இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1314



யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1314)

பொழிப்பு (மு வரதராசன்): யாரையும்விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம்` என்று சொன்னேனாக, யாரைவிட? யாரைவிட? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

மணக்குடவர் உரை: ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர் என்று சொல்லிப் புலந்தாள்.
(தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்மை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை', என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: 'எவரினும் மிக்க காதல் உடையேம்' என்று கூறினேனாக, என்னால் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதல் உடையேன் என்றேனாகக் கருதி அம்மகளிர் 'யாரினும் என்கண் காதலுடையரானீர்' என்று சொல்லி ஊடினாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யாரினும் காதலம் என்றேனா யாரினும் யாரினும் என்று ஊடினாள்.

பதவுரை: யாரினும்-யாவரினும்; காதலம்-காதலை உடையவராய் இருக்கின்றோம்; என்றேனா-என்று கூறினேனாக; ஊடினாள்-ஊடல் கொண்டாள்; யாரினும்-யாவரினும்; யாரினும்-யாவரினும்; என்று-என்று சொல்லி.


யாரினும் காதலம் என்றேனா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக;
பரிப்பெருமாள்: ஒருவனும் ஒருத்தியுமாகி அன்று அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னோமாக;
பரிதி: புலவியிலும் கூடின விகாரம் நன்றாயதென்றீர்;
காலிங்கர்: ஒருவனும் ஒருத்தியும் ஆகிய அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையேம் என்று சொன்னேனாக;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக;
பரிமேலழகர் குறிப்புரை: தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்மை உயர்ச்சிக்கண் வந்தது.

'ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாரையும் விடக் காதல் உடையோம் என்றதும்', 'இருவர் இருவராக இருக்கும் காதல் இரட்டையர்களுள் யாவரினும் நாம் காதல் மிகுதியுடையோம் என்று கூறினேனாக', '(நான் மற்ற) யாரையும் நேசிப்பதைவிட (உன்னை) அதிகமாக நேசிக்கிறேன் என்று சொன்னேன்', 'எவரைப் பார்க்கிலும் யாம் விருப்ப முடையேமென்று சொன்னேம்', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

யாரையும் விடக் காதல் உடையோம் என்று கூறினேனாக என்பது இப்பகுதியின் பொருள்.

ஊடினாள் யாரினும் யாரினும் என்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள்.
பரிப்பெருமாள்: அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்பு உடையீராயுனீர் என்று சொல்லி ஊடினாள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: காதலுடையேம் என்று உளப்பாட்டுத் தன்மையாகக் கூறிய அதனை உயர்ச்சியாகக் கூறினான் ஆகக் கருதினாள். தலைமகன் வாயில் வேண்டின இடத்து, 'நின் குற்றத்தினாலே ஊடல் மிக்கிருந்தாள்' என்று கூறிய தோழிக்கு, 'அவள் ஊடுதற்கு யான் குற்றம் செய்ய வேண்டா; யான் சொல்லுவனவும் செய்வனவும் எல்லாம் குற்றாமாயிருக்கும்; அவள் குற்றம் ஆகக் கொண்டவற்றைக் கேள்' என்று சொல்லுவான் முற்பட அன்புடையேன் என்று சொல்லியது குற்றமாயிற்று என்று கூறியது.
பரிதி: முன்கூடிய மாதை நினைந்தீரோ என ஊடினாள் என்றவாறு.
காலிங்கர்: அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புறப்பட்ட பலருள்ளும் யாரினும் என்மேல் அன்புஉடையீர் என்று சொல்லி ஊடினாள் என்றவாறு.
பரிமேலழகர்: நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர் என்று சொல்லிப் புலந்தாள். [புலந்தாள் - பிணங்கினாள்]
பரிமேலழகர் குறிப்புரை: 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை', என்பதாம்.

'அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாரைவிட யாரைவிட என்று பிணங்கினாள்', 'அவள் என் சொல்லை வேறுபட உணர்ந்து யாரைவிட நீர் காதல் மிகுதியாக உடையீர் என விரைந்து கேட்டு ஊடினாள்', 'அதற்கு அவள் உடனே 'யாரையும் விட, யாரையும்விட' என்று பதறினாள்', 'யாரைப் பார்க்கிலும் யாரைப் பார்க்கிலும் என்று பிணங்கினாள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

யாரைவிட யாரைவிட என்று ஊடினாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
யாரினும் காதலம் என்று கூறினேனாக யாரைவிட யாரைவிட என்று ஊடினாள் என்பது பாடலின் பொருள்.
'யாரினும் காதலம்' என்ற தொடர் குறிப்பது என்ன?

நான் ‘யாரையும் விடக் காதல் உடையோம்’ என்று காதலியிடம் சொன்னவுடன் அவள் ‘யாரைவிட, யாரைவிட’ என்று துளைத்துத் கேட்டு ஊடல்கொண்டாள் என்கிறான் தலைவன்.

காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிவிற் சென்றிருந்த தலைவன் வீடு திரும்பியுள்ளான். நீண்ட காலம் அவனுக்காகக் காத்திருந்து துயருற்றிருந்த காதலி அவனைக் கண்டதும் பெருமகிழ்ச்சி கொள்கிறாள். இரவு நேரம். படுக்கையறை. இருவருமே காமம் மிகக் கொண்டே உள்ளனர். தலைவி காதலனைக் கூடுவதற்குமுன் ஊடிக்கொள்ளலாம் என எண்ணி, அவன் எது செய்தாலும் அதில் குற்றம் கண்டு புலந்துகொண்டு இருக்கிறாள். இப்போது:
அவளது சினத்தைத் தணிக்க விரும்பி இச்சமயம் தலைவன் அவளிடம் பணிமொழி கூற விழைகிறான். 'காதல் கொண்டோர் யாவரினும் நான் மிக்க காதலையுடையேன்' என்று சொல்ல வந்தவன் 'யாரினும் காதலம்' என்று அவளையும் தன்னையும் இணைத்துச் சொல்கின்றான். ஆனால் அவளோ உடனே சீறிப் பாய்கிறாள். 'யாரினும் காதலம்' என்று சொன்னதை 'தலைவனால் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் உன்னிடம் காதலையுடையேன்' என்று சொற்பொருளைச் சிதைத்து 'யாரைவிட, யாரைவிட என் மீது காதலையுடையீர்' என்று கூறிப் புலக்கின்றாள். தன்னுடைய இயல்பான பேச்சில், தம்முடையக் காதலைப் பாராட்டிப் பேசியதுகூட ஊடலுக்குப் பிடிகொடுத்ததாகிவிட்டதே என்று நொந்துகொள்கிறான் தலைவன்.

தலைவனுக்குப் பிறபெண்களிடம் உறவு இல்லை என்பது காதலிக்கு நன்கு தெரியும். இருந்தும் அவனைப் பரத்தமை கொண்டவனாகத் தலைவி பள்ளியிடத்து எண்ணிக் கொண்ட கற்பனைமேல் எழுந்த வினாக்களே 'யாரினும் யாரினும்' என்பன.
உலகத்து காதல் உடையவர்களில் நம்மைப் போல் காதல் உடையவர் யாரும் இலர் என்னும் பொதுவான பொருளில், அன்பு மிகுதியால், 'யாரினும் காதலம்' என்று தலைவன் கூறினான். தலைவன் பல பெண்களுடன் காதல் கொண்டிருப்பதாகவும் அவர்களுள் தலைவியிடமே மிகுந்த காதல் உடையவன் என்று அவன் கூறியதாகக் கருத்து வேறுபடக் கொண்டு தலைவி யாரினும் யாரினும் என்று கணவனின் பிறகாதலிகள் குறித்த தகவல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கிறாள். அவள் இப்படி ஊடுவது அவளது சொல்வன்மையையும் அறிவுச் செறிவையும் புலப்படுத்துவதாக அமைந்தது. வள்ளுவர் சொற்களை ஆண்டுள்ள முறை இப்பாடலிலுள்ள புலவி நுணுக்கத்தை உணர்த்தும்.

'கவிஞர்கள் உம்மைகளாலும் அடுக்குச் சொற்களாலும் கூறும் பொருளுக்கு வளம் ஊட்டுவர். உடன்பாட்டு வகையாலும் எதிர்மறை வகையாலும் கருத்தைக் கூறிப் படிப்போரைச் சிந்தனை வயப்படுத்துவர். ஒரே சொல்லை அடுத்தடுத்து இரு முறை சொல்லும்போது அது தரும் உணர்ச்சியின் வேகத்தை உணர்ந்தவர்கள் கவிஞர்கள். திருவள்ளுவரின் தனிநடையாகச் சிறப்புற்றுத் திகழுகின்ற நெறிகளில் இதுவும் ஒன்றாகும். இக் குறட்பா இவ்வகை நடைக்குச் சான்றாக விளங்குகின்றது. இதில் அமைந்துள்ள 'யாரினும்? யாரினும்?' என்னும் வினா அடுக்குத் தரும் உணர்ச்சியின் வேகத்தை உளவியல் நோக்கிலேயே உணர முடியும். 'சாதரணமான சொல்தான் 'யாரினும்' என்ற சொல். காதலன் சொன்ன சொல் அது. அதைக் காதலி மேற்கோளாக எடுத்துச் சொல்லும்போது அந்தச் சொல் அவளுடைய உள்ளக்குமுறலையெல்லாம் எப்படியோ கொட்டி விடுகிறது. இரண்டு எரிமலைகள் பெருமூச்சு விட்டுக்கொண்டும் எரியைக் கக்கிக் கொண்டும் நிற்பன போல நிற்கின்றன. யாரினும்? யாரினும்? என்ற சொற்கள் என்பர் அறிஞர்' (இ சுந்தரமூர்த்தி).
ஒரே குறளில் தலைவன் தன்னைப் பன்மையாலும் ஒருமையாலும் குறிப்பிடும் பாடல் இது. இக்குறளில் 'காதலம்' (காதலை உடையேம்) எனத் தன்மைப் பன்மையிலும், 'என்றேன்' என்று தன்மை ஒருமையிலும் தலைவன் குறிப்பிட்டுள்ளான்.

'யாரினும் காதலம்' என்ற தொடர் குறிப்பது என்ன?

யாரினும் காதலம்' என்ற தொடருக்கு இரு பொருள்கள் கொள்ளலாம். நாம், அதாவது தலைவனும் தலைவியும், நம்மைப் போன்ற காதலர்கள் எல்லாரினும் அன்புடையோம் என்பது ஒரு பொருள். யாம் (யான்) மற்றெல்லாரினும் உன் மீது காதலம் (அன்புடையேன்) என்பது இன்னொரு பொருள். தலைவன் முதலாவது பொருளிலேயே தலைவியிடம் மொழிகிறான் என்று தெரிந்தும் தலைவி இரண்டாவது பொருளில் அத்தொடரைத்தான் உணர்ந்ததாகக் காட்டி யாரினும் யாரினும் என்று கேட்டு ஊடுகிறாள். அவன் 'காதலம்' எனத் தன்மைப் பன்மையிற் கூறியதைத் தன்னையே உயர்த்துக் கூறும் பன்மையிற் கூறியதாகப் பிறிது பொருள் கொண்டு என்னிடம் எந்தப் பெண்ணைவிட மிகுதியாகக் காதல் கொண்டுள்ளீர்கள் எனச் சினந்து கேட்டு ஊடல் மேற்கொண்டாள்.

யாரையும் விடக் காதல் உடையோம் என்று கூறினேனாக யாரைவிட யாரைவிட என்று ஊடினாள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இல்லாத ஒருத்தியை 'யாரவள்? யாரவள்?' என்று பன்னிப் பன்னித் தலைவனைக் கேட்கும் புலவி நுணுக்கம்.

பொழிப்பு

யாரையும் விடக் காதல் உடையோம் என்று கூறினேனாக யாரைவிட யாரைவிட என்று கேட்டு ஊடினாள்.