இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1262இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1262)

பொழிப்பு: தோழி! காதலரின் பிரிவால் துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்துவிட்டால், அழகு கெட்டு என்தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

மணக்குடவர் உரை: இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின் பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும்.
இலங்கிழாய் என்றவதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளென்பது கொள்ளப்படும்.

பரிமேலழகர் உரை: (ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலை யல்லை; சிறிது மறக்கல் வேண்டும், என்ற தோழிக்குச் சொல்லியது.) இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம்.
('இலங்கிழாய்' என்பது 'இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் - மறுபிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது , 'நீத்து' எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 'இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம், அதனான் மறக்கற்பாலேன் அல்லேன',என்பதாம்.)

தமிழண்ணல் உரை: விளங்கும் அணிகளையணிந்த தோழியே! எக்காலத்தும் என் காதலரை மறவேன். அவ்வாறன்றி, இன்று மறந்தேனாயின், அக்கணமே என் தோள் அழகை இழந்து கை வளையல்க்ள் முதலாய அணிகள் கழன்று விழுமாறு மெலிந்து போவேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இலங்கிழாய் இன்று மறப்பின் காரிகை நீத்து என் தோள்மேல் கலங்கழியும்.


இலங்கிழாய் இன்று மறப்பின்:
பதவுரை: இலங்கு-விளங்காநின்ற; இழாய்-அணி அணிந்தவளே; இன்று-இன்றைக்கு; மறப்பின்-நினைவொழிந்தால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின்;
மணக்குடவர் குறிப்புரை: இலங்கிழாய் என்றவதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளென்பது கொள்ளப்படும்.
பரிப்பெருமாள்: இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இலங்கிழாய் என்றதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளென்பது கொள்ளப்படும்.
பரிதி: எனதெழிலை என் நாயகரை ஒரு காலத்திலும் மறவேன். மறந்தால்;
காலிங்கர்: இனி மற்று இக்கருத்து எப்பொழுதும் கொண்டு நீ இரங்குகின்றது என்னை என்று இடித்து உரைக்கின்றனையாயின், கணவனது உயிர் வாழ்க்கையை ஆதலால் இவை இன்றியமையா என்பதனால் இலங்கிழையாயின்(று) மறப்பின்;
பரிமேலழகர்: (ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலை யல்லை; சிறிது மறக்கல் வேண்டும், என்ற தோழிக்குச் சொல்லியது.) விளங்காநின்ற இழையினை யுடையாய்; காதலரை இன்று யான் மறப்பேனாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'இலங்கிழாய்' என்பது 'இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று.

'இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தோழியே! இன்று அவரை மறந்தால்', 'விளங்குகின்ற அணிகளை உடைய தோழியே, உன் பேச்சைக் கேட்டு நான் சிறுது அவரை மறந்தால்', 'பிரகாசமான ஆபரணங்களை அணிந்திருக்கும் சகியே! (என் மனம் வேகமாக அவரை நினைக்கிற) இன்று நான் என் காதலரை மறப்பேனானால்', 'விளங்கும் அணியணிந்த தோழி, நான் சாகின்ற இந்நாளிலே அவரை மறந்தால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விளங்கும் அணியணிந்த தோழீ! காதலரை இன்று மறப்பேன் ஆயின் என்பது இப்பகுதியின் பொருள்.

என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து:
பதவுரை: என்-எனது; தோள்-தோள்கள்; மேல்-மேலுள்ள; கலம் -அணிகலன்; கழியும்-கழலும்; காரிகை-அழகு; நீத்து-நீங்க.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும்.
பரிப்பெருமாள்: பண்டே மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலம் அதனையும் கழலவிடும்.
பரிதி: வளைகழன்று அழகும் குன்றும் என்றவாறு.
காலிங்கர்: மற்று, அப்பொழுதே என் மென்தோளிடத்து அணிந்த அணிகலம் ஆகிய வளையும், என் மென்தோள் கலம் கழியும் காரிகை நீத்து என்று கைவளை ஒன்றுமே காட்டினள் என்று அறிக.
பரிமேலழகர்: மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம்.
பரிமேலழகர் குறிப்புரை: மேலும் - மறுபிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது, 'நீத்து' எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 'இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம், அதனான் மறக்கற்பாலேன் அல்லேன', என்பதாம்.)

'பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் மறுபிறப்பு பற்றி இங்கு ஏன் பேசுகிறார் என்பது புலனாயிற்றில்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'என்தோள் அழகு கெட்டு வளை கொட்டும்', 'என் தோள் அழகு அழிவதோடு அதன்மீது அணியப்பெற்ற வளைகளும் கழன்று விடும்', '(ஏற்கனவே மிகவும் குறைந்து போயிருக்கிற என் அழகு) முற்றிலும் நீங்கி (கைக்குப் பெரியனவாகித் தொளதொளத்தாயினும்) கைகளின் மேல் இருந்து கொண்டிருக்கிற வளையல்கள் மணிக்கட்டையும் விரல்களையும் கடந்து கீழே விழுந்தே போய்விடும்', 'மறுபிறப்பிலும் அழகில்லாது என்தோள் மெலிந்து அதன்மேலுள்ள் நகை கழன்றொழியும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என் அழகு கெட்டுத் தோள்களில் உள்ள அணிகலன்களும் நீங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இலங்கிழாய்! காதலரை இன்று மறப்பேன் ஆயின் என் அழகு கெட்டுத் தோள்களில் உள்ள அணிகலன்களும் நீங்கும் என்பது பாடலின் பொருள்.
'இலங்கிழாய்' என்ற விளி குறிப்பது என்ன?

இன்று மறப்பின் என்ற தொடர்க்கு இன்று காதலவரை மறப்பேனானால் என்பது பொருள்.
என் தோள்மேல் என்ற தொடர் என் தோளின் மீதுள்ள என்ற பொருள் தரும்.
கலம் என்ற சொல் அணிகலன் எனப்பொருள்படும்.
கழியும் என்ற சொல் கழலும் என்ற பொருளது.
காரிகை நீத்து என்ற தொடர்க்கு அழகை நீக்கி என்று பொருள்.

விளங்கும் அணிகலன்களை அணிந்தவளே! காதலரை இன்று மறந்தேனானால் என் அழகு கெட்டுத் தோள் மெலிந்து வளையல்கள் கழன்று விழும்.
பிரிவிற் சென்ற தலைவன் கடமை முடிந்து வீடு திரும்பும் நேரம். தலைவி அவனை எதிர்கொண்டு வரவேற்க இருக்கிறாள். அவள் இதுநாள் வரை தாங்கிக் கொண்டிருக்கிற பிரிவுத்துன்பம் நீங்கும் வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தலைவனை விரைவில் காணவேண்டும் என்ற துடிப்பு அவள் முகத்தில் தெரிகிறது. அது கண்ட ஒளிரும் அணிகலன்களை அணிந்துள்ள தோழியானவள், தலைவியை நோக்கி 'எப்பொழுதும் தலைவரையே நினைத்துக் கொண்டிருக்கிறாய். சிறுது அவர் நினைப்பை ஒழிந்திரு' என வேண்டுகிறாள். உடனே தலைவி பதிலிறுக்கிறாள். 'தோழி! நீ நல்ல அணிகளைத் தரித்துள்ளாய்; என்னைப் பார். உடல் மெலிந்து எந்த உறுப்புக்களையும் அழகு செய்யும்படி அணிகள் அணியமுடியாதபடி உள்ளேன். நான் அவரை மறந்தால் இருக்கும் தோள் வளையும் கழன்று விடும் அளவு என் அழகு இன்னும் குறைந்து விடும். அவர் வந்து என்னுடன் இணைய இருக்கும் இந்த் வேளையில் என் அழகு நீங்கும் எந்தச் செயலையும் நான் செய்யமாட்டேன். வளை நீங்கிய தோளுடன் அவரை அணைய மாட்டேன். அழகுள்ளவளாகவே அவரைக் காண்பேன். என் மனம் அவரை விரைந்து காணவேண்டும் என்று நினைக்கிற இந்த நேரத்தில்-இன்றைக்குப் போய்- அவரை மறக்கச் சொல்கிறாயே! என்னால் இப்பொழுது அது முடியவே முடியாது; அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு விடமாட்டேன்' என்று தோள்வளையைக் காட்டிக் கூறுகிறாள் தலைவி.

ஏற்கனவே பிரிவின் துயரத்தால் உருக்குலைந்து போயுள்ளாள் தலைவி. காதலரை எஞ்ஞான்றும் நெஞ்சம் நினைந்திருப்பதாலேயே தலைவி இந்த அளவுத் தோற்றத்துடன் இருப்பதாக எண்ணுகிறாள். அவர் திரும்பி வரும்போது பிரிவுக்கு முன்னர் இருந்த அழகைப் பெற வேண்டும் என விரும்புகிறாள். அவரை நெஞ்சத்திலிருந்து நீக்கிவிட்டால் அவளது இப்போதைய தோற்றமும் கெட்டுவிடுமே என அஞ்சுகிறாள் தலைவி.
முன்னர் அவர் பிரிந்து சென்றவுடன் அவரை நினைந்து வருந்தியதால் தோளில் உள்ள தொடியும் முன்கை வளையலும் கழன்றன என்றாள்;
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை
(பிரிவாற்றாமை 1157 -என் மெலிவால் முன்கையில் இறைகடந்து சுழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவிக்காமலிருக்குமோ?)
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்(உறுப்புநலனழிதல் 1234- துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன)
இப்பொழுது அவனை நினைக்காவிட்டால் வளைகள் கழலும் என்கிறாள்.

'இலங்கிழாய்' என்ற விளி குறிப்பது என்ன?

தலைவி வெளிப்படையாகத் தோழியை நோக்கிக் கூறுவனவாக இரு குறள்கள் உள்ளன. ஒன்று இக்குறள் (1262)< மற்றொன்று குறள் எண்:1284.
'இலங்கிழாய்' என்று தலைவி தன் தோழியை இங்கு அழைக்கிறாள். இத்தொடர்க்கு விளங்குகின்ற அணிகளை உடையவள் என்று பொருள். ஏன் அப்படித் தன் தோழியை விளிக்கிறாள்?
மணக்குடவர் 'வருத்தமில்லாதவளே என்று விளித்தாள் என்று விளக்குவார் அதாவது ஒளிரும் அணிகளை அணிந்து எந்தவித வருத்தமில்லாமல் தோன்றுபவளே எனக் கூறுகிறாள். தேவநேயப்பாவாணர் ''இலங்கிழாய்' என்பது உன் அணிகள் போன்றனவல்ல என் அணிகள் என்னுங் குறிப்பினது' என்கிறார். இதற்கு 'உன் உடல் உறுப்புக்கள் நன்றாக உள்ளன; எனவே அணிகள் பொருந்தி நிற்கின்றன. என் மெலிந்த உடலில் அணிகள் நிற்பதில்லை' எனப் பொருள்.
தோழி அணிந்திருப்பதனைச் சுட்டிக் காட்டிப் பேசுவவதில் இருந்து, தலைவி தான் மிகையான கலங்கள் அணியும் நிலையில் இல்லை என்ற செய்தியை பெருமூச்சுடன் கூறி இருப்பதாகக் கொள்ளலாம்.

விளங்கும் அணியணிந்த தோழி! காதலரை இன்று மறப்பேன் ஆயின் என் அழகு கெட்டுத் தோள்களில் உள்ள அணிகலன்களும் நீங்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலரை விரைந்து காணத் துடிக்கும் தலைவி அவர் வரும்வரை இருக்கும் அழகைக் காப்பேன் என்று சொல்லும் அவர்வயின் விதும்பல் பாடல்.

பொழிப்பு

விளங்குகின்ற அணிகளை உடைய தோழியே! இன்று அவரை மறந்தால் என்தோள் அழகு கெட்டு வளைகளும் கழன்று விடும்.