிகாரம்:ஊடலுவகை குறள் எண்:1323)

பொழிப்பு (மு வரதராசன்): நிலத்தோடு நீர் பொருந்திக் கலந்தாற்போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதைவிட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதோ?

மணக்குடவர் உரை: நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டுப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?
நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை.
(நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின்', அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள், உவமம் பயன்பற்றி வந்தது.)

இரா சாரங்கபாணி உரை: நிலத்தொடு நீர் கலந்தாற் போன்ற மனம் ஒன்றிய காதலரிடத்துப் புலவியாற் பெறும் இன்பம் போல் மேலுலகத்தில் உளதோ? இல்லை!


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிலத்தொடு நீர் இயைந் தன்னார் அகத்துப் புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ?.

பதவுரை:
புலத்தலின்-ஊடல் கொள்ளுவதைக் காட்டிலும்; புத்தேள்நாடு-வானவர் உலகம்; உண்டோ-உளதோ; நிலத்தொடு-நிலத்துடன்; நீர் இயைந்த-நீர் பொருந்திய; அன்னார்அகத்து-அத்தகையவர் மாட்டு.


புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?
பரிப்பெருமாள்: புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?
பரிதி: கலவி இன்பத்திலும் இன்பம் உண்டோ தேவர் உலகத்தினும்; அது எங்ஙனமோ எனில் அன்புள்ள நாயகரிடத்தில் புலவி என்றவாறு.
காலிங்கர்: புலத்தல்போல இன்பம் தருவது ஒரு தேவர் உலகு உண்டோ;.
பரிமேலழகர்: (இதுவும் அது.) புலத்தல் போல நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை;

'புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊடுதலைவிடத் தேவருலகம் இன்பமானதோ?', '(அவர்கள்) பிணங்கியிருந்து புணரும்போது உண்டாவது போன்ற இன்பம் தேவலோகத்திலும்கூட இருக்காது', 'பிணங்குதல்போன்று இன்பஞ் செய்வது தேவருலகத்து முண்டோ?', 'புலத்தல் போல, நமக்கு இன்பம் தருகின்ற தேவர் நாடு உண்டோ? இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊடுதலைவிட இன்பமான மேலுலகம் உளதோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டு.
மணக்குடவர் குறிப்புரை: நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.
பரிப்பெருமாள்: நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: நிலத்தோடு நீர் இயைதலாவது அவை வெப்பமும் தட்பமும் கூட அனுபவிப்பார் மாட்டு என்றவாறு. தலைமகன் புலந்து நீங்கியவழி, 'நுமக்குப் புலவி நன்று ஆயிற்று' என்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
ஊடிக்கூடல் முடிந்தது.
காலிங்கர்: நிலனும் நீரும் பொருந்தினாற்போல, ஒன்றுபட்ட நெஞ்சுடையார் புல்லி.
காலிங்கர் குறிப்புரை: நிலத்தொடு நீர் இயைதலாவது நிலத்தின் வெப்பமும் நீரின் தட்பமும் கூட அனுபவிக்கும் அவைபோலக் காமத்தின் இன்பத் துன்பங்கூட அனுபவிப்பார்மாட்டு என்றவாறாயிற்று.
பரிமேலழகர்: நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டு.
பரிமேலழகர் குறிப்புரை: நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின்', அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள், உவமம் பயன்பற்றி வந்தது.

'நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மண்ணோடு நீர் குழைந்தாற்போன்ற காதலரிடம்', 'நிலவளமும் நீர் வளமும் சேர்ந்தது போன்ற (மனமொத்த) காதலர்களுக்கிடையில்', 'நிலத்தினோடு நீர் கலத்தல்போல ஒற்றுமையுடைய காதலர் மாட்டு', 'நிலத்தோடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலரிடம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற காதலரிடம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற காதலரிடம் ஊடுதலைவிட இன்பமான மேலுலகம் உளதோ? என்பது பாடலின் பொருள்.
'நிலத்தொடு நீரியைந்த அன்னார்' யார்?

நிலத்தோடு நீர் கலந்தாற்போல் மனம் ஒன்றிய காதலரிடம் ஊடுதலைவிட இன்பமான உலகம் வேறு எங்கும் இருக்கிறதா?

ஒருவருக்காக மற்றொருவர் என்ற வகையிலான மனம் ஒன்றுபட்ட காதலர்கள் அவர்கள். உள்ளம் ஒன்றியவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஆனால் இது மனம் வேறுபட்டதால் உண்டான சண்டை அல்ல. இது ஊடற்பூசல் எனப்படுவது. மற்றப் பூசல்களினால் மனக்கசப்பும் துன்பமும்தான் தோன்றும். ஆனல் மனம் ஒத்த இவ்இணைகள் ஊடலில் ஈடுபடும்போது இன்பம் மட்டுமே காண்கின்றனர். அதுவும் எப்படிப்பட்ட இன்பம்? துன்பம் அற்றது எனவும் பேரின்பமே கொண்டது எனவும் தொன்மங்கள் கூறும் மேலுலகத்திலுள்ள இன்பத்தைவிட மேலான இன்பம் அது என்கின்றனர் அவர்கள்.

ஒருவனுக்கு ஒருத்தியும் ஒருத்திக்கு ஒருவனும் என்பது மணவாழ்க்கையின் அறம். அப்படிப்பட்டவர்கள் அன்பு வழி நின்று ஒத்த உரிமையோடு ஒருவர்க்குள் ஒருவராய் பிணைந்து இன்ப வாழ்வு நடாத்துவர். அவர்களது உறவு நிலமும் நீரும் ஒன்றாகப் பொருந்தியுள்ளது போன்றதாகும். நீர் நிலத்தியல்புக்கு ஏற்ப நிறமும் சுவையும் பெற்று அதனுடன் ஒன்றாய்க் கலந்துவிடும். அது போன்று உடல்கள் வேறுவேறு ஆனாலும் அன்பால் அவர்கள் ஒன்றாய்க் கலந்து நிற்பர். இவ்வாறு ஒன்றுபட்டாரிடையே தோன்றும் புலவி இருவர்க்கும் பேரின்பம் அளிக்கிறது. ஊடல் என்பது ஏதாவதொரு காரணத்துக்காக காதலரிடையே ஏற்படும் பிணக்கு. உண்மையான காரணம் ஒன்றுமே இல்லாவிட்டாலும் இல்லாத காரணத்துக்காகவும் பிணக்கம் கொள்வர் அவர்கள். பொய்ச் சண்டையிடுவது அவர்களுக்கு அளவிறந்த மகிழ்ச்சி தருகிறது. மனம் ஒன்றுபட்ட காதலர் வாழ்வில் ஊடுவது தனி இன்பமாக இருக்கின்றது. இப்பேரின்பத்துக்கு ஈடாகத் தேவருலக இன்பத்தையும் ஒப்பிடல் இயலாது. 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' அதாவது 'தேவருலகம் அத்தகைய இன்பம் தருமோ?' என்று காதலர் வாய்ச் சொற்களாலேயே அவ்வின்பத்தின் எல்லையைக் கூறுகிறது இப்பாடல். புத்தேள்நாடு என்பது வானுலகம், மேலுலகம், தேவருலகம் என்று மாந்தர் கற்பனையால் உருவாக்கப்பட்ட உலகத்தைக் குறிக்கும்.
முன்னர் தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு(புணர்ச்சி மகிழ்தல் குறள்எண்:1103 பொருள்: தன்னைக் காதலிக்கும் பெண்ணுடன் மகிழ்ந்திருந்துவிட்டு அவளது மெல்லிய தோள்களில் உறக்கம் கொள்வதில் பெறும் இன்பம் சொர்க்க உலகத்தில் கிடைக்கும் இன்பத்தைவிடப் பெரிது) என்று காதலன் நினைப்பதாகச் சொல்லப்பட்டது. அக்குறளில் கூடலின்பம் பெரிதாகப் பேசப்பட்டது. அதுபோன்ற பேரின்பம் ஊடலில் உண்டு என்று இங்கு கூறப்படுகிறது.

மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய மூவரும் இப்பாடலைக் குறள் நூலின் இறுதிச் செய்யுள்ளாக(1330)க் கொண்டனர் என்பது அறியத்தக்கது.

'நிலத்தொடு நீரியைந்த அன்னார்' யார்?

'நிலத்தொடு நீரியைந்த அன்னார்' என்றதற்கு நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார், அன்புள்ள நாயகரிடத்தில், நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர், நிலத்துடன் நீர் சேர்ந்ததுபோல ஒன்றுபட்ட மனமுடைய காதலர்கள், மண்ணோடு நீர் குழைந்தாற்போன்ற காதலர், நிலத்தொடு நீர் கலந்தாற் போன்ற மனம் ஒன்றிய காதலர், நிலவளமும் நீர் வளமும் சேர்ந்தது போன்ற (மனமொத்த) காதலர்கள், நிலத்தொடு நீர் இரண்டறக் கலந்தாற் போலப் பொருந்தியவர், நிலத்தினோடு நீர் கலத்தல்போல ஒற்றுமையுடைய காதலர், தம்முள் ஒன்றுபட்டுத் தண்ணளி செய்யும் காதலர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இவர்களுள் பெரும்பான்மையர் காதலர் பற்றித் தலைவி கூறுவதாகவே உரை செய்துள்ளனர். ஆனால் இச்சொற்றொடர் தலைவன் தலைவி இருவருக்கும் பொருந்துவதாகவே உ;ள்ளது.

மணக்குடவர் 'நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார்' என்று விளக்கினார். பரிமேலழகர் 'நீர் தான் நின்ற நிலத்து இயல்பைக் கொண்டு விளங்குவதைப்போலக் காதலரும் தாம் கூடிய மகளிரின் இயல்பினராய் அமைவார்' என்பார். 'தாவர வளர்ச்சிக்கு நீர் இன்றியமையாதது என்றும், நிலவளம் மட்டும் தனியாகப் பயிர் வளர்க்காது, நிலத்தில் உள்ள சத்துப் பொருள்களைக் கரைத்துக் கொடுக்க நீர் இன்றியமையாதது என்பதை விளக்க 'நிலத்தொடு நீரியைந் தன்னார்' என்று கூறப்பட்டதாக தண்டபாணி தேசிகர் மொழிவார்.

'நிலத்தொடு நீரியைந்த அன்னார்' என்பது நிலத்தொடு நீர் கலந்தாற்போல, பிரிக்கவியலாது பொருந்திய, ஒன்றுபட்ட மனமுடைய காதலர்களைக் குறிக்கும்.

நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற காதலரிடம் ஊடுதலைவிட இன்பமான மேலுலகம் உளதோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அன்புடைய காதலரிடத்தில் சண்டையிடுவது போல் நடித்துப் பெறும் ஊடலுவகை மகிழ்ச்சியின் உச்சம்.

பொழிப்பு

நிலத்தொடு நீர் கலந்தாற் போன்ற காதலரிடத்து ஊடுதலைவிட இன்பமான மேலுலகம் உளதோ?