இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1313



கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1313)

பொழிப்பு (மு வரதராசன்): கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும் 'நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடினீர்' என்று சினம் கொள்வாள்.

மணக்குடவர் உரை: பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும்.
பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச்செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ?
('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும் என்பதாம்; 'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275)என்றார் பிறரும். இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும்.)

இரா சாரங்கபாணி உரை: மரக்கிளைகளிலுள்ள பூக்களைப் பறித்துச் சூடினாலும், தம் காதலி ஒருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடினீர் என்று என்னைச் சினந்து கேட்பாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கோட்டுப்பூச் சூடினும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும்.

பதவுரை: கோட்டுப்பூ-மரக் கிளைகளில் உள்ள பூ, ஒப்பனைப்பூ, வளைப்பூ; சூடினும்-அணிந்தாலும்; காயும்-சீற்றம் கொள்வாள்; ஒருத்தியை-வேறு ஒருத்திக்கு; காட்டிய-காட்டுவதற்காக; சூடினீர் என்று-அணிந்தீர் என்று.


கோட்டுப்பூச் சூடினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பக்கப்பூச் சூடினும்;
மணக்குடவர் குறிப்புரை: பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம்.
பரிப்பெருமாள்: பக்கப்பூச் சூடினும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: பக்கப்பூ- ஒப்பனைப்பூ. வளைப்பூச்சூடினும் என்றும் ஆம்.
பரிதி: செண்பகப்பூ, பாதிரிப்பூ, புன்னைப்பூச் சூடினும்;
காலிங்கர்: பக்கப்பூச் சூடினும்;
காலிங்கர் குறிப்புரை: பக்கப்பூ-ஒப்பனைக்குச் சூடிய பூ; வளையப்பூச் சூடினும் என்றும் ஆம்.
பரிமேலழகர்: (தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) யான் கோடுதலைச்செய்யும் மாலையைச் சூடினேனாயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும் என்பதாம்; 'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275 )என்றார் பிறரும்.

'பூச் சூடினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். என்ன பூ என்பதிலும், அது எந்த வடிவில் என்பதிலும் இவர்கள் வேறுபடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குவியாத கோட்டுப்பூவைச் சூடினும்', 'மலர் மாலையை (நான்) சூடிக்கொண்டாலும்', 'வளைவுள்ள பூமாலையை அணிந்திருந்தாலும்', 'மரக்கொம்பில் உள்ள பூவை அவள் தலையில் சூடினாலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மரக்கொம்பில் உள்ள பூ அணிந்திருந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும்.
மணக்குடவர் குறிப்புரை: இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது.
பரிப்பெருமாள்: ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீர் என்று சொல்லி என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: அன்றியும் கோட்டுப்பூ சூடினேன் ஆயின் 'இப்பூ இந்நிலத்தில் உள்ளது ஒன்றல்ல; பிறர் நிலத்தில் உள்ளது' என்று ஐயுற்று வெகுளும். இதனை நீர் சூடியதும் அந்நிலத்தில் உள்ளாள் ஒருத்தியை எனக்கு அறிவித்தல் பொருட்டு என்று சொல்லி என்றுமாம். கோட்டுப்பூ-மருத நிலம் அல்லாத நிலத்தில் உள்ள பூ. இது கோலம் செய்யினும் குற்றமாம் என்று கூறியது.
பரிதி: குறிஞ்சி நிலத்து நாயகியை வேண்டிச் சூடினீர் என்று ஊடினாள் என்றவாறு.
காலிங்கர்: பக்கப்பூச் சூடினும் காயும். ஒருத்தியைக் காட்டுதற்காகச் சூடினீர் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அன்றியும், கோட்டுப்பூச் சூடினேன் ஆயின் 'இப்பூ இந்நிலத்து உள்ளது ஒன்றல்ல; பிறர் நிலத்துள்ளது' என்று மிக வெகுளும்; இதனை நீர் சூடியது அந்நிலத்து உள்ளாள் ஒருத்தியை எனக்கு அறிவித்தற் பொருட்டு என்று சொல்லி என்றும் ஆம். கோட்டுப்பூ- மருதநிலம் அல்லா நிலத்துப்பூ; தாளிப்பூ என்பாரும் உளர். கோலம் செய்யினும் குற்றமாம் என்று கூறிற்று.
பரிமேலழகர்: நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ?
பரிமேலழகர் குறிப்புரை: இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும். [வேற்றுநிலம்-குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை நிலங்கள்; கோட்டுப்பூ - கிளைகளிலுள்ள பூ; வெகுளும் - சினக்கும்]

'வேறு ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊடாத பரத்தையைக் காட்டச் சூடியதாகச் சினப்பாள்', '(அதை அவள் பார்த்துவிட்டு, 'அது எனக்கல்ல; வேறு யாரோ ஒருத்திக்கு உங்கள் அழகைக்) காட்டிக் கொள்ளச் சூடினீர்கள்' என்று கோபிக்கிறாள்', 'பிற ஒருத்திக்கு அதைக் காட்டும் பொருட்டு அதனை அணிந்தீரென்று என்னோடு பிணங்குவாள். இப்படிப்பட்டவளுக்குப் பிணங்க ஒரு காரணம் வேண்டுமோ?', 'காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடினீர் என்று வெறுப்பாள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிற ஒருத்திக்குக் காட்டும் பொருட்டு அதனைச் சூடினீரென்று சினப்பாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மரக்கொம்பில் உள்ள பூ அணிந்திருந்தாலும், பிற ஒருத்திக்குக் காட்டும் பொருட்டு அதனைச் சூடினீரென்று சினப்பாள் என்பது பாடலின் பொருள்.
'கோட்டுப்பூச் சூடினும்' குறிப்பது என்ன?

'எவளுக்குக் காட்டுவதற்காக இப்பூவைச் சூடியுள்ளீர்?' எனத் தலைவனிடம் சிடுசிடுக்கிறாள் காதலி.

மரக்கிளைப் பூவைச் சூடியிருந்தாலும், ‘நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கே அணிந்துள்ளீர்’ என்று காய்வாள் என் காதலி' என்கிறான் தலைமகன்.
காட்சிப் பின்புலம்:
நெடு நாட்கள் பிரிந்திருந்த கணவன் பணி முடிந்து இல்லம் திரும்பியிருக்கிறான். பிரிவாற்றாமையால் வாடியிருந்த மனைவி இப்பொழுது மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றாள். கணவனை வரவேற்பதற்காகத் தன்னை நன்கு அணிசெய்து-வளை பொருந்தி, பூச்சூடி- பெண்மைப் பொலிவுடன் இருக்கிறாள். இரவு நேரம், படுக்கையறை. கூடுதல் இன்பம் பெறுவதற்கு முன் காதலனோடு ஊடல் கொள்ள நினைக்கிறாள் தலைவி. அவன் எது செய்தாலும் குற்றம் காணவேண்டுமென்ற மனநிலையில் இருக்கிறாள் அவள்.

இக்காட்சி:
அமளிக்கு வருவதற்கு முன் எளிதாகக் கிடைக்கும் ஒரு மரத்தின் பூக்களைப் பறித்து அணிந்து கொள்கிறான் தலைவன். இப்பொழுது அவனது பூச்சூடலை வைத்து ஊடத் தொடங்குகிறாள். தலைவிக்கு மகிழ்ச்சியூட்டி அவளை அணைய வேண்டி வரும் கணவன் அவள் கண்டு மகிழுமாறு பூச் சூட்டிக் கொள்கின்றான். அவன் பூ அணிந்தது அவள் மீதுள்ள காதலின் பொருட்டு என்று கருதாமல், பிறள் ஒருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடியுள்ளான் என்று தலைவி ஊடல் கொள்கிறாள். 'எவளுக்குக் காட்டுவதற்குப் பூவும் தோரணமுமாக இருக்கின்றீர்?' எனக் கேட்டுச் சினக்கிறாள்.
கணவனுக்கு இத்தலைவியைத் தவிர்த்து வேறு பெண் எவரிடமும் காதலுறவு கிடையாது. அதை நன்கு அறிந்திருந்தும், அவள் ஊடலில் இன்பம் காண, இல்லாத ஒரு பெண்ணைக் கற்பனை செய்து 'அவளுக்கு உம் அழகைக் காட்டத்தானா அவ்வேற்றுப் பூச்சூட்டியுள்ளீர்' எனக் காய்கிறாள். மெய்யான அன்புப் பெருக்கால், இந்தப் பொய்யான சினம்கொண்டு ஊடுகிறாள்.
தலைவன் தனக்காகச் செய்துகொண்ட ஒப்பனையாகக் கொள்ளாது, வேறொருத்திக்காகச் செய்துகொண்டது என்று புனைந்து, குற்றம் சொல்லி, அவனோடு ஊடுவதால் புலவி நுணுக்கம்.

'ஒருத்தியைக் காட்டிய சூடினீர்' என்பதற்குப் பிறனொருத்திக்குக் காட்ட எனவும் பிறனொருத்தியை எனக்கறிவிக்க எனவும் பொருள் கூறுவர். இவற்றுள் வேறொருத்திக்குக் காட்ட என்பது பொருத்தமானது.

'கோட்டுப்பூச் சூடினும்' குறிப்பது என்ன?

'கோட்டுப்பூ' என்றதற்குப் பக்கப்பூ (ஒப்பனைப்பூ), வளைப்பூ, செண்பகப்பூ, பாதிரிப்பூ, புன்னைப்பூ, கோடுதலைச்செய்யும் மாலை, கிளைகளில் மலர்ந்த மலர், மரக்கிளைப் பூ, குவியாத கோட்டுப்பூ, மரக்கிளைகளிலுள்ள பூ, கூட்டப்பட்ட பூ (மாலையாகச் சேர்க்கப்பட்ட மலர்), கொம்பிலே பூத்த மலர், வளைவுள்ள பூமாலை, மரக்கொம்பில் உள்ள பூ, மரக்கிளையில் மலர்ந்த பூ, இம்மருத நிலத்துப் பூ அல்லாத பிற நிலங்களில் மரக்கிளைகளிலுள்ள பூ, இம்மருத நிலத்து நீர்ப் பூவும் கொடிப்பூவு மன்றி வேற்று நிலத்துக் கோட்டுபூ. மரத்தில் உண்டான நல்ல மணமுள்ள பூ என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
சூடினும் என்ற சொல்லுக்கு அணிந்தாலும் என்பது பொருள்.

பூக்களை நால்வகையாகப் பிரித்துச் சொல்வர். மரக்கிளைகளிலுள்ள பூ கோட்டுப்பூ எனப்படும். மற்றவை கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்பன. இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள பூ கிளைகளிலுள்ள பூ என்றே பெரும்பான்மையர் உரை செய்துள்ளனர். மணக்குடவர் கோட்டுப்பூ என்பதற்குப் பக்கப்பூ (ஒப்பனைப் பூ) எனப் பொருளுரைத்தார். பரிதி செண்பகப்பூ, பாதிரிப்பூ, புன்னைப்பூ இவற்றைக் கோட்டுப்பூக்களாகக் காட்டுவார். காலிங்கர் கோட்டுப்பூ என்பதற்கு மருதநிலம் அல்லா நிலத்துப்பூ எனச் சொல்லி தாளிப்பூ என்பாரும் உளர் என்றும் உரைத்தார்.

ஆண்களும் தமது ஒப்பனைக்காக பூச்சுட்டிக் கொள்ளுதல் உண்டு. இதை மாலையாகவோ அல்லது கண்ணியாகவோ, கழுத்திலோ அல்லது காது மடலிலோ அணிவர். இப்பாடலின் தலைவன் நற்பொருள்களை விரும்பியவாறு அணிந்து துய்த்தற்குரிய நல்வளம் அறிந்தவன். அவன் விரும்பும் பூவை காதலி அணிவதும் தலைவி விரும்பும் மலரை அவன் சூடிக் கொள்வதும் வழக்கம். அன்று எளிமையான மரக்கிளைப் பூவைத்தான் அணிந்து பள்ளியறைக்குச் சென்றான். அவளை மகிழ்விக்கும் நோக்கில்தான் தனக்கு மலர் ஒப்பனை செய்துகொண்டான். ஆனால் அதிலும் குறைகாண்பாள் போல யார்க்குக் காட்டுவதற்காக இப்பூவைச் சூடினீர் எனக் கேட்டு பூசல் கொள்கிறாள் தலைவி.

கோட்டுப்பூ என்பதற்கு 'கோடுதலைச்செய்யும் மாலை' எனப் பொருள் சொல்லி கோட்டுப் பூச்சூடினும் என்பதற்கு 'வளையமாகச் சூடினும்' எனப் பரிமேலழகர் உரை கொள்வார். ஆனால் தேநேயப்பாவாணர் 'கோட்டுப்பூ-மரக்கிளைகளில் மலர்வது. கோடு-கிளை. ஆசிரியர் மாலை என்னாது பூ என்றமையாலும் 'கோடுதலைச் செய்யும்' என்று பரிமேலழகர் கூறுவதில் ஒரு சிறப்பின்மையாலும் அது உரையன்மை யறிக' எனப் பரிமேலழகருரையை மறுப்பார்.
மேலும் அந்தப் பூ வேற்று நிலத்துக் குரியது என்பதாலும் அதைக் கண்ட காதலி இதனை அவன் சூடியது அந்நிலத்து உள்ளாள் ஒருத்தியைத் தனக்கு அறிவித்தற் பொருட்டு என்று சொல்லி ஊடுகின்றாள் எனவும் விளக்கம் செய்வர். வேற்றுநிலம் என்பது குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை ஆகியவற்றில் ஒன்று. பரிதி 'குறிஞ்சி நிலத்து நாயகியை வேண்டிச் சூடினீர் என்று ஊடினாள்' என்பார்.
தண்டபாணி தேசிகர் 'புலவி மருதத்து உரிப்பொருளாதலானும், மருதத்தலைவி தன்தலைவன் மருதநிலப்பூவை விட்டு வேற்றுப்பூவாகிய மரப்பூவைச் சூடினும் அந்த நிலத்துப் பெண்ணைத் தலைவன் உணர்த்துகிறான் என ஊடினாள் என்பதே சிறந்த உரையாதல் காண்க. அன்றி, கோடு-மலையெனப் பொருள் கொண்டு புலவியிடத்ததாகிய மருதப்பூவை ஒழித்து, புணர்ச்சி உரிப்பொருள் கொண்ட குறிஞ்சிப்பூவைத் தலைவன் சூடி உணர்த்தக் கருத - தன்னை ஒழித்தும் தலைவற்குப் பிறள் புணர்ச்சி உண்டென உணர்த்தினானாக உட்கொண்டு தலைவி ஊடினாள் என்றதும் சிறந்த கருத்தாகலாம்' எனக் குறிப்பு தந்துள்ளார்.

'கோட்டுப்பூச் சூடினும்' என்ற தொடர் மரக்கிளைகளிலுள்ள பூவை அணிந்திருந்தாலும் எனப்பொருள்படும்.

மரக்கொம்பில் உள்ள பூ அணிந்திருந்தாலும், பிற ஒருத்திக்குக் காட்டும் பொருட்டு அதனைச் சூடினீரென்று சினப்பாள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பூ அணிதலிலும் குற்றம் காணும் புலவி நுணுக்கம் பாடல்.

பொழிப்பு

மரக்கிளைகளிலுள்ள பூக்களை அணிந்திருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடினீர் என்று என்னிடம் சினப்பாள்