இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1265காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1265)

பொழிப்பு: என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக; கண்டபிறகு, என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலைநிறம் தானே நீங்கி விடும்.

மணக்குடவர் உரை: என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும்.
இது காண்டல் வேட்கையால் கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும்.
('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.)

தமிழண்ணல் உரை: என் கண்கள் நிறையும்வகை என் கணவனை யான் நன்றாகக் காண்பேனாக. அங்ஙனம் கண்ணாரக் கண்டவுடன் என் மெல்லிய தோளின் பசலை நோய் தானே நீங்கும்.
கண்ணாரக் காணல், மனம் நிறையும்படி ஒரே ஆர்வமாய்ப் பருகுவதுபோல் பார்த்தல். அவ்வாறு கண்ணாரப் பார்த்தாலே பசலை நோய் நீங்கிவிடுமாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காண்கமன் கொண்கனைக் கண்ணார; கண்டபின் என் மென்தோள் பசப்பு நீங்கும்.


காண்க மன் கொண்கனைக் கண்ணார:
பதவுரை: காண்க-காண்பேனாக; மன்-(ஓழியிசை); கொண்கனை-கணவனை; கண்ணார-கண்கள் நிறைவுபெறும் வகை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக;
பரிப்பெருமாள்: என்கண்கள் கொண்கனை காண்பனவாக;
காலிங்கர்: நெஞ்சமே யான் அங்ஙனம் நோக்குகின்ற இடத்து மற்று எம் கண்ணார யாம் அவரைக் காணப்பெறுவோமாக;
காலிங்கர் குறிப்புரை: மன் என்பது அசைச்சொல்.
பரிமேலழகர்: (தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக;
பரிமேலழகர் குறிப்புரை: 'காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.

'என் கண்ணார என் கொண்கனை யான் காண்பேனாக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் காதலனைக் கண்ணாரக் காண்பேன்', 'என்னைப் பிரிந்த காதலனை ஒருநாள் மன மகிழக் காண்பேனாக', 'காதலரை என் கண்களின் ஆசைதீர நான் பார்த்துவிட்ட உடனே', 'காதலரைக் கண் நிறைவடையும்படி காணவேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கணவனை என் கண்கள் நிறைவுபெறும் வகை காணவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு:
பதவுரை: கண்டபின்-பார்த்த பிறகு; நீங்கும்-அகலும்; என்-எனது; மென்-மென்மையான; தோள்-தோள்; பசப்பு-நிறம் வேறுபடுதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது காண்டல் வேட்கையால் கூறியது.
பரிப்பெருமாள்: அவை நிறையக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காண்டல் வேட்கையால் கூறியது.
பரிதி: பலநாளுற்ற பசலைநாயகனைக் கண்டால் நீங்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவரைக் கண்டபொழுதே எம் தோள் பசப்பு அனைத்தும் விட்டு நீங்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும்.

'அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பின்பு என் தோளின் பசலைநிறம் நீங்கிவிடும்', 'அங்ஙனம் கண்ணாரக் கண்டபின் என் மென்மையான தோளின்மேல் படர்ந்த பசப்பு தானே நீங்கிவிடும்', 'மெலிந்து போன என மேனியின் பசப்பு மறைந்துவிடும். அதை நீயே பார்க்கப் போகிறாய்', 'கண்ட பின்னேயே எனது மெல்லிய தோளிற் படர்ந்த பசலை நீங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கண்ட பின்பு எனது மெல்லிய தோளில் படர்ந்த பசலை நீங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கணவனை காண்கமன் கண்ணார; கண்ட பின்பு எனது மெல்லிய தோளில் படர்ந்த பசலை நீங்கும் என்பது பாடலின் பொருள்.
'காண்கமன் கண்ணார' என்பது என்ன?

கொண்கனை என்ற சொல்லுக்கு கணவனை என்பது பொருள்.
கண்டபின் என்ற தொடர் பார்த்த பின்னர் என்ற பொருள் தரும்.
நீங்கும் என்ற சொல்லுக்கு மறையும் என்று பொருள்.
என் மென்தோள் என்றது என் மெல்லிய தோள்கள் எனப்பொருள்படும்.
பசப்பு என்பது பசலை குறித்தது.

திரும்பி வரும் கணவனை நான் கண்ணாரக் காணவேண்டும்.
பிரிவிற் சென்ற காதலன் இல்லம் திரும்பும் வேளை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. அவனது பிரிவால் இதுவரை பெருந்துயர் எய்திவிட்டாள் தலைவி. உறக்கம் தொலைந்தது. உடல் மெலிந்தது. பசலை படர்ந்தது. இவை எல்லாம் ஏன் நிகழ்ந்தன? காதலன் தன் அருகில் இல்லாதிருந்ததுதான். ஒரு பெண்ணின் பிரிவுத் துன்பத்துக்கு முதன்மையான காரணம் அவளுடைய கணவனை நேரில் காணமுடியாமற் போவதுதான். பிரிவில் நினைவிலும் கனவிலும் மட்டுந்தான் அவன் வந்துபோய் ஆறுதல் தந்து கொண்டிருந்தான். இப்பொழுது அவனே வரப்போகிறான். அவனை நனவிலே காணப்போகிறாள். 'இவ்வளவு நாள் காணமுடியாமற் போனதையெல்லாம் சேர்த்துவைத்து கண் நிறைவடையும்படி காணப் போகிறேன். கணவரைக் கண்ணாரக் காணவேண்டும்' என்கிறாள் தலைவி.
'அதன்பின் என் மெல்லிய உடலில் உள்ள பசப்பு எல்லாம் உடன் மறைந்தொழியும்' எனவும் கூறுகிறாள் அவள்.
தலைவனைக் காண விரைதலை அவளது கூற்று வெளிப்படுத்திற்று.

'காண்கமன் கண்ணார' என்பது என்ன?

'காண்கமன் கண்ணார' என்ற தொடர்க்கு கண்கள் நிறையக் காண்பனவாக, கண்ணார யாம் காணப்பெறுவோமாக, என் கண்கள் ஆரும் வகை யான் காண்பேனாக, என் கண்கள் நிறையும்வகை யான் நன்றாகக் காண்பேனாக, கண்ணாரக் காண்பேன், மன மகிழக் காண்பேனாக, கண்ணின் ஆசைதீர கண்டுவிடுதல், கண்ணாரக் காண வேண்டும், கண் நிறைவடையும்படி காணவேண்டும், நன்றாகப் பார்ப்பேனாக!, கண்கள் நிறைவு பெறும் வகை நான் காண்பேனாக, கண்கள் முழுக்க நான் காண்பேனாகுக, கண்ணானது ஆசைதீர காணவேண்டும், கண்கள் தன்னுடைய ஆவல் தணிய என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இவற்றுள் தேவநேயப்பாவாணரது 'கண்கள் நிறைவு பெறும் வகை நான் காண்பேனாக' என்பது பொருத்தம்.
மன் என்பது ஒழியிசை.

'காண்கமன் கண்ணார' என்பது கண்கள் நிறைவுபெறும் வகை அல்லது விரும்புமளவு பார்க்க வேண்டும் குறித்தது.

கணவனை என் கண்கள் நிறைவுபெறும் வகை காணவேண்டும்; கண்ட பின்பு எனது மெல்லிய தோளில் படர்ந்த பசலை நீங்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலரைக் காண்டல் விரும்புதலே அவர்வயின் விதும்பல் ஆகும்.

பொழிப்பு

கணவனைக் கண்ணாரக் காணவேண்டும்; கண்டபின்பு என் மெல்லிய தோளின் பசலைநிறம் நீங்கிவிடும்.