இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1268வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1268)

பொழிப்பு: அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அன்றுவரும் மாலைப்பொழுதிற்கு விருந்து செய்வோம்.

மணக்குடவர் உரை: நம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக: யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வேமாக.
வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள். மனை - அட்டில்.

பரிமேலழகர் உரை: (வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) வேந்தன் வினை கலந்து வென்று ஈக - வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக; மனை கலந்து மாலை விருந்து அயர்கம் - யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக.
(மனை என்பது ஈண்டு ஆகுபெயர். 'மங்கலம் என்ப மனை மாட்சி' என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனைகலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப்பொழுதின் கண் விருந்தயர்கம் என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.)

வ சுப மாணிக்கம் உரை: வேந்தன் போரில் ஈடுபட்டு வென்று வருக; மனையில் மகிழ்ந்து மாலையில் விருந்திடுவோம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேந்தன் வினைகலந்து வென்றீக; மனைகலந்து மாலை அயர்கம் விருந்து.


வினைகலந்து வென்றீக வேந்தன்:
பதவுரை: வினை-அரச காரியம்; கலந்து-புரிந்து; வென்றீக-வெல்க; வேந்தன்-மன்னன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக;
மணக்குடவர் குறிப்புரை: வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள்.
பரிப்பெருமாள்: நம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக;
பரிப்பெருமாள் குறிப்புரை: வருதற்கு இடையீடு அரசன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள்.
பரிதி: வினைவென்று வரும் நாயகனது;
காலிங்கர்: காலைப் பகையோடு எதிர்மயங்கிப் பொருது வெல்வோனாக நம் வேந்தனாவன்;
பரிமேலழகர்: (வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக;

'வேந்தன் போரின்கண்ணே பொருந்தி/வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி மட்டும் வேந்தன் என்று சொல்லாது நாயகன் என்கிறார். குறளில் காணப்படும் வினை என்பதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் போர் எனக் கொள்ள, பரிதியும் பரிமேலழகரும் பரிதியும் வினை என்றே கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் போர் வினையிற் கலந்து கொண்டு வெற்றி பெறுவானாக', 'மேற்கொண்டு வந்த வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு அரசனிடம் விடைபெற்று', 'அரசன் போர் புரிந்து வெல்வானாக', 'தலைவன் வினை செய்தலைப் புரிந்து வெற்றியடைக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வேந்தன் வினை செய்தலைப் புரிந்து வெல்வானாக என்பது இப்பகுதியின் பொருள்.

மனைகலந்து மாலை அயர்கம் விருந்து:
பதவுரை: மனை-மனை; கலந்து-கூடி; மாலை-மாலைப்பொழுது; அயர்கம்-செய்வோம்; விருந்து-விருந்தினர்க்கு இடும் உணவு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வேமாக.
மணக்குடவர் குறிப்புரை: மனை - அட்டில்.
பரிப்பெருமாள்: யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம்காதலர்க்கு விருந்து செய்வேமாக.
பரிப்பெருமாள் குறிப்புரை: மனை - அட்டில். வந்தால் விருந்து இடுமாறு நினைந்து கூறியது.
பரிதி: மால் என்னும் பசிக்கு என் ஆகம் விருந்திடுவேன்.
காலிங்கர்: என்னெனில் யாமும் இற்றை மாலை எல்லைக்கு இம்மனைக்கண் விருந்து இயற்றுவம் ஆக.
காலிங்கர் குறிப்புரை: அவரோடு வரூஉம் விருந்தினர் அனைவர்க்கும் என்றவாறு.
பரிமேலழகர்: யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக.
பரிமேலழகர் குறிப்புரை: மனை என்பது ஈண்டு ஆகுபெயர். 'மங்கலம் என்ப மனை மாட்சி' என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனைகலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப்பொழுதின் கண் விருந்தயர்கம் என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.

மணக்குடவர்/பரிப்பெருமாள் 'மனையிலே பொருந்தி மாலைப் பொழுதில் காதலர்க்கு விருந்து செய்வோமாக' என்று இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'மால் என்னும் பசிக்கு என் ஆகம் விருந்திடுவேன்' என்கிறார். காலிங்கர் 'வேந்தரோடு வரும் அனைவர்க்கும் விருந்து இயற்றுவோம்' எனக் கூறினார். பரிமேலழகர் இப்பாடலைத் தலைவன் கூற்றாகக் கொண்டு 'மனைவியைக் கூடி மாலை விருந்து அயர்வேம்' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாம் மாலைப்பொழுதில் வீட்டிற்குச் சென்று காதலியோடு கூடி விருந்துண்போம்', 'வீட்டுக்குப் போய் (மனைவியுடன்) மாலை விருந்தாகிய காமக் கலவிகளைச் சலிக்கச் சலிக்க அனுபவிக்க வேண்டும்', 'வென்றமாலைப் பொழுதில் மனைவியோடு கூடி விருந்துண்போமாக', 'வீட்டில் ஒன்றாகக் கலந்து மாலைப் பொழுதில் விருந்து வைப்போம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வீட்டில் ஒன்றாகக் கலந்து மாலைப் பொழுதில் விருந்துண்போம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வேந்தன் வினையில் ஈடுபட்டு வெல்வானாக; வீட்டில் ஒன்றாகக் கலந்து மாலைப் பொழுதில் அயர்கம் விருந்து என்பது பாடலின் பொருள்.
'அயர்கம் விருந்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

வினை கலந்து என்ற தொடர்க்கு வினையில் ஈடுபட்டு என்பது பொருள்.
வென்றுஈக என்றது வெற்றியினைப் பெறுக என்ற பொருள் தரும்.
வேந்தன் என்ற சொல்லுக்கு அரசன் என்று பொருள்.
மனை கலந்து என்ற தொடர் வீட்டில் கூடி எனப்பொருள்படும்.
மாலை என்ற சொல் மாலைப் பொழுதைக் குறிக்கும்.

'வேந்தன் வினை செய்தலைப் புரிந்து வெற்றியடைக; வீட்டில் ஒன்றாகக் கலந்து மாலைப் பொழுதில் விருந்து செய்வோம்' எனத் தலைவி கூறுகிறாள்.
அரசு தொடர்பான செயலுக்காகத் தலைவன் காதலியைப் பிரிந்து நெடுந் தொலைவு சென்றுள்ளான். பிரிவின் துயர் தாங்காமல் தலைவி வருந்திக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவன் வீடு திரும்பி வருவதற்கான செய்திகள் வந்து கொண்டிருப்பதால் தலைவி பணைத்தெழும் மகிழ்ச்சியில் உள்ளாள். அவன் விரைந்து வரவேண்டும் என எண்ணுகிறாள். தலைவன் சென்ற செயல் வெற்றியுடன் நிறைவேறட்டும். அவன் விரைவில் வீடு திரும்பட்டும். அவனுக்கு ஒரு மாலைப்பொழுதில் நல்லதோர் விருந்து செய்து வைப்போம் எனத் துள்ளல் குரலுடன் கூறுகிறாள் அவள்.

இப்பாடலிலுள்ள வேந்தன் என்ற சொல் யாரைக் குறிக்கிறது? நாட்டின் அரசனையா அல்லது அவன் உடன் சென்றுள்ள காதலனையா? மற்றத் தொல்லாசிரியரகள் அனைவரும் வேந்தன் எனக் குறிப்பிட பரிதி ஒருவர் மட்டும் நாயகன் எனச் சொல்கிறார். வேந்தன்/காதலன் இருவரும் ஒருவரா அல்லது வேறு வேறா? நாயகன் என்ற சொல அரசனையும் குறிக்கலாம். ஆனால் பொதுவாக இச்சொல் தலைவனை அதாவது காதலனையே குறிக்கப் பயன்படுத்தப்படும். இங்கு காதலனைக் குறிப்பதாகக் கொள்வது ஏற்கும்.
இப்பாடலில் சொல்லப்பட்டது போர்வினையா அல்லது வேறு பொதுவான வினையா? கல்வி முதலிய அறுவகைப் பிரிவுகளுள் இவ்வகையினது என விதவாமல் பொதுப்படவே குறள் காதலர் பிரிவு பற்றிப் பேசுகிறது. இப்பாடல் ஒன்றில் மட்டுமே 'வேந்தற்கு உற்றுழிப் பிரியும் பிரிவு' -அரசர்க்குதவியாகப் பிரிவது- சொல்லப்பட்டது. எனினும் இங்கு பொதுவான வினை என்று கொள்வதிலும் குற்றமில்லை.
மாலை என்று பொழுதைக் குறித்தது எதற்காக? அன்று மாலையே என சிலர் சொல்வதால் போரோ அல்லது மற்ற வினையோ அன்று முடிவதாகச் செய்தி வந்துள்ளதா எனக் குறிப்பு ஒன்றும் இல்லை. மாலை என்று சொன்னது மாலை வேளையில் கொடுக்கப்படும் விருந்தைக் குறிப்பதாகக் கொள்ள இடமுண்டு. வினையின் வெற்றிக்காக் விருந்து வைத்துக் கொண்டாடும் வழக்கம் அன்றும் இருந்துள்ளமை தெரிகிறது.
காலிங்கர் உரை 'காலைப் பகையோடு எதிர்மயங்கிப் பொருது வெல்வோனாக நம் வேந்தனாவன்; என்னெனில் யாமும் இற்றை மாலை எல்லைக்கு இம்மனைக்கண் விருந்து இயற்றுவம் ஆக. அவரோடு வரூஉம் விருந்தினர் அனைவர்க்கும்' என்கிறது. இதன்படி காலையில் போர் தொடங்கி மாலையில் முடியும்; அன்றே வேந்தரோடு வரும் அனைவர்க்கும் தலைவன் விருந்து கொடுக்கிறான் என்றாகிறது. இவ்வுரை பொருத்தமாகப் படவில்லை.
இப்பாடல் தலைவி கூற்றென பரிமேலழகர் தவிர்த்த அனைத்துத் தொல்லாசிரியர்களும் கூறுவர். பரிமேலழகர் தலைவன் கூற்று எனச் சொல்லி அதற்குத்தக விளக்கவுரை தருகிறார். இப்பாடலில் உள்ள மனை என்ற சொல்லுக்கு மனை அல்லது வீடு என மற்றவர்கள் கொண்டனர்; மணக்குடவர்/பரிப்பெருமாள் 'மனையிலே பொருந்தி மாலைப் பொழுதில் காதலர்க்கு விருந்து செய்வோமாக' என்று உரை செய்ய, பரிமேலழகர் மட்டும் இப்பாடலைத் தலைவன் கூற்றாகக் கொண்டு 'மனைவியைக் கூடி மாலை விருந்து அயர்வேம்' எனப் பொருள் கூறினார். இக்குறளை மணக்குடவர் உரைத்தபடி தலைவியின் கூற்றாகக் கொள்வதே பொருந்தும்.

மாலைப் பொழுதில் உண்ணப்படும் விருந்தயர் என்னும் தொடர் வரும் நற்றிணைப் பாடல் ஒன்று உள்ளது. அது:
படுமழை பொழிந்த தண்ணறும் புறவின் நெடுநா ஒண்மணி பாடுசிறந் திசைப்ப
மாலை மான்ற மணல்மலி வியனகர்த்
தந்தன நெடுந்தகைத் தேரே என்றும்
அரும்படர் அகல நீக்கி,
விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே
(நற்றிணை: 361:5-9 பொருள்: மிக்க மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணியோசை மிக்கு ஒலிப்ப; அவனது தேரை மாலைப் பொழுது மயங்கிய மணல்மிக்க அகன்ற மாளிகை வாயிலிலே கொணர்ந்து நிறுத்தின; திருந்திய கலனணிந்த தலைவி தான் முன்பு எந்நாளுங் கொண்டிருந்த தீர்தற்கரிய துன்பமெல்லாம் ஒருங்கே நீங்கி; இறைமகனுக்கு விருந்தயரும் விருப்பத்தையுடையளா யிராநின்றனள்)
குறுந்தொகைப் பாடல் ஒன்றும் மாலை விருந்தயர் என்னும் தொடரைக் குறிக்கிறது:
மாலை நனி விருந்து அயர்மார்...
(குறுந்தொகை 155: 6-7 பொருள்: மாலைக் காலத்தில் மிக விருந்து நுகரும் பொருட்டு வரும் தலைவருடைய..)

'அயர்கம் விருந்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

'அயர்கம் விருந்து' என்ற தொடர்க்கு விருந்து செய்வேமாக, ஆகம் விருந்திடுவேன், விருந்து இயற்றுவம் ஆக, விருந்து அயர்வேமாக, விருந்து படைத்துக்கொண்டாடுவோம், விருந்துண்போம், விருந்தாகிய கலவியின்பத்தில் அயர்வு தோன்றும் வரை அனுபவிப்போம், இனிய விருந்து கொண்டாடு வோமாக, விருந்துண்போமாக, விருந்து வைப்போம், விருந்து செய்து கொண்டாடுவோம், விருந்து நடத்துவோமாக, விருந்துண்டு மகிழ்வேம், இன்ப விருந்துதான், விருந்து உண்பேனாகுக, அவள் விருந்தாக இருந்து மகிழ்வோமாக, விருந்து வைப்போம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவற்றுள் மணக்குடவரின் விருந்து செய்வேமாக என்பது பொருத்தம்.
அயர்கம் விருந்து என்ற தொடர் விருந்து இடுவோம் என்ற பொருளது.

வேந்தன் வினை செய்தலைப் புரிந்து வெல்வானாக; வீட்டில் ஒன்றாகக் கலந்து மாலைப் பொழுதில் விருந்துண்போம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

செயலில் வெற்றி பெற்று விரைந்துவந்து, தானளிக்க இருக்கும் விருந்தை, தலைவர் சுவைக்க வேண்டும் எனக் காத்திருக்கும் தலைவி பற்றிய அவர்வயின் விதும்பல் பாடல்.

பொழிப்பு

வேந்தன் வினையிற் கலந்து கொண்டு வெற்றி பெறுவானாக; மனையில் கூடி மாலையில் விருந்திடுவோம்.பின்னூட்டங்கள் இட்டவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும், குறள்.திறன் அவற்றிற்கு பொறுப்பேற்காது.
கருத்துரைகள் சீர்மைப்படுத்த பின்னர் பதிப்பிக்கப்படும்.