இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1311



பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1311)

பொழிப்பு (மு வரதராசன்): பரத்தமை உடையாய்! பெண்தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.



மணக்குடவர் உரை: பரத்தமை உடையாய்! நின்மார்பைப் பெண்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர்; அதனால் யான் அதனைத் தீண்டேன் என்றவாறு.
இது தலைமகள் புலவி கண்டு, என் மாட்டுக் குற்றம் யாதோ என்று கூறிய தலைமகற்கு அவள் கூறியது.

பரிமேலழகர் உரை: (உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன்.
(கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.)

இரா சாரங்கபாணி உரை: பரத்தமை உடையாய்! பெண்ணியல்புடையார் எல்லாரும் உன்னைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர். ஆதலால் அவர் மிச்சிலாய உன் மார்பை நான் பொருந்தேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பரத்த! பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர், நின் மார்பு நண்ணேன்.

பதவுரை: பெண்ணியலார்-பெண்களின் இயல்புடையவர்; எல்லாரும்-அனைவரும்; கண்ணின்-கண்ணினால்; பொது-பொதுவாக; உண்பர்-துய்ப்பர். நண்ணேன்-பொருந்தேன்; பரத்த-பரத்தனே; நின்-உனது; மார்பு-மார்பு.


பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நின்மார்பைப் பெண்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர்;
பரிப்பெருமாள்: நின்மார்பைப் பெண்தன்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர்;
பரிதி: நீ பவனி போதுவையாகில் பார்த்த மாதர் உன்செவ்வியழகைக் கண்டு கண்ணினாலே போகம் கொள்ளுவர்;
காலிங்கர்: நின் மார்பு பெண்ணின் தகைமையை உடையார் எல்லோரும் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர்;
பரிமேலழகர்: (உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்;
பரிமேலழகர் குறிப்புரை: கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று. [ஆசங்கித்து - ஐயுற்று வினவி]

'நின்மார்பைப் பெண்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பெண்ணியலார் என்பதற்கு மணக்குடவர் 'பெண்மை உடையார்' என்றும் பரிப்பெருமாள் 'பெண்தன்மை உடையார்' என்றும் பரிதி 'மாதர்' என்றும் காலிங்கர் 'பெண்ணின் தகைமையை உடையார்' என்றும் பொருள் உரைத்தனர். பரிமேலழகர் 'பெண் இயல்பினையுடையார்' என்று பதவுரை தந்து சிறப்புரையில் 'கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள்' என்கிறார். அதாவது பெண்ணியலார் என்பது இப்பாடலில் பரத்தையரைக் குறித்தது எனச் சொல்கிறார்

இன்றைய ஆசிரியர்கள் 'பரத்தையர் உன்னைக் கண்ணால் நுகர்வர்', 'பெண்தன்மையுள்ளவர்கள் எல்லாரும் கண்டு (அவர்கள் எல்லாருக்கும் உரிமையுள்ளது போல்) களிக்கக் கூடிய அழகுடையது உம்முடைய மார்பு', 'பெண்தன்மையுடையார் யாவரும் தமது கண்ணினாற் பொதுவாக உன்னை நுகர்வார்கள்', 'நின்னைப் பெண் இயல்பினை உடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெண்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணாலே நுகர்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

நண்ணேன் பரத்தநின் மார்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பரத்தமை உடையாய்! அதனால் யான் அதனைத் தீண்டேன் என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் புலவி கண்டு, என் மாட்டுக் குற்றம் யாதோ என்று கூறிய தலைமகற்கு அவள் கூறியது.
பரிப்பெருமாள்: பரத்தமை உடையாய்! அதனால் யான் அதனைத் தீண்டேன் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் புலவி கண்டு, என் மாட்டுக் குற்றம் யாது என்று கூறிய தலைமகற்கு தலைமகள் கூறியது.
பரிதி: நாயகரே! ஆதலால் உன் மார்பை யான் வேண்டேன் என்றவாறு.
காலிங்கர் ('பரத்தாநின்' பாடம்): பரத்தையரால் விரும்பப்பட்ட பரத்தமையையுடையாய். அதனால் யான் அதனைத் தீண்டேன் என்றவாறு.
பரிமேலழகர்: பரத்தைமையுடையாய்; அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன். [அவர் மிச்சிலாய - அப்பரத்தையர் நோக்குதலால் எச்சில் உடையதாய]

'பரத்தமை உடையாய்! அதனால் யான் அதனைத் தீண்டேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'நாயகரே!' என்று பரிதியும் 'பரத்தையரால் விரும்பப்பட்ட பரத்தமையையுடையாய்' என்று காலிங்கரும் விளிப்பதாகக் கொள்கின்றனர். பரிமேலழகர் 'மிச்சிலாய மார்பு' என மார்பினைச் சுட்டுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆதலின் பரத்தனே! நின் மார்பு தீண்டேன்', '(பிறருக்கு அழகைக்காட்டி ஆசை மூட்டும் பரத்தரையைப் போல) அழகைக் காட்டி ஆசை மூட்டுபவரே! உம்முடைய மார்பை நான் தழுவ மாட்டேன்', 'பரத்தை இயல் புடையாய்! ஆதலால் நின் மார்பினை யான் சேரேன்', 'பரத்தமையை உடையாய்! ஆதலின் அவர் எச்சிலாகிய நின் மார்பினைப் பொருந்தேன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பரத்தனே! உன் மார்பை யான் பொருந்தேன் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
பெண்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணாலே நுகர்வர், பரத்த! உன் மார்பை யான் பொருந்தேன் என்பது பாடலின் பொருள்.
'பரத்த' என்ற சொல்லின் பொருள் என்ன?

'ஊர்ப் பெண்களின் பார்வை எச்சில் பட்ட உன் மார்பு எனக்கெதற்கு' என்னும் தலைவியின் சீண்டல்.

பெண்கள் எல்லோரும் தங்களோட கண்ணால் பொதுப்பொருளாக நினைத்து நுகர்கின்ற உன் மார்பை நான் எப்படிப் பொருந்துவேன்? எனத் தலைவி தன் காதலனிடம் ஊடுகிறாள்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிவிற் சென்றிருந்த கணவன் இல்லம் திரும்பியுள்ளதால் மனைவி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளாள். பிரிவுக் காலம் நெடிதாய் இருந்ததாதலால் இருவருக்கும் காதல் வேட்கை மிகுந்திருக்கிறது. ஆனாலும் கூடுவதற்கு முன் தலைவி அவனுடன் ஊடல் கொள்ள நினைக்கிறாள்; அப்புலவி பின்வரும் புணர்ச்சிக்கு மிகையான இன்பம் அளிக்கும் என்ற எண்ணத்தால்.

இக்காட்சி:
ஊடல் இன்பம் குறிக்கொண்ட காதலி, அவளைத் தழுவ விரைந்த தலைவனை விளித்து 'பரத்த! எல்லாப் பெண்களும் உன்னுடைய அழகிய தோள்களையும் பரந்த மார்பையும் கண்களாலேயே விழுங்குவதுபோல் பார்த்தனர்; அவர்கள் பார்வை பட்ட உன் மார்பை நான் தீண்டேன்' எனச் சொல்லித் தன் ஊடல் விளையாட்டைத் தொடங்குகிறாள்.
நண்ணேன் நின் மார்பு என்பதற்கு 'உன் மார்பை நயந்து அணுகமாட்டேன்' என்பது பொருள்.
பெண்கள் ஆடவரை நோக்கும்போது அவர்களை உடனடியாக ஈர்க்கும் உறுப்புக்கள் தோள்களும் மார்பும் என்பர். தலைவன் செல்லும் வழியில் உள்ள மற்றப்பெண்டிர் அவனது மார்பைக் கண்களால் உண்டனர் எனத் தலைவி மறைமுகமாக அவன் அழகைப் புகழ்கிறாள். வேறு பெண்கள் தன்னைப் பார்ப்பதை அவனால் எப்படித் தடுக்க முடியும்? தன் கணவனது அழகினை அப்பெண்கள் சுவைத்ததாகக் கொண்டு அவள் உள்ளுக்குள் மகிழ்ந்து பெருமிதம் கொள்கிறாள் என்றாலும் எல்லாரும் பருகிய பொது மார்பினை உடையவனாகையால் சிறப்பாகத் தனக்கு உரியவன் அவன் என்று தான் எப்படிக் கொள்ள முடியும் என்று பொய்ம்மைச் சினம் கொண்டு அவனுடன் புலக்கிறாள். காதலன் மீது தனக்குள்ள உரிமையைக் கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்காத தலைவியின் ஊடல் கொள்ளும் நுட்பம் இவ்விதம் கூறப்பட்டது.

தனக்கே உரிமையான காதலனது அழகைப் பிறரும் பார்த்து மகிழ்கின்றார்களே என்று பெண்மனம் அதைக்கூட பொறுத்துக்கொள்ள மறுக்கின்றது. பரத்த என்ற இழிவான சொல்லால் அவனை விளிக்கிறாள். இது பொய்யும் மெய்யும் கலந்த சினம். இவளுடைய காதலன் என்பதற்காக ஊர்ப்பெண்கள் எவரும் அவன் எழில்நலத்தைக் கண்டு மகிழக்கூடாதாம். தலைவி விளையாட்டாக வெறுப்பூட்டுவதுபோல் பேசினாலும், அவன் அவளுக்கு மட்டுமே உரிமையானவன் என்ற காதலியின் மனநிலையைக் காட்டுவதாகவும் இக்குறள் அமைகிறது. பிறபெண்கள் பார்த்ததற்கே சீறுகின்ற வள்ளுவரது தலைவி தன் கணவன் புறஒழுக்கம் கொண்டிருப்பவனாயிருந்தால் அது தெரிந்த மறுகணமே தன் மனதிலிருந்து அவனை வீசி எறிந்துவிடுவாள் என்பது குறிப்பு.

'பெண்ணியலார்' என்றதற்குப் பரிமேலழகர் 'கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால்' என்று விளக்கம் தருவார். அவர் 'பரத்தையரது மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன்' என்று கணவனது மார்பை ஏன் அவள் சேரமாட்டாள் என்பதற்கும் விளக்கம் கூறினார். 'தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து (ஐயுற்று வினவி) அவர்பாற் பொறாமை எய்துதலின் நுணுக்கமாயிற்று' என்று பரிமேலழகர் விரிவுரையும் தந்தார்.
இனி, பரிமேலழகர் 'பரத்த!' என்ற சொல்லுக்கு பரத்தையரிடம் சென்று வந்தவன் எனக் கொண்டமையால் அதைப் பெண்ணியலார் என்பதுடன் இயைத்து பெண் இயற்கை மாத்திரமே கொண்ட பரத்தையர் என்னும் பொருள்பட பரத்தையரே தலைவனைப் பார்த்தனர் என உரைக்கிறார். இது அத்துணைச் சிறப்பில்லை. பெண்ணியலார் எல்லாரும் என்று வள்ளுவர் சொல்வது 'பெண்தன்மை கொண்ட எல்லாரும்' என்ற பொருளிலேதான்.
கண்ணின் பொதுஉண்பர் என்ற தொடர்க்கு, பெண்கள் 'தங்களுடைய கண்களால் தலைவனது அழகிய மார்பை மொய்க்கும் வண்ணம், ஒரு சேர நோக்கி, ஒரு பொதுப்பொருளாக நினைத்து, அவர்கள் விழிகளினால் நுகர்ந்து மகிழ்கிறார்கள்' எனவும் பொருள் கூறினர்.

'பரத்த' என்ற சொல்லின் பொருள் என்ன?

இச்சொல்லுக்குப் 'பரத்தமை உடையாய்!' என்றே பலரும் பொருள் கூறினர். பரத்தன் என்பதற்கு நேரடிப்பொருள் '(ஒருவரோடு அன்றி) பலரிடம் பரந்து செல்லுபவன்' என்பது. பரத்தை, பொருட்பெண்டிர் போன்றவற்றிற்குரிய ஆண்பாற்சொல்லாகவே பரத்தன் என்னும் சொல்லை வள்ளுவர் இங்கு கையாண்டுள்ளார். பரத்தன் என்பது இன்று வழக்கில் இல்லை. பழம் இலக்கியங்களிலும் இச்சொல் அரிதாகவே பயின்று வந்துள்ளது. இச்சொல் காணப்படும் சங்கப்பாடல்கள்: மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி (அகநானூறு 146 பொருள்: மாயம் செய்யும் பரத்தமைத் தன்மையுடைய அவனது வாய்மை போலும்மொழியினை மெய்யென நம்பி), பகலாண் டல்கினை பரத்த! (கலித்தொகை 75 பொருள்: பரத்தைமையையுடையவனே! பகற்பொழுதெல்லாம் பரத்தையர் மனையிலே தங்கினாயென்று...) என்பன. பரத்தையரிடம் செல்லும் வழக்கம் உள்ளவன் என்பதாக பரத்தன் என்ற சொல் இவ்விடங்களில் வந்துள்ளது என்பது அறியத்தக்கது.

'பரத்த' என்ற சொல் இருப்பதால் பழைய உரையாசிரியர்களும் இன்றைய உரையாளர்களில் சிலரும் தலைமகன் பரத்தையர் வீட்டுக்குப் போய்விட்டு வந்திருப்பதனால் காதலி புணர மறுப்பதாக இக்குறள் கூறுவதாகப் பொருள் செய்தனர். ஊடலைப் புனைதற்குப் பழைய அகப்பாடல்கள் பரத்தையர் பிரிவை ஒரு உத்தியாகக் கொண்டன. ஆனால் வள்ளுவர் அவ்வழியை ஏற்க மறுத்தவர். அவர் தலைமகன் பரத்தையர் உறவு கொண்டிருந்ததாகக் குறளில் எங்குமே கூறவில்லை. வள்ளுவரின் தலைவனது வாழ்க்கையில் தலைவியைத் தவிர பிற பெண்கள் இல்லை. இக்குறளில் தலைமகள் 'பரத்த' என்று காதலனை விளித்தாலும் அது அவனுக்கு எரிச்சலுண்டாக்கி வேடிக்கை பார்ப்பதற்காகவே அன்றி 'பரத்தையரிடம் செல்பவன்' என்ற பொருளில் அல்ல. 'பரத்த' என்று குறும்பாகக் (கன்னத்துள் நாக்கு வைத்துத் (tongue-in-cheek) ) தலைவனை விளிக்கிறாள் காதலி.

'பரந்த மார்பு' என்பது 'பரத்த மார்பென' வலித்தல் விகாரமாக வந்துள்ளது எனக் கூறும் பழைய உரை சிறப்பாக இல்லை.

பரத்த என்ற சொல் 'புறத்தொழுக்கம் உடையவனே!' எனப்பொருள்படும்.

பெண்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணாலே நுகர்வர், பரத்தனே! உன் மார்பை யான் பொருந்தேன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காதலன் மார்பு தனக்கு மட்டுமே உரியது என்னும் தலைவியின் கொஞ்சலான புலவி நுணுக்கம்.

பொழிப்பு

பெண்கள் எல்லாம் உன்னைக் கண்ணால் பருகினர்; பரத்தனே! நின் மார்பு நயவேன்.