இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1264



கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொடு ஏறும்என் நெஞ்சு

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1264)

பொழிப்பு (மு வரதராசன்): முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையை நினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.



மணக்குடவர் உரை: கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந்தவர் வருவாராக நினைந்தே என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது.
உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி - நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கொடு ஏறும் - என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத் தெழாநின்றது.
(வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும், அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள், 'ஒடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. கொண்டு என்பது குறைந்து நின்றது. 'அஃதுள்ளிற்றிலேனாயின் இறந்து படுவல்', என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: கூடிப் பிரிந்தவர் வருகின்றாரா என்று என் நெஞ்சம் கிளைதோறும் ஏறிப்பார்க்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி, என் நெஞ்சு கோடு கொடு ஏறும்.

பதவுரை: கூடிய-மிகுந்த, கூடப்பெற்ற; காமம்-காதல்; பிரிந்தார்-நீங்கியவர், விட்டு நீங்கியார்; வரவு-வருகை,வருதலை; உள்ளி-நினைத்து; கோடு-கிளை; கொடு-(கிளையைப் பற்றிக்)கொண்டு; ஏறும்-ஊரும்; என்-எனது; நெஞ்சு-உள்ளம்.


கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந்தவர் வருவாராக நினைந்தே;
பரிப்பெருமாள்: கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந்தவர் வருவாராக நினைத்து;
பரிதி: கூடிப் பிரிந்த நாயகர் வரும் வழி பார்த்து;
காலிங்கர்: தோழி நம்மைப் பிரிந்த காதலர் பண்டு எம்மோடு கலந்த காலையினும் இன்னும் இங்ஙனம் வரும் என்று கொண்ட அவ்வரவை நினைத்து;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; [மேல் - பிரிதற்கு முன்]
பரிமேலழகர் குறிப்புரை: வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும், அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள். [அதுவே - காம இன்பத்தையே]

'காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இக்குறளிலுள்ள காமம் என்பதற்குக் காலிங்கர் காலம் என்று பாடம் கொண்டு "நம்மைப் பிரிந்த காதலர் பண்டு எம்மோடு கலந்த காலையினும் இன்னும் இங்ஙனம் வரும் என்று கொண்ட அவ்வரவை நினைத்து" என்று இத்தொடர்க்குப் பொருள் கூறுகிறார். கூடிய காமம் என்பதற்கு மணக்குடவர் 'கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்று' என்று பொருள் தந்தார்; பரிதியார் 'கூடிப் பிரிந்த' என்று உரைக்கிறார்; பரிமேலழகர் 'நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே' என்று உரை தருவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகுந்த காம வேட்கையோடு இன்றியமையாமை கருதிப் பிரிந்த காதலரின் வருகையை நினைத்து', 'பிரிந்திருக்கும் என் காதலர் வரவை விரும்பி நினைக்கும்போதெல்லாம் உண்டாகிற காம இன்பத்தை ஆதரவாகக் கொண்டுதான்', 'பிரிந்த தலைவர் காதலாற் கூடும்பொருட்டு வருதலை நினைந்து', 'நம்மைவிட்டுப் பிரிந்த காதலர் முன்பு கூடிய காதலோடு வருதலை நினைத்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மிகுந்த காதலுடன் பிரிந்தவர் வருதலைக் காண எண்ணி என்பது இப்பகுதியின் பொருள்.

கோடுகொடு ஏறும்என் நெஞ்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது.
மணக்குடவர் குறிப்புரை: உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்.
பரிப்பெருமாள்: என்னெஞ்சம் மரமேறிப் பாராநின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: உயர்ந்ததின்மேல் ஏறினால் சேய்த்தாய் வருவாரைக் காணலாம் என்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறி, வருவார் என்ற ஆசைப்பாடு இன்னும் உடையேன் என்றவாறு. அவர் வாரார் என்று கூறியது.
பரிதி: ஆசை என்னும் மலையில் என் நெஞ்சு ஏறிப்பார்க்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்று இது பற்றுக் கோடாக முன்னம்போலுக்குச் செல்லாது பணைத்து ஏறுகின்றதுகாண் நெஞ்சமானது.
காலிங்கர் குறிப்புரை: எனவே இதுவும் அவர் வருதற்கு ஒரு குறியாகும் என்று இன்புற்றாள்.
பரிமேலழகர்: என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத் தெழாநின்றது. [மேன்மேற் பணைத் தெழுதல் - மிகவும் உவகையுறுதல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'ஒடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. கொண்டு என்பது குறைந்து நின்றது. 'அஃதுள்ளிற்றிலேனாயின் இறந்து படுவல்', என்பதாம். [கொண்டு என்பது கொடு என நகரம் குறைந்து நின்றது; அஃது - பிரிந்தார் வருதலை; உள்ளிற்றிலேன் ஆயின் - நினையாமற் போவேன் ஆயின்]

'என்னெஞ்சம் மரமேறிப் பாராநின்றது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் பொருள் கூறி 'என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது' என்று பொருள் கூறி அதற்கு 'உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்' என்று விளக்கமும் கூறினர். பரிதி 'ஆசை என்னும் மலையில் என் நெஞ்சு ஏறிப்பார்க்கும்' என உரைத்தார். காலிங்கர் பற்றுக்கோடாக பணைத்து ஏறுகின்றது என் நெஞ்சம் என்றார். பரிமேலழகரும் 'என் நெஞ்சு மேன்மேற் பணைத் தெழாநின்றது' எனப் பொருள் கூறி 'கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது' என விளக்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் மனம் மரத்தின் கிளைதோறும் ஏறிப் பார்க்கும்', 'என் மனம் (கவலை நீங்கி) தைரியமடைகிறது', 'என் மனமானது மேன்மேலும் பருத்தெழுகின்றது', 'கிளைகள் தோறும் ஏறிப் பார்க்கும் என் நெஞ்சு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என் உள்ளம் மரத்தின் கிளைகள் தோறும் ஏறும் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
மிகுந்த காதலுடன் பிரிந்தவர் வருதலைக் காண எண்ணி என் உள்ளம் கோடுகொடு ஏறும் என்பது பாடலின் பொருள்.
'கோடுகொடு ஏறும்' என்ற பகுதியின் பொருள் என்ன?

மரமேறிப் பார்த்தாலும் அவர் வரும்போதுதான் வருவார் என அவளுக்குத் தெரியும்தான். இருந்தும்....

மிகுந்த காதலுடன் பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரத்தின் கிளைபிடித்து மேல்மேல் ஏறி எட்டிப் பார்க்கின்றது.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாகக் கணவர் பிரிந்து சென்றபின் இல்லம் திரும்பும் நேரம். அவர் வரும் வழி நோக்கி இதுநாள்வரை காத்திருந்த கண்கள் ஒளி இழந்து போயின. அவர் போன நாட்களைத் தொட்டு எண்ணிய விரல்களும் தேய்ந்துவிட்டன. 'மற!' எனச் சொல்லிய தோழியை நோக்கி, 'மறந்தால் என் உடல் இன்னும் மெலிந்து அணிகளும் உடலிலிருந்து நீங்கிவிடுமே!' என்றாள். 'வென்று வருவேன் என்று சூளுரைத்துச் சென்றவர் வருதலை எண்ணியே இன்னும் உயிரோடு உள்ளேன்.' எனவும் சொல்கிறாள். இச்சூழலில் தொலைவு சென்ற அவர் நெடுநாட்கள் கழிந்து வீடு திரும்பும் வேளை நெருங்கி வருவதால் அதை ஆவலுடன் நோக்கிக்கொண்டிருக்கிறாள் தலைமகள்.

இக்காட்சி:
அவரை எப்போது காண்பது என்று ஆசை மேலிட உள்ளம் ஒருநிலையில் இல்லாமல் தவிக்கிறாள். பலகணி மூலம் நோக்குகிறாள்; வீட்டுக்கு வெளியில் அடிக்கடி சென்று எட்டிப் பார்க்கிறாள்; உள்ளம் அமைதி கொள்ள மறுக்கிறது. மாடியில் சென்று பார்க்கிறாள். தலைவரைக் காணமுடியவில்லை. இன்னும் உயரமான இடத்தில் சென்று நோக்கினால் தொலைவில் தென்படும்போதே கண்டு கொள்ளலாம் என நினைக்கிறாள். மாடியைவிட வீட்டிலுள்ள மரம் உயரமானது. அதில் ஏறிப்பார்த்தால் கண்ணுக்குத் தெரியும் காட்சியின் எல்லை இன்னும் விரியும். அவர் வருவதை மிக விரைவிலேயே காணலாம் என்று எண்ணுகிறாள். உச்சிக்கே சென்று பார்த்தால் அவரை மிகக்கடிதில் பார்க்கலாம் என்ற நோக்கத்தில் கொம்பு பிடித்து பிடித்து மரத்தின் மேலே மேலே ஏறி அவரை எதிர்நோக்க விழைகிறது அவளது மனம். உச்சாணிக்கொம்பில் நின்று அவர் தொலைவில் வரும்போதே பார்த்து விடவேண்டும் என்று தலைவி பரபரத்துக் காணப்படுகிறாள்.
மிகுந்த காதலுடன் பிரிந்த தலைவரை விரைவில் காணவேண்டும் என்று மரத்தின் உச்சிக்கொம்பில் ஏறிச்சென்று அவர் வரும் வழி பார்த்துக் கிடக்கத் தவிக்கின்றது என் மனம் மொழிகிறாள் தலைவி. ஒருவரின் வருகையை எதிர்நோக்குவார் மரமேறிப் பார்த்தல் வழக்கம்தான். மனம் மரமேறியது என்கிறது குறள். தலைவியே மரமேறிப் பார்த்தாள் எனினும் ஒக்கும்.
மிகுந்த காதலுடன் பிரிந்து சென்றவர் திரும்பி வருதலை விரைவில் காணத்துடிக்கும் காதலியின் நிலைகொள்ளாமையை அரிய உவமை கொண்டு தீட்டப்பட்ட காட்சி சுவை நிரம்பியது.

'கோடுகொடு ஏறும்' என்ற பகுதியின் பொருள் என்ன?

'கோடுகொடு ஏறும்' என்ற தொடர்க்கு மரத்தின்மேலேறிப் பாராநின்றது, மலையில் ஏறிப்பார்க்கும், பற்றுக் கோடாக முன்னம்போலுக்குச் செல்லாது பணைத்து ஏறுகின்றது, மேன்மேற் பணைத் தெழாநின்றது, கிளைதோறும் ஏறிப்பார்க்கும், (காம இன்பத்தைப்) பற்றுக் கோடாகக் கொண்டு என் நெஞ்சம் திடமடைகிறது, மரத்தின் கிளைமேல் ஏறி அவர் வரும் வழி பார்த்திருக்கும், மேன்மேலும் பருத்தெழுகின்றது, கிளை கிளையாய் ஏறிப் பார்க்கிறது, மரக்கிளை மேல் ஏறிப் பார்க்கின்றது, மேன்மேற் பணைத் தெழுகின்றது, மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது, மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது, ஊக்கமடைந்து மேலே வளரும், குரங்கு கொம்புவிட்டுக் கொம்புக்குத் தாவும், மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது, பூரிக்கும், கிளை கொண்டு வளர்கின்றது என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கோடு என்ற சொல் மரக்கிளையைக் குறிக்கும். கிளையை கொம்பு என்றும் கொப்பு என்றும் கூறுவர். கொடு என்பது 'கொண்டு' என்பதன் தொகுத்தல். கோடு கொண்டு ஏறும் அதாவது கிளையைக் கொண்டு மரம் ஏறுதல் சொல்லப்பட்டது. பரிதி கோடு என்பதற்கு மலை எனப் பொருள் கண்டு மலைமீது ஏறிப்பார்க்கும் என உரை வரைந்தார்,
தொலைவில் உள்ள பொருள் ஒன்றைக் காண மரம் ஏறிப் பார்ப்பர். ஒருவர் வருகையை எதிர்நோக்குவாரும் மரமேறிப் பார்த்தல் வழக்கம். காதலரை அவர் இல்லத்தின் வாயிலுக்கு வருவதற்கு முன்னே அவரை காண விரும்பியதால், தலைவியின் உள்ளம் வேகமாக கிளைதோறும் ஏறி மரத்தின் உச்சிக்குச் சென்று அனைவரையும் முந்தித் தன் காதல் கணவரைப் பார்க்கிறதாம்.

'கோடுகொடு ஏறும்என் நெஞ்சு' என்ற பகுதியை விளக்கும்போது பணைத்து ஏறுகின்றதுகாண் நெஞ்சமானது என்று காலிங்கரும் என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத் தெழாநின்றது எனப் பரிமேலழகரும் கூறினர். பணைத்தெழுதல் என்பது மிகுந்த மகிழ்ச்சி உண்டாவதைத் தெரிவிப்பது. மேன்மேற் பணைத் தெழுதல் என்பது மேன்மேலும் விம்மிப் பெருத்தெழுகின்றது என்பதைச் சொல்வது. மிகவும் உவகையுறுதல் என்ற பொருள் தருவது. இவையும் சிறப்பாக இருக்கின்றன என்றாலும் மணக்குடவரின் 'என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது' என்ற 'மனம் நேரே கொம்பைப் பற்றிப்பற்றி மரத்திலேறிப் பார்க்கிறது' என்னும் உரை இன்னும் சிறப்பாகத் தலைமகளது மனநிலையைக் காட்சிப்படுத்துவதாக உள்ளது.

கோடுகொடு ஏறும் என்ற பகுதிக்கு உயர்ந்த மரக்கிளைகளை ஒன்றன்மேல் ஒன்றாகப் பற்றி ஏறும் என்பது பொருள்.

மிகுந்த காதலுடன் பிரிந்தவர் வருதலைக் காண எண்ணி என் உள்ளம் மரத்தின் கிளைகள் தோறும் ஏறும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவர்வயின் விதும்பல் நிலையில் காதலியின் இருப்புக் கொள்ளாத் துடிப்பு.

பொழிப்பு

மிகுந்த காதல்உணர்வுடன் பிரிந்தவர் திரும்பி வருதலை விரைவில் காண நினைத்து மரத்தில் ஏறிப் பார்க்க நினைக்கிறது என் நெஞ்சு.