இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1321



இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கும் ஆறு

(அதிகாரம்:ஊடலுவகை குறள் எண்:1321)

பொழிப்பு (மு வரதராசன்): அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானாலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்யவல்லது.,

மணக்குடவர் உரை: அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று.
இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது.
('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.

சி இலக்குவனார் உரை: அவரிடம் தவறு இல்லையாயானாலும், நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலைச் செய்தல் வல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவர்க்கு தவறுஇல்லை ஆயினும், ஊடுதல் அவர் அளிக்குமாறு வல்லது.

பதவுரை: இல்லை-இல்லை; தவறு-குற்றம்; அவர்க்கு-அவரிடம்; ஆயினும்-ஆனாலும்; ஊடுதல்-ஊடல் கொள்ளுதல்; வல்லது-வல்லதாகின்றது; அவர்-அவர்; அளிக்குமாறு-தலையளி செய்ய அதாவது அன்பு காட்டச் செய்ய வல்லது.


இல்லை தவறுஅவர்க்கு ஆயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர்மாட்டுத் தவறில்லையானாலும்;
பரிப்பெருமாள்: அவர்க்கு தவறில்லை ஆயினும்;
காலிங்கர்: அவர் நமக்குச் செய்த குற்றம் இல்லையாயினும்;
பரிமேலழகர்: (தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். [அவர்க்கு என்னும் நான்கனுருபு தனக்குரிய பொருளைவிட்டு அவர் மாட்டென ஏழனுருபின் பொருளில் வந்தமையின் வேற்றுமை மயக்கமாயிற்று.]

அவர்மாட்டுத் தவறில்லையானாலும்/அவர்க்கு தவறில்லை ஆயினும்/அவர் நமக்குச் செய்த குற்றம் இல்லையாயினும் என்றவாறு பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரிடம் ஒரு தவறு இல்லை யாயினும்', 'காதலரிடத்தில் குற்றமில்லையென்றாலும்', 'குற்றம் அவர்பால் இல்லையானாலும்', 'அவரிடம் தவறு இல்லையாயானாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அவரிடம் ஒரு தவறு இல்லையானாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஊடுதல் வல்லது அவர்அளிக்கும் ஆறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று.
மணக்குடவர் குறிப்புரை: இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவ்வருள் பிறர்க்கும் செய்வர் என்னும் கருத்தினானே ஊடவேண்டும் என்றவாறு ஆயிற்று. தலைமகன் புணர்ந்து நீங்கிய வழித் தலைமகள் இன்பச் செவ்வி கண்டு, 'இவ்வாறு இன்பம் நுகராது தவறு இல்லாதார் மாட்டுத் துன்பமாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கு' என்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
காலிங்கர்: ஊடுதலைச் செய்யின் அவர் அன்பு மிகுதியால் நமக்கு அவர் அளியைப் பெறுகுவோம் என்றவாறு.
பரிமேலழகர்: நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. [தலையளி - முகமலர்ந்து இனிய கூறுதல்; விளைக்கவற்றாகின்றது - உண்டாக்க வல்லதாகின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம். [அளவிறந்த - அளவு கடந்த; அது - இத்தலையளியை ஒழிந்தாரும் எய்துதல்]

'அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று' என்ற பொருளில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர்: 'ஊடுதலைச் செய்யின் அவர் அன்பு மிகுதியால் நமக்கு அவர் அளியைப் பெறுகுவோம்' எனப் பொருள் கூறினார்

இன்றைய ஆசிரியர்கள் 'ஊடல் அவரைப் பேரன்பு கொள்ளச் செய்யும்', '(குற்றமிருப்பது போலச் சொல்லிக் காதலி) பிணங்குவது காதலருடைய ஆசைக்குச் சரிசமமான ஆசைகாட்டும் தன்மையுள்ளதேயாம்', 'அவர் அன்பு செய்தருளுமுறை பிணக்கத்தை விளைக்க வல்லது', 'நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலைச் செய்தல் வல்லது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஊடுதல் அவர் நம்மீது பேரன்பை விளைவிக்க வல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அவரிடம் ஒரு தவறு இல்லையானாலும், ஊடுதல் வல்லது அவர்அளிக்கும் ஆறு என்பது பாடலின் பொருள்.
'ஊடுதல் வல்லது அவர்அளிக்கும் ஆறு' என்ற பகுதி குறிப்பது என்ன?

'என் கணவரிடம் குற்றம் காணமுடியாது. அதனாலென்ன? பின்னும் அவரோடு ஊடலின்பம் பெற எனக்குத் தெரியும்' - தலைவி.

அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மீது பேரன்பு அளிக்க வல்லது ஆகும்.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாக மணைவியைப் பிரிந்து சென்றிருந்த தலைவர் நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்பியுள்ளார். அவள் அவருடன் கூடுவதற்கு முன் ஊடல்உவகை எய்த வேண்டுமென முன்னமே முடிவுசெய்து அதில் உறுதியாக இருக்கிறாள் தலைவி. முகமலர்ச்சியுடன் முழுப் பெண்மைப் பொலிவுடன் காட்சி அளிக்கிறாள். இரவில் இருவரும் படுக்கையறையில் இருக்கின்றனர். கூடலுக்கு முன் ஊடல் கொண்டால் சேர்க்கை இன்பம் மிகும் என்றும் நீடிக்கும் என்றும் அவள் அறிந்து வைத்திருந்ததால் புலவி நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறாள். நீண்ட பிரிவுக்குப் பின் இல்லம் திரும்பியுள்ள அவர் காமமிகுதி கொண்டிருப்பார் என்பதைத் தெரிந்தும் தலைவி அவருடன் உடனே கலவாமல் அவர்மேல் பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக் கொள்கிறாள். தும்மினாலும் அதை அடக்கமுயன்றாலும், அன்புடன் கொஞ்சினாலும். வறிதே பார்த்தாலும் எல்லாவற்றிலும் தவறு கண்டுபிடித்து சினம் காட்டி ஊடுகிறாள். அவளது பொய்யான காய்தலுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் கணவர் திணறிக் கொண்டிருக்கிறார்.

இக்காட்சி:
ஊடல் கொள்வதற்கு ஒரு காரணம் வேண்டும். பொதுவாகத் தலைவனிடம் காணப்படும் குறையை வைத்தே பிணக்கம் நிகழும். இங்கு கணவர் புறத்தொழுக்கம் இன்றி வாழ்பவர்; ஆயினும் அவரோடு தவறு கற்பித்து ஊடினால் அவர் தம்மீது காட்டும் அன்பு மிகுதியாகும் என்ற கருத்துடனும் ஊடியபின் கூடுவதால் பெறும் இன்பத்தைக் குறிக்கொண்டும் புலக்கிறாள் தலைவி.
இதற்கு முந்தைய அதிகாரமான 'புலவி நுணுக்கம்' முழுவதிலும் பிறமகளிரைத் தலைவரோடு தொடர்புபடுத்தி வெளிப்படையாகக் காதலி பேசினாள். ஆனால் தலைவர் வாழ்வில் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் கிடையாது. அங்குள்ள பிறமகளிர் குறிப்பு இல்பொருளில் வந்தது அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போலப் புனைவு செய்து காட்டப்பட்டது. அது இல்பொருள் என்பதனை தலைவி வாய்வழியேயே இங்கு விளக்கம் செய்யப்படுகிறது. அவள் எண்ணியவாறே ஊடலைத் தீர்த்துத் தனது சினத்தைத் தணிப்பதற்காக தலைவர் மிகுதியான அன்பு காட்டி அவளுக்கு இன்பம் நல்கினார் தலைவர். ஊடலுக்கு உண்மையான காரணம் இல்லாவிட்டாலும் அவரிடம் காதற்பூசல் கொள்வது வேண்டற்பாலதே. 'அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய அன்பை முழுதுமாகப் பெற முடிகிறது. அவர் தலையளி பெருகுகின்றது. அதனால்தான் ஊடுகிறேன்' என்கிறாள் அவள்.
தலைவியின் கூற்று காதலர் வடுநீங்கு சிறப்பினர் என்பதைப் புலப்படுத்துகின்றதையும் அறியலாம். வள்ளுவர் காட்டும் தலைவரிடம் ஒரு தவறும் காணமுடியாது. அவர் வேறு எந்தப் பெண்ணுக்கும் தன்உள்ளத்தில் இடம் தராதவர்; அவரது அன்பு எப்பொழுதும் தனக்கே உரிமையானதாக விளங்க வேண்டும் என்று அவள் விரும்புவதாலேயே அவள் அவர் வேறு பெண்ணிடம் தொடர்பு உள்ளவர் என்று சொல்லி ஊடல்கொள்வாள். இவ்வகையான ஊடல் தொடரத் தொடர அவர் அவள் மீது கொள்ளும் காதலின்பமும் பெருகுகிறது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறாள்.

'ஊடுதல் வல்லது அவர்அளிக்கும் ஆறு' என்ற பகுதி குறிப்பது என்ன?

'ஊடுதல் வல்லது அவர்அளிக்கும் ஆறு' என்ற பகுதிக்கு அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று, இவ்வருள் பிறர்க்கும் செய்வர் என்னும் கருத்தினானே ஊடவேண்டும் என்றவாறு ஆயிற்று, ஊடுதலைச் செய்யின் அவர் அன்பு மிகுதியால் நமக்கு அவர் அளியைப் பெறுகுவோம், நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது, அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்யவல்லது, ஊடல் கொள்ளுதல் அவரை நம்மிடம் அன்பு காட்டிப் பரிவு கொள்ள வைத்து மகிழச்செய்ய வல்லதாகும், ஊடல் அவரைப் பேரன்பு கொள்ளச் செய்யும், பிணங்குவது காதலருடைய ஆசைக்குச் சரிசமமான ஆசைகாட்டும் தன்மையுள்ளதேயாம், ஊடல் கொள்ளுதல் அவன் தன்னை மேலும் சிறப்பாக அரவணைத்துக் கொள்ளுதலை விரும்பியே யாகும், அவர் அன்பு செய்தருளுமுறை பிணக்கத்தை விளைக்க வல்லது, நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலைச் செய்தல் வல்லது, ஊடுவது அவர் என்மாட்டுக்கொள்ளும் அன்பை அதிகப்படுத்துவதாகும் என்றபடி உரையாசிரியர்கள் விளக்கம் செய்தனர்.

'அளி' என்ற சொல்லுக்கு தலைவன் காதலியிடம் காட்டும் அருள் அல்லது தலையளி என்பது பொருள். இது அவர் அவளிடம் காட்டும் பேரன்பைக் குறிப்பது. அளிக்குமாறு என்றது தலையளி செய்யுமாறு எனப் பொருள்படும். தலைவர் ஊடலுணர்த்தி தலையளிசெய்தல்-பிணக்கைத் தீர்க்க இனிய சொல்லி ஆறுதல் அளிப்பது- மனைவிக்கு மிகுதியாக உவகை உண்டாக்குகிறது.
தன் தலைவர் தனக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்று பார்க்கும் பொழுதும், தன் தலைவர் தன் மீது எவ்வளவு அன்புகொண்டு உள்ளார் என்று உணரும் பொழுதும், தவறே தன் மீது இல்லாத பொழுதும் தலைவர் தான் காய்ந்ததைக் கருத்தில் கொள்ளாது தலைவியிடம் ஊடலை தணித்து கூட வேண்டும் என்று எண்ணுகிறாரே என்று நினைத்தும் தலைவி மகிழ்வடைகிறாள்.

'நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலைச் செய்தல் வல்லது' என்பது இப்பகுதியின் பொருள்.

அவரிடம் ஒரு தவறு இல்லையானாலும், ஊடுதல் அவர் நம்மீது பேரன்பை விளைவிக்க வல்லது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஊடலுவகை தலைவன் செய்யும் தண்ணளி வழியும் பெறப்படுகிறது.

பொழிப்பு

அவரிடம் ஒரு தவறு இல்லையென்றாலும் ஊடல்கொள்ளுதல் அவரை நம்மீது பேரன்பு கொள்ளச் செய்யும்