இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1259புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு

(அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1259)

பொழிப்பு: ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னைவிட்டு அவரோடு கூடுவதைக் கண்டு தழுவினேன்.

மணக்குடவர் உரை: புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு.
இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன்.
(வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.)

சி இலக்குவனார் உரை: அவர் வந்தபோது ஊடல் கொள்வேன் என்று அவரை விட்டு அகன்றேன். என் நெஞ்சம் அவரிடம் போய் ஒன்றுபடுவதை அறிந்து இனி அதுமுடியாதென்று அவரை நெருங்கித் தழுவினேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புலப்பல் எனச்சென்றேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு புல்லினேன்.


புலப்பல் எனச்சென்றேன்:
பதவுரை: புலப்பல்-நான் பிணங்குவேன்; என-என்று கருதி; சென்றேன்-போயினேன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புலப்பலெனச் சென்ற யான்;
பரிப்பெருமாள்: புலப்பலெனச் சென்ற யான்;
பரிதி: ஊடல் என்று சென்றேன்;
காலிங்கர்: தோழீ! யான் அவரோடு புலப்பேனெனச் சென்று புக்கேன்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்;

'யான் அவரோடு புலப்பேனெனச் சென்றேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிணங்கச் சென்ற நானும்', 'புலவி கொள்வேன் என்று நினைத்துக் காதலர் நின்ற இடம் விட்டு அகன்று சென்றேன்', '(முன் அவர் இப்படி நெடுநாள் பிரிந்திருந்து வந்தபோது) அவரிடம் பிணக்கம் கொள்ள வேண்டுமென்று (அவர் முன்) போனேன்', 'தலைவனோடு பிணங்குங் கருத்தோடு போனேன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிணங்கும் எண்ணத்தோடு சற்று அகன்று சென்றேன் என்பது இப்பகுதியின் பொருள்.

புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு:
பதவுரை: புல்லினேன்-தழுவினேன்; நெஞ்சம்-உள்ளம்; கலத்தல்-கூடுதல்; உறுவது-தொடங்குவது; கண்டு-அறிந்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயங்கினேன் நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: முயங்கினேன் நெஞ்சு முற்பட பொருந்துதல் உறுவதனைக் கண்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது கூடுதல் அருமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவன் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.
பரிதி: என் மனம் என் வசம் வராதபடியினாலே கூடினேன் என்றவாறு.
காலிங்கர்: விரைவோடு புல்லிக்கொண்டேன்; என்னை காரணம் எனில், முன்னம் என்னோடு நிற்பது போன்றதாகிய நெஞ்சம் அவரைக் கண்டபொழுதே கூடல் உறுவதனைக் குறிக்கொண்டு என்றவாறு.
பரிமேலழகர்: போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன்.
பரிமேலழகர் குறிப்புரை: வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.

'முயங்கினேன் நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சம் கூடவிரும்புவதைப் பார்த்துவிட்டு, தழுவினேன்', 'ஆனால் என் மனம் என்னைக் கைவிட்டு அவரோடு கூடுவதைக் கண்டு பின் யானும் முயங்கினேன்', '(ஆனால் அவரைக் கண்ட உடன்) என் மனம் அவரைப் புணர விருப்பம் கொண்டுவிட்டது. அதைக் கண்டு நான் அவரைத் தழுவிக் கொண்டேன்', 'அவனைக் கண்டவுடன் எனது நெஞ்சம் அடக்கமில்லாது அவனோடு சென்று அவனைக் கலத்தலைப் பார்த்துப் பிணங்காது அவனைத் தழுவுவேனாயினேன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நெஞ்சம் பொருந்த விரும்புவதைப் பார்த்துவிட்டுப் பிணங்காமல் தழுவினேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலருடன் பிணங்க வேண்டும் என்று சென்றேன். ஆனால் நெஞ்சம் அவரோடு பொருந்துவது கண்டு பிணங்காமல் அவரைத் தழுவினேன்.

பிணங்கும் எண்ணத்தோடு சற்று அகன்று சென்றேன்; ஆனால் நெஞ்சம் கலத்தல் உறுவது பார்த்துவிட்டுப் பிணங்காமல் தழுவினேன் என்பது பாடலின் பொருள்.
'நெஞ்சம் கலத்தல் உறுவது' கூறுவது என்ன?

புலப்பல் என்ற சொல்லுக்குப் பிணக்கம் காட்டுவேன் என்பது பொருள்.
எனச்சென்றேன் என்ற தொடர் என எண்ணிப் போனேன் என்ற பொருள் தரும்.
புல்லினேன் என்ற சொல்லுக்குத் தழுவினேன் என்று பொருள்.
கண்டு என்ற சொல் அறிந்து எனப்பொருள்படும்.

பிணக்கம் காட்ட வேண்டுமென்று முயன்றேன். ஆனால் என் நெஞ்சம் முந்திக்கொண்டு அவருடன் பொருந்தியதைக் கண்டதும் பிணங்காமல் அவரைத் தழுவினேன்.

தொழில் முறையாக அயல் சென்றிருந்த தலைவன் இன்னும் திரும்பி வரவில்லை. பிரிவாற்றாமையால் காதலி வேதனையுடன் அவன் எப்பொழுது வருவானோ என்று ஏங்கிக் கொண்டிருக்கிறாள். சில சமயம் பிரிந்து செல்வதற்கு முன் நடந்த நிகழ்வுகள் அவள் நினைவுக்கு வருகின்றன. அப்படிப்பட்ட காட்சி ஒன்று இக்குறளில் சொல்லப்படுகிறது. ஏதாவது ஒரு காரணம் கற்பித்துக் காதலனுடன் பிணக்கம் கொள்ள வேண்டும் என்று தலைவி காத்திருக்கிறாள். காதலன் அருகில் வருகிறான். அவனுடன் ஊடும் நோக்கத்தில் அவள் சற்று விலகிச் செல்கிறாள். அச்சமயம் அவளது நெஞ்சம் அப்படி அகன்று செல்வதை ஒப்பாமல் அவனுடனே பொருந்துகிறது என்பதை உணர்கிறாள். உடனே பிணக்கம் காட்டவேண்டும் என்ற எண்ணத்தை அடியோடு கைவிட்டு அவனிடம் ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்கிறாள்.
உள்ளம் சென்று ஒன்றிய பின்னர் அவனை எங்ஙனம் வெறுத்தல் கூடும்? ஒரு விளையாட்டுக்காக கூடத் தலைவனை விட்டுத் தள்ளிச் செல்லமுடியாமல் அவள் தவித்தது நினைவுக்கு வர அவனை உடனடியாகப் பார்க்கவேண்டும் என்ற துடிப்பு அவளுக்கு உண்டாகிறது. அவன் சென்றுள்ள இடத்துக்குச் செல்லவும் துணிகிறாள். இவற்றை மற்றவர்களிடம் சொல்லவும் முற்படுகிறாள். இச்செயல்கள் நிறையழிதல் என்றாகிறது.

'இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது' என்று மணக்குடவர் காட்சிப் பிண்ணனி அமைத்தார்.
இப்பாடலுக்கும் மற்றும் இவ்வதிகாரத்து மூன்று குறட்பாக்களுக்கும் (1257,1258,1260) பரிமேலழகர் 'பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிதலாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது' என்று தலைவன் பரத்தை இல்லிலிருந்து வருவதாகச் சூழல் அமைக்கிறார். பரத்தையர் பிரிவு குறளில் எங்கும் கூறப்படவில்லை என்பதால் இவரது உரை ஏற்கக்கூடியதல்ல.

'நெஞ்சம் கலத்தல் உறுவது' கூறுவது என்ன?

இத்தொடர்க்கு நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவது, என் மனம் என் வசம் வராதபடியினாலே, நெஞ்சம் அவரைக் கண்டபொழுதே கூடல் உறுவதனைக் குறிக்கொண்டு, என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதல், என் நெஞ்சம் நிலையில் நில்லாது என்னை முந்திக்கொண்டு அவரைச் சென்று சேர்வது, நெஞ்சம் கூடவிரும்புவது, என் மனம் என்னைக் கைவிட்டு அவரோடு கூடுவது, என் மனம் அவரைப் புணர விருப்பம் கொண்டு, என் நெஞ்சம் அவரோடு கலப்பது, எனது நெஞ்சம் அடக்கமில்லாது அவனோடு சென்று அவனைக் கலத்தல், என் நெஞ்சம் அவரிடம் போய் ஒன்றுபடுவது, எனது நெஞ்சம் நிறையில் நில்லாது அறை போய் அவரோடு கலப்பது என உரையாளர்கள் பொருள் கூறினர்.

என்னுடைய நெஞ்சமானது (என் கட்டுப்பாட்டில் இல்லாது) அவரைக் கலந்து நிற்பதைக் கண்டு என்பது இத்தொடர்க்குப் பொருள். பரிமேலழகர் இப்பகுதியை விளக்கும்போது 'என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் (அதாவது கீழறுத்து (Undercutting)) அவரோடு கலத்தல் தொடங்குதல்' என உரைப்பார். ஊடல் நிலையிலும் அவளது உள்ளம் அவனோடு ஒன்றுபட்டு கிடந்தது என்பது செய்தி.

பிணங்கும் எண்ணத்தோடு சற்று அகன்று சென்றேன்; ஆனால் நெஞ்சம் பொருந்த விரும்புவதைப் பார்த்துவிட்டுப் பிணங்காமல் அவரைத் தழுவினேன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பிணங்கலைக் கைவிட்டுத் தலைவனைத் தழுவினேன் என்று காதலி சொல்லும் நிறையழிதல் பாடல்.

பொழிப்பு

பிணங்க நினைத்து அகன்று சென்றேன்; ஆனால் நெஞ்சம் பொருந்துவது கண்டு பிணங்காது காதலரைத் தழுவினேன்.