இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1266வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1266)

பொழிப்பு: என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லாம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

மணக்குடவர் உரை: கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன்.
இது வரவு வேட்கையாற் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கொண்கன் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன்.
('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவான்; என்நோயெல்லாம் கெட அவனை நுகர்வேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொண்கன் வருகமன் ஒருநாள்; பைதல்நோய் எல்லாம் கெடப் பருகுவன்.


வருகமன் கொண்கன் ஒருநாள்:
பதவுரை: வருக-வருவானாக; மன்-(ஒழியிசை); கொண்கன்-கணவன்; ஒருநாள்-ஒரு நாள்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்;
பரிப்பெருமாள்: கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்;
பரிதி: ஒரு நாள் என் நாயகர்வரில்;
காலிங்கர்: தோழீ! மற்று அவர் வருக;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக;
'வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க.

'கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இதுவரை வாராத என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக', 'கணவன் இத்தனை நாளும் வராது ஒருநாள் வருவானாக', 'இத்தனை நாளும் வாராத கணவன் ஒரு நாள் என்னிடம் வருவானாக', 'கணவர் மட்டும் வந்துவிடட்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கணவன் சிலநாளில் வரத்தான் போகிறான் என்பது இப்பகுதியின் பொருள்.

பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட:
பதவுரை: பருகுவன்-இன்பம் நுகர்வேன்; பைதல்-துன்பம்; நோய்-நோய்; எல்லாம்-அனைத்தும்; கெட-அழிய.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன்.
மணக்குடவர் குறிப்புரை: இது வரவு வேட்கையாற் கூறியது.
பரிப்பெருமாள்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வரவு வேட்கையாற் கூறியது.
பரிதி: பலநாளுற்ற துயரம் கெடக் கூடுவேன் என்றவாறு.
காலிங்கர்: வந்தால் பருகுவல் என்றது என்னையோ எனில், இங்ஙனம் இற்றை நாள் அன்றேனும் மற்று ஒருநாள் ஆயினும் கடிதின் வருவார்; அவ்வாறு வந்தபொழுதே யான் நெஞ்சு இரக்கத்தோடு உழந்த, தனித்துயர் எல்லாம் கெடுமாறு மெய் வாய் கண் மூக்கு செவி என்கின்ற ஐம்புலன்களும், அவரிடத்து அவாவிச் செல்கின்ற வேட்கை மிகுதி நோக்கிப் பருகிக்கொள்வேன் என்ற்வாறு.
பரிமேலழகர்: வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன்.
பரிமேலழகர் குறிப்புரை: அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.

'வந்தானாகில் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் பருகுவேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பம் தரும் காம நோய் முழுவதும் நீங்குமாறு ஐம்புல இன்பங்களை யான் ஆரத் துய்ப்பேன்', 'எனது பசலைநோய் முழுவதும் ஒழியும்படி அவனை நுகர்வேன்', 'வந்தால் வருத்தும் துன்பங்கள் எல்லாம் நீங்க அவனைக் குடித்துவிடுவேன்', 'இந்த வேதனை மிகுந்த காம நோயும் (அதையொட்டிய துன்பங்கள்) எல்லாம் ஒரேநாளில் ஒழிந்து போகும்படியாகக் காம இன்பம் பருகி (பரிகாரம் செய்து கொள்வேன்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பம் தரும் நோய்கள் எல்லாம் தீர அவனை ஆரத் துய்ப்பேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கணவன் சிலநாளில் வரத்தான் போகிறான்; வரும்நாளில் துன்பம் தரும் நோய்கள் எல்லாம் தீர அவனை ஆரப் பருகுவேன் என்பது பாடலின் பொருள்.
'பருகுவேன்' என்ற சொல் குறிப்பது என்ன?

வருகமன் என்ற தொடர்க்கு வருவானாக என்பது பொருள்.
கொண்கன் என்ற சொல் கணவன் என்ற பொருள் தரும்.
ஒருநாள் என்ற தொடர் கணவன் திரும்பி வரும் நாள் குறித்தது.
பைதல்நோய் என்பதற்குத் துன்பம் தரும் நோய் என்று பொருள்.
எல்லாம் கெட என்ற தொடர் முழுவதும் நீங்க எனப்பொருள்படும்.

'சில நாளில் கணவன் திரும்பி வரும் இன்பத்தை, எனக்குத் துன்பம் தரும் நோய்கள் எல்லாம் நீஙக, அவரைப் பருகித் தீர்ப்பேன்' என்கிறாள் தலைவி.
'காதலர் வரட்டும்; வந்த அந்த நாளில் என் விருப்பம் தீர அவரைத் துய்த்து விடுவேன். இத்தனை நாளும் பட்ட பாடெல்லாந் தீர, என் துன்பநோய்கள் எல்லாம் நீங்க, எல்லா இன்பங்களியும் ஒருசேரப் பெற்று மகிழ்வேன்' எனத் தன் வேட்கையையும், அவர் வந்தால் அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதனையும் கூறுகின்றாள். நீர் வேட்கை உடைய ஒருவன் தண்ணீர் பருகும்போது எவ்வளவு வேகத்தோடும் ஆர்வத்தோடும் உண்பானோ, அதுபோன்று வரும் காதலரைக் குடித்து விடுவேன் என்கிறாள் அவள்.
ஒருநாள் என்றது கணவன் திரும்பி வரும் நாள் குறித்தது. வந்த ஒரே நாளில் எனக் கொள்ளலாம்.
பருகுவன் என்றதற்கு அதாவது கண்கள், காதுகள், வாய், நாசி, மற்றும் மெய் என்ற ஐம்பொறிகளாலும் நுகருவேன் என்று சில உரையாசிரியர்கள் விளக்குகின்றனர்.

கணவரின் வருகையால் ஆவல் மிகுந்து தலைவி கூறியது.
காதல் வேட்கையையும் காமவிருப்பத்தையும் வெளிப்படுத்துவதாகவும் கூறுவர்.
வருக என்பது வேண்டிக் கொள்ளல் பொருளிலும் மன் என்னும் இடைச்சொல் கணவன் வருதல் வேண்டும் என்னும் ஒழியிசைப் பொருளிலும் வந்தன என்பர்.

'பருகுவேன்' என்ற சொல் குறிப்பது என்ன?

'பருகுவேன்' என்ற சொல்லுக்குப் பருகுவேன், கூடுவேன், மெய் வாய் கண் மூக்கு செவி என்கின்ற ஐம்புலன்களும் அவரிடத்து அவாவிச் செல்கின்ற வேட்கை மிகுதி நோக்கிப் பருகிக்கொள்வேன், (கொண்கன் வரவு என்னும்)அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன், இன்பத்தை ஆசைதீரப் பருகுவேன், நுகர்வேன், ஆரத் துய்ப்பேன், காம இன்பம் பருகுவேன், இன்பம் துய்ப்பேன், குடித்துவிடுவேன், அள்ளிப் பருகிவிடுவேன், ஐம்புலனாலும் ஆசைதீரப் பருகி யின்புறுவேன், ஐம்புலன்களும் இன்பமடையும்வண்ணம் கூடி மகிழ்வேன், நன்கு அவனுடன் கூடிப் பல்வகையாலும் துய்த்தல் என்றவாறு பொருள் கூறினர்.

நோய் கெடப் பருகுவன் என்னும் தொடர் நோக்கி மருந்தைக் குடிப்பேன் என்றும் 'பருகுவன்' என்னும் சொல்கருதி தலைவனது அதர பானமாகிய மருந்தைக் (இதழ் சுவைத்தல்) குடிப்பேன் என்றும் பொருள் உரைக்கப்பட்டன.

'பருகுவேன்' என்றதற்குக் கணவன் வரவு என்னும் இன்பத்தை ஆசைதீர குடிப்பேன் என்பது பொருள்.

கணவன் சிலநாளில் வரத்தான் போகிறான்; வரும்நாளில் துன்பம் தரும் நோய்கள் எல்லாம் தீர அவனை ஆரத் துய்ப்பேன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

'வருக' என்று திரும்பிவரும் கணவரை வரவேற்றுத் தன் துன்பம் எல்லாம் கெட மகிழ்வேனாக என்கிறாள் தலைவி என்னும் அவர்வயின் விதும்பல் பாடல்.

பொழிப்பு

கணவன் சிலநாளில் வரட்டும்; துன்பம் தரும் நோய்கள் எல்லாம் நீங்க அவனை ஆரத் துய்ப்பேன்.பின்னூட்டங்கள் இட்டவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும், குறள்.திறன் அவற்றிற்கு பொறுப்பேற்காது.
கருத்துரைகள் சீர்மைப்படுத்த பின்னர் பதிப்பிக்கப்படும்.