இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1261வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாள்ஒற்றித் தேய்ந்த விரல்

(அதிகாரம்:அவர்வயின் விதும்பல் குறள் எண்:1261)

பொழிப்பு: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

மணக்குடவர் உரை: கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன: விரல்களும் அவர்போன நாள்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன.
இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த - அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை.
(நாள் - ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமாறு என்னை? என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.)

தமிழண்ணல் உரை: அவர் பிரிந்துபோன நாள்களைச் சுவரில் கோடிட்டு வைத்து, அக்கோடுகளைத் தொட்டுத் தொட்டு எண்ணியதால் என் விரல்களும் தேய்ந்துபோயின. அது மட்டுமன்றி அவர் வரும் வழியைப் பார்த்துப்பார்த்து என் கண்களும் ஒளி இழந்து பூத்துப்போயின.
அக்காலத்தில் நாட்காட்டி இல்லை. எனவே பொதுவாக மகளிர் வீட்டுச் சுவரில் ஒவ்வொருநாளுக்கும் ஒரு கோடிட்டு எண்ணிப் பிரிந்த காலத்தைக் கண்க்கிட்டனர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணும் வாள்அற்றுப் புற்கென்ற; அவர்சென்ற நாள்ஒற்றி விரல் தேய்ந்த .


வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும்:
பதவுரை: வாள்-ஒளி; அற்று-இழந்து; புற்கென்ற-புல்லியவாயின; கண்ணும்-விழியும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன:
பரிப்பெருமாள்: கண்களும் அவர் வரவைப்பார்த்து இருத்தலானே ஒளியிழந்து புல்லென்றன:
பரிதி: கண்ணும் ஒளி இழந்த;
காலிங்கர்: தோழீ! நம்மைப் பிரிந்து சேய தேயத்தின் கண் சென்றவர் வருநாள் காணப்பெறுதும் கொல்லோ என்று உறைக்க எப்பொழுதும் நோக்கியே என் கண்ணும் சால ஒளிமறைந்து புற்கென்றன;
பரிமேலழகர்: (தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.) அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின:
பரிமேலழகர் குறிப்புரை: புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை.

'அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர்வரும் வழிபார்த்துக் கண்களும் மழுங்கின', 'அவர்வரும் வழியை நோக்கிக் கண்கள் ஒளி இழந்துவிட்டன', '(அம்ம! அவர் பிரிந்து எத்தனையோ நாட்களாகி விட்டனவே!) என் கண்களும் (அழுதழுது பசந்து) பிரகாசமில்லாமல் வரண்டு போய்விட்டன', 'அவர் வரும் வழி பார்த்திருந்த கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காதலர் வரும் வழிபார்த்துக் கண்களும ஒளியிழந்து பொலிவு குறைந்தன என்பது இப்பகுதியின் பொருள்.

அவர்சென்ற நாள்ஒற்றித் தேய்ந்த விரல்:
பதவுரை: அவர்-அவர்; சென்ற-போன; நாள்-நாள்; ஒற்றி-தொட்டு; தேய்ந்த-தேய்ந்தன; விரல்-விரல்கள்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விரல்களும் அவர்போன நாள்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன.
மணக்குடவர் குறிப்புரை: இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: விரல்களும் அவர்போன நாளை யெண்ணி முடக்குதலால் தேய்ந்தன.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது.
பரிதி: நாயகர்சென்ற நாளெண்ணித் தேய்ந்தது, விரல் நகமும் என்றவாறு.
காலிங்கர்: அன்றியும் அவர் சென்ற நாள்களைச் சுவர்தோற்றி, ஒற்றியே நலமறத் தேய்ந்தன நகமும் என்றவாறு.
பரிமேலழகர்: அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன;
பரிமேலழகர் குறிப்புரை: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை. நாள் - ஆகுபெயர். 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமாறு என்னை? என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.

'அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியும் காலிங்கரும் விரல் என்ற இடத்து நகம் எனப் பாடம் கொண்டனர்

இன்றைய ஆசிரியர்கள் 'அவர்சென்ற நாள்எண்ணி விரலும் தேய்ந்தன', 'நம்மைப் பிரிந்த காதலர் சென்ற நாள்களைக் கணக்கிடச் சுவரில் கிழித்து வைத்த கோடுகளைத் தொட்டு எண்ணியதால் கைவிரல்கள் தேய்ந்தொழிந்தன.('நாளொற்றித் தேய்ந்த நகம்' என்ற மோனை நயமுள்ள பாடமும் உண்டு.)', 'அவர் என்னைப் பிரிந்துள்ள நாட்களை (விரல்விட்டு எண்ணியெண்ணி) என் விரல்களும் தேய்ந்துவிட்டன', 'விரல்களும் அவர் போன நாட்களைத் தொட்டு எண்ணுதலான் தேய்ந்தன' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவர் போன நாட்களைச் சுவரில் தொட்டு எண்ணியெண்ணி விரல்கள் தேய்ந்தன என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலர் வரும் வழிபார்த்துக் கண்களும ஒளியிழந்து பொலிவு குறைந்தன; அவர் போன நாட்களைச் சுவரில் தொட்டு எண்ணியெண்ணி விரல்கள் தேய்ந்தன என்பது பாடலின் பொருள்.
'நாள்ஒற்றித் தேய்ந்த விரல்' என்றதன் பொருள் என்ன?

வாள்அற்று என்றது ஒளி நீங்கி என்ற பொருள் தரும்.
புற்கென்ற என்றதற்கு பொலிவிழந்தன என்பது பொருள். இச்சொல்லுக்கு நுண்ணிய காணமாட்டாது போயின என்று பொருள் கூறினார் பரிமேலழகர்.
கண்ணும் என்ற சொல் கண்களைக் குறிக்கும்.
அவர்சென்ற என்ற தொடர் அவர் போன எனப்பொருள்படும்.

காதலர் வரும்வழி பார்த்துப்பார்த்துக் கண்களும் ஒளியை இழந்து பொலிவு குறைந்தன; அவர் பிரிந்து சென்ற நாளிலிருந்து சுவரில் கைவிரலால் கோடு போட்டு கோடுபோட்டுப் பின்னர் அக்கோடுகளைத் தொட்டு எண்ணி எண்ணி விரல்களும் தேய்ந்து விட்டன.
தொழில காரணமாகக் காதலன் பிரிந்து சென்று நாட்கள் பலவாயிற்று. பிரிவின் துயர் தாங்கமாட்டாமல் தலைவி வருந்திக் கொண்டிருக்கிறாள். அவன் இந்த நாள் வருவதாகக் கூறிச் சென்ற பின் ஒவ்வொரு நாளாகக் காதலி கணக்கிட்டுவந்தாள். அவர் வருவார் என்று வழியை நோக்கி விழி வைத்துக் கொண்டிருக்கிறாள். வருவான் வருவான் எனப் பார்த்துப் பார்த்துக் கண்களும் பூத்துப் போய் விட்டன. சுவரில் எழுதிய நாட்களைக் கணக்கிட்டு விரலால் தொட்டு எண்ணி எண்ணிக் கைவிரல்களும் தேய்ந்துவிட்டன என்கிறாள் அவள்.

'நாள்ஒற்றித் தேய்ந்த விரல்' என்றதன் பொருள் என்ன?

விரல் விட்டு எண்ணுவது ஒரு வகை. விரலை ஒற்றி எண்ணுவது இன்னொரு வகை. முன்காலத்தில் நினைவுறுத்தத் தக்கவைகளைச் சுவரில் கோடிட்டு வைத்து, அதனை விரலால் தொட்டு எண்ணி வரையறுப்பர். வீடுகளில் கோடுகளைக் குறியீடாகப் போட்டு நாட்களை எண்ணி வந்திருக்கின்றனர். (பால், தயிர் கணக்கை சுவரில் செம்மண் அல்லது கரிக்கட்டையால் கோடிட்டுக் கணக்கிடுவதைச் சில இடங்களில் இற்றை நாளிலும் காணலாம்).
காதலன் பிரிந்த நாட்களைக் கணக்கிடும் பொருட்டுச் சுவரில் கோடிழைத்து அவற்றை எண்ணி அவன் பிரிந்து இத்தனை நாள் ஆயிற்று, இன்னும் இத்தனை நாளில் திரும்பி வருவான் எனக் கணக்கிட்டாள் தலைவி. சுவரின்கண் போட்ட அக்கோடுகளை விரலை ஒற்றி ஒற்றி எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்து விட்டன எனப் பெருமூச்சுவிடுகிறாள் அவள்.
காதலனை விரைவில் காணவிருப்பம் கொண்டதால், விரல்கள் தேயும் அளவு சுவர்க்குறியீடுகளை அடிக்கடி அழுந்தத் தொட்டு எண்ணினாள் என்பதும் தலைவன் பிரிந்து பலநாள் சென்றமையையும் குறிக்கப்பெறுகின்றன.
விரல் என்பதற்கு 'நகம்' எனக் காளிங்கர் படம் கொள்வார். இது மோனைச் சிறப்புடையதேனும் 'விரல்' என்ற பாடம் போலப் பொருட் பொலிவு இல்லை.

சுவரில் கோடிடும் வழக்கங்களைச் சுட்டும் சில சங்கப் பாடல்கள்:
நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பி
னோவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச்
செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூ
லணங்கெழி லரிவையர்
-(பதிற்றுப்பத்து-68: 16-19. பொருள்; உயர்ந்த. மண்ணாற் செய்யப்பட்ட மதிலையுடைய நீண்ட அரண்மனையின் எல்லையில். சித்திரத்தை ஓத்த அழகையுடைய உயர்ந்த சுவரில் தலைவன் பிரிந்து சென்ற நாட்களைக் கோடிட்டு எழுதி, இயல்பாகச் சிவந்த விரல் பின்னும் சிவந்த. அழகிய வரிகளையுடைய சிலம்பையணிந்த. நோக்கினாரை வருத்துகின்ற அழகையுடைய மகளிரை வசப்படுத்துகின்ற.. )
வீங்கிழை நெகிழ விம்மி யிங்கே
எற்கட் பேதுறல்; ''ஆய்கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றுநின் படர்..
-(குறுந்தொகை 358 பொருள்; செறிந்திருந்த அணி கலன்கள் நெகிழும்படி, அழுது, இவ்வாறு நீர்த்துளிகளை வெளிவிடும் கண்ணோடு மயங்கற்க; ஆராய்கின்ற கோடுகளைக் கிழித்து, சுவரினிடத்தைப் பற்றி நிற்கும் நினது துன்பம்....)
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
தீன் சுவர் நோக்கி நினைந்து கண் பனி
நெகிழ்நூல் முத்தின் முகிழ்முலைத் தெறிப்ப
-(அகநானூறு 289 9-11 பொருள்: நாம் சேய்மைக்கண் உறையும் தனிமையால் நாடோறும் முறை முறையாகக் கோடிட்டு வந்த திண்ணிய சுவரினைப் பார்த்து உடனுறையப் பெறாமையை நினைந்துகண்ணீர் நூலற்று உதிரும் முத்துக் களைப்போல முகிழ்த்த முலைமீது தெறித்து விழ...)

'நாள்ஒற்றித் தேய்ந்த விரல்' என்ற பகுதிக்கு நாள்களைத் தொட்டுத் தேய்ந்து விட்டன விரல்கள் என்பது பொருள்

காதலர் வரும் வழிபார்த்துக் கண்களும ஒளியிழந்து பொலிவு குறைந்தன; அவர் போன நாட்களைச் சுவரில் தொட்டு எண்ணியெண்ணி விரல்கள் தேய்ந்தன என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலர் விரைந்து வந்துவிடுவார் என வழி பார்த்தலையும் நாளெண்ணுதலையும் தொடர்ந்து இடைவிடாது செய்தாள் தலைவி என்னும் அவர்வயின் விதும்பல் பாடல்.

பொழிப்பு

காதலர் வரும் வழிபார்த்துக் கண்களும ஒளியிழந்து பொலிவு குறைந்தன; அவர் பிரிந்து சென்ற நாட்களை எண்ணி விரல்கள் தேய்ந்தன.